Skip to main content

பாகவத திருப்பாவை - 11 ( செற்றார் )

பாகவத திருப்பாவை - 11 ( செற்றார் ) 


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்*
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற்கொடியே!*
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்**
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து* நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட*
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!* நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்? ஏலோர் எம்பாவாய் 484/11

இளம் பசுக்கூட்டங்கள் பலவற்றைக் கறப்பவர்களும், 
பகைவர்களின் இருப்பிடத்துக்கே சென்று 
அவர்களுடைய செருக்கு அழியும்படி போர் புரிபவர்களுமான 
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக் கொடி போன்ற பெண்ணே!
படம் எடுக்கும் பாம்பு போன்ற இடுப்பு சிறுத்தவளே !
மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா!
உறவினரான தோழிகள் அனைவரும் உன் வீட்டு முற்றத்தில் 
முகில் வண்ணன் திருநாமங்களைப் பாடுகிறோம்
எங்களுக்கு எல்லாம் செல்வமாக இருக்கும் பெண்ணே! 
அசையாமல் பேசாமல் நீ உறங்குவது எதற்காக ? 
காரணத்தை நாங்கள் அறியோம்!

’செற்றார்’ என்றால் என்ன ? பொதுவாக ஆழ்வார் பாசுரங்களில் ஒரு வார்த்தை புரியவில்லை என்றால் உடனே அகராதியைத் தேடிக்கொண்டு ஓடாமல் இதே வார்த்தை மற்ற ஆழ்வார்கள் எப்படி உபயோகித்திருக்கிறார்கள் பொருள் கிடைத்துவிடும். 

“செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்”  என்று இந்தப் பாசுரத்தில் வருகிறது. 20 ஆம் பாசுரத்தில்  “செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா!” என்று வருகிறது. 

செற்றார் = பகைவர் 

இதே போல் “சினத்தினால் தென்இலங்கைக் கோமானைச் செற்ற” என்றும் ”சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி!” என்றும் வருவதை நீங்கள் கவனிக்கலாம். இங்கே செற்றுதல் என்றால் அழித்தல் என்று பொருள்.


அடுத்து திறலழிய, திறல் என்ன என்பதைப் பார்த்துவிடலாம். 

’செற்றார் திறலழிய’ என்று ஒரு பாசுரத்திலும், இன்னொரு பாசுரத்தில் ’செற்றாய்! திறல்போற்றி’ என்றும் வருகிறது. 

திறலழிய என்பது பகைவரின் செருக்கையும், வீரத்தையும் அடக்கி வீழ்த்துவது, இங்கே கொலை செய்வது நோக்கம் கிடையாது ஆனால் அவர்களின் திறல் அழியச் செய்வதே நோக்கம். அப்பேர்பட்ட உனது பராக்கிரமம் திறல்போற்றி என்கிறாள். 

திருமங்கை ஆழ்வார் என்ன சொல்லுகிறார் என்று பார்க்கலாம் 

தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே!
என்று சென்று அடைந்தவர்-தமக்கு
தாய் மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்
தயரதன் மதலையை, சயமே

தீய நெஞ்சையுடையரான ராக்ஷஸர்களின் உடைய மிடுக்கை நாசம் செய்தவனே!’ என்று அவனைச் சென்றடைந்தால், அவன் தாய் போல மனம் இறங்கி அன்பு செய்கிறான் ஸ்ரீராமர் என்பது இதன் பொருள். இங்கேயும் திறல் வருவதை வாசகர்கள் கவனித்திருக்கலாம். 

மேலும் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். 

அது எங்கே எல்லாம் ’சென்று’ மற்றும்  ’இரங்கி’ வருகிறது என்று பார்க்க வேண்டும். பெருமாள் பகைவர்களை அவன் இருக்கும் இடத்துக்கு ‘சென்று’ அழிக்கிறான். எங்கே எல்லாம் பக்தன் இருக்கிறானோ அங்கே எல்லாம் இரங்கி (அருள்) இறங்கி வருகிறான் எப்படி ? ”கனைத்து இளங் கற்று எருமைக் கன்றுக்கு இரங்கி” என்பது போல. 


செற்றார் என்றால் பகைவர். பெருமாளுக்கு யார் பகைவர்கள் ? 

சுலபமான வரையறை(definition)
அடியார்களுக்கு யார் விரோதியோ அவர்கள் பெருமாளுக்கு விரோதி. அடியார்கள் யாரை விரோதிக்கிறார்களோ அவர்களும் பெருமாளுக்கு விரோதி

மேலே சொன்ன இரண்டு வரி தான் பெருமாளின் அவதாரங்கள், புராணம் என்று எல்லாக் கதைகளுக்கும் மூல காரணம் (Root cause )

கம்சன் ஏன் அழிந்தான் ? மேலே சொன்ன இரண்டு தப்பான குணங்களும் அவனிடத்தில் உண்டு. கம்சன் பகவானுக்கும் விரோதி, அடியவர்களுக்கும் விரோதி. 

கம்சனுக்கு அழிவு நிச்சயம் என்று யோகமாயை கூறிய பின் கம்சன் தன் அமைச்சர்களை அழைத்து ஒரு காபினெட் மீட்டிங் போடுகிறான். அங்கே அமைச்சர்கள் கூறுவதைப் பாகவதம் இப்படி விரிக்கிறது (10.4.39,40, 41 ) 

தேவர்களுக்கு அச்சாணி விஷ்ணு. தர்மம் உள்ள இடத்தில் விஷ்ணு என்றும் இருப்பார். தர்மத்துக்கு ஆணிவேர் வேதமும் பசுக்களும் அந்தணர்களும் தவமும் வேள்விகளுமே. ஆகையால் வேதம் ஓதுகின்ற அந்தணர்கள், தவம் செய்பவர்கள், வேள்வி புரிகிறவர்கள், பால் தருகிற பசுக்கள் என்று எதையும்  விட்டுவைக்காமல் கொல்லுவோம். 

அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், தவம், சத்தியம், புலனடக்கம், மனவடக்கம், ஆர்வம், பரிவு, பொறுமை, வேள்விகள் - இவை விஷ்ணுவின் உடல். எல்லோர் உள்ளத்திலும் வாழ்பவரான அவர், தேவர்கள் அனைவருக்கும் தலைவர். அசுரர்களுக்குப் பகைவர். சிவனும், பிரம்மாவும் மற்ற தேவர்களும் அவரே மூலகாரணம் என்று கொண்டவர்கள். ரிஷிகளைத் துன்புறுத்துவது அவரைக் கொல்வதற்கு உபாயம்

இதை எல்லாம் கேட்ட கம்சன், தன் உயிரைக் காத்துக்கொள்ள அந்தணர்களைக் கொல்ல முடிவு செய்தான். 

கம்சன் இதனால் தான் அழிந்தான் என்று நான் சொல்லவில்லை ஆழ்வார் சொல்லுகிறார். 

“தீய புந்திக் கஞ்சன் உன் மேல் சினம் உடையன் சோர்வு பார்த்து” என்று கம்சன் கெட்ட புத்தியுடையவன். மாலை இருட்டிவிட்டது சீக்கிரம் வந்து பால் குடி என்று கண்ணனை யசோதையாக அழைக்கிறார் பெரியாழ்வார். 


“சாது சனத்தை நலியும் கஞ்சனைச் சாதிப்பதற்கு” நல்ல மக்களைக் கொடுமைப் படுத்தின கம்சன் என்கிறார் நம்மாழ்வார். 


கம்சனைப் பறிகொடுத்த அவனுடைய மனைவி “ஒரு பிழையும் செய்யாத மக்களுக்கு கொடும் துரோகம் செய்தீர்கள். மக்களுக்குத் துரோகம் செய்பவன் எப்படிப் பிழைப்பான் ? அதனால் இந்நிலையை அடைந்தீர்கள். அனைத்து உயிர்களையும் படைத்து, காத்து, மறைக்கும் கண்ணனை அவமதித்தவன் எங்கும் இன்பம் பெறுவதில்லை என்கிறாள் ( 10.44.47,48)


அடியவர்களான பெரியவர்களிடம் பகைமை கொண்டு அவர்களை அவமதிக்கும் ஒரு குற்றம் புரிந்தால் - ஆயுள், செல்வம், புகழ், தர்மம், புண்ணியம், நற்பயன், எல்லா உயர்வுகள் ஆகிய அனைத்தும் அழித்துவிடுகிறது என்கிறது பாகவதம் ( 10.5.46 ) 

இன்றைய மீம்ஸ் இளைஞர்களுக்கு வடிவேலு பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் - “மை ஃபேமிலி டோட்டல் டேமேஜ்”


- சுஜாதா தேசிகன்
கற்று - 11
29.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments