பாகவத திருப்பாவை - 1 - நாராயணனே
# மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால்*
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்**
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்!*
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய் 474/1
மார்கழி மாதம்; பூரண சந்திரனுடன் கூடிய பௌர்ணமி நன்னாள்!
அழகிய அணிகலன்களை அணிந்தவர்களே!
வளம் நிறைந்த திருவாய்ப்பாடி சிறுமிகளே வாருங்கள் !
நீராட விருப்பமுடையவர்களே! வாருங்கள்!
கூரிய வேலை ஏந்தி கண்ணனைக் காக்கும் நந்தகோபனின் திருமகன்
கண்ணழகி யசோதையின் சிங்கக் குட்டி ! கறுத்த மேகம் நிறத்தன்;
சூரிய சந்திரனை ஒத்த திருமுகச் செந்தாமரைக் கண்ணனான நாராயணனே நம் விருப்பத்தை நிறைவேற்றி அருள்பவன்!
உலகத்தவர்கள் புகழ்ந்து கொண்டாடும்படி பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்!
ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ( 10.22.1 - 22.6 ) காத்யாயனி விரதம் இப்படி வர்ணிக்கப்படுகிறது
ஹேமந்தருது (தனுர்) முதல் மாதமான மார்கழியில் நந்த கோகுலத்துக் கன்னிகைகள் நைவேத்தியம் செய்த உணவை மட்டும் உண்டு, காத்யாயனியை வழிபடுகிற விரதத்தை மேற்கொண்டனர். சூரியன் உதிக்கும் வேளையில் யமுனையில் நீராடி அதன் கரையில் மணலால் தேவியின் திருவுருவம் செய்து, சந்தனம், மணமிக்க பூமாலைகள், நல்ல நிவேதனங்கள் தூபம், தீபம், பூந்தளிர், பழம் முதலியானவற்றால் பூஜை செய்த அவர்கள் ’‘காத்யாயனி தேவியே! எங்கள் குலதெய்வமே! நந்தகோபரின் மகனான கண்ணனே எனக்குக் கணவராக அருள வேண்டும். உனக்கு நமஸ்காரம்!’ என்ற எளிய மந்திரத்தை ஜபித்து, ஒரு மாதம் விரதமிருந்து வழிபட்டனர்.
நாள்தோறும் விடியற்காலை எழுந்து, தோழிகளை அவரவர் பெயரிட்டெழுப்பி ஒருவர் கையை மற்றவர் பிடித்து இணைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணனைப் பற்றி உரக்க பாடிக் கொண்டு யமுனையில் நீராடச் சென்றனர்.
இவற்றை எல்லாம் பெரியாழ்வார் மூலம் கேட்ட ஆண்டாள் கோபிகைகள் நோன்பு நோற்ற அதே மார்கழி மாதத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரையே ஆயர்பாடியாகவும், அங்கே உள்ளக் குளத்தையே யமுனையாகப் பாவித்து, வடபத்ரசாயீ திருக்கோயிலை நந்தகோபனின் இல்லமாகவும், அதில் எழுந்தருளியிருக்கும் பெருமாளையே கண்ணனாகத் தன் கணவனாக வாய்க்க வேண்டும் என்று வழிபடுவதற்குத் தன் தோழிகளை அவரவர்கள் பெயரிட்டு எழுப்பி ‘’செல்வச் சிறுமீர்காள்!’ நீராட வாருங்கள் என்று கோபியர்களைப் போலவே அழைக்கிறாள்.
ஏன் நீராட அழைக்கிறாள் என்று பார்ப்பதற்கு முன் ஆண்டாளின் தோழிகள் யார் யார் என்று பார்க்கலாம் முதலில் பிள்ளாய் எழுந்திராய்! (திரு-6) என்று ஆரம்பித்து நாயகப் பெண் பிள்ளாய் ! (திரு-7), கோதுகலம் உடைய பாவாய்! (திரு-8), மாமான் மகளே! (திரு-9), அம்மனாய்! ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே! (திரு-10), பொற்கொடியே! புனமயிலே! செல்வப் பெண்டாட்டி! (திரு-11), நற்செல்வன் நங்காய்!(12), போதரிக் கண்ணினாய்! பாவாய்!(திரு-13), நங்காய்! ( திரு-14), இளங்கிளியே!(திரு-15) என்று வரிசையாக எழுப்புகிறாள்.
புண்ணிய நதிகளில் நீராட ஆண்டாள் ஏன் தன் தோழிகளை அழைக்கிறாள் ? பக்தி என்ற சிறு விதையை நம் மனதில் விதைக்க, அது முளைவிட்டுக் கொடியாக வளர ஆரம்பிக்கும்போது அதற்குத் தடங்களாகப் பாவங்களால் பல இடையூறுகள் வரலாம் ( இப்ப எதுக்கு கோயில் குளம் ரிடையர் ஆன பிறகு… ) இந்த முளைவிட்ட பக்தி செடியைப் பாதுகாத்துப் படரவிட, சான்றோர்களின் நட்பு என்ற ஆதரவு குச்சியை அதனுடன் பிணைக்க வேண்டும். அதற்குப் புண்ணிய தீர்த்தங்களுக்குச் செல்ல வேண்டும். அதன் பயனைப் பாகவதம் ( 3.2.16) இப்படிக் கூறுகிறது
புண்ணிய நதிகளில் நீராடுவதால் சான்றோர்களின் தரிசனம் ( சாது சத்சங்கம்) கிடைக்கும்.. சாதுக்களின் நட்பினால் அறநெறிகளில் ஈடுபாடு உண்டாகும். அதன் பின் பகவானுடைய கல்யாணக் குணங்களைக் கேட்பதில் விருப்பம் ஏற்படும். பின்னர் பகவானது கதைகளைக் கேட்பதில் நம்பிக்கை பிறக்கும்.
பெருமாளின் அடியவர்களின் பெருமையைப் பாகவதம் ( 4.24.57) இப்படிப் போற்றுகிறது.
பகவானது திருவடிகளில் பக்தி புரியும் சாதுக்களுடைய இணக்கம் அரை நொடி கிடைத்தால் போதும். அதற்குச் சுவர்க்கம் ஏன் முக்தி கூட இணையாகாது.
அடுத்து நாராயணன் குறித்து பாகவதத்தில் (2.5.15) இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதங்கள் ஸ்ரீமந்நாராயணனையே காரணமாகவும், குறிக்கோளாகவும் ( அடைய வேண்டிய லட்சியமாகவும் ) கொண்டவை. தேவர்களோ ஸ்ரீமந்நராயணனின் திருமேனியிலே தோன்றியவர்கள். உலகங்கள் யாவும் நாராயணனைப் பற்றி நிற்பவை. யாகங்கள் நாராயணனை மகிழ்விக்கவே. யோகங்கள், தவம் அவனை அடையும் சாதனங்கள். ஞானம் அவனை அறியக் காரணம். அனைத்துச் சாதனங்களும் அதனால் பெறப்படும் பயன்கள் அந்த ஸ்ரீமந்நாராயணனிடமே லயிப்பன!.
அடைவதற்கு உபாயமும் அவனே. அடையப்படுபவனும் அவனே. ஆதாரமாக விளங்குபவனும் அவனே என்பது நம் விசிஷ்டாத்வைதத்தின் அடிப்படை கோட்பாடு.
நமக்குப் பிடித்த நாராயணனே நாம் அடைய வேண்டிய இலக்காகவும் இருப்பது இடைச்சிகளாகப் பேதைகளாகப் பிறந்ததனால் சுலபமானது அன்றோ!” என்பாராம் எம்பெருமானார்
அந்தச் சுலபமான வழியைத் தேர்ந்தெடுத்து அதை நமக்குக் காட்டியும் கொடுத்த ஆண்டாளை வியக்காமல் இருக்க முடியாது!
-சுஜாதா தேசிகன்
மார்கழி - 1
16.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்
Style ஐ mute பண்ணி விஷயங்களுக்கு அதி முக்கியம் அளிக்கும் பகிர்வு:போகபோக தேசிகனின் வாசமும் வரும்.
ReplyDelete