Skip to main content

பாகவத திருப்பாவை - 2 ( வையத்து )

பாகவத திருப்பாவை - 2 ( வையத்து ) 



வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு *
செய்யும் கிரிசைகள் கேளீரோ! * பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி, *
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி **
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம் *
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம் *
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி *
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்

பூமியில் வாழ்பவர்களே!, நம்முடைய பாவை நோன்புக்குச் 
செய்ய வேண்டிய செயல்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் துயிலும் எம்பெருமானின் திருவடிகளைப் பாடுவோம்.
நெய், பால் போன்ற ருசியான பண்டங்களைத் தேடி ஓடமாட்டோம்;
விடியற்காலை நீராடுவோம்; 
கண்ணுக்கு மை, கூந்தலுக்கு மலர் போன்ற உடல் அலங்காரங்களை ஒதுக்குவோம்;
செய்யத் தகாத செயல்களைச் செய்யமாட்டோம்; 
கோள் சொல்ல மாட்டோம்.
முடிந்த வரை தான தர்மம் செய்வோம். 
உய்வதற்கான வழியை எண்ணி மகிழ்ச்சியுடன் இந்த நோன்பில் ஈடுபடுவோம்!

ஆண்டாள் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தாலும், இந்தப் பாசுரத்தைப் பாண்டிய தேசத்தவர்களே என்றோ, பாரதத் தேசத்தவர்களே என்றோ கூறாமல் பூமியில் வாழ்பவர்களை!’ (’வையத்து வாழ்வீர்காள்’) என்று எல்லோரையும் அழைக்கிறாள். 

எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உயர்ந்த ஸ்ரீவைஷ்ண குணம் ஐந்தே வயதான ஆண்டாளுக்கு வருவதற்குக் காரணம் பெரியாழ்வார் உபதேசித்த ஸ்ரீமத் பாகவதமே காரணம்.  

எப்படி என்று  தெரிந்துகொள்ள ஸ்ரீமத் பாகவதம் (பாகவதம் - 1, 2 ஸ்லோகம் )ஆரம்பத்தைச் சற்று பார்க்கலாம். 

ஸ்ரீசுகர் குழந்தை. ஆண்டாள் போலவே ஐந்து வயது தான் இருக்கும். இன்னும் உபநயனம் கூட ஆகவில்லை. வைதீக கர்மங்களோ, வேதத்தையோ கற்றுக்கொள்ள ஆரம்பிக்கவில்லை. 

அந்தக் குழந்தை பற்றனைத்தையும் துறந்து துறவு மேற்கொள்ள முடிவு செய்து வீட்டை விட்டு வெளியே செல்ல, இதைப் பார்த்த அவர் தந்தை வியாசர் மனம் நொந்து ‘குழந்தாய்!” என்று புலம்பிச் சுகரை உரத்த குரலில் கூப்பிட மரங்களும், செடிகொடிகளும் ‘என்ன ?’ என்று சுகிராகப் பதில் கூறின. 


என்ன காரணமாக இருக்கும் ? 

உலகில் உள்ள அசையும், அசையா பொருள்கள் அனைத்திலும்  பிரம்மமே பரவியுள்ளது. அதாவது பகவானான நாராயணனே பரவியுள்ளார். அந்த பிரம்மத்தினுள் அனைத்தும் அடங்கும். சுகர் இதை அந்தச் சிறுவயதில் அறிந்துகொண்டு பிரம்மத்திலேயே ஒன்றிவிட்டதால் அவருக்கு ’சுகப்பிரம்மம்’ என்று பெயர். அதனால் தான் குழந்தாய் என்று கூப்பிட்டபோது மரங்கள் பதில் கூறியது. 

காலம் காலமாக உலகத்தவர்கள் எல்லோரும் சுகத்தைத் தேடியே அலைகிறார்கள். ’வயிற்றுப் பிழைப்பு, நிம்மதியான வாழ்க்கை’ என்று அதை அடக்கிவிடலாம். 

தேனிகள் பூக்களில் தேனை அருந்துகிறது. எறும்பு தூக்க முடியாமல் அதனினும் பெரிய அரிசியைத் தூக்கிக்கொண்டு போகிறது. பறவைகள் நாடு விட்டு நாடு அலைகிறது. வயிற்றுப் பிழைப்புக்காக வேகாத வெய்யிலில் தார் சாலை போடுகிறார்கள். அந்தச் சாலையில் காரில் போகிறவர்கள் வெளிநாட்டுக்கு டாலர் தேடி போகிறார்கள்... ‘உண்டியே உடையே உகந்து ஓடும்’ என்று ஆழ்வார் கூறுவதைப் போல் வாழ்நாள் முழுவதும்  தற்காலிகச் சுகத்தை நோக்கியே ஓடுகிறோம். இந்தச் சுகத்தினால் கிடைக்கும் ஆனந்தம் நிலையானது இல்லை என்று புரிந்துகொண்டாலும், பூச்சிபோல விளக்கு வெளிச்சத்தில் விழுந்து விழுந்து எழுந்துகொள்கிறோம். 

எல்லா ஜீவனும் ஆனந்தத்தை அடைய வேண்டும் என்ற இலக்கை நோக்கிச் செல்லக் காரணம் நாம் எல்லோரும்  ஆனந்தத்திலிருந்து வந்திருக்கிறோம். அதனால் ஆனந்தத்தை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற இச்சை நம்  ஜீனில் இருக்கிறது. 

வேதம் பரமாத்மா ஆனந்தத்தின் ஸ்வரூபன் என்கிறது. ஸ்வாமி தேசிகன் ‘ஞானானந்தமயம் தேவம்’ என்ற ஸ்லோகத்தில் ( ஞானமும், ஆனந்தமயமானவரும் ) என்று கூறுகிறார். நாம் புலன்களால் ஏற்படும் சுகத்தை ஆனந்தம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம் ( பார்க்கும், கேட்கும், சுவைக்கும்… ). ஆனால் அது ஆனந்தம் இல்லை ! 

பிரம்மத்தை அனுபவிப்பதே ஆனந்தம். அதை அடைந்துவிட்டால் பிரம்ம ஸ்வரூபம். 

பிரம்மம் ஆனந்த ஸ்வரூம் மட்டும் அல்ல அவன் பிரேம ஸ்வரூபன்.  வெல்லக் கட்டியை எடுத்து அதில் பொம்மை ஒன்று செய்தால் அந்தப் பொம்மையின் ஸ்வரூபம் வெல்லமாகவே இருப்பது போலப் பிரம்ம ஸ்வரூபம் பிரேமை ஸ்வரூபம். வெல்லப் பொம்மைபோலப் பெருமாள் பிரேம பொம்மை .  அதனால் தான் எந்தப் பாகுபாடும் இல்லாமல் பெருமாளுக்கு எல்லா ஜீவன்களிடமும் பிரியம் உண்டு. 

பிரம்மத்தை அடைந்துவிட்டால் பிரேமம் ஏற்பட்டு, எல்லோரிடமும் அகண்டமான பிரியம் ஏற்படுகிறது. அதனால் தான் ஆண்டாள் ‘எல்லோரும் வாருங்கள்!’ கூடியிருந்து குளிர்ந்து ஆனந்தத்தை (பிரம்மத்தை) அனுபவிக்கலாம் என்று பிரியமுடன் கூப்பிடுகிறாள். 

பிரேமம் என்பது பக்தி! அந்தப் பக்தி கிடைக்க சுலபமான வழி கண்ணன் கதைகளைக் கூறும் பாகவதம். பாகவதமே  கிருஷ்ண ஸ்வரூபம். பிரம்ம ஸ்வரூபமான சுகரே அதை அனுபவித்தார் என்றால் அதன் மேன்மையைப் புரிந்துகொள்ளுங்கள். கண்ணைச் சுருக்கி இடுப்பில் முடிந்து கொண்ட கோபிகை போலப் பாகவதத்தை சுருக்கி திருப்பாவையாக ஆண்டாள் கொடுத்திருக்கிறாள்!

’ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதி' என்னும் மகான், பாகவத முதல் சுலோகத்தின் முன்னுரையில் கூறுகிறார்

“நாள்தோறும் வேண்டியன விட்டு வேண்டாதன பேசியும், அதாவது ஒன்றுக்கும் உதவாத பேச்சினாலும் பல்வேறான துன்பங்களாலும் நம் வாழ்நாள் வீணாகக் கழிகின்றன. அதே வாழ்நாள், பகவான் ஸ்ரீ கண்ணனது திருவிளையாடல்களைக் கூறும் நற்கதைகள் என்ற அமுதத் துளிகளால் கணநேரம் நினைத்தாலும், அது நம் வீணான வாழ்நாளையும் பயன் பெற்ற வாழ்நாளாக ஆக்குமே என்பது தான் இம்முயற்சி” 

இது அப்படியே வரிக்கு வரி ஆண்டாளின் இன்றைய பாசுரம் !

-சுஜாதா தேசிகன்
வையம் - 2
16.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்


Comments