Skip to main content

பாகவத திருப்பாவை - 6 ( முனிவர்கள் )

 பாகவத திருப்பாவை - 6 ( முனிவர்கள் ) 

புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்*
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?*
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு*
கள்ளச் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி**
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை*
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்*
மெள்ள எழுந்து அரி என்ற பேர் அரவம்*
உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏலோர் எம்பாவாய் 479/6

பறவைகளும் கூவி விட்டன. 
பறவைகளின் தலைவனான கருடனுக்கு ஸ்வாமியான விஷ்ணுவின் கோயிலில் 
வெண்சங்கம் பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு. பூதனையின் நச்சு முலையை உறிஞ்சி,
வண்டி உருவில் வந்த வஞ்சகனான சகடாசுரனை  கட்டுக் குலையும்படி காலால் உதைத்து, 
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை 
உள்ளத்தில் கொண்டுள்ள முனிவர்களும் யோகிகளும், "ஹரி ஹரி" என்ற பேரொலி 
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது. 

பக்தி திரைப்படங்களில்  ஸ்ரீ நாரதரை ஒரு நகைச்சுவை பாத்திரமாக எப்போதும் சித்தரித்து, நாரதர் யார் என்று யாரைக் கேட்டாலும் அவர் கலகம் செய்பவர் என்பதைத் தாண்டி வேறு ஒன்றும் நமக்குத் தெரியாது. 


இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் முனிவர்களைக் குறிப்பிடுகிறாள். அதனால் நாம் நாரத முனிவர் சரித்திரத்தை இன்று அறிந்துகொள்ளலாம். 


ஸ்ரீமத் பாகவதத்தில் ( 1.5.2 ) ஸ்ரீ நாரதர் ஸ்ரீ வியாசரிடம் இப்படிக் கேட்கிறார் “வியாசரே தங்கள் உடல், மனம் இரண்டும் மகிழ்ச்சியாக உள்ளதா ? மகாபாரதம் இயற்றியவர் தாங்கள். அதில் கூறியிருக்கும் தர்மப்படி நடக்கிறீர்களா ? பிரம்மத்தை அறிந்தவர் தாங்கள், ஆனால் அதைப் பெறாதவர் போல ஏன் உங்கள் முகத்தில் கவலை ?” 


”நீங்கள் கூறிய அனைத்தும் என்னிடம் உள்ளது, ஆனால் மனம் அமைதி பெறவில்லை. மகிழ்ச்சி இல்லை. அதற்காகக் காரணமும் தெரியவில்லை. நீங்கள் ஆழ்ந்த அறிவுடையவர். தாங்களே அதன் காரணத்தைக் கூறுங்கள்!” என்று வியாசர் கூற அதற்கு நாரதர் ”பகவான் வாசுதேவனின் கதைகளை நீங்கள் பெரும்பாலும் வர்ணிக்கவில்லையே! அதனால் உங்கள் மனம் மகிழ்ச்சி பெறவில்லை. தவம், வேதம் ஓதுதல், வேள்வி, அனுஷ்டானங்கள், தானம், ஞானம் போன்ற அனைத்துக்கும் சிறந்த பயன் என்று ஒன்று உள்ளது என்றால் அது “பகவானின் புகழ்பாடுதல் ஒன்றே” என்று கூறி நாரதர் தம் கதையை அவரே கூறுகிறார். 


“முனிவரே! (1.5.23 ) பிரம்மத்தைப் பற்றியே நினைத்து வரும் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்யும் ஒரு வேலைக்காரியின் மகனாகப் பிறந்தேன். துறவிகள் பின்பற்றும் சாதுர்மாஸ்ய விரதக் காலத்தில் அவர்கள் ஓரிடத்தில் தங்கி தவம் மேற்கொண்டனர். தினமும் அவர்கள் ‘ஹரி ஹரி’ என்று கூறி எழுந்திருப்பார்கள். நான் சிறுவனாக அவர்களை வணங்குவேன். அவர்கள் பின்னாடி செல்வேன். பிறகு நான் அவர்களது பணிவிடையில் ஈடுபட்டேன். என் மனம், சொல், உடல் என மூன்றிலும் அவர்களுடைய பணிவிடையிலேயே செலுத்தினேன். 


துறவிகள் கூறிய நல் உபதேசங்களைப் பெற்று அவர்களுடைய சொற்படி நடந்தேன். அந்தச் சான்றோர்கள் சிறுவனான என்னிடம் மிகவும் கருணை கொண்டார்கள். அவர்களுடைய அனுமதி பெற்று, அவர்கள் அருந்தியது போகப் பாத்திரத்தில் மீதம் இருந்தால் அதைக் கொஞ்சம் பிரசாதமாக தினமும் ஒரே ஒரு முறை உண்பேன். அதனால் எனது பாவங்கள் அனைத்தும் தொலைந்தன. மனம் தெளிவு பெற்றது. அவர்கள் செய்து வரும் பகவத் கீர்த்தனங்களில் மனம் ஈடுபாடு கொண்டது. 


அவர்கள் தினமும் பகவானது கதைகளைக் கீர்த்தனம் செய்வார்கள். மனதைக் கொள்ளைக் கொள்ளும் அந்தக் கதைகளை  விரும்பிக் கேட்பேன். அவர்கள் கூறிய சொல் ஒன்றையும் விடாது சிரத்தையுடன் கேட்பேன். அவர்கள் செய்த இந்த உயர்ந்த உதவியால் எனக்கு பகவானிடம் மிகுந்த பற்று உண்டாயிற்று. அதனால் மகரிஷியே மனத்தைக் கவர்ந்திழுக்கும் பகவானிடம் என் மனம் நிலை கொண்டது. 


சாதுர்மாஸ்யம் முடித்துத் துறவிகள் கிளம்பத் தயாரானார்கள். இனி இவர்களின் சத்சங்கம் இல்லாமல் போய்விடுமே என்று வருத்தம் உண்டாயிற்று. என் துக்கத்தைப் பார்த்த அந்தத் துறவிகள் ”வருத்தப்படாதே குழந்தாய்! வாசுதேவன் உன்னிடத்திலும் இருக்கிறான், எங்களிடத்திலும் இருக்கிறான் ‘உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது’ என்று கூறி பகவானால் பிரம்மதேவருக்கு உபதேசிக்கப்பட்ட மிகவும் ரகசியமான ஈஸ்வர தத்துவ ஸ்வரூப ஞானம் அடங்கிய இந்த பாகவத சாஸ்திரத்தை எனக்கு உபதேசித்தார்கள். 


அந்த ஞானத்தால் எனக்கு பகவானது மாயையின் உருவத்தைத் தெரிந்து கொண்டேன். இந்த ஞானத்தை அடைந்தவர்கள் பரமனது திருவடிகளை அடைகிறார்கள். 


எனக்கு விசேஷமான ஞானத்தை உபதேசித்த மகான்கள் சென்றபின்பு எனது இளமைக்காலம் ஸ்ரீமந் நாராயணனின் குணங்களை சதா நினைப்பதே தொழிலாகச் செய்து வந்தேன் ( 1.6.5 ) 


எனக்கு ஐந்து வயது. என் தாயார் என்னைப் பற்றி அதிகம் கவலைப்பட்டாள். தந்தை இல்லாத நான் அவளுக்கு ஒரே பிள்ளை. அபலை. உறவினர்கள் யாரும் இல்லை. தாயின் பாசத்துக்குக் கட்டுப்பட்டு அவள் வீட்டு வேலை செய்த அந்த அந்தணர் வீட்டிலேயே வசித்து வந்தேன். ஒரு நாள் இரவு பால் கறப்பதற்காக வீட்டுப் பின்புறம் பசுமாட்டுக் கொட்டிலுக்குச் சென்றாள். இருட்டில் ஒரு பாம்பைக் காலால் மிதிக்க அது அவளைத் தீண்ட அவள் மரணமடைந்தாள். 


இந்த உலகத்தை பொம்மலாட்டக்காரன் போல ஆட்டுவிக்கிறான் பகவான். நாம் அவன் ஆட்டுவிப்பது போல் ஆடும் பொம்மைகள். என் தாய் இறந்ததை  எனக்கு இருந்த ஒரே பந்தத்தை அறுத்து எனக்கு அனுக்கிரகம் செய்தான் என்று நினைத்துக்கொண்டேன்.  ’பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்’ ( திருமங்கை ஆழ்வார்) பக்தர்களின் நன்மைக்கே பகவான் எதையும் செய்வான் என்று எண்ணி வடதிசை நோக்கிப் புறப்பட்டேன். 


பல பிரதேசங்கள், கிராமங்கள், காடுகள் நீரோடைகள் என்று கடந்து ஒரு பெரிய காட்டுக்கு வந்தேன். அங்கே இருந்த ஒரு நதியில் குளித்துவிட்டு, அந்தத் தண்ணீரையே பருகினேன். களைப்பு தீர்ந்தது. மனித நடமாட்டம் இல்லாத அந்தக் காட்டில் ஓர் அரசமரத்தடியில் அமர்ந்து அந்த ஸ்ரீமந் நாராயணனின் திருவடிகளை மனத்தில் தியானம் செய்தேன்.  என் மனத்தில் 


உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன்  என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன்  கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் ( முதல் திருவந்தாதி ) 


பகவான் உடனே தோன்றினார். என் நினைவை இழந்தேன். பிறகு தியானம் கலைந்தது மீண்டும் பெருமாளின் உருவத்தைக் காண ஆசையால் மீண்டும் தியானம் செய்ய முயன்றேன். ஆனால் பகவானைக் காண இயலவில்லை. வருந்தினேன். ’வந்தாய் போலே வாராதாய். வாரா தாய்போல் வருவானே’ ( நம்மாழ்வார் ) என்ற அந்த மாயன் எனக்கு அகப்படவில்லை. 


எண்ணம் நிறைவேறாது வருந்தி அழுதேன். அப்போது ஓர் இனிய வார்த்தை ஒலித்தது “அப்பனே! பக்தியில் பழுத்த நிலையை அடையாதவர்களுக்கு என்னைக் காண இயலாது! உனக்குப் பக்குவம் இன்னும் வரவில்லை. என் திருவுருவை உனக்குக் காட்டியது என்னிடம் உனக்கு அன்பு உண்டாவதற்கே! நீ சாதுக்களுக்குப் பணிவிடை செய்த காலம் குறைவாக இருப்பினும் அவர்கள் சேவையால் என்னிடம் உனக்கு நிலையான அன்பு ஏற்பட்டது. இந்த உடலை விட்டபிறகு எனக்கு நிரந்தரமாக ’உன் தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று எனக்குச் சேவை செய்யப் போகிறாய். என்னிடம் கொண்ட பக்தி எனது அருளால் என்றும் அழியாமல் ’நீங்காத செல்வம் நிறைந்து’ என்றும் நிலைத்திருக்கும்” என்றார் பகவான் 


இதைக் கேட்ட நாரதர் மிகவும் சந்தோஷப்பட்டு, பகவான் மறைந்தால் என்ன ‘மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று’ அவன் திருநாமங்கள் இருக்கிறதே என்று அதைப் பிடித்துக்கொண்டு சர்வகாலமும் ‘நாமம் பலவும் நவின்று’ பகவானுடைய நாமங்களையே சங்கீரத்தனம் செய்துகொண்டு ஸ்ரீ கண்ணனிடம் லயித்த மனத்துடன் இருந்து குறிப்பிட்ட காலம் வந்ததும் ஆகாயத்தில் தோன்றும் மின்னலைப் போல நொடிப்பொழுதில் பெருமாளின் திருவடி கிடைத்தது. 


பிரளயத்தின்போது பகவான் பிரளயச் சமுத்திர ஜலத்தில் யோக நித்திரையில் இருந்தபோது, அவருடைய இதயத்தில் இருக்க வேண்டும் என்ற ஆசையில் பிரம்மதேவரின் மூச்சுக்காற்றுடன் நானும் அவனது இதயத்துள் சென்றேன்.  அவனது திருவருளால் இன்று தடையின்றி  மூவுலகங்களிலும் சென்று வருகிறேன்.  பகவான் கொடுத்த வீணையில் அவன் நாமங்களைச் சதா சங்கீர்த்தனம் செய்து வருகிறேன். 


இதைக் கேட்ட வியாசர் “இந்த ஜன்மாவில் உமக்குப் பகவான் தரிசனம் கொடுக்கிறாரா ?” என்று கேட்க, அதற்கு நாரதர் ”நீங்காமல் எப்போதும் தரிசனம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்” 

”முன்பு பக்தியில் பக்குவம் இல்லை என்றார் பகவான், இப்போது என்ன பக்குவம் வந்தது ? அதற்கு என்ன செய்தீர்  ?” 

“முன்பு அஷ்டாங்க யோகத்தில் பெருமாளைத் தியானம் செய்தேன்.  பக்குவம் வரவில்லை.. இப்போது பெருமாள் திருநாமங்களைப் பஜனை செய்கிறேன்! பக்குவம் வந்துவிட்டது!” என்றார். 


சாஸ்திரப்படி கர்மங்களைச் செய்யும் மகான்கள் பகவானை நினைத்தே, அவனது திருக்குணங்களையும், திருநாமங்களையும் சொல்லுகிறார்கள். இந்த உயர்ந்த தத்துவத்தை நான் கடைப்பிடிப்பதை உணர்ந்த பெருமாள் எனக்கு அவரிடம் பிரேம பக்தியை அளித்தார். 


”வியாசரே!  பூரண ஞானமுடையவர் நீங்கள். பகவானது பக்திப் பூர்வமான திருவிளையாடல்களை வர்ணித்து எழுதுங்கள். அதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அல்லவா ஞானிகள் ஆவலுடன் இருக்கிறார்கள். துன்பத்தைப் போக்க இதுவே சிறந்த வழி !” என்று கூறிவிட்டு வீணையை மீட்டிக் கொண்டே நாராயண நாமங்களைச் சொல்லிக்கொண்டு சென்றார். 


நாரதர் போலப் பெருமாளை நெஞ்சில் வைத்துள்ள ’உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்’ ‘அரி என்ற பேர் அரவம்’ செய்து புறப்பட்டுவிட்டார்கள். அவர்களுக்கு நாரதர் சிறுவயதில் பணிவிடை செய்தது போல நாமும் செய்யலாம் வாருங்கள்!” என்று  செல்வச் சிறுமீர்களை அழைக்கிறாள்.


- சுஜாதா தேசிகன்

புள்ளும் - 6

22.12.2021

படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments