Skip to main content

பாகவத திருப்பாவை - 10 ( நாற்றத் துழாய்முடி )

 பாகவத திருப்பாவை - 10 ( நாற்றத் துழாய்முடி ) 


நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!*
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?*
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்*
போற்றப் பறை தரும் புண்ணியனால்** பண்டு ஒருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்*
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?*
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!*
தேற்றமாய் வந்து திற ஏலோர் எம்பாவாய் 483/10

நோன்பு நோற்று சுகம் அனுபவிக்கும் அம்மா!
வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள்?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு நமக்கு அருள் புரிபவன்
முன்பு யமன் வாயில் வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடம் தோல்வியடைந்து 
தனது பேருறக்கத்தை உனக்குப் பரிசாகத் தந்தானோ?
எல்லையற்ற உறக்கத்தை உடையவளே!  சிறந்தவளே! 
தெளிந்து வந்து கதவைத் திறப்பாயாக!


2017 மார்கழியில்  ஸ்ரீரங்கத்தில் இருந்தேன். பெரிய பெருமாளைச் சேவிக்கப் பெரிய வரிசை. அப்போது பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே வந்தவர் நெற்றி கோபி சந்தனம் ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ என்றது. முகத்தில் பூரிப்பு. பூரிப்புக்குக் காரணம் கையில் இருந்த  துளசி மாலை பிரசாதம். 


எனக்குப் பின் வரிசையில் இருந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தர்களிடம் அந்தத் துளசி பிரசாதத்தைக் கொடுக்க அவர்கள் அதை வாயில் போட்டுக்கொள்ளாமல், மூக்கில் வைத்து வாசனைப் பார்த்துவிட்டுப் பூரிப்புடன் அடுத்தவருக்குத் தர வரிசையாக எல்லோரும் வாசனைப் பார்த்தார்கள் … அப்போது “நாற்றத் துழாய்முடி” என்ற பாசுரம் நினைவுக்கு வந்தது. 


பெருமாளை எப்படி உணர முடியும் ? பொதுவாகப் பார்த்து, கேட்டு, தொட்டு உணரலாம். பிரபலமான பாரதியின் ’நந்ததாலா’ கவிதையில் கூட - பார்க்கும் மரம், கேட்கும் ஒலி, தீக்குள் விரல் என்று தான் வருகிறது. 


ஆழ்வார்கள் வாசனையிலும் பெருமாளை உணர்கிறார்கள். திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் திருக்கண்ணபுரம் பத்துப் பாசுரங்களிலும் துழாய் மாலை வாசனையை அனுபவிக்கிறார். அதிலிருந்து ஒரு பாசுரத்தை இங்கே தருகிறேன். 


ஏர் ஆர் மலர் எல்லாம் ஊதி, நீ என் பெறுதி?

பார் ஆர் உலகம் பரவப் பெருங் கடலுள்

கார் ஆமை ஆன கண்ணபுரத்து எம் பெருமான்

தார் ஆர் நறுந் துழாய் தாழ்ந்து, ஊதாய் கோல் தும்பீ


தும்பியே, அழகு மலர்களில் திரிந்து பெற்ற நலம் என்ன ? திருக்கண்ணபுரத்து பெருமான் சூடிய திருத் துழாய் மாலையில் படிந்து வந்து அந்த வாசனையை என்னிடம் ஊதுவாய்.


(10.30.12 ) மரங்களே தன் காதலியின் தோளின் மீது கைபோட்டுக் கொண்டு மற்றொரு கையில் தாமரை ஏந்தி, கண்ணன் இவ்வழியே சென்றிருக்கிறார் போலும். அவர் தரித்த துளசி மாலையில் மொய்த்த வண்டுகள் தேனைப் பருகியதால் மதம் பிடித்து அவரைத் தொடர்ந்து சென்றுள்ளன போலும் என்கிறது பாகவதம். 


ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் கண்ணனைக் கண்டீர்களா ? என்று கேட்பது போலப் பாகவதத்தில் கோபியர்கள் இப்படிக் கேட்கிறார்கள் 


(10.20.7,8) கோவிந்தன் திருவடிகளில் அன்புகொண்ட துளசியே மங்களம் நிரம்பியவளே அன்புமிக்க அந்த வண்டுகள் மொய்க்கின்ற உன்னை மாலையாகக் கழுத்தில் பூண்ட கண்ணைப் பார்த்தாயா ? அவர்தான் உன்னிடம் மிக்க அன்புள்ளவராயிற்றே! 


பாகவதத்தில் ஓர் இடத்தில்  ( 2.3.23 ) இவ்வாறு இருக்கிறது “எம்பெருமானின் அடியார்களின் திருவடித்துகள்களை ஒரு முறையேனும் தன் தலையில் சாற்றப்பெறாதவன் நடைப்பிணமே. அடியார்களால் இறைவன் திருவடிகளில் அர்ச்சனை செய்யப்பட்ட துளசியின் நறுமணத்தை முகர்ந்து மகிழக் கொடுத்து வைக்காதவன் மூச்சுவிடும் சவமே!” 


பெரியவர்கள் கூரத்தாழ்வான் குறித்து ஒரு கதையைக் கூறுவர். 

சோழ மன்னன் அநீதியால் தம் கண் பார்வையை இழந்த கூரத்தாழ்வான் திருமாலிருஞ்சோலைக்குச் சென்றார். அங்கே திருத்துழாயுடன் கூடிய பூந்தோட்டம் அமைத்து, அழகருக்கு பெரியாழ்வார் போலப் புஷ்பக் கைங்கரியம் செய்து வந்தார். 


ஒரு நாள் மாலை பூந்தோட்டத்தில் அமர்ந்து இருந்த ஆழ்வான் கண்ணீர் விட்டு வருந்தினார். அவர் அருகில் ஒரு குரல் “ஆழ்வான் உமக்கு என்ன மனக்கவலை ?” என்று கேட்டது. 

“என் கவலை என்னோடு போகட்டும்” 

“உமது கவலையை சொன்னால் என்னால் நிறைவேற்ற முடிகிறதா என்று பார்க்கிறேன்” என்றது அந்தக் குரல் 

ஆழ்வான் “உம்மால் அந்த என் குறையைத் தீர்க்க முடியாது” 

“என்னால் எல்லா குறையும் தீர்க்க முடியும்! என்னால் ஆகாதது எதுவும் இல்லை!” என்றது அந்தக் குரல்

“உம்மால் முடியாது, இருந்தாலும் சொல்லுகிறேன். தேவரீர் கண்ணனாக அவதாரம் செய்து, பிருந்தாவனத்தில் மாடு மேய்த்து, புல்லாங்குழல் ஊதியபோது ஆயர் சிறுவர்களில் ஓர் இடைச்சிறுவனாக இல்லாமல் போனேனே! என்ற மனக்குறை தான்” 

“இதை தீர்ப்பது சுலபம்”  என்றது அந்த குரல். 

ஆழ்வான் சிரித்துக்கொண்டு ”முடியாது! இராமானுசன் தொடர்புடையோருக்கு மோக்ஷம் நிச்சயம் என்பது பெரிய பெருமாள் வாக்கு அல்லவா ?”

“ஆமாம் அதில் என்ன சந்தேகம்”

“நீர் தேர்தட்டில் அர்ஜுனனுக்கு வைகுந்தம் சென்றவர் மீண்டும் வருவதில்லை என்று கீதையை உபதேசித்துவிட்டு, நான் மீண்டும் இடைச்சிறுவனாக எப்படி வர முடியும்? சரி தானே அழகரே ?”

அந்த குரல் மேலும் பேச முடியாமல் “அது சரி ஆழ்வானே நான் ’அழகர்’ என்று எப்படி உணர்ந்தீர் ?”

“கண் தெரியாவிட்டால் என்ன ? உம்முடைய துழாய் மணத்தைக் கொண்டு அறிந்தேன்!” என்றார் ஆழ்வான். 


பாகவத முடிவில் யதுகுலம் அழிந்த சமயம், பலராமன் தன் மனித உடலைத் துறந்தார். கண்ணன் மன வருத்தத்துடன் ஓர் அரச மரத்தடியில் மௌனமாக அமர்ந்தார்.  ஸ்ரீகிருஷ்ணனைக் காணாமல் அவருடைய தேரோட்டியான தாருகன் கண்ணனின் இருப்பிடத்தை அறியாமல் இருந்தபோது, காற்றுவாக்கில் வந்த துளசியின் நறுமணத்தை முகர்ந்து அதன் மூலம் ஸ்ரீகிருஷ்ணன் இருக்குமிடத்தை அனுமானித்து, அவரெதிரே வந்து நின்றான். (11.30.41) 


அம்பரீஷன் ஸ்ரீகிருஷ்ணரிடத்தும் அவரது அடியார்களிடத்தும் மிகுந்த பக்தி கொண்டவன். 

தன் இரு கண்களைப் பகவானின் அர்ச்சாவிக்ரகத்தையும் திருக்கோயில்களைத் தரிசிப்பதிலும், 

தனது உடம்பை - பகவத்பக்தர்களை நெஞ்சாரத் தழுவி மகிழ்வதிலும், 

நுகரும் மூக்கை - பகவானது திருவடித் தாமரைகளில் அர்ச்சிக்கப்பட்ட மங்களமான துளசியின் நறுமணத்தை முகர்வதிலும். 

தன் நாவை  - பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நைவேத்தியப் பிரசாதத்தையும் மட்டுமே உண்பதிலும் செலுத்தினான். (9.4.19)


பாகவதத்தில் பிரம்மா கண்ணனிடம் அபசாரம் பட்டு மயங்கிக் கண் விழித்தபோது அவர் கண்ணன் காட்சி கொடுத்தான். “திருமார்பில் ஸ்ரீவத்ஸம் என்ற மருவின் ஒளி, தோள்வளை மணிக்கட்டில் சங்காலான இரத்தினங்கள் பதித்த கங்கணங்கள். கால்களில் சிலம்புகளும் காப்புகளும், இடுப்பில் தங்க அரைஞான், விரல்களில் மோதிரங்கள் பூண்டிருந்தனர். பெரும் புண்ணியம் புரிந்த பக்தர்கள் அர்ப்பணம் செய்த மென்மையான புதுத் துளசி மாலைகள் காலிலிருந்து தலைவரை உடல் முழுவதையும் மறைத்திருந்தன. (10.13.49 ) 


பாகவதமே கண்ணன். துளசி திருவடியிலிருந்து திருமுடிவரை இருப்பது போல எல்லா ஸ்கந்தங்களிலும் நிறைந்திருக்கிறது. அதிலிருந்து மேலும் சில பகுதிகளைத் தருகிறேன் : . 


( 10.23.29 ) அந்தணர் மனைவிகள் கண்ணனைப் பார்த்துக் கூறுகிறார்கள் “எங்கும் நிறைந்துள்ளவரே நாங்கள் எங்களது உறவு அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தங்கள் திருவடிகளிலிருந்து நழுவிய துளசிமாலையைத் தலையால் தாங்கவே தங்கள் திருவடிகளை வந்தடைந்தோம். 


கண்ணனிடம் கோபிகைகள் (10.29.37 ) “லக்ஷ்மியின் கடைக்கண் பார்வையைப் பெற எல்லாத் தேவர்களும் தவம் கிடக்கின்றனர். அந்த லக்ஷ்மி உன் மார்பில் இடம் பெற்ற பின்னரும் பக்தர்கள் வணங்கும் உமது திருவடித்துகள்கள் துளசி தேவியுடன் பெற விரும்புகிறாள். அதே போன்று நாங்களும் உன் திருவடித்தூசியை அடைய வந்துள்ளோம்” என்கிறார்கள். 


வைகுண்டத்தில் மகாலஷ்மிக்கென்று ஒரு தனி நந்தவனம் உள்ளது. அங்குத் தெளிந்த அமுதமயமான குளம் இருக்கிறது. அங்குத் திருமகள் தன் பணிப்பெண்களுடன் தன் நாயகனான நாராயணனுக்குத் துளசியைக் கொண்டு அர்ச்சனை புரிவது வழக்கம் ( 3.15.22 ) 


செல்வத்தை விரும்புகிறவர்கள், திருமகளின் திருவடித்துகள்களைத் தத்தம் தலையில் தாங்குகிறார்கள். ஆனால் அந்தத் திருமகள், யாரோ ஒரு பாக்கியவான் எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்த துளசிமாலையை முகர்ந்து கொண்டிருக்கும் வண்டாகவாவது தான் இருக்க கூடாதா என்று ஏங்குகிறாள்.


பகவானின் திருமார்பில் இருந்தாலும், அடியவர்கள் திருவடியில் சமர்ப்பித்த துளசியின் சம்பத்துடன் இருப்பதற்கே திருமகள் விரும்புகிறாள். திருமார்பிலும் திருவடியே பெருமை பெற்றது. 


நம்மாழ்வார் திருவிருத்தத்தில் ( 8.9.10 ) மருத்துவர்போல வியாதிக்கு ஒரு மருந்துச் சீட்டு தருகிறார். அதில் இப்படி எழுதியுள்ளது “நோய் தீர அவனது திருமேனித் தொடர்புடைய திருத்துழாய், மாலையையோ, அதில் ஓர் இலையோ, அதன் கொம்பையோ, துழாய் வேரையோ அல்லது அவ்வேரில் சேர்ந்த மண்ணையோ எடுத்து மேனியில் தடவிக்கொள்ளவும்” என்கிறார். 


”பகவான் மிக்க விருப்பத்துடன் துளசி மாலைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்கிறான். அதன் நறுமணத்தையே முகர்ந்து மகிழ்கிறார்” ( 3.15.19) .  ஆண்டாளுக்கு இந்த ’மெடிக்கல் பிரிஸ்கிரிப்ஷன் தெரிந்திருக்கிறது’  “நாற்றத் துழாய்முடி நாராயணன்” என்கிறாள். துளசியின் அவதாரமே ஆண்டாள் அல்லவா ? 


- சுஜாதா தேசிகன்
நோற்று  - 10
27.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments