Skip to main content

பாகவத திருப்பாவை - 4 ( கண்ணா ! )

 பாகவத திருப்பாவை - 4 ( கண்ணா ! ) 



ஆழி மழைக் கண்ணா! ஒன்று நீ கை கரவேல்*
ஆழியுள் புக்கு, முகந்து, கொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்து*
பாழியன் தோளுடைப் பற்பநாபன் கையில்**
ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
வாழ உலகினில் பெய்திடாய்!* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் 477/4


வருண தேவனே சிறிதும் ஒளிக்காமல் 
கடலில் புகுந்து நீரை மொண்டு இடி இடித்து ஆகாயத்தில் ஏறி,
திருமாலின் திருமேனிபோல் கருப்பாகி,
அழகான தோளுடைய பத்மநாபன் கையில் 
உள்ளச் சக்கரம்போல் மின்னி, 
அவனுடைய சங்கம்போல் அதிர்ந்து முழங்க, 
அவனுடைய வில்லாகிய சார்ங்கம் வீசிய அம்புகள் மழைபோலப் பெய்து 
உலகம் அனைத்தும் வாழ, நாங்களும் 
மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு நீராடுவோம்


இன்று ஒரு பாகவதக் கதையுடன்(10.29.1-17) ஆரம்பிக்கலாம். 

அன்று கார்த்திகை மாதம் வளர்பிறையில் கைசிக ஏகாதசி. கண்ணனின் தந்தையான நந்தகோபர்  உபவாசமிருந்து இரவு முழுவதும் ஸ்ரீமந் நாராயணனை ஆராதித்து துவாதசி தொடங்கிய போது, நீராடுவதற்கு சூர்யோதயத்துக்கு முன் யமுனைக்குச் சென்று நீரில் இறங்கினார். 

இந்த நேரம் நீராடுவதற்கு ஏற்ற நேரம் இல்லை என்று நந்தகோபருக்குத் தெரிந்திருக்கவில்லை. வருண தேவனின் பணியாளனான அசுரன் ஒருவன் நந்தரைப் பிடித்து வருணனிடம் அழைத்துச் சென்றான். 

நீரில் முழுகிய நந்தகோபன் வெளிவராததைக் கண்ட கோகுலத்து வாசிகள் ”ஐயோ கண்ணா ! பலராமா ! நந்தரைக் காணவில்லை!” என்று  குய்யோ முறையோ எனக் கூக்குரலிட்டார்கள். 

இதைக் கேட்ட கண்ணன்  ”பயப்படாதீர்கள்!” என்று சமாதானம் செய்துவிட்டு, தன் தந்தையைத் தேடிக்கொண்டு வருணன் இருக்கும் இடத்துக்குச் சென்றார். 

வருணன் ஸ்ரீகிருஷ்ணரைத் தரிசித்து “பிரபுவே! இன்று தான் நான் உடல் பெற்ற பயனைப் பெற்றேன். நான் நாடியதனைத்தையும் இன்று பெற்றேன். தங்கள் திருவடிகளைப் பற்றியவர்களே சம்சாரக் கடலில் அக்கரையான முக்தியை அடைகிறார்கள். ஒப்பற்ற ஐஸ்வர்யமுள்ள பூரணரான சகல ஜீவன்களுக்கும் அதிபதியான உன்னை நமஸ்கரிக்கிறேன்!

என்னுடைய வேலைக்காரன் உம்முடைய தகப்பனார் என்று அறியாமல் அழைத்துவந்துவிட்டான். அதைத் தாங்கள் பொறுத்தருள வேண்டும். உம்முடைய தந்தையை இங்கே அழைத்து வந்ததால் தான் உன் தரிசனம் எங்களுக்குக் கிடைத்தது. தவறுக்கு மன்னிக்கவும்.  உங்கள் தந்தையை அழைத்துச் செல்லுங்கள்” என்று காலில் விழுந்தான். 

கண்ணன் தன் தந்தையை அழைத்துக்கொண்டு மீண்டும் கோகுலம் வந்து சேர்ந்தார். நந்தகோபனுக்குத் தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. வருண தேவன் கண்ணனிடம் காட்டிய தாழ்மையையும், கண்ணனைப் புகழ்ந்த பெருமையையும் எண்ணி வியந்தார். தன் உற்றார் உறவினர் என்று போகிற வருகிறவர்களிடம் எல்லாம் நடந்த சம்பவத்தைக் கூறினார். 

இந்தக் கதையைக் கேட்ட கோகுலத்து வாசிகள் ”ஈசனுக்கு ஈசனான பகவான் கண்ணன் வைகுண்டத்தை நமக்குக் காட்டுவாரா ?” என்று மனதில் ஏக்கம் கொண்டார்கள். 

எல்லாம் அறிந்த கண்ணன் கோபர்களின் மனோரதத்தை அறிந்து, உலகிற்கு அப்பால் உள்ள தன் ஸ்ரீவைகுண்டத்தையும், தன் பிரம்ம ஸ்வரூபத்தையும் யோகிகளும், ரிஷிகளும் உணர்கின்ற பரம்பொருள் நிலையைக் கோபர்களுக்குக் காட்டி உணரச் செய்தான். பிறகு யமுனை ஆற்றில் ஒரு மடுவிற்கு அழைத்துச் சென்று நீராடச் செய்தான். கோபர்கள் மூழ்கி எழுந்தபோது அவர்கள் ஸ்ரீவைகுண்டத்தைத் தரிசித்தனர். ( இதே இடத்தில் தான் கண்ணன் அக்ரூரருக்கு ஸ்ரீவைகுண்டத்தைக் காண்பித்தார் ).  அங்கே நந்தர் முதலான கோபர்கள் வேதமே உருவமேற்று வைகுண்டநாதனைத் துதிப்பதைக் கண்டு வியப்படைந்து பரமானந்தம் அடைந்தார்கள். 

இதை நிகழ்ச்சியை ஆண்டாள் வருணனிடம் நினைவு படுத்தி, கோபர்களுக்கு வைகுண்டத்தை காண்பித்த அந்த மடுவின் மீது நின்று கொண்டு ”உனக்குக் கண்ணன் மீது இருக்கும் பிரேமை எங்களுக்குத் தெரியும். நாங்கள் கண்ணனின் பிரேமத்துக்குப் பாத்திரமான கோபியர்கள். அதனால் எங்கள் மார்கழி நீராட்டத்துக்கு மழை வேண்டும்” என்று கேட்கிறாள். 

ஸ்ரீராமானுஜர் தன்னை எல்லோரும் ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைப்பதையே விரும்புவாராம். அவருக்கு ஆண்டாள், திருப்பாவையின் மீது அத்தனை ஈடுபாடு. அதுபோல ஆண்டாள் வருணன் என்று கூப்பிடாமல்  ‘மழைக்கண்ணா’ என்கிறாள். 

 ‘உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்று நம்மாழ்வார் போலக்  கண்ணனுடைய சிந்தனையுள்ள ஆயர் குலச் சிறுமிகள், ’ஆழிமழைக்கண்ணா’ என்று அழைத்து, மழை சம்பந்தமான  இடி, மின்னல், மழை  என்று எல்லாம் பெருமாளுடன் சம்பந்தப்படுத்தி உவமைகளாக பாடினால் வருண தேவன் மழையைக் கொடுக்காமல் என்ன செய்வான் ?  வருணனின் உள்ளே அந்தரியாமியாகக் கண்ணன் தானே ஊஞ்சலில் ஆடிக்கொண்டு இருக்கிறான் ?

- சுஜாதா தேசிகன்
ஆழி - 4
19.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்


பிகு: இன்று எழுதிமுடித்துவிட்டு திரு கேஷவ் அவர்களின் படத்தைப் பார்த்த போது எழுதியது அப்படியே படத்துக்கு பொருத்தமாக இருந்தது.  அதற்கு பிறகு இரண்டே இரண்டு வார்த்தைகள் கூடுதலாக சேர்த்தேன்

Comments