பாகவத திருப்பாவை - 13 (கிள்ளிக் களைந்தானைக)
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்*
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று**
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!*
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே*
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்*
கள்ளம் தவிர்ந்து கலந்து ஏலோர் எம்பாவாய் 486/13
பொல்லாத இராவணனின் தலையைக் கிள்ளிய ராமரின்
புகழைப் பாடிக் கொண்டு எல்லோரும்
நோன்பு நோற்கும் இடத்தை அடைந்து விட்டார்கள்!
சுக்கிரன் (வெள்ளிக் கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்து விட்டது.
பறவைகள் கூவுகின்றன.
பூபோன்ற மானின் கண்களை உடையவளே!
குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ?
நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு
எங்களுடன் வந்து கலந்துவிடு.
பறவையாக வந்த பகாசுரனை முதல் வரியில் முடித்துவிட்டு, அடுத்த வரியிலேயே ராவணனை முடித்துவிடுகிறாள் ஆண்டாள்.
இப்படி அடுத்து அடுத்து அவள் கூறுவதற்கு என்ன காரணமாக இருக்கலாம் ?
பறவை உருவம் கொண்ட பகாசுரனைப் பிளந்த கதையை(10.11.44-59) பாகவதம் விவரிக்கிறது. சுருக்கமாக தருகிறேன்.
ஒரு நாள் காலை உணவைக் கையில் ஏந்தி இடைச்சிறுவர்கள் கன்றுகளை மேய்த்துக் கொண்டு சுற்றி வந்தனர். கன்றுகளை நீர் பருகச் செய்ய நீர் மடுவின் அருகே அழைத்து வந்து கன்றுகளுடன் சிறுவர்களும் நீரைப் பருகினர். ஒருவர் மீது ஒருவர் தண்ணீரை அடித்துக்கொண்டு விளையாடினர்.
அப்போது, அங்கே மலைமுகடு போல ஒரு பிராணி இருப்பதைக் கண்டு சிறுவர்கள் பயந்தனர். சிறுவர்கள் அருகில் சென்று பார்த்தனர். அந்தப் பிராணி ஒரு கொக்கு. அது வலிமைமிக்க பகன் என்ற அசுரன் என்று அவர்களுக்கு தெரியவில்லை.
சிறுவர்கள் ”கண்ணா இங்கே வந்து பாரேன்! ஒரு பெரிய கொக்கு இருக்கிறது” என்று அழைத்தார்கள். கண்ணன் கொக்குக்கு அருகில் வந்தபோது, அது திடீர் என்று தன் கூரான அலகால் கண்ணனைப் பிடித்து விழுங்கியது. இதைக் கண்ட சிறுவர்கள் உணர்விழந்து மயங்கிக் கீழே விழுந்தார்கள்.
கொக்கு உள்ளே சென்ற கண்ணன் ‘நெருப்பென்ன நின்ற நெடுமாலே!’ என்று சுடப் பகாசுரன் சூடு தாங்காமல் கண்ணனைக் கக்கினான். கோபத்தில் பகன் மீண்டும் கண்ணனிடம் வர, சிறுவர்கள் பயந்து நடுங்க, கண்ணன் பகனின் அலகுகளைப் பற்றிக் கோரைப் புல்லைக் கிழிப்பது போலப் பிளந்தார். (10.12.51)
இந்த கதையை முதல் வரியில் கூறிவிட்டு, அடுத்த வரியில் இராவணனை உடனே கூற என்ன காரணம் இருக்கிறது என்று தோன்றுகிறது.
அசோகவனத்தில் சீதாபிராட்டி ராமனைப் பிரிந்த துக்கத்தால் முகம் வாடி அழுதுகொண்டு இருக்கிறாள். அங்கே வந்த ராவணன் ‘‘சீதை நீ ராமரை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடு, நான் பலசாலி, என்னிடம் பல தெய்வங்கள் தோற்றுவிட்டது. உனக்கு என் சொத்து முழுவதும் தருகிறேன். பல வேலையாட்களை உனக்குப் பணிவிடை செய்ய வைக்கிறேன். என் பட்டத்து ராணியாக்குகிறேன்.’’ என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கப் பார்க்கிறான்.
சீதை கண்கள் சிவந்து கண்ணீர் விடுகிறாள். அப்போது கீழே கிடக்கும் ஒரு புல்லை எடுத்து அவன் முன்னே போட்டு,
‘‘ராவணா நீ இந்தப் புல்லுக்குச் சமானம்!’’ என்றவுடன் ராவணனுக்குக் கோபம் தலைக்கு ஏறுகிறது.
அப்போது சீதை கூறுகிறாள்
‘‘உன்னைப் பார்த்துப் பேசக்கூட நீ தகுதியற்றவன், அதனால் இந்தப் புல்லைப் பார்த்துப் பேசுகிறேன்.. கேள். இந்தப் புல் கூட உன்னைவிட உயர்ந்தது, ஏன் தெரியுமா ? இன்னொருவனின் மனைவிமீது இந்தப் புல் ஆசைப்படவில்லை ‘நீ பணம், ராணி என்று ஆசை காட்டுகிறாய், அவை எல்லாம் இந்தப் புல்லுக்குச் சமம்! என்று கூறிவிட்டு,
‘‘ராமர் இந்தப் புல்லைக் கிள்ளி எறிவது போல உன்னைக் கிள்ளி எறியப் போகிறார்’ என்கிறாள் சீதை.
‘புள்ளின் வாய் கீண்டானை’ என்று கண்ணன் கோரைப் புல்லை போல கொக்கு வாயைக் கிழித்தபோது பூமிப் பிராட்டியான ஆண்டாளுக்கு ’பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை’ என்று சீதை பிராட்டி புல்லைப் போல ஸ்ரீராமர் கிழிக்க போகிறார் என்று கூறியது நினைவுக்கு வந்திருக்க வேண்டும்!
புள்ளின் - 13
31.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று I have read that Sujatha calculated the period of Andal based on this line. Do you have the details as explained by Sujatha? Thank you
ReplyDeleteSujatha has not done any research on Divya Prabandam. Velli ... research was done by Mu.Ragava Iyengar.
DeleteThank you
ReplyDelete