Skip to main content

பாகவத திருப்பாவை - 9 ( மாமாயன் )

 பாகவத திருப்பாவை - 9 ( மாமாயன் ) 



தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரியத்*
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்*
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்*
மாமீர்! அவளை எழுப்பீரோ?** உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?*
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று*
நாமம் பலவும் நவின்று ஏலோர் எம்பாவாய் 482/9


தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் 
எங்கும் விளக்குகள் எரிய, வாசனைப் புகை வீசப் 
படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவைத் திறந்துவிடு.
மாமியே!  உன் பெண்ணை எழுப்புங்கள்.
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று அவன் திருநாமங்கள்
பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது.
சீக்கிரம் உன் மகளை எழுப்புங்கள்!


’மாயனை மன்னு வடமதுரை மைந்தனை’ என்று (திரு.5) கூறிய ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் மாமாயன் என்று அழைக்கிறாள். 


இந்த ’மாமாயன்’ என்ற சொல்லைப் புரிந்துகொள்ள பாகவதத்தில் ஒரு முக்கியமான பகுதி இருக்கிறது.  அது கண்ணன் கோபிகைகள் குளிக்கும்போது அவர்களுடைய துணிகளைக் கவர்ந்தது. பெரும்பாலும் இந்தச் சம்பவத்தைக் காமப் பார்வைக் கொண்டு சிதைத்து காலம் காலமாக  தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதை ஒழுங்காகப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம். 


மார்கழி மாதம் கோபிகைகள் ’கண்ணனே தங்களுக்குக் கணவனாக வேண்டும்’ என்று காத்யாயனி தேவியைப் பூஜிக்கிறார்கள். நாள்தோறும் விடியற்காலை எழுந்து, தோழிகளை அவரவர் பெயரிட்டு எழுப்பி ஒருவர் கையை மற்றவர் பிடித்து இணைத்துக் கொண்டு ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றி உரக்க பாடிக்கொண்டு, யமுனையில் நீராடச் சென்றனர். ( 10.22.1 ) 


ஒரு நாள் ஆற்றின் கரையிலே ஆடைகளை அவிழ்த்து வைத்துவிட்டு எப்போதும் போல் கண்ணணைப் பற்றிப் பாடிக்கொண்டு ஆனந்தமாக ஆற்றில் நீந்தி விளையாடினர். 


கோபியர்களின் வேண்டுதலை நிறைவேற்றக் கண்ணன் தன் தோழர்களுடன் சென்று, பெண்களின் ஆடைகளைக் கவர்ந்து கடம்ப மரத்தின் மீதேறி அமர்ந்து கேலியாக “குமரிகளே! விருப்பம் இருந்தால் இங்கே வந்து அவரவர் ஆடைகளைப் பெற்றுச் செல்லலாம்! இது கேலிப் பேச்சோ, பொய்யோ இல்லை அதனால் ஒவ்வொருவராக வந்தும் பெற்றுக்கொள்ளலாம், சேர்ந்து வந்தும் பெற்றுக்கொள்ளலாம்”


கண்ணனின் இந்த விளையாட்டைக் கண்ட கோபிகைகள் அன்பில் திளைத்து, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு வெட்கத்தால் சிரித்தார்கள் ஆனால் நீரைவிட்டு வெளியேறவில்லை. அவர்கள் கழுத்து வரை நீரில் தங்களை மறைத்துக்கொண்டு குளிரில்  நடுங்கிக்கொண்டு ஸ்ரீகிருஷ்ணரிடம் “கண்ணா நீ இவ்வாறு செய்வது நியாயமா ? நந்தகோபனுடைய குமாரன் அல்லவா நீ ?  இப்படிச் செய்யலாமா ? கோகுலத்தில் அனைவரும் உன்னை நல்லவன் என்று கொண்டாடுகிறார்கள். நாங்கள் இப்படிக் குளிரில் நடுங்குகிறோம். எங்கள் ஆடைகளைத் தந்துவிடு. கருநீலவண்ணா ! அழகா!  நாங்கள் உனது அடிமைகள். நீ கூறுவதைச் செய்வோம். தர்மம் அறிந்தவன் நீ. எங்கள் ஆடைகளைக் கொடு. இல்லை என்றால் அரசர் நந்தரிடம் கூறுவிடுவோம்” என்றார்கள். 


கண்ணன் இதற்கு “அழகிய பெண்களே! நீங்கள் எனது தாஸிகள்(அடிமைகள்) நான் சொல்வதைக் கேட்க வேண்டுமே! அதனால் இங்கு வந்து உங்கள் ஆடைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்”


இதைக் கேட்ட அப் பெண்கள் தங்கள் கைகளால் உடலை மறைத்துக்கொண்டு நடுங்கிக் கொண்டே ஆற்றிலிருந்து வெளியே வந்தனர். அவர்களது தூய மனத்தால் நெகிழ்ந்து ஸ்ரீகிருஷ்ணர் ஆடைகளைத் தம் தோளில் வைத்துக்கொண்டு அன்போடு சிரித்தவாரே “விரதம் மேற்கொண்ட நீங்கள் ஆடையின்றி நீரில் மூழ்கியது தேவனான வருணனை அவமதிப்பதில்லையா ? அந்தப் பாவம் நீங்கக் கையைத் தலைமேல் அஞ்சலி செய்து வணங்கிப் பின் ஆடைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார் 


இதைக் கேட்ட பெண்கள், ஆடையின்றி நீராடுதல் கூடாது என்று உணர்ந்து எல்லா செயல்களுக்கும் கண்ணனே பயனளிப்பவன். அவனே எல்லாத் தவற்றையும் போக்க வல்லவன். கண்ணன் வார்த்தை தர்மத்துக்கு ஒப்பானது என்று நினைத்து, ஒரு கையால் தங்களை மறைத்துக்கொண்டு மற்றொரு கையினால் வணங்கினார்கள். 


அப்போது ஸ்ரீகிருஷ்ணன் அவர்களை நோக்கி “பகவானை ஒரு கையால் நமஸ்கரிப்பது தர்ம சாஸ்திரப்பிரகாரம் தவறு. மனிதன் இரு கைகளாலும் பகவானை நமஸ்கரிக்க வேண்டும். நீங்கள் அப்படிச் செய்தால் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். இப்போது நீங்கள் இரண்டு பாபங்களைச் செய்துள்ளீர்கள்!. இதைப்  போக்கிக்கொள்ள இரு கைகளாலும் நமஸ்கரித்து வஸ்திரங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தர்மமான வார்த்தையைச் சொன்னார். 


இதைக் கேட்ட அந்தப் பெண்கள் ஆடை இல்லாமல், சகல பாவங்களையும் போக்கக்கூடிய கண்ணனை இருக் கைகளாலும் வணங்கினார்கள். 


அப்படி நமஸ்கரித்த பெண்களைப் பார்த்து ஸ்ரீ கிருஷ்ணன் மகிழ்ந்து,  கருணையுடன் அவர்களுடைய ஆடைகளைத் திருப்பிக் கொடுத்தான். கண்ணன் விளையாட்டாகச் செய்தபோதிலும் அப்பெண்கள் கண்ணனிடம் கோபப்படவில்லை. மாறாகக் கண்ணனிடத்தில் தங்கள் மனத்தை முழுமையாகச் செலுத்தினார்கள். 


இப்போது மாமாயன், மாதவன், வைகுந்தன் என்று ஆண்டாள் இப்படி வரிசையாகச் சொல்லக் காரணம் என்ன ? 


மாமாயன் ஆச்சரியமான குண சேஷ்டிதங்களால் அபலைகளான பெண்களைக் கூட மயக்கித் தனக்கு என்று வசீகரித்துக்கொள்வான். அதாவது எனக்குச் சேர்ந்தவள் நீ என்று எழுதி வாங்கிக்கொள்வான். இந்தச் சாமர்த்தியம் பெருமாளுக்கு எப்படி வந்தது பிராட்டி சொல்லிக்கொடுத்திருக்கிறாள் அதனால் அவன் மாதவன். அவனே வைகுண்டபதி மேன்மையானவன் ஆனால் மிக எளியவன் ( கைகூப்பினால் போதும் ! ) என்கிறாள். 


கண்ணன் பெண்களின் மானத்தை காக்காமல் இப்படி செய்யலாமா என்று யோசிக்கலாம். இன்னொரு உதாரணம் பார்க்கலாம். உங்களுக்கு எல்லாம் தெரிந்த திரௌபதி கதை. 


துச்சாதனன் திரௌபதியின் தலை மயிரைப் பிடித்து இழுத்து சபைக்கு நடுவில் நிறுத்தினான். திரௌபதி அழுதுகொண்டு சபை நடுவே வந்து நின்றாள். துரியோதனன், கர்ணன் முதலானவர்கள் திரௌபதியை மரியாதை குறைச்சலாகப் பேசினார்கள். பீஷ்மர், துரோணர் முதலானவர்கள் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தார்கள்.


அப்போது துச்சாதனன் ”திரௌபதி உன் கணவர்கள் எங்களுக்கு அடிமை. உன்னையும் பந்தயத்தில் தோற்றார்கள். அதனால் நீயும் எங்கள் அடிமை. அடிமைக்கு எதற்கு இந்த விலை உயர்ந்த உடைகள் என்று அவள் அணிந்திருந்த சேலையைப் பிடித்து இழுத்தான். திரௌபதிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  உதவிக்கு யாரும் வரவில்லை. தான் அவமானப்படுவதை தன் கணவர்களே செய்வதறியாமல் முழித்துக்கொண்டு இருக்க, துச்சாதனன் வேகமாக இழுக்க ஆரம்பித்தான்.


ஒரு கட்டத்தில் துச்சாதனனின் பலத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் கையே அவளுக்கு உதவி செய்ய முடியாமல் தவித்தது. இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி கைகூப்பி ”சங்குசக்ரகதாபாணே! துவாரகா வாசியே! அச்சுதா! கோவிந்தா! தாமரைக் கண்ணா ! உன்னையே சரணடைந்தேன் ! என்னைக் காப்பாற்று!” என்றாள். 


கண்ணன் அவளுடைய மானத்தை காத்தான். 


கையை வைத்து மறைத்துக்கொள்ளும் கோபியர்கள் போலத் தான் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். கண்ணனுக்கு நம்மை முழுமையாகக் கொடுக்காமல், நம் உடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். 


‘கோட் சூட்’, ஜீன்ஸ் உடை அணிந்துகொண்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று திருமண் தரிப்பதில்லை ( இரண்டு கைகளாலும் மறைத்துக்கொள்கிறோம்). சிலர் மெலிதாகக் கண்ணுக்குத் தெரியாமல் ஸ்ரீ சூர்ணம் மட்டும் தரித்துக்கொள்வார்கள் (ஒரு கையால் வணங்கிய கோபியர்கள் போல் ). 


நம் ஆத்மாவில் உள்ளே இருக்கும் எம்பெருமானை மறைக்கும் சரீரமாகிய கதவின் கர்மமாகிற தாழ்ப்பாளைத் திறந்து  கண்ணனை அடையலாம் என்கிறாள் ஆண்டாள்.


- சுஜாதா தேசிகன்
தூமணி - 9
25.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments