தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கை*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை**
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும்; செப்பு ஏலோர் எம்பாவாய் 478/5
மாயன்! வடமதுரை தலைவன்,
தூய யமுனை கரையில் விளையாடுபவன்,
இடையர் குலவிளக்காக அவதரித்து
யசோதைக்குப் பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை,
தூய்மையாக அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, மனத்தினால் தியானித்தால்
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும்
தீயில் இட்ட பஞ்சு போல உருத் தெரியாமல் பொசுங்கிப் போகும்.
அவன் நாமங்களைச் சொல்லுங்கள் !
சில நாட்கள் முன் பக்தியின் புதல்வர்களான ஞானமும் வைராக்கியமும் கிழவர்களாக இருந்தார்கள் அவர்களுக்கு நாரதர் ஸ்ரீமத் பாகவத புராணத்தின் மேன்மையைக் கூற அவர்களுக்கு இளமை திரும்பியது என்று பார்த்தோம். பாகவதத்தின் பெருமைகளைக் கேட்டதற்கே இளமை திரும்பியது என்றால் பாகவதப் புராணத்தைக் கேட்டால் எப்பேர்ப்பட்ட பலன் கிடைக்கும் ?
நாரதர் பாகவத கதையை எப்படிக் கூறினார் என்று சற்று விரிவாகப் பார்க்கலாம். பயப்படாதீர்கள். உள்ளே ஒரு சின்னக் கதை இருக்கிறது.
நாரதர் ஸ்ரீமத் பாகவத புராணத்தைக் கங்கைக் கரையில் ஆனந்த வனம் என்ற இடத்தில் சொல்லத் தயாரானார். பாகவதக் கதையைக் கேட்கக் கேட்கப் பல இடங்களிலிருந்து தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும், பெரியவர்களும் வந்து சேர்ந்தார்கள். ’வாட்ஸ் ஆப்’ போன்ற எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் நாரதர் பாகவதம் கூறுகிறார் என்பது எப்படி இவர்களுக்குத் தெரிந்தது? வீட்டில் எங்காவது ஒரு சொட்டு சர்க்கரை விழுந்தால் அந்த வாசனையால் கவரப்பட்டு அதைத் தேடிக்கொண்டு எறும்புகள் எப்படி சாரைசாரையாக வருமோ, அதுபோலப் பாகவதம் என்ற கரும்புச் சாற்றைத் தேடிக்கொண்டு இவர்கள் வந்தார்கள்.
இவர்களுடன் வேதங்கள், உபநிஷத்துகள், புராணங்கள் எல்லாம் வந்து சேர்ந்த சமயம், பகவான் ஸ்ரீ கண்ணன் அங்கு வந்து சேர்ந்தார்.( பாகவத மகாபுராணம் : 4.3 ) கழுத்தில் வனமாலை; நீலமேகம் போன்ற நிறம். இடையில் பீதாம்பரம்; வயிற்றில் தங்க ஒட்டியாணம்; தலையில் மகுடம்; காதுகளில் ஒளிவீசும் குண்டலங்கள்; மனதைத் தன் பக்கம் இழுக்கும் திருமேனி; கௌஸ்துபம் ஒளிர, நறுமணமிக்க சந்தனம்.. இந்த அழகிய திருமேனியை வர்ணிப்பது எங்கனே! கோடி மன்மத அழகுக்கு ஈடாகாத அத்தனை அழகு!
இந்த அழகுடன் அந்த வட மதுரை மாயன் தனது அடியர்களின் தூய இதயங்களில் வந்து அமர்ந்தார். ஸ்ரீமத் பாகவதக் கதைகளைக் கேட்க ! அன்று திருக்கோவலூரில் முதலாவார்களை பெருமாள் இடைகழியில் நெருக்கியது போல எல்லோரும் உணர்ந்தார்கள்.
பகவானே வந்துவிட்டார் என்று அறிந்தவுடன், போற்றி போற்றி என்று எல்லோரும் மகிழ்ந்து நறுமணப் பொடிகள், பூக்கள் என்று அவர்மீது பொழிந்தார்கள். சங்குகள் முழங்கின. நாம் பெருமாளுடன் இருப்பதைக் காட்டிலும் பெருமாள் நம்முடன் இருக்க ஆசைப்படுகிறார். அன்று ஆனந்தப் பவனம் பேரானந்த பவனமாக காட்சி அளித்தது!
அந்தச் சமயம் அங்கே வந்த சநகாதிகளிடம் ”பாகவதத்தால் நன்மை பெற்றவர்கள் யார் யார் ?” என்று கேட்க, அவர்கள் எடுத்துக்காட்டாக ஒரு கதையைக் கூற, வாருங்கள் நாமும் அந்தக் கதையைக் கேட்கலாம்.
”நாரதரே! இதற்கு எடுத்துக்காட்டாக முன்பு நடந்த ஒரு கதையை உங்களுக்குக் கூறுகிறோம். அதைக் கேட்டாலே சகல பாவங்களும் நிவர்த்தியாகும்!”
முன்னொரு காலத்தில் துங்கபத்ரா நதிக் கரையில் அழகிய பட்டணம் ஒன்று இருந்தது. அங்கே ஆத்ம தேவர் என்று ஓர் அந்தணர் வசித்து வந்தார். வேதங்களைக் கற்றவர். கர்மங்களை விடாமல் செய்துவந்தார். நல்லவர். செல்வந்தர் ; பண்பானவர். அவருக்குத் துந்துலீ என்ற அன்பான மனைவி. பிடிவாதக்காரி. பிறருக்கு எதையும் ஈயாத கருமி. கலகத்தில் நாட்டம் உடையவள். ஆனாலும் தம்பதிகள் அன்போடு வாழ்கை நடத்தினர். வீடு வாசல், செல்வம் இருந்தாலும் குழந்தை இல்லை. அதனால் இன்பம் இல்லை.
ஆத்ம தேவர் ஒருநாள் காட்டுக்குச் சென்றபோது அங்கே ஒரு துறவியைச் சந்தித்து காலில் விழுந்து, தனக்குக் குழந்தைப் பேறு இல்லை என்ற குறையைக் கூற, அந்த முனிவர் தன் யோகநிஷ்டையில் அவருக்கு ஏன் குழந்தை இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு “பிராமணரே உமக்கு இந்த ஜென்மத்தில் மட்டும் இல்லை இன்னும் ஏழு பிறவிகளுக்குக் குழந்தை இல்லை! குடும்ப பற்றை விட்டொழியுங்கள். துறவறம் மேற்கொள்ளுங்கள். அதுவே இன்பமானது!” என்றார்.
ஆத்மதேவர் ”உங்கள் புத்திமதிகளால் எனக்கு என்ன பயன். எப்படியாவது எனக்குக் குழந்தை வேண்டும். இல்லை என்றால் உங்கள் எதிரிலேயே நான் உயிரை விட்டுவிடுவேன்” என்றார்.
அவருடைய பிடிவாதத்தைக் கண்ட துறவி, அவரிடம் ஒரு பழத்தைக் கொடுத்து “உன் மனைவியிடம் இதைச் சாப்பிடச் சொல், குழந்தை பிறக்கும்!” என்றார்.
அவள் மனைவியிடம் அந்தப் பழத்தைக் கொடுக்க, அவளோ இதைச் சாப்பிட்டால் கர்ப்பம் தோன்றும். வயிறு பெரிதாகும். பிறகு குழந்தைக்காகப் பத்தியமாகச் சாப்பிட வேண்டும். பெரிய வயிருடன் வீட்டு வேலை செய்ய வேண்டும் பிரசவ வலி.. என்று கவலை கொண்டு அந்த அந்தப் பழத்தை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்க. அந்தச் சமயம் அவளுடைய தங்கை அங்கே வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள். அவளிடம் ஓர் உடன்பாடு பேசினாள். ”உனக்கு நிறைய செல்வம் கொடுக்கிறேன். அதற்குப் பதில் உனக்குப் பிறக்கும் குழந்தையை எனக்குக் கொடுத்துவிடு” என்றாள். அவளும் சரி என்றாள்.
துறவி கொடுத்த மாம்பழத்தை வீட்டில் கட்டியிருக்கும் பசுமாட்டுக்குக் கொடுத்தாள்.
பத்து மாசம் கழித்து தங்கை ஒரு குழந்தையைப் பெற்றுக் கொடுத்தாள். அவன் பெயர் துந்துகாரி. துந்துகாரியும் தன் தாயைப் போலப் பணத்தாசையுடன் தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன் தாயையே அடித்து உதைத்தான். அவள் இறந்து போனாள். துந்துகாரிக்கும் தன் தீய நடவடிக்கைகளால் துர்மரணம் ஏற்பட்டது.
அதே சமயம் பழம் உண்ட பசுமாடும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றது. அந்தக் குழந்தையின் காதுகள் பசுவின் காதுகள்போலப் பெரியதாக இருந்தது. அதனால் அந்தக் குழந்தை கோகர்ணன் என்ற பெயர் பெற்றான். மிகுந்த ஞானியாக விளங்கினான்.
ஆத்ம தேவர் தன் மனைவியின் தீய குணத்தைக் கண்டு துறவறம் மேற்கொண்டார்.
துர்மரணம் ஏற்பட்ட துந்துகாரி பிசாசாக அலைந்து கொண்டிருந்தான். அவன் இறந்த செய்தி கேட்டுக் கோகர்ணன் ஈமச் சடங்குகளைச் செய்யக் கயைக்குச் சென்று சிராத்தம் செய்தான். பிறகு தன் வீட்டுக்கு வந்து படுத்துக்கொண்டபோது பெரிய சத்தம் கேட்டு எழுந்து கொண்டான். பக்கத்தில் ஒரு பிசாசு இருந்தது “நீ யார் ?” என்று கேட்க அதற்கு அந்தப் பிசாசு “நான் உன் சகோதரன் துந்துகாரி!” என்றது. “உனக்கு தான் கயா சிராத்தம் செய்தேனே! ஏன் உனக்கு இன்னும் முக்தி கிடைக்கவில்லை!” என்று குழம்பினான்.
அதற்கு அந்த பிசாசு “நான் செய்த பாவம் கொஞ்ச நஞ்சமா ? கயா சிராத்தம் எல்லாம் என் பாவத்தைப் போக்காது” என்றது. கயா சிரார்தத்தை விட உயர்ந்த விஷயம் எது என்று குழம்பிய கோகர்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் சூரிய பகவானைக் கேட்க, சூரிய பகவான் “ஸ்ரீமத் பாகவத புராணத்தைப் பாராயணம் செய்வது தான் ஒரே வழி!” என்று கூற கோகர்ணன் பாகவத கதையைக் கூற பிசாசாக அலைந்துகொண்டு இருந்த துந்துகாரியும், பலரும் கேட்டார்கள். பாகவதம் கேட்டு முடித்தபின் விஷ்ணு தூதுவர்கள் விமானத்தில் வந்து துந்துகாரியை வைகுண்டத்துக்கு ஏற்றிக்கொண்டார்கள்.
கோகர்ணன் தூதுவர்களிடம் “இங்கே துந்துகாரியுடன் பலர் பாகவதம் கேட்டார்கள். ஆனால் நீங்கள் துந்துகாரியை மட்டும் ஏன் விமானத்தில் அழைத்துக்கொண்டு செல்கிறீர்கள் ? ஏன் இந்த வேறுபாடு ?” என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் கூறிய பதில் ”அனைவரும் ஒரே மாதிரி தான் கேட்டார்கள். ஆனால் துந்துகாரி ஏழு நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல், பட்டினி கிடந்து, மனதை அதில் ஈடுபடுத்தி, கேட்ட விஷயத்தை மனதில் சலனமின்றி நிறுத்தி, அதை மனதிலிருத்திக் கொண்டான்!
மனதில் ஈடுபாடு இல்லாமல் கேட்பது - அடியவர்கள் இல்லாத ஊர், அந்தணர் இல்லாத செய்த சிராத்தம், வேதம் ஓதாதவனுக்கு அளித்த தானம், ஆசார அனுஷ்டானங்கள் தவறவிட்ட வம்சம் போல் வீணே!
அப்படி என்றால் கோகர்ணன் கூறியபோது ஸ்ரீமத் பாகவத்திலிருந்து ஒருவன் ஒரு வார்த்தை ஏன் ஓர் எழுத்தையாவது கேட்டிருப்பான். அவனுக்கு அதனால் பயன் இல்லையா ?
இருக்கிறது பாகவதத்தில் ஓர் எழுத்தையாவது கேட்டவனுக்கு மீண்டும் பிறவி இல்லை. மண்ணுலகில் மீண்டும் பிறக்கமாட்டான். அவன் மாண்டபிறகு முக்தி நிச்சயம்.
இப்போது ஆண்டாள் இதுவரை கூறுவதைப் பாருங்கள் ஒழுங்கான நியமங்களுடன் நோன்பு இருக்க கூப்பிடுகிறாள் ”செய்யும் கிரிசைகள் கேளீரோ!” நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம் ; செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம் ; ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி..
என்று கூறிவிட்டு, பிறகு இன்றைய பாசுரத்தில் “தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது ; வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க ; போய பிழையும் புகுதருவான் நின்றனவும் ; தீயினில் தூசாகும்!” என்கிறாள்.
பாகவத கதையில் ஒரு வார்த்தை கேட்டாலே முக்தி என்கிறார்கள். ’திருப்பாவை’ என்று நினைத்தாலே ’பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்’ நிச்சயம் முக்தி என்பது நம் ஆசாரியர்கள் கூறுவது!
மாயனை - 5
21.12.2021
படங்கள் உதவி: திரு.கேஷவ்
Comments
Post a Comment