Skip to main content

திரு பாவை துதி

 ||ஸ்ரீ:||


திரு பாவை துதி



‘திருப்பாவை’ அருளிய ’திரு பாவை’ !

’திரு பாவை’ என்றால் ’அழகிய பாவை’ என்று கொள்ளலாம். அந்த அழகிய பாவை கோதை ஆண்டாள் மட்டுமே. கோதையின் பெருமை தனித்துவமானது; அளவிடமுடியாது. பட்டர்பிரான் கோதையாழ்வாராக நற்பாமாலை சூட்டினாள். ஆண்டாள் நாச்சியாராக பூமாலை சூடிக்கொடுத்தாள்.

‘கோ’ என்ற சொல்லுக்கு ‘பூமியைப் பிளந்துகொண்டு தோன்றியவள்’ என்று பொருள் உண்டு. பூமியைப் பிளந்து விதை செடியாக முளைத்து நற்கனிகளைக் கொடுப்பது போல், பெரியாழ்வாரின் துளசி வனத்திலிருந்து ஆண்டாள் பிளந்துகொண்டு பிஞ்சாய் பழுத்து, வேதம் அனைத்துக்கும் வித்தான கோதை தமிழான முப்பது பாசுரங்களையும் நற்கனிகளாக ’அருளினாள்’. கோதை என்ற சொல்லுக்கு ‘அருளும் தத்துவம்’ என்று மற்றொரு பொருளும் உண்டு!

*ஒரு வைகுண்ட ஏகாதசியன்று திருவல்லிக்கேணித் திருவீதியில் ஒரு சிறுவன் ‘பரமபதம் ஓர் அணா! திருப்பாவை இரண்டணா!’ என்று விளம்பரக்கூச்சல் செய்துகொண்டு சென்றான். அவன் விளம்பரத்துக்காகச் சொன்னாலும் அதில் பரமபதத்தைக் காட்டிலும் திருப்பாவை அனுபவம் இரண்டு மடங்கு அதிகம் என்று முக்கியமான பொருள் பொதிந்துள்ளது!

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதியில் ”நின்‌ புகழில்‌ வைகும்‌ தம்‌ சிந்தையிலும்‌ மற்று இனிதோ” என்கிறார். பக்தி வளர்ந்து பெருகி மற்ற எதற்கும் இடம் தராது பெருக்கெடுக்கும் போது வைகுந்தத்தைவிடச் சிறப்பானதாகும் என்கிறார் நம்மாழ்வார். நாம் தாயாரை முன்னிட்டுக்கொண்டு தான் பெருமாளிடம் அடைக்கலாம் புகுகிறோம்.

’கோ’ என்பதற்கு மோக்ஷம் என்று வேறொரு பொருளும் உண்டு! கோதா - ’மோக்ஷம் அருளும் தத்துவம்’ என்றும் கொள்ளலாம். அத் தத்துவமே திருப்பாவை!

கொண்டை மாலைக்கும், கொண்டை மாலை சூடிய பெண்களுக்கு பொதுவாக ‘கோதை’ என்ற பெயர் உண்டு. ஆனால் ஆண்டாளின் அவதாரத்துக்குப் பின், ‘கோதை’ என்ற சொல் பட்டர்பிரான் கோதையையே குறிக்கும் சொல்லாகிவிட்டது. அது போல், ‘தேசிகன்’ என்றால் ஆசாரியன் என்று பொருள். அடை மொழியின்றி வழங்கப்படும் ’தேசிக’ என்ற சப்தம் நம் ஸ்ரீநிகமாந்த மஹா குருவையே குறிக்கும். இப்படி இந்த ’தேசிக’ சப்தம் ஈரரசு ( இரு பொருள்) படாதபடி செய்த பெருமை நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே உரியதாகும்” என்கிறார் அஹோபில 44ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்.

கோதை, தேசிகன் என்ற பெயருக்கு ஏற்றம் உள்ளது போல், கோதா ஸ்துதிக்கும் தனி ஏற்றம் உண்டு.

ஸ்ரீகோதா ஸ்துதி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்வாமி தேசிகன் எப்படி அருளினார் என்ற நிகழ்வு சுவாரசியமானது.

ஒரு வைகாசி மாதம் ஆண்டாளை மங்களாசாசனம் செய்ய ஸ்வாமி தேசிகன் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தார். அன்று பிரதோஷம். ஸ்வாமி தேசிகன் அன்று மௌன விரதம். மாலை விரதம் முடிந்த பின் ஆண்டாள் சந்நிதிக்கு சென்று மங்களாசாசனம் செய்யலாம் என்று எண்ணியிருந்தார். அச் சமயம் மங்கள வாத்தியங்கள் முழங்க அகத்துக்கு வெளியே வந்தார். அவர் வசிக்கும் தெரு வழியாக ஆண்டாள் அவரை நோக்கி வந்துகொண்டு இருந்தார்.

ஸ்வாமி தேசிகன் வசிக்கும் திருவீதி வழியாக ஆண்டாள் புறப்பாடு கண்டருளும் வழக்கம் இல்லை. ஆண்டாள் அன்று அதனால் ஸ்வாமி தேசிகன் திருமாளிகை நோக்கி ‘இன்றுயாம் வந்தோம்’ என்று வந்த போது. அர்ச்சா மூர்த்தியான ஆண்டாள் அவர் கண்களுக்கு ஆண்டாளாகவே தெரிய மௌன விரதத்தைக் கலைத்து ’குளிர் அருவி’ போலக் கோதா ஸ்துதி சாதிக்க அதைக் கேட்ட ஆண்டாள் மனது குளிர்ந்து இனி ஒவ்வொரு வருடமும் இந்த உற்சவத்தின் போது ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதி கேட்கப் பிரியப்பட்டாள்.

பொதுவாக பெருமாளின் விக்கிரகத்தை விட ஆழ்வார்களின் விக்கிரகம் அளவில் சிறியதாக இருக்கும். ஆழ்வார்களைக் காட்டிலும் ஆசாரியர்களின் திருவுருவங்கள் அளவில் சிறியதாக இருக்கும்.

அது போல ஆண்டாள் நாச்சியார் அருளிய 30 திருப்பாவை விட ‘கோதா ஸ்துதி’ அளவில் சிறியதாக இருக்க வேண்டும் என ஸ்வாமி தேசிகன் 29 ஸ்லோகங்களுடன் நிறுத்துவிட்டார்.
அளவில் சிறியதாக இருந்தாலும் கோதையைத் துதிக்கும் ஸ்லோகங்களின் அனுபவம் அளவிட முடியாத இன்பம் பயக்கும்!

மார்கழி மாதம், பௌர்ணமியுடன் கூடிய நன்னாள் என்று நாள் பார்த்து ஆண்டாள் பாவை நோன்பை ஆரம்பிக்கவில்லை. அவள் ஆரம்பிக்க நல்ல நாள், நேரம் போன்றவை அதுவாக வந்து சேர்ந்துகொண்டது, அது போல இன்று மார்கழி மாதம் தொடக்கம் மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகனின் திருநட்சத்திரம் என்பது அதுவாக அமைந்தது.

இவ்வருடம் மார்கழி மாதம் வேதத்தின் வித்தாக விளங்கும் கோதை தமிழான முப்பது பாசுரங்களையும் அருளிய விட்டு சித்தன் பூங்கோதையை முன்னிட்டு ’வேதாந்தாச்சார்யர்’ என்ற நம் ஸ்வாமி தேசிகன் அருளிய ‘கோதா ஸ்துதி’க்கு ஸ்ரீ ஆண்டாளையும், ஸ்வாமி தேசிகனையும் துணைக்கு வைத்துக்கொண்டு, எளிய தமிழில் பொருள் கூற முற்படுகிறேன்.
வாருங்கள் ’கோதா’வில்(களத்தில்) குதிக்கலாம்!

-சுஜாதா தேசிகன்
16.12.2023
மார்கழி, திருவோணம்,
* 1952 ஸ்ரீ ந்ருஸிம்ஹ ப்ரியாவில் படித்தது.


Comments

  1. கோதாவில் திளைப்போம்

    ReplyDelete

Post a Comment