திரு பாவை துதி - 8
கோதா ஸ்துதி - 8 - ஆழ்வார் ஆசாரியர்கள் பகவதநுபவத்திற்கு கோதையே வழிகாட்டி
போக்தும் தவ ப்ரியதமம் பவதீவ கோதே
பக்திம் நிஜாம் ப்ரணயபாவநயா க்ருணந்த: |
உச்சாவசைர் விரஹஸங்கமஜை ருதந்தை:
ச்ருங்காரயந்தி ஹ்ருதயம் குரவஸ்த்வதீயா:|| (8)
எளிய தமிழ் விளக்கம்
கோதைப் பிராட்டியே !
உன் காதலனான பெருமாளை
உன் போன்றே அனுபவிக்க விரும்பி,
உன் அருளைப் பெற்ற ஆசாரியர்கள்
தங்கள் பக்தி பிரவாகத்தை
மனைவி கணவனிடம் காட்டும் காதல் ஆதரமாய்
அனுகரித்து, பிரிந்து, சேர்ந்து எனப் பல விதங்களில்
தங்கள் மனத்தை இன்பச் சுவையாக ஆக்கிக்கொண்டார்கள்
சற்றே பெரிய விளக்கம்
“முலை எழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே பாவாய்” என்ற ஒரு சொல் ஆறாயிரப்படி உரையில் வருகிறது. தமிழ் தான். இதை இரண்டு முறை படித்து வைத்துக்கொள்ளுங்கள். இதைப் பற்றி கீழே சொல்கிறேன்.
மேலே அனுகாரம் என்ற வார்த்தையைத் தேடிப் பாருங்கள். கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒருவர் செய்வதைப் போலவே செய்வது அனுகாரம் எனப்படும். ஆங்கிலத்தில் 'Imitation' என்று சொல்லலாம். ஆனால் imitation என்றால் போலி என்ற ஓர் அர்த்தமும் கூடவே வருகிறது அதனால் அது சரியான வார்த்தையாக இருக்க முடியாது.
கோபியர் கண்ணனை அனுபவித்தார்கள். ஆண்டாள் இடைச்சியான பாவனையில், இடைச்சியாகவே மாறி கண்ணனை அனுபவித்தாள். ஆண்டாள் செய்தது அக்மார்க் அனுகாரம்.
இந்த அனுகார பாவம் வருவது மிகக் கஷ்டமான விஷயம்.
’திருப்பாவை ஜீயர்’ என்று போற்றப்பட்ட ஸ்ரீராமானுஜரின் சிஷ்யர்கள் ஒரு முறை ’திருப்பாவைக்குப் பொருள் அருளிச் செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள்.
அதற்கு உடையவரின் பதில் “திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைத்தாலும் கிடைக்கும்; ஆனால் ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு ஆள் கிடைப்பது அரிது. இந்தத் திருப்பாவையைச் சொல்வதற்கு மோவாய் எழுந்த ( தாடி மீசை முளைத்த ) ஆண்கள் தகுதி படைத்தவர்கள் கிடையாது. முலைகள் அமையப் பெற்ற பெண்களே அதற்குத் தகுதியானவர்கள். அவர்களிலும் மிகவும் பரிவுடையவர்களான மற்ற பிராட்டிகளுக்கும் கேட்பதற்கு தகுதி இல்லை. ” “ஆண்டாள் தானே சொல்லித் தானே கேட்க வேண்டும்” என்று பதில் கூறினார்.
அதாவது திருப்பாவையின் பொருளை ஆண்டாளுடைய மனப்பாங்குடன் சொல்வதற்கும் கேட்பதற்கும் நானும், நீங்களும் யாரும் தகுதி படைத்தவர்கள் இல்லை. ஆண்டாள் சொல்லி ஆண்டாளே கேட்க வேண்டும் என்கிறார்.
ஸ்ரீராமானுஜர் “உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை சேவித்துக்கொண்டு ( பாடிக்கொண்டு) பிக்ஷைக்கு ஒரு நாள் ஆசாரியன் திருமாளிகை(இல்லம்) வாசலில் வந்து நின்றார். அச்சமயம் விளையாடிக்கொண்டு ஆசாரியரின் பெண் குழந்தை பந்தும் கையுமாக, மெல்லிய விரல்களுடன், கை வளைக் குலுங்கக் கதவைத் திறப்பதற்கும் உடையவர் “வந்து திறவாய்” என்று சேவிப்பதும் ஒரே சமயம் நிகழ அவர் திருக் கண்களுக்கு அவள் நப்பின்னையாகவே காட்சி அளித்தாள். சாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்த்து (சேவித்தார்) மூர்ச்சித்து விழுந்தார்.
அப்பெண் குழந்தை பதறிக்கொண்டு உள்ளே சென்று தந்தையுடன் “உடையவர் கதவைத் திறந்தவுடன் என் காலில் விழுந்து மூர்ச்சித்து விழுந்தார்” என்று சொல்ல ஆசாரியன் “உந்து மத களிறு அநுசந்தமாயிருக்கும் ” என்றாராம்.
“வாரும் திருப்பாவை ஜீயரே” என்றார் அழைத்தார் ஆசாரியர்.
திருப்பாவையில் ஆண்டாள் கோபியருள் ஒருவராகிறார், திருப்பாவை ஜீயர் கோதையாகிறார்!
Empathetic feeling என்பது இது தான். அனுகாரம்.
சகுந்தலையின் அழகை ரசித்த அவளுடைய தோழிகள் ‘இவளை அணைப்பதற்கே நாம் ஆணாகப் பிறந்திருக்கலாம்” என்று வருந்துவார்களாம். ஒரு மானுடப் பெண்ணுக்கே இப்படி என்றால் புருஷோத்தமனுக்கு ?
நம்மாழ்வார் பராங்குச நாயகியாகவும், திருமங்கை மன்னன் பரலகால நாயகியாகவும் தங்களைப் பாவித்ததற்கு இதுவே காரணம்.
இதைத் தமிழ் இலக்கியத்தில் அகத்துறை என்பார்கள். ஆழ்வார்களுக்கு இது பக்தி துறை.
அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் தம்முடைய ஆசாரிய ஹ்ருதயத்தில் ‘ஞானத்தால் தன் பேச்சு பிரேமத்தால் பெண் பேச்சு’ என்று இரு சூத்திரத்தைக் கூறுகிறார். தங்கள் மானசீக பகவதனுபவத்தில் பெருமாளை இழந்தும் அடைந்தும் மாறி மாறி அடைகிற நிலைகளைத் தன் பேச்சாகவும், பெண் பேச்சாகவும் ஆழ்வார் வெளிப்படுத்துகிறார். ‘split personality’ போல் ஆழ்வார்கள் அளவு கடந்த அன்பு நிலையில் பகவானை அனுபவிக்கும் போது அவர்களுடைய பேச்சு பெண் பேச்சாக மாறிவிடுகிறது என்கிறார்.
மேலும் சில குறிப்புகள்
வள்ளுவர்
கடலன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணின் பெருந்தக்கது இல்
கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், அதைப் பொறுத்துக் கொள்ளும் பெண்மையினும் மேம்பட்டது வேறொன்றும் இல்லை என்கிறார். ”கடலன்ன காமம்” என்று காமநோய் கடல் போன்றது என்கிறார். இதே காதலை ஆழ்வார்கள் பெருமாளிடத்தில் நாயகி பாவத்தில் வைத்தார்கள்.
திருமங்கை ஆழ்வார் பாசுரம் மிகச் சுவையானது.
காதல் ஆதரம் கடலினும் பெருகச்
செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு
காதல் என்பது பெருமாள் பிராட்டியிடம் செலுத்துவது. ஆதரம் என்பது பிராட்டி பெருமாளிடம் காட்டுவது.
காதல்-அன்பு, ஆதரம்- ஆசை கலந்த அன்பு - பேரன்பு என்று சொல்லலாம். காதலும் ஆதரமும் கடலைவிட பெரியது என்கிறார் மங்கை மன்னன்.
கோதையே ! நீ பெண்ணாகக் காதல் பாட்டுப் பாடினாய். உன்னைப் பின்பற்றி ஆசாரியர்கள், திருமங்கை ஆழ்வார் ஏன் பெரியாழ்வார் கூட உன் காதல் பாட்டு தான் வழிகாட்டியது. பெருமாளிடம் அவர்களுக்கு மேலோங்கிய அன்பு, காமம், கலந்த பக்தி சிருங்கார ரசமாகி இன்பச் சுவையைப் பருகினார்கள் என்கிறார் ஸ்வாமி தேசிகன்.
AI-படம்: கண்ணனுடன் எருமைகள் சிறுவீடு மெய்க்க செல்கிறது.
- சுஜாதா தேசிகன்
24.12.2023
கீழ்வானம்
Comments
Post a Comment