பாரோ கிருஷ்ணையா
கனகதாசரின் ‘பாரோ கிருஷ்ணையா’ என்ற கன்னட கீர்த்தனையை நீங்கள் கேட்டிருக்கலாம். இதைத் திரு மதுரை டி.என். சேஷகோபாலன் அருமையாகப் பாடியுள்ளார்.
முதலில் பெரியாழ்வார் கண்ணனை வாராய் என்று அழைக்கும் ‘ஆனிரை மேய்க்கநீ போதி’ என்ற தமிழ் பாசுரத்துடன் ஆரம்பித்துவிட்டு பிறகு கனகதாசரின் ‘பாரோ கிருஷ்ணையா’ என்று கன்னடத்தில் அழைக்கிறார்.
வெண்ணிலா ஐஸ்கிரீமையும், குலோப் ஜாமுனையும் கலந்து சாப்பிடுவது போல ருசிக்கிறது.
கீழே பெரியாழ்வார் பாசுரமும், கனகதாசரின் கன்னட கீரத்தனையை (சுமாராகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன்) தந்துள்ளேன். இதை வைத்துக்கொண்டு இப் பாடலைக் கேட்டுப் பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.
ஆநிரை மேய்க்க நீ போதி அரு மருந்து ஆவது அறியாய்
கானகம் எல்லாம் திரிந்து உன் கரிய திருமேனி வாட
பானையில் பாலைப் பருகி பற்றாதார் எல்லாம் சிரிப்பத்
தேனில் இனிய பிரானே செண்பகப் பூ சூட்ட வாராய்
எளிய விளக்கம்
தேனைவிட இனியபிரானே ! உன் பகைவரெல்லாம் சிரிக்கும்படி
பானையிலே உள்ள கறந்த பாலை பருகி
கானகம் எல்லாம் அலைந்து உன் கரிய திருமேனி வாட
பசுக்களை மேய்க்க நீ போகிறாய்
நீ பெறுவதற்கு அரியமருந்து என்று யார் அறிவார்?
(மாடு மேய்ப்பதை விட்டுவிட்டு)
செண்பகப் பூ சூட்டிக்கொள்ள வாராய்!
இனி கனகதாசரின் ‘பாரோ கிருஷ்ணையா’ எளிய தமிழ் விளக்கம்.
வாராய் கிருஷ்ணையா! உன் பக்தனின் மனைக்கே(இல்லத்துக்கு) வாராய் கிருஷ்ணையா!
வாராய் உன் முகம் காட்ட! உனக்கு நிகர் யாரோ? ஆதி மூர்த்தி சீலனே! வாராய் கிருஷ்ணையா!
தங்கக் கழல்களின் மணியோசை திம் திமி திமி திமி திமியன ஒலிக்க, பொன் குழல் ஊத வாராய்!
பொன்னொளி வளையல்கள் கிண்கிணி கிணிகிணி கிணியன ஆரவாரிப்ப, பொன் குழல் ஊத வாராய்!
உடுப்பி வாசனே நிலை ஆதிகேசவனே !
உன் பாத தாசன் பாத தாசன் உன் பாத தாசன் கனகா அழைக்கிறேன் வாராய்!
- சுஜாதா தேசிகன்
11.12.2023 Image courtesy : Upasana Govindarajan
( திரு மதுரை டி.என். சேஷகோபாலன் பாடியது கீழே 👇 )
அருமையான மொழியாக்கம்! பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழில் படிக்கும்போதுதான், அந்த இலக்கியங்களின் மதிப்பு நமக்குத் தெரியவருகிறது! நல் வாழ்த்துகள்.
ReplyDelete