Skip to main content

திரு பாவை துதி - 2

 திரு பாவை துதி - 2


கோதா ஸ்துதி - 2 - கோதையின் குணங்கள் துதிக்கத் தூண்டுதல்





வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம்

        வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே|

இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே

        மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2


எளிய தமிழ் விளக்கம்


கோதையே! 

எண்ணிறந்த வேத வாக்கியங்களால் கூட அறிய முடியாது எட்டாத உயரத்தில் இருக்கும் உன் பெருமையை 

எங்களைப் போன்ற அறிவிலார் துதிகளில் எப்படி அடக்கிவிட முடியும்? 

இதை நன்கு உணர்ந்து வாய்பேச முடியாமல் இருக்கும் போது, 

உன் குணங்கள் என் மௌனத்தைச் சிதறச் செய்து, சடக்கென உன்னைத் துதிக்கும்படி தூண்டுகிறது!


சற்றே பெரிய விளக்கம்


முதலில் திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகத்தில் இந்தப் பாசுரத்தை மெதுவாகப் படியுங்கள். 


பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி,

ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம்,

பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு,

ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே.


இதில் ஆழ்வார் சொல்லுவது : 

ஒரு கோஷ்டி எம்பெருமானின் பெருமைகளைப் பேசிப் பேசி முழுவதும் பேச முடியாமல் பிறவி நீத்தார்கள். இன்னொரு கூட்டம் (சிசுபாலனைப் போல்) அவனை ஏசினார்கள். இருவருக்கும் நற்கதி கிடைத்தது. 


அறிவிலியான நான் என்ன பேசப்போகிறேன் ? எனக்குப் பேசவும் தெரியாது, ஏசவும் தெரியாது. பேசினாலும் அதில் பொருள் ஒன்றும் இருக்காது. எம்பெருமானை ஏசிப்பேசிக் கிடைக்கும் மோட்சம் எனக்கு வேண்டாம். ஆனாலும் மோட்சம் பெற வேண்டும் என்ற ஆசையோ அளவுக்கு அதிகமாக இருக்கிறது! அவனுடைய வடிவழகு என்னைத் தூண்டுகிறது நான் என் செய்வேன் என்று புலம்புகிறார் ஆழ்வார் 


ஆளவந்தார் கோஷ்டியில் சிலர் ”ஏசிப் பேசிய சிசுபாலனுக்கு மோட்சமா ?” என்று கேட்க அதற்கு ஆளவந்தார் சிசுபாலன் பெற்றது பேறாகாது. எம்பெருமானைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த எம்பெருமானுடைய அருளாலேயே அவனைப் பெறுவதே பேறாகும். சிசுபாலன் அப்படிப் பெறவில்லை. சிசுபாலன் இன்னும் இவ்வுலகில் இருந்தால் மற்றவர்களையும் அவனைப் போலவே ஆக்கிவிடுவான் அதனால் வேறு வழியில்லாமல் அவனைப் பரமபதம் சேரும்படி சக்கரத்தால் சுழற்றி எறிந்தானே தவிரச் சிசுபாலன் அருள் செய்து பரமபதத்தை எம்பெருமான் கொடுக்கவில்லை என்று சாதித்தார். 


”பெருமாளின் கல்யாணக் குணங்களைப் பேசிப் பேசி முழுவதும் பேச முடியாமல் மௌனமாகிவிடுவோம். ஆனால் தாயாரின் குணங்களோ நம்மைப் பேசவைத்துவிடும்” என்கிறார் பட்டர். 



இப்போது நம் தேசிகனின் கோதா ஸ்துதியை ஆழ்வாருடன் இணைத்துப் படித்துப் பார்க்கலாம். 


”எம்பெருமானின் பெருமைகளைப் பேசிப் பேசி முழுவதும் பேச முடியாமல் பிறவி நீத்தார்கள். அறிவிலியான நான் என்ன பேசப்போகிறேன் ? எனக்குப் பேசவும் தெரியாது, பேசினாலும் அதில் பொருள் ஒன்றும் இருக்காது” என்கிறார் திருமங்கையாழ்வார். 


”எண்ணிறந்த வேத வாக்கியங்களால் கூட அறிய முடியாது எட்டாத உயரத்தில் இருக்கும் உன் பெருமையை 

எங்களைப் போன்ற அறிவிலார் துதிகளில் எப்படி அடக்கிவிட முடியும்?

கோதா! வேதத்துக்கே உன் பெருமை தெரியாது வேதத்தை கற்ற வேதாந்தாசாரியர்க்கு எப்படித் தெரியும் ? ” என்கிறார் தேசிகன் 


”அவனுடைய வடிவழகு என்னைத் தூண்டுகிறது நான் என் செய்வேன்?” என்கிறார் ஆழ்வார். பட்டரோ ”பெருமாளின் கல்யாணக் குணங்களைப் பேசிப் பேசி முழுவதும் பேச முடியாமல் மௌனமாகிவிடுவோம். ஆனால் தாயாரின் குணங்களோ நம்மைப் பேசவைத்துவிடும்” என்கிறார் 


ஸ்வாமி தேசிகன் ”இதை நன்கு உணர்ந்து வாய்பேச முடியாமல் இருக்கும் போது, உன் குணங்கள் (கருணை, பொறுமை, வாக்கு) என் மௌனத்தைச் சிதறச் செய்து, சடக்கென உன்னைத் துதிக்கும்படி தூண்டுகிறது!” என்கிறார் 


ஆளவந்தார் “எம்பெருமானைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டு அந்த எம்பெருமானுடைய அருளாலேயே அவனைப் பெறுவதே பேறாகும்” என்பதைப் போல், ”கோதையைப் பற்றி துதிக்க அந்தக் கோதையின் (கோதை - வாக்கு வன்மை அருள்பவள் ) அருளே வேண்டும்”  என்றும், நம்மாழ்வார்  “நாமுதல் வத்து புகுந்துநல் இன்கவி” (என் நாவிலே வந்து புகுந்து நல்ல இனிய கவிகளை) என்று சொல்லுவது போல இங்கே ஸ்வாமி தேசிகன் கோதையிடம் வேண்டிக்கொள்கிறார். 


மேலும் சில குறிப்புகள் 


”எங்களைப் போன்ற அறிவிலார்” என்று ஸ்வாமி தேசிகன் கூறுகிறார். 

நம்மாழ்வார் “நோற்ற நோன்பு இலேன், நுண் அறிவு இலேன்” என்று எனக்கு எதுவும் தெரியாது, கொஞ்சம் அறிவு கூட இல்லை” என்று சொல்லிக்கொள்கிறார்.  தொண்டரடிப்பொடி ஆழ்வார் ”இளையபுன் கவிதை யேலும்” என்று தன் பாசுரத்தைக் கூறிக்கொள்கிறார்கள். 


இவற்றை எல்லாம் நாம் படிக்கும் போது ஆழ்வார்கள், ஆசாரியர்கள்  தங்கள் குறைகளைப் பாடியுள்ளார்கள் அதை நாம் சேவிக்கிறோம் என்று தோன்றலாம்.  இந்த மாதிரி எண்ணமே மிகத் தவறான ஒன்று.


இவை எல்லாம் ’நிகர்ஷ அனுசந்தானம்’ என்று கூறுவர். அதாவது நம் தாழ்வுகளை (நிகர்ஷத்தை) எல்லாம் பெருமாளுக்கு முன் எப்போதும் சொல்லிக்கொண்டே (அனுசந்தானம்) இருப்பது தான் ‘நிகர்ஷ அனுசந்தானம்’.


ஒரு கணக்கு வாத்தியார் பலகையில் வாய்ப்பாடு எழுதினால் அவருக்கு வாய்ப்பாடு தெரியாது அதனால் எழுதினார் என்று நினைப்பதில்லை. நம்மைப் போல் உள்ளவர்கள் அதைத் தினமும் கற்றுக்கொள்ளத் தான் எழுதுகிறார் என்று தோன்றுவது போல, ஆழ்வார்கள், ஆசாரியர்களின் பாசுரங்கள், ஸ்தோத்திரங்களில் இவை எல்லாம் வருவதற்குக் காரணம் நாம் அதை தினமும் வாய்ப்பாடு மாதிரி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதற்குத் தான்.


சுருங்கச் சொன்னால், தினமும் ’நிகர்ஷத்தை அனுசந்தானம்’ செய்ய வேண்டும் அதே சமயம் பெருமாளின் ’குணங்களை அனுசந்தானம்’ செய்ய வேண்டும்.


ஆண்டாள் “அறிவு ஒன்றும் இல்லை (நிகர்ஷத்தை அனுசந்தானம்) என்று சொல்லிவிட்டு என்று நீயே எங்களுக்கு ‘புண்ணியம்’ என்று அவன் குணத்தை அனுசந்தானம் செய்து காட்டுகிறாள். 


வேதம் அனைத்துக்கும் வித்து வேதாந்தம். 

வேதாந்தத்தை நன்கு கற்றவர் வேதாந்த தேசிகன்; 

வேதம் அனைத்துக்கும் வித்தைக் கொடுத்தவளான கோதையைப் பற்றி வேதம் அனைத்துக்கும் வித்தைக் கற்று அறிந்தவர் பாடாமல் மௌனமாக இருக்க முடியுமா ? 


படம்: மார்கழி -2க்கு செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம். பாற்கடலுள் பையத் துயின்ற பரமனடி ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் பாடியைப் பாடிக்கொண்டு இருக்கிறார்கள்


- சுஜாதா தேசிகன்

18.12.2023 வையத்து..


Comments

  1. இதே செறிவும் பொருளின் ஐஇள அகல ஆழ பரிமாணங்கள் முப்பதிலும் தப்பாமல் ஜொலிக்க கோதை நிச்சயம் அருளுவாள்.
    தன்யோஸ்மி ஸ்வாமி

    ReplyDelete

Post a Comment