Skip to main content

திரு பாவை துதி - 6

திரு பாவை துதி - 6





கோதா ஸ்துதி - 6 -  கோதையை பல புண்ணிய நதிகளாக உருவகப்படுத்துதல்


சோணாத‌ரேபி குச‌யோர‌பி துங்க‌ப‌த்ரா

வாசாம் ப்ர‌வாஹ‌நிவஹேபி ஸ‌ர‌ஸ்வ‌தீ த்வ‌ம்|

அப்ராக்ருதை பி ர‌ஸைர் விர‌ஜா ஸ்வ‌பாவாத்

கோதாபி தேவி க‌மிதுர் நநு ந‌ர்ம‌தாஸி|| .6.


எளிய தமிழ் விளக்கம்


கோதா தேவியே! 

பழுத்த உன் சிவந்த உதடுகள்  சோணையாக இருந்தாலும்,

உன் கொங்கை உயர்வையும், அழகும் பெற்ற துங்க பத்ராவாக இருந்தாலும்,

உன் சொல் பெருக்கும் திறனில் நீயே சரஸ்வதியாக இருந்தாலும்,

உன் திவ்ய கவிரசங்கள் சரீர சம்பந்தம் அற்று திவ்ய விபூதியை அடையச் செய்யும்  விரைஜையாக  இருந்தாலும்,

இயற்கையில் நீ கோதையாய் (கோதாவரியாக) இருந்தாலும்

உன் பிரிய நாதனுக்கு ஹாஸ்ய வார்த்தைகள் சொல்லி மகிழ்விக்கும் நர்மதை அன்றோ நீ ! 



மேலே எளிய தமிழில் இருந்தாலும், 

இந்த ஸ்லோகம் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கும் விதம் ரசிக்க தக்கத்து.  சுமாராக அதன் அமைப்பை இங்கே தருகிறேன் ( பெரியோர்களின் புத்தகங்களைப் படித்து அனுபவிக்க வேண்டுகிறேன்)

கோதையாயினும் சோணை; 

சோணயாயினும் துங்கபத்ரை; 

துங்கபத்ரையாயினும் சரஸ்வதி; 

சரஸ்வதியாயினும் விரஜை;

விரஜையாயினும் கோதை; 

கோதாவரியாயினும் நர்மதை தானே! 

என்பதை உவமைகளுடன் நான்கு வரிகளில் சொல்ல ஸ்வாமி தேசிகனால் மட்டுமே முடியும்.



சற்றே பெரிய விளக்கம் . 


சென்ற ஸ்லோகங்களில் ஸ்வாமி தேசிகன் கோதையிடம் நல்வாக்கை அருள வேண்டும் என்று பிராத்தித்தார். அதன் பலனாகச் சொற்கள் பல புண்ணிய நதிகளின் வெள்ளம் போலத் தேசிகன் வாக்கிலிருந்து பெருக்கெடுக்கிறது.

கோதையில் ஆரம்பித்து, பல நதிகளைக் குறிப்பிட்டு, கோதையில் முடித்து நீ நர்மதை தானே என்கிறார். 


மேலும் சில குறிப்புகள்

நம்மாழ்வார் ‘கோவை வாயாள் பொருட்டு’ என்று கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயையுடைய நப்பின்னைபிராட்டி போல் ஆண்டாளுடைய சிவந்த உதடுகளை சோணா நதியுடன் ஒப்பிடுகிறார் (சோணம் - சிகப்பு)


ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் “கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பு அழியப் புகுந்து ஒருநாள் தங்குமேல் என் ஆவி தங்கும்” என்றும் 

“கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தற்கு ஓர் குற்றேவல்

இம்மை பிறவி செய்யாதே இனி போய் செய்யும் தவம்தான் என்?” என்கிறாள். 

அதாவது “பருத்து வளர்ந்த என் முலைகளின் குமைச்சல்(emotions) போக, அந்தக் கோவிந்தனுக்கு அந்தரங்கத் தொண்டை இப்பிறவியில் செய்யாமல் அதன் பின் கிடைக்கும் பரமபதத்தில் என்ன தவம் வேண்டிக்கிடக்கிறது ? என்கிறாள். 

எம்பெருமானுக்குக் குற்றேவல் புரிந்த இந்த உயர்ந்த அழகான இடத்திற்கு இரட்டை நதியான ’துங்க’ ’பத்ரா’ நதியை பொருத்தமாக சொல்லியிருக்கிறார் ஸ்வாமி தேசிகன்.  இந்த நதிக்கு அவ்வூரில்  ‘பாலாறு’ என்று பெயர்! தாய்ப்பாலை ஊட்டுவது போல நமக்கு ஞானப் பாலை ஊட்டுகிறார்!


சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் ஓடுகிறது.  மேலே தெரியாது. அது போல், ஆண்டாளின் பாசுரங்களில் மேலே தெரியாத உள்பொந்திந்த அர்த்தங்கள் இருப்பதை சரஸ்வதியுடன் ஒப்பிடுகிறார். 


ஆண்டாள் துளசி போல் சத்வ குணத்துடன் அவதரித்து,  அவளுடைய சொற்கள் திருத்துழாய் போல எப்போதும் பரிமளத்துடன் நமக்கு ’ஒழிக்க ஒழியாத உறவை’ பெற்றுத்தருவதாய் அமைந்துள்ளதை விரஜாவுடன் ஒப்பிடுகிறார். 


’நர்ம’ என்றால் சிருங்கார லீலைக்கும், பரிஹாஸத்திற்கும் பெயர். அதாவது நமக்காக எம்பெருமானிடம் பரிஹாஸ்மாக பேசிப் பேசி காரியத்தைச் சாதிக்கக்கூடியவள். 


தேசிகன் வாக்கில் கோதை ஆறு(6) ஆறுகளாக, ஆறாம் ஸ்லோகத்தில் கோதையாக ( வாக்கு) பெருக்கெடுத்து ஓடுகிறாள்.


AI-படம்: பறவைகள் சிலம்ப, கோதையும் தோழிகளும் கோயிலுக்கு செல்கிறார்கள். கோதை வருகிறாள் என்று தெரிந்து கண்ணன் ஆசையாக ஓடிவருகிறான். முனிவர்களும் யோகிகளும் செல்கிறார்கள்.


- சுஜாதா தேசிகன்

22.12.2023

புள்ளும்..





Comments