Skip to main content

திரு பாவை துதி - 10

திரு பாவை துதி - 10






கோதா ஸ்துதி - 10 - கோதையால் பட்டர்பிரானுக்குக் கிடைத்த பெருமை


தாதஸ்து தே மதுபித: ஸ்துதிலேசவச்யாத்

         கர்ணாம்ருதை: ஸ்துதிஶதைரநவாப்த பூர்வம் |

த்வந் மௌளிகந்த ஸுபகாமுபஹ்ருதய மாலாம்

         லேபே மஹத்தர பதாநுகுணம் ப்ரஸாதம் ||    (10)



எளிய தமிழ் விளக்கம்


கோதையே!

உன்னுடைய தந்தை துணுக்கு பாசுரம் பாடினால் கூட

உடனே வசப்படக்கூடிய மதுசூதனன்,

செவிக்கினிய பல பல செஞ்சொல் மாலையால்

மகிழ்ந்து இதுவரை அளிக்காத அதி மேன்மையான 

 ‘பெரிய ஆழ்வார்’  என்ற பட்டத்தை 

நீ முடிசூடிய வாச நறும் குழல் பூமாலையை சம்ப்பித்த 

உடனே பிரசாதமாகப் பெற்றார்!




சற்றே 'சிறிய’ விளக்கம், மற்றும் ஓர் ‘பெரிய’ அனுபவம்


மற்ற ஆழ்வார்கள் பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்தாலும், பெருமாளுக்கு ஏதாவது தீங்கு நேர்ந்துவிடுமோ என்று அஞ்சி அவருக்குப் பல்லாண்டு பாடியதால் ’ ‘பெரியாழ்வார்’ என்ற பட்டத்தைப் பெற்றார்.


அது இருக்கட்டும், ‘பெரிய ஆழ்வார்’ என்ற பட்டத்தை அவர் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் மாலையை சமர்ப்பித்ததால் தான் கிடைத்தது என்கிறார் ஸ்வாமி தேசிகன். 


நல்ல செய்தி கொண்டு வரும் தூதனுக்கு அரசன் உடனே தன் முத்து மாலையைக் கழட்டிக் கொடுப்பதில்லையா ? சாதாரணச் செய்திக்கே முத்து மாலை என்றால் ஆண்டாளின் மாலைக்கு ? 


பெருமாள் சிறிது துதித்தாலே மயங்கிவிடுவான்.  இதைப் பல இடங்களில் நாம் பார்க்கலாம். 


கண்ணன் கழல் இணை

நண்ணும் மனம் உடையீர்

எண்ணும் திருநாமம்,

திண்ணம் நாரணமே!


 “கண்ணனின் கழலணிந்த திருவடிகளைப் பெறவேண்டும் என்ற ஆசை உள்ளவர்களே, நீங்கள் சிந்திக்க வேண்டிய திருநாமம், ‘நாரணமே!’ வேறு எதுவும் இல்லை. இது உறுதி” என்று கேப்ஸ்யூலில் தருகிறார் நம்மாழ்வார். 


இதற்கு நம்பிள்ளை ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கூறுகிறார். இதில் ஆழ்வார் 'நாராயண' என்று கூடச் சொல்லாமல் ’நாரணமே’  என்று பெருமாள் திருநாமத்தை முழுதாகச் சொல்லாமல் சுருக்கி சொன்னால் கூட நிச்சயம் கிடைக்கும் என்று நம்மாழ்வார் சொல்லிக் காண்பிக்கிறார் என்கிறார். 


துக்கடா போல சொன்னாலே மனம் உகக்கும் பெருமாள், RTP மாதிரி பல நூறு பாசுரங்களாகப் பல்லாண்டு, பிள்ளைத் தமிழ் என்று பெரியாழ்வார் பாட அவருக்கு பெரியாழ்வார் என்ற பட்டம் கிடைக்கவில்லை, ஆனால் தனக்கு ‘கோதை சூட்டிக்கொண்ட மாலையே வேண்டும்’ என்று கேட்க அவன் உகக்கும்படி அதைத் தினமும் சமர்பித்து, பெருமாள் மனம் உகந்து விட்டுசித்தரைப் மெச்சி ‘பெரியாழ்வார்’ என்ற திருநாமத்தைப் பட்டமாகப் பரிசளித்தார் என்பதில் வியக்க ஒன்றும் இல்லை. 


அனுபவம்


கோதையின் மேன்மையைப் பறைசாற்ற இதை ஸ்வாமி தேசிகன் கூறியிருந்தாலும், அடியேன் சில வருடங்கள் முன் ஸ்ரீவில்லிபுத்தூரில் நேரில் அனுபவித்ததைச் சொல்லுகிறேன். ( இது இன்று எழுதவில்லை, முன்பே எழுதியதைச் சற்று சுருக்கி இங்கே தந்துள்ளேன்)


இரண்டு வருடங்களுக்கு முன் மார்கழி மாதம் திருப்பாவை பாசுரங்களுக்குக் கட்டுரைகள் எழுத ஆரம்பித்து சித்திரை மாதம் தான் முடிக்க முடிந்தது.  முடித்த கையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று ஆண்டாளைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு 


அன்று சீக்கிரம் தூங்கிவிட்டேன். சற்று நேரத்தில் ஒரு தொலைப்பேசி அழைப்பு எழுப்பியது. 


“ஸ்ரீவில்லிபுத்தூர் வேதப்பிரான் பட்டர் பேசுகிறேன்.. நீங்கள் ஆண்டாள் குறித்து எழுதிய பதிவைப் படித்தவுடன் உங்களைக் கூப்பிடுகிறேன்…” என்றார். 


தூக்கக் கலக்கத்துடன் “ஓ.. .சரி” என்றேன். 


“தூங்கிக்கொண்டு இருந்தீர்களா.. எழுப்பிவிட்டேன் போலும்..”


“அது எல்லாம் ஒன்றும் இல்லை…”


 ”ஸ்ரீவில்லிபுத்தூர் வாரும்”


 ‘சமயம் கிடைக்கும் போது வருகிறேன்’ என்ற தொனியில் சுருக்கமாக “வருகிறேன்..” என்றேன். 


“அடியேன் கூப்பிடுவதாக நினைத்துக்கொள்ளாதீர்… இது ஆண்டாள் திருவாக்கு உடனே வாரும்” என்றார் பட்டர்   


தூக்கம் முழுவதும் கலைந்து “இப்போதே எம்மை” என்ற சொல் ஒலித்துக்கொண்டு இருந்தது.


காலை காரில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளம்பினேன். 


“அஞ்சு மணிக்கு வாங்க… சரியாக இருக்கும்…  நாச்சியார் நாடகசாலையில் உற்சவத்துக்கு திருவேங்கடமுடையான் சன்னதியில் ஏளுவா” என்றார் பட்டர்.


சித்திரை மாதம் எல்லாக் கோவில்களிலும் வசந்த உற்சவம் நடைபெறுகிறது. ஆனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதற்குப் பெயர் “ஸ்ரீகோதா ஸ்துதி” உற்சவம்.  கோதா ஸ்துதி உற்சவம் ஒன்று இருப்பதே அன்று தான் அடியேனுக்குத் தெரிந்தது. 


மாலை லேசான மழை ஆரம்பித்தது. பொதுவாக மழை என்றால் வீதி புறப்பாடு கிடையாது ஆனால் அன்று  ‘எமக்காக இன்றோ’ என்பதைப் போல்  தூரலையும் பொருட்படுத்தாமல்  ஆண்டாள், ரங்கமன்னாருடன் ஜோடியாகக் குடையைப் பிடித்துக்கொண்டு சற்று வேகமாகச் சென்று கொண்டு இருக்க, ‘குழல் கோதை’யின் ஜடையைத் தரிசித்துக்கொண்டு பின் தொடர்ந்த போது ஆண்டாளுக்கு பூ ஜடை தான் என்ன அழகு என்று மனதில் நினைத்துக்கொண்டேன். 


 வேதப்பிரான் பட்டர் கோதா ஸ்துதி சேவிக்க, அன்று தூரலையும் பொருட்படுத்தாமல் ‘யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளி’ அடியேனுக்கு இந்த அனுபவத்தைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருப்பாளோ என்று எண்ணியபடியே இருந்தேன். 


கோஷ்டி, தீர்த்தம், பிரசாதம், ஸ்ரீசடகோபம் என்று எல்லாம் முடிந்து மீண்டும் ஆண்டாள் சந்நிதிக்கு எழுந்தருளிய போது கதவு சாத்தப்பட்டது. பட்டர் ‘உள்ளே வாரும்’ என்று அடியேனைக் கூப்பிட்டு ‘ஆண்டாளை நல்லா அனுபவித்துக்கொள்ளும்’ என்று என்னையும் ஆண்டாளையும் தனிமையில் சற்று நேரம் விட்டார்.  சின்ன குழந்தையை அருகே சென்று மூக்கும் முழியும் ரசிப்பது பார்ப்பது போல ஆண்டாளை அனுபவித்தேன். ‘இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்’ என்ற வாக்கு நிஜமானது.


கூடவே இருந்த ஸ்ரீரங்கமன்னாரை அருகில் சென்று பார்த்த போது அவர் புன்னகையில் ‘எனக்குக் கிடைத்தவள் எப்பேர் பட்டவள்’ என்று ஒரு வித மிதப்பில் இருப்பது போலத் தோன்றியது.


ஆண்டாளின் முன் அழகு, பின் அழகு எல்லாம் சேவித்துவிட்டு ஆண்டாள் ஜடையை மீண்டும் ஒரு முறை அருகில் ரசித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டு, மறுநாள் விஸ்வரூபம் சேவிக்க வேண்டும் என்று கிளம்பினேன்.


மறுநாள் காலை விஸ்வரூபத் தரிசனம் அனுபவித்த பிறகு வடபத்ரசாயி கோயிலுக்குச் சென்ற போது பூட்டியிருந்தது.  


“விஸ்வரூபம் எப்போது ?” என்று கேட்ட போது கொஞ்சம் நேரம் ஆகும் ஆண்டாள் மாலை இங்கே வர வேண்டுமே என்றார்கள்.  


அப்போது அடியேனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது நேராகச் சென்று ஒரு துளசி மாலை வாங்கிக்கொண்டு ஆண்டாள் நந்தவனம் சென்றேன். அங்கே ஆண்டாளைக் கண்டெடுத்த துளசி மாடத்தின் மீது இந்தத் துளசி மாலையைச் சமர்ப்பித்து போது அங்கே இருக்கும் சந்நிதியில் அர்ச்சகர் ஆண்டாள் சாத்தியிருந்த மல்லிகை பூ மாலையை அடியேனுக்குத் தர அதையும் சேர்த்து எடுத்துக்கொண்டு வடபத்ரசாயி  சந்நிதிக்கு வந்து காத்திருந்த போது திருப்பாவை முப்பதும் சேவிக்க ஆரம்பித்தேன். 


சற்று நேரத்தில் ஆண்டாள் மாலை அங்கே வர, அடியேனிடம் இருந்த  ஆண்டாளின் மாலை, துளசியையும் வடபத்ரசாயிக்கு கொடுக்க விஸ்வரூபச் சேவை இனிதே நடந்தது. அன்று பெருமாள் ஆண்டாள் சூடிக்கொண்டது இரண்டு மாலை!


அங்கிருந்து பெரியாழ்வார் சன்னிதிக்குச் சென்று மீண்டும் கதவு திறக்கக் காத்துக்கொண்டு இருந்தேன்.


“கதவு எப்போது திறக்கும் ?” என்று கேட்க 


“பெருமாள் மாலை வர வேண்டும்” என்றார்கள். சேவை முடிந்து சற்று நேரத்தில் பெரியாழ்வார் கைதாங்கலாக வெளியே வந்து வரபத்ரசாயி சந்நிதியை நோக்கி  “பாண்டியன் கொண்டாட பட்டர்பிரான் வந்தார்” என்று ”விரைந்து கிழியறுத்து” பல்லாண்டு இசைத்த போது, நாங்களும் ஆழ்வாருடன் சேர்ந்து பல்லாண்டு சேவித்தோம்.  


இந்த மாதிரி ஓர் அனுபவத்தை வேறு எந்த திவ்ய தேசங்களிலும் காணக் கிடைக்காது. ஆழ்வாருடன் நிஜமான ‘பல்லாண்டு’ மங்களாசாசனம் என்பது எப்பேர்ப்பட்ட விஷயம். 


ஆழ்வார் மீண்டும் ஆஸ்தானத்துக்குத் திரும்பிச் செல்ல முதல் நாள் பார்த்த ஆண்டாளின் ஜடையை அவர் திருமுடியில் சூடிக்கொண்டு சென்ற போது நிஜமாகவே இவர் ‘பெரிய ஆழ்வார்’ தான் என்று நினைத்துக்கொண்டேன்.  


மத்தியம் ஊருக்குக் கிளம்பும் முன் ஆழ்வாரை மீண்டும் ஒரு முறை சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று சென்ற போது அங்கே அர்ச்சகர்  “யாம் பெறும் சம்மானம் நாடு புகழும் பரிசாக” என்று அடியேனுக்குப் பெரியாழ்வாரின் ஜடையைப் பிரசாதமாக அருளினார்.  


இந்த ஜடை, முதல் நாள் ஆண்டாள் சாற்றிக்கொண்டு ஸ்வாமி தேசிகனின் கோதா ஸ்துதியைக் கேட்டு ஆனந்தப்பட்டு, ‘சூடிக் களைந்த’ மாலையாக மறுநாள் காலை வடபத்ரசாயிக்கு சாற்றப்பட்டு  ‘உடுத்துக் களைந்த’ பிரசாதமாகப் பெரியாழ்வார் தன் திருமுடியில் சாற்றிக்கொண்டு பிரசாதமாக அடியேனின் கையில்!


இந்த ஸ்லோகத்தை இன்று படித்த போது இந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது. 


படம்: நம் நுண்ணறிவுக்கு எட்டாத “நாற்றத் துழாய்முடி நாராயணன்” மாலை














-சுஜாதா தேசிகன்


Comments