Skip to main content

திரு பாவை துதி - 11

 திரு பாவை துதி - 11




கோதா ஸ்துதி - 11 - கோதையின் அவதாரத்தால் தென் திசைக்குக் கிடைத்த ஏற்றம் 


திக்தக்ஷிணாபி பரிபக்த்ரிம புண்யலப்யாத்

         ஸர்வோத்தரா பவதி தேவி தவாவதாராத் |

யத்ரைவ ரங்கபதிநா பஹுமாநபூர்வம்

         நித்ராளுநாபி நியதம் நிஹிதா: கடாக்ஷா:||  (11)



எளிய தமிழ் விளக்கம்


ஹே கோதா தேவியே!

நீ அவதரித்தது தென்திசையாக  இருப்பினும் 

பல அரிய புண்ணியத்தால் ஏற்பட்ட உன் அவதாரத்தின்

பலனாகத்  தெற்கு வடக்கானது!

அது மட்டுமின்றி, 

எப்போதும் யோக நித்திரையிலேயே  இருக்கும்,

ரங்கராஜனின் கடைக்கண்ணோ தன் அன்பு காதலி அவதரித்த திசையையே நோக்கியே இருக்கிறது!


சற்றே பெரிய விளக்கம் (கேள்வி பதில்காளாக இன்று )


மேலே ‘தென் திசையாக இருப்பினும்’ என்று தெற்கு திசைக்கு ஏற்றம் குறைவாக ஏன் எழுதியிருக்கிறீர்கள் ? 

  • தெற்கு திசை எமனின் திசை என்பார்கள். ( மேல் விவரங்களுக்கு வாஸ்து வல்லுநர்களை அணுகவும். வாசுதேவன் இருக்க வாஸ்து கிடையாது). 

  • வரைபடத்திலும்  வடக்கு உயரத்தில் இருக்க, தெற்கு கீழ் நோக்கி இருக்கிறது. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பது ஒரு பழமொழியாகவே ஆகிவிட்டது. 

  • உத்திரத் திசை என்பதற்குச் சிறந்தது என்று பொருள்; வடக்கு தேசங்களில் தான் ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரம். 



அப்படி என்றால் தெற்கு தேசத்துக்கு ஏற்றம் கிடையாதா ? 

  • ஆழ்வார்கள் எல்லோரும் இங்கே தான் அவதரித்தார்கள். 

  • ஆழ்வார்கள்  ‘நோக்கி’ என எழுதினால் அந்த நோக்கத்துக்கு அருளும் அன்பும் காரணம் என்று புரிந்துகொள்ளுங்கள். தொண்டரடிப் பொடியாழ்வார் ‘தென் திசை இலங்கை நோக்கி’  விபீஷணன் இருக்கும் இலங்கையை நோக்கிக் கொண்டு இருக்கிறார். குலகேசகர பெருமாள் ‘அன்போடு தென் திசை நோக்கி பள்ளி கொள்ளும் அணி அரங்கன்’ என்கிறார். 

  • நம்மாழ்வார், மதுரகவிகள் எல்லோரும் குருகூர் என்று சொல்லாமல் தென்குருகூர் என்று சொல்லுகிறார்கள். 


அப்படி என்றால் திருவரங்கன் விபீஷண ஆழ்வார், நம்மாழ்வாரை நோக்கியும் தானே இருக்கிறார் ? ஸ்வாமி தேசிகன் எப்படி ஆண்டாளுக்காக என்று சொல்லுகிறார் ?


  • திருமணத்தின் போது தாலி கட்டும் சமயம் எல்லோரும் அட்சதை போடுவார்கள். அப்போது எல்லா அட்சத்தையும் மணமக்கள் மீது விழாது, முன்னாடி இருப்பவர்கள் மீது தான் விழும். அது போல பெருமாளின் நோக்கு(ம்) ஆண்டாள் மீது தான், அதற்குப் பின் இருக்கும் நம்மாழ்வார், விபீஷணன் மீதும் விழுகிறது.  


தெற்கு எப்படி வடக்காகும் ? லாஜிக் சரியில்லையே ? 

  • இது தான் அகடிதகடனா சாமர்த்தியம் என்பது. பெருமாள் நினைத்தால் எல்லாம் சாத்தியமே!



முடிவாக என்ன சொல்ல வருகிறீர்கள் ? 


திருப்பாணாழ்வார் ‘கோர மாதவம் செய்தனன் கொல்? அறியேன்! அரங்கத்தம்மான்’ என்கிறார். அந்த மாதவம் புரிந்த மாதவனின் புண்ணியத்தால் ஆண்டாள் அவதரித்த தென் திசையை இன்றும் ‘மலர் கண் வைத்து’ தூக்கத்திலும் அன்போடு நோக்கிக்கொண்டே இருக்கிறான். 


AI- படம்: கண்ணனே புனமயில்!

-சுஜாதா தேசிகன் 27.12.2023 கற்றுக் கறவை...

Comments