Skip to main content

திரு பாவை துதி - 5

 திரு பாவை துதி - 5



கோதா ஸ்துதி - 5 -  கோதையின் அருளால் பாவிகளுக்கும் பெருமாள் அருள் புரிதல்


அஸ்மாத்ருஶாம் அப‌க்ருதௌ சிர‌தீக்ஷிதாநாம்

அஹ்நாய‌ தேவி த‌ய‌தெ ய‌த‌ஸௌ முகுந்த‌: |

த‌ந் நிஶ்சித‌ம் நிய‌மித‌ஸ் த‌வ‌ மௌளிதாம்நா

த‌ந்த்ரீநிநாத‌ம‌துரைஶ்ச‌ கிராம் நிகும்பை:||(5)


எளிய தமிழ் விளக்கம் - 1 


கோதா தேவியே! கங்கணம் கட்டிக்கொண்டு பாதகங்களைக் செய்யும் என் போன்றவர்களுக்கும் முகுந்தன் சடக்கென கருணை காட்டுவதற்கான காரணம் - நீ முடிசூடிக் கொடுத்த பூமாலையால் விலங்கிடப்பட்டு, வீணை நாதம் போன்று நீ பாடிக் கொடுத்த நற்பாமாலையின் இன்னிசையால் கட்டுப்பட்டு இசைகிறான்!



சற்றே பெரிய விளக்கம் 


தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலையில் இப்படிக் கதறுகிறார் 


குளித்து மூன்று அனலை ஓம்பும் குறிகொள் அந்தணமை-தன்னை

ஒளித்திட்டேன் என்-கண் இல்லை நின்-கணும் பத்தன் அல்லேன்

களிப்பது என் கொண்டு நம்பீ கடல்_வண்ணா கதறுகின்றேன்

அளித்து எனக்கு அருள்செய் கண்டாய் அரங்க மாநகருளானே


அரங்கா! குளித்து, மூன்று அக்னி வளர்க்கவில்லை, மந்திரங்கள் ஓதவில்லை; ஆத்மாவைப் பற்றின அறிவும் இல்லை; பக்தியும் இல்லை. கர்ம, ஞான, பக்தியோகம் என்று எதுவும் இல்லாமல் நான் எப்படி மோட்சம் அடைவது ? என்று கதறுகிறார். 


தொண்டரடிப்பொடி ஆழ்வார் போலக் கதற வேண்டாம், ஆண்டாளின் திருவடியைப் பற்றினால்  ‘போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும்’ என்று நமக்குச் சுலபமான வழியைக் காட்டிக்கொடுக்கிறார் ஸ்வாமி தேசிகன். 


பெரியாழ்வார் பூமாலை கட்டினார், கூடவே கோதை(மாலை) என்ற மாலையும் கட்டினார். 

கோதை அம்மாலையைச் சூடிக்கொடுத்து, திருப்பாவை என்ற பாமாலையைக் கட்டி, (திரு)மாலையே கட்டினார்!

இப்படிக் கட்டுக்கட்டாகக் கட்டியதால் பெருமாள் கட்டுப்படாமல் என்ன செய்வார் ? 


படம்: செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம் - 'உரலினோடு இனைந்து இருந்து ஏங்கிய எளிவே’ என்று நம்மாழ்வார் கொண்டாடடும் தாமோதரனை , யசோதையுடன் ஆண்டாளுக்கும் கட்ட, கட்டுப்பட்டு இருக்கிறான்.


- சுஜாதா தேசிகன் 21.12.2023 மாயனை


Comments