திரு பாவை துதி - 12
கோதா ஸ்துதி - 12 - கோதை என்ற பெயருக்கே ஏற்றம்
ப்ராயேண தேவி பவதீவ்யபதேசயோகாத்
கோதாவரி ஜகதிதம் பயஸா புநீதே|
யஸ்யாம் ஸமேத்ய ஸமயேஷு சிரம் நிவாஸாத்
பாகீரதி ப்ரப்ருதயோபி பவந்தி புண்யா: || .12.
எளிய தமிழ் விளக்கம்
ஹே கோதா தேவியே!
‘கோதா’வரி நதியானவள் தன் பெயரில்
‘கோதா’வை இணைத்துக்கொண்டதால்
இந்த உலகத்தவர்களைத் தன் தீர்த்ததால்
பரிசுத்தமாக்குகிறாள்.
கங்கை முதலான நதிகளும் அந்தந்த
புண்ணியகாலங்களில் கோதாவரியில்
தங்கி நீராடி பாவனமாக்கிக்கொள்கின்றன!
சற்றே பெரிய விளக்கம்
திருப்பாவையில் ஆண்டாள் யமுனையை ‘தூய பெருநீர் யமுனை’ என்கிறாள். காரணம் உங்களுக்குத் தெரிந்த கதை தான் சுருக்கமாகக் கூறுகிறேன்.
கம்சனின் அரண்மனைக்குப் பின்புறம் யமுனை ஓடுகிறது. வசுதேவர் கண்ணனை தலையில் தூக்கிக்கொண்டு போகும் போது கம்சனிடம் அச்சம் கொள்ளாமல் வழிவிட்டு ஸ்ரீகிருஷ்ண கைங்கரியம் பெற்றாள்.
ஆனால், சீதையை இராவணன் தூக்கிக்கொண்டு போகும் போது சீதை கோதாவரியிடம் என் ‘என் இராமன் இங்கே அழுதுகொண்டு வரும் போது இராவணன் தூக்கிக்கொண்டு போகிறான் என்பதைச் சொல்’ என்று பிராத்திக்கிறாள். ஸ்ரீராமரும் லக்ஷ்மணனும் அங்கே வரும் போது இராவணனிடம் உள்ள பயத்தால் கோதாவரி மௌனமாக இருந்து ஸ்ரீராம கைங்கரியத்தை இழந்தாள்.
அந்த அவப்பெயர் பெரியாழ்வார் ‘கோதை’ என்று பெயர் சூட்டிய உடனே நீங்கியது.
பெரியாழ்வார் ‘கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை களையலாம்’ என்கிறார். கங்கை என்று சொன்னாலே போதும் நம் பாவங்களைக் களையலாம் என்கிறார்.
ஆனால் கங்கை போன்ற புனித நதிகளில் பலர் கழிக்கும் பாவ மூட்டைகளை ஏற்றுக்கொண்டு பெரும் பாவிகளாகிறது இந்நதிகள். அவை தங்களை அந்த அந்தப் புண்ணிய காலங்களில் (நாசிக் பஞ்சவடியில் நடக்கும் கும்பமேளாவின் போது எல்லாப் புண்ணிய நதிகளும் வந்து கோதாவரியில் கலக்குகின்றன) சில காலம் கோதாவரியில் தங்கி நீராடி தங்களைச் சுத்தம் செய்துகொள்கிறதாம்! ( திருப்பதிக்கே லட்டுவா என்பது போல கங்கைக்கே புண்ணியமா ?)
இதற்குக் காரணம் ‘கோதை’ என்ற கோதாவரியின் பெயர் ஒற்றுமையே!
இதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள முதல் திருவந்தாதி பாசுரத்தைக் கொஞ்சம் அனுபவிக்கலாம்
“அரவு அணை மேல் பேர் ஆயற்கு ஆட்பட்டார் பேர் நமன் தமரால்
ஆராயப்பட்டு அறியார் கண்டீர்”
சுருக்கமாக - எம்பெருமானின் பக்தர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், எம்பெருமானின் பக்தர்கள் என்ற ஒரே காரணத்துக்காக அவர்களை ஏமத் தூதர்கள் ஆராய மாட்டார்கள்.
பெரியவாச்சான் பிள்ளை இதற்கு இன்னொரு விதமாக அர்த்தம் சொல்லுகிறார் .
பாவம் செய்தவர்கள் நரகத்துக்கு வரும் போது ‘இவன் பேர் என்ன ?’ என்று எமன் கேட்க சிகு ‘மாதவன், கேசவன்’ என்று பெருமாளின் திருநாமத்தை வைத்தவர்கள் என்று பதில் சொல்ல எமன் ‘நெக்ஸ்ட்’ என்று அவர்களை அனுப்பிவிடுவாராம்.
அதாவது விஷ்ணு பக்தனாகக் கூட இருக்க வேண்டாம், விஷ்ணுவின் பெயரை வைத்திருந்தாலே போதும் என்கிறார்.
அது போலத் தான் கோதை என்ற பெயரை வைத்துக்கொண்ட கோதாவரி ஏற்றம் பெற்றது.
AI-படம் : நினைத்து முலை வழியே நின்று பால்சோர
- சுஜாதா தேசிகன்
28.12.2023
கனைத்து இளம்...
Comments
Post a Comment