திரு பாவை துதி - 3
கோதா ஸ்துதி - 3 - கோதையிடம் நல்வாக்கை அருள பிராத்திக்கிறார்
த்வத்ப்ரேயஸ: ச்ரவணயோ ரம்ருதாயமாநாம்
துல்யாம் த்வதீயமணிநூபுர சிஞ்ஜிதாநாம்|
கோதே த்வமேவ ஜநநி த்வதபிஷ்டவார்ஹாம்
வாசம் ப்ரஸந்நமதுராம் மம ஸம்விதேஹி || .3.
எளிய தமிழ் விளக்கம்
தாயே! கோதாய்!
உன் மணாளனின் செவிகளுக்கு ஆராவமுதமான
உன் ரத்தினமணி சதங்கை ஒலிக்கு நிகராக
உன்னை நன்கு துதிக்க மதுரமான
நல் வாக்கை அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே
சற்றே பெரிய விளக்கம்
பெரியாழ்வார் “தொடர் சங்கிலி கை சலார்பிலார் என்ன தூங்கு பொன் மணி ஒலிப்ப” என்று கண்ணனின் தளர் நடை ஓசையை அனுபவித்து சேவித்துக்கொண்டு ஸ்ரீவில்லுபுத்தூர் கோயிலுக்கு கோதையை அழைத்துக்கொண்டு செல்லும் போது பெருமாளோ கோதையின் சதங்கை ஒலியில் மயங்குகிறார்!
இதை அறிந்துகொண்ட ஸ்வாமி தேசிகன் ஆண்டாளின் சதங்கை ஒலிக்கு நிகராக தன் ஸ்தோத்திரங்கள் ’மதுரகவியாக’ அமைய வேண்டும் என்று கோதையிடம் ( நல்வாக்கை அருள்பவள்) வேண்டுகிறார்.
“அவருடைய தமிழ் நடை பிரமாதம்” என்கிறோம். இங்கே தேசிகன் தனக்குச் சங்கத் தமிழ் மாலை அருளிய ‘கோதை நடை’ யே வேண்டும் என்று கோதையிடம் கேட்கிறார்.
கைவளையல் ஓசையைக் கூறாமல் சதங்கைக ஒலியை ஏன் ஒப்பிடுகிறார் ?
ஸ்ரீமத் ராமாயணத்தில் சீதா பிராட்டியின் நகைகளை சுக்ரீவன் காண்பிக்க, அதைப் பார்த்த இளைய பெருமாள் இந்த வளையல்கள், தோடுகள் எல்லாம் எனக்கு அடையாளம் தெரியவில்லை, ஆனால் தினமும் சீதை பிராட்டியின் திருவடிகளைச் சேவிக்கும் போது அவள் திருவடிகளில் அணிந்திருந்த சதங்கைகள் மட்டுமே அடையாளம் தெரிகிறது என்றார்.
அது போல் ஸ்வாமி தேசிகன் தாயாரின் திருவடி சம்பந்தம் வேண்டும் என்று இங்கே பிராத்திக்கிறார்!
நம்மாழ்வார் “தன்னை தானே துதித்து எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே” என்கிறார் திருவாய்மொழியில்.
அதாவது ‘நான் போற்றி பாடும் போது தன்னைத்தானே துதித்துக்கொண்டு, நான் துதித்ததாக வெளியிட்டது போல’, தேசிகன் ”நீ கொடுத்த வாக்கைக் கொண்டு உன்னையே துதிக்க வேண்டும்’ என்கிறார்.
அந்த வாக்கு, உன் திருவடி சதங்கை ஒலி உன் அன்பான மணாளனுக்கு செவிக்கு இனிய செஞ்சொல்லாக இருப்பது போல, நான் உன்னை துதிக்க மதுரமான நல் வாக்கை அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே” என்று அந்தக் கோதையிடம் கோதையைக் கேட்கிறார்!
படம்: மார்கழி -3க்கு செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம். பொறி வண்டுகள் நிறைந்த அழகான கிராமத்தில் ஓங்கி உலகளந்த உத்தமன். பசு என்றால் செல்வம் என்று பொருள், பால் வழிந்து பெருமாளின் திருவடிக்கு செல்கிறது. அதுவே நமக்கு செல்வம்.
Comments
Post a Comment