Skip to main content

திரு பாவை துதி - 7



கோதா ஸ்துதி - 7 -  வால்மீகியின் திருவாக்கு இனிப்பதற்கான காரணம்


வல்மீகத: ச்ரவணதோ வஸுதாத்மநஸ் தே

         ஜாதோ பபூவ ஸ முநி: கவிஸார்வபௌம: |

கோதே கிமத்புதம் யதமீ ஸ்வதந்தே

         வக்த்ராரவிந்த மகரந்தநிபா: ப்ரபந்தா: ||   (7)


எளிய தமிழ் விளக்கம்


ஹே கோதே!

பூமித்தாயான உன்னுடைய புற்றாகிற

செவியிலிருந்து தோன்றிய வால்மீகி முனிவர்

கவிச்சக்கரவர்த்தியானர்

அப்படியிருக்க,

உன் செந்தாமரைப் பூபோன்ற திருவாயிலிருந்து அருளிய 

தேனுக்கு ஒப்பான பிரபந்தங்கள் 

தித்திப்பதில் என்ன ஆச்சரியம் ? 


சில குறிப்புகள்

பூமியின் செவியைப் புற்று என்கிறது வேதம். (வல்மீகம் - புற்று).

வால்மீகி முனிவர் புற்றிலிருந்து உண்டானார்.  வால்மீகியின் 24,000 ஸ்லோகங்களைக் கொண்ட ஸ்ரீமத் ராமாயணத்தை ஸ்ரீராமரே கூட்டத்தோடு கூட்டமாக  ரசித்துக் கேட்டார். அதனால் அவர் கவிச்சக்கரவர்த்தியானார். அப்படியிருக்க உன் திருமுகமாகிய தாமரையிலிருந்து திருவாய் மலர்ந்து நேயமுடன் திருப்பாவை பாட்டு ஆறு ஐந்தும், தையொரு திங்கட்பாமாலயான நாச்சியார் திருமொழி நூற்றுநாற்பத்து மூன்றும் ருசிக்கின்றது என்பதில் என்ன ஆச்சரியம் ? என்கிறார் ஸ்வாமி தேசிகன்.  


செவியிலிருந்து பிறந்தவருக்கு இத்தகைய வாக்கு வன்மையிருந்தால், உனது வாக்கிலிருந்து வந்த பிரபந்தங்களுக்கு என்ன ஏற்றம் இருக்கும் ? இதை கைமுதிக நியாயம் என்பார்கள்.


சுலபமாக புரிய, தேர்வில் முதல் வகுப்பில் தேறியவர்களுக்கு ஊக்கப் பரிசு என்று அறிவித்த போது, 100% வாங்கிய மாணவன் “எனக்குப் பரிசு உண்டா ?” என்று கேட்பது போல. 


AI-படம்: கோகுலத்தில் கடையும் போது அந்த வெண்ணெயே கண்ணன்!

- சுஜாதா தேசிகன் 23.12.2023

கீசு கீசு


Comments