Skip to main content

திரு பாவை துதி - 13

திரு பாவை துதி - 13




கோதா ஸ்துதி - 13 - பரிஹாசங்களும் உண்மை பொருளும். 


நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே

         ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |

ஏவம்விதாஸ்ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:

         ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் ||   .13.


எளிய தமிழ் விளக்கம்


“அழகிய மெல்லிய மேனி படைத்த கோதையே!

உன் அழகிற்கு, நீ போயும் போயும்

படுக்கப் பாம்பும், பறக்கப் பறவையும் வைத்திருக்கும் 

ஒரு கிழவனையா உன் காதல் மணாளனாகத் தேர்ந்தெடுத்தாய் ?”

என்று உன் தோழிகளின் கேலிப் பேச்சுக்களை 

நீ கேட்டு பூரிப்பாயாமே? 


சற்றே பெரிய விளக்கம்


இந்த ஸ்துதி வஞ்சப்புகழ்ச்சியில் எழுதப்பட்டது. 

சில தலைமுறைக்கு முன் முன்பு திருமணங்களில் தோழிகள் மணமகளைப் பார்த்து ஏசப்பாட்டுப் பாடுவது தமிழ்நாட்டுத் திருமணங்களின் வழக்கம். (இன்று இருக்கிறதா?)


தோழிகள் கேலி பேசுவதற்கு கோதை எப்படிப் பதில் கூறுகிறாள் என்று பார்க்கலாம். 


தோழிகள் : பாம்பு படிக்கையில் படுத்துக்கொண்டு இருப்பவனையா காதலித்தாய் ? 


கோதை:  பொய்கையாழ்வார் “சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்..” என்றும் ஸ்ரீ ஆளவந்தார் தனது ஸ்தோத்திர ரத்தினத்தில்  


“நீ திருவனந்தாழ்வானின் திருமேனியிலே திவ்யமாக சயனித்திருக்கிறாய். திருவனந்தாழ்வான் நீ வசிக்கும் திருமாளிகையாகவும்,சயனித்துக்கொள்ளும் படுக்கையாகவும், வீற்றிருக்கும் சிம்மாசனமாகவும்,  அணிந்துகொள்ளும் பாதுகையாகவும்,உடுத்திக்கொள்ளும் ஆடைகளாகவும், அணைத்துக்கொள்ளும் தலையணையாகவும், வெயில் மற்றும் மழையிலிருந்து காக்கும் குடையாகவும், மேலும் பல வடிவங்களையும் எடுத்துக்கொண்டு உனக்குத் தொண்டு செய்வதால் எல்லோராலும் “சேஷன்” (தொண்டன்) என்றே அழைக்கப்படுகிறான் என்று இந்தப் பாம்பைத் தானே போற்றுகிறாரே!


தோழிகள்: பறக்கப் பறவையும் வைத்துக்கொண்டு இருப்பவனையா நீ காதலித்தாய் ? 


கோதை: என் அப்பா பெரியாழ்வார் “பறவையேறு பரமபுருடா” என்று இந்தக் கருடனைத் தான் போற்றுகிறார். ஸ்ரீ ஆளவந்தார் தனது ஸ்தோத்திர ரத்தினத்தில் 


“வேதங்களையே அங்கங்களாக உடைய அந்த கருடாழ்வார், உனக்கு அடியவனாகவும், நண்பனாகவும், வாகனமாகவும்,ஆசனமாகவும், கொடியாகவும், விதானமாகவும், சாமரமாகவும் இருக்கிறார்; மேலும் உன்னுடைய திருவடிகள் அவருடைய தோள்களில் அழுத்தியதால் ஏற்பட்ட தழும்புகளாலே ஒளிவிடுகிறார்;

பெருமாளின் முன் முன் நிலைக்கண்ணாடி போல் நின்று கொண்டு இருக்கும் பெரிய திருவடி” என்று புகழ்கிறாரே!


தோழிகள்: போயும் போயும் கிழவனை… ? 


கோதை: ஆமாம் கிழவன் தான்! நம்மாழ்வார் “முதல் தனி  வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்” என்று பாடியுள்ளார். கிழவனாக இருந்தால் என்ன இவரே ஜகத் காரணன் அன்றோ ? 


மேலும் சில குறிப்புகள்: 


700 வருடங்களுக்கு முன் ஸ்வாமி தேசிகன் பெருமாளை ‘கிழவர்’ என்று கூறுகிறார். 21ஆம் நூற்றாண்டு விளிம்பில் பெரிய பெருமாளே தன்னை கிழவர் என்று கூறிக்கொண்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா ? 


ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தைக் கட்டிய ஸ்ரீ முக்கூர் அழகியசிங்கர் குறித்து உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதுவரையில் அஹோபில மட சரித்திரத்தில் ‘வேதாந்த தேசிகன்’ என்ற திருநாமம் கொண்ட ஒரே அழகியசிங்கர் இவர் தான். 


85வயதில் அவருக்குக் கனவில் பெரிய பெருமாள் “மொட்டை கோபுரத்தை உயரமான ராஜகோபுரமாகக் கட்டி முடியும்” என்று கட்டளையிட, அதற்கு அழகியசிங்கர் “நானோ கிழவன். இதை அடியேனால் செய்து முடிக்க முடியுமா?” என்று கூற அதற்குப் பெரிய பெருமாள் ”நானும் கிழவன் தான். கிழவனான எனக்கு, கிழவனான நீ தான் கைங்கரியம் செய்ய வேண்டும்” என்றார். 


பிறந்த வீட்டில்  ஆண்டாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கோபுரம் கட்டினார் பெரியாழ்வார். பல நூற்றாண்டுகள் கடந்து, வேதாந்த தேசிகன் என்ற திருநாமம் கொண்ட ஸ்ரீ முக்கூர் அழகியசிங்கர் ஆண்டாள் புகுந்த வீட்டுக்கு ’பெரிய’ கோபுரம் கட்டினார். 


“வைகுந்தம் சென்று நிகழ்த்த வேண்டிய கைங்கரியத்தை, பூலோக வைகுந்தத்தில் நிகழ்த்த எனக்கு அருள் புரிந்தான் அரங்கன். பெரிய பெருமாளே ஆரம்பித்து அவனே  முடித்துக்கொண்டார்” என்கிறார் ஸ்ரீமதழகியசிங்கர். 


AI-படம்: புள்ளின் வாய் கீண்டானை..


-சுஜாதா தேசிகன்
29.12.2023
புள்ளின் வாய்...


Comments