Skip to main content

திரு பாவை துதி -15

திரு பாவை துதி -15



கோதா ஸ்துதி - 15 - சூடிக்கொடுத்த மாலைக்கே ஏற்றம். 


ஆமோதவத்யபி ஸதா ஹ்ருதயங்கமாபி

ராகாந்விதாபி லளிதாபி குணோத்தராபி |

மௌளிஸ்ரஜா தவ முகுந்தா கிரீடபாஜா

கோதே பவத்யதரிதா கலு வைஜயந்தீ || (15)


எளிய தமிழ் விளக்கம் - 1 (வனமாலை என்ற பெண்)

ஹே கோதா தேவியே

வனமாலையானவள் எப்போதும் பெருமாளின்

எப்போதும் திருமார்பில்

ஆனந்தப் புன்சிரிப்பு முகமுடையவளாக, 

விரும்பட்டவளாக, நினைக்கப்பட்டவளாக, 

ஆசையுடையவளாக, இனிய தன்மையான குணவதியாயினும், 

பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற 

ஒரு பெண்ணால் 

கீழே தள்ளப்பட்டது! 



எளிய தமிழ் விளக்கம் - 2 (வனமாலை என்ற மாலை)

ஹே கோதா தேவியே

வனமாலை 

எப்போதும் திருமார்பை விட்டு அகலாமல்

வாசனையுடையதாக, 

செந்நிறமுடைய இளந்தளிர்களுடையதாகவும், 

மென்மையாகவும், நன்றாகத் தொடுக்கப்பட்டிருந்தாலும், 

பெருமாளின் திருமுடியை அடைந்திருக்கிற 

நீ சூடிக்கொடுத்த மாலையால்

கீழே தள்ளப்பட்டது! 


சற்றே பெரிய விளக்கம்


இந்த ஸ்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் சிலேடையாக வனமாலையை ஒரு பெண்ணாக உருவகப்படுத்தி அருளியுள்ளார். இந்த ஸ்லோகத்தை இரண்டு விதமாகப் பொருள் கொள்ளலாம். ஒன்று வனமாலை என்ற பெண், இன்னொன்று வனமாலை என்ற மாலை. 


வனமாலை பெருமாளின் மார்பில் எப்போதும் மனதுக்கு இனியவளாக இருந்தாலும் கோதை சூடிக்கொடுத்த மாலையைத் தலையில் வைத்துத் தாங்குகிறார் பெருமாள் என்று பொருள்.  (மார்பை விடத் தலை உயர்ந்த இடத்தில் இருக்கிறது)


இதைப் படிக்கும் போது அது எப்படிக் கூறலாம் என்று நம் மனத்தில் எண்ணம் வருவது இயற்கையே.


புரிந்துகொள்ள முதலில் திருப்பாவை பிறகு திருவாய்மொழி இரண்டையும் கலந்து அனுபவிக்க வேண்டும். 


திருப்பாவையில் ஆண்டாள் நப்பின்னை பிராட்டியை முன்னிட்டு தான் பெருமாளிடம் சரணாகதி செய்கிறாள். 


“செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப வந்து திறந்து, உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு, இல்லை என்றால் அது உன் தத்துவம் அன்று” என்று பிராட்டியை முன்னிட்டு சரணாகதி செய்கிறாள்.  ( திருப்பாவை 18,19,20)


தாயாரை முன்னிட்டு சரணாகதி செய்வது தான் ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடிப்படை. அப்படிச் செய்த சரணாகதனைப்  பெருமாள் தலையில் தூக்கிக் கொண்டாடுகிறான்.  தாயாருக்குக் கொடுக்கும் அன்பைவிடச் சரணாகதி செய்தவனுக்கே  அதிகம் அன்பைக் கொடுக்கிறான் என்கிறார்கள் நம் ஆசாரியர்கள். 


இதைப் புரிந்துகொள்ள  நம்மாழ்வார் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை” என்ற திருவாய்மொழியில் ‘நமக்கும் தாமரை மலரில் வசிக்கும் பெரிய பிராட்டியாருக்கும் இன்பமளிப்பவன்’ என்பது சாதாரணப்  பொருள். 


நம் ஆசாரியர்கள் இதற்குப் பொருள் கூறும் போது பிராட்டியைவிட நமக்கு அதிகம் இன்பத்தைக் கொடுக்கிறான் என்கிறார்கள்.  எப்படி என்பதற்கு ஸ்ரீமத் ராமாயணத்தில் யுத்தக் காண்டத்தில் ஒரு சம்பவம். 


சுக்ரீவன் ஸ்ரீ ராமர் மீது இருந்த பிரேமையினால் ஸ்ரீ ராமரின் உத்தரவு இல்லாமல் ராவணனிடம் சண்டையிட்டு, பிறகு இவனுடன் யுத்தம் செய்வது உசிதமல்லவென்று எண்ணி ஸ்ரீ ராமர் பக்கம் வந்து நின்றார்.


ஸ்ரீ ராமர் சுக்ரீவனைப் பார்த்து “நண்பா என்னுடன் ஆலோசிக்காமல் இப்படிப்பட்ட துணிவான காரியத்தை நீ செய்யலாமா ? உனக்கு இது துணிவான காரியமாக இருக்கலாம். ஆனால் உனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று கருதிக் கவலைப்பட்டேன்” என்று மேலும் ஸ்ரீ ராமர் சுக்ரீவனைப் பார்த்து இப்படிச் சொல்லுகிறார் “ராவணனால் உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால், ஏன் உன் உடம்பிலிருந்து ஒரு ரோமம் கீழே விழுந்தாலும் சீதையாவது, பரதனாவது, லக்ஷ்மணனாவது, சத்துருக்கனனாவது என் தேகம் கூட எனக்குத் தேவையில்லை” என்கிறார். சீதை கூட எனக்கு முக்கியமில்லை நீ தான் சுக்ரீவா எனக்கு முக்கியம் என்கிறார். 


மேலே உள்ள நம்மாழ்வார் பாசுரத்தில் “நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை” என்பதில் ‘நமக்கும்’என்பதைத் தான் முதலில் சொல்லுகிறார், அடுத்துத் தான் பூவின் மிசை நங்கை வருகிறாள். 


“கோலம் மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ” ( ‘திருமகளுக்கு அன்பனாகி, அவளது அங்கீகாரத்தால் என்னிடம் பேரன்பு கொண்டவனே’ ) என்று நம்மாழ்வார் சொன்னதை தான் இந்த ஸ்துதியில் ஸ்வாமி தேசிகன் கூறுகிறார். 


கோதையும், அவளுடைய சங்கத் தமிழ் மாலையையும் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்தால் “ 'கோதை’ மலர் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ” என்று கொண்டாடுவான்.


AI- படம்: எல்லே! இளங்கிளியே!...


- சுஜாதா தேசிகன்

31.12.2023

எல்லே! இளம்கிளியே!...






Comments