திரு பாவை துதி - 1 கோதா ஸ்துதி - 1 - ஸ்வாமி தேசிகன் கோதை நாச்சியாரை சரணடைதல்
ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்ப வல்லீம்
ஸ்ரீரங்கராஜஹரிசந்தன யோகத்ருச்யாம்|
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவாந்யாம்
கோதாமநந்ய சரண: சரணம் ப்ரபத்யே || (1)
எளிய தமிழ் விளக்கம்
ஸ்ரீவிஷ்ணுசித்தர் குலமே ஒரு நந்தவனம்;
அந்த நந்தவனத்தில் (தோன்றிய) கற்பகக் கொடியான கோதை,
ஸ்ரீரங்கராஜன் என்ற ஹரி சந்தன மரத்தை (கோதை/மாலைப் போல்) அணைத்து (மணம் புரிந்து) அழகுபடுத்தும் சுடர்க்கொடி!
பொறுமையில் இவளே பூமிப்பிராட்டி!
கருணையில் மற்றொரு திருமகளான கோதையை,
வேறு புகல் ஒன்றில்லா அடியேன் சரணமாக பற்றுகிறேன்
(இதே போல் தினமும் கூற முடியுமா என்று தெரியவில்லை.)
தன் தன் சித்தம் முழுவதும் ஸ்ரீவிஷ்ணுவையே வைத்திருப்பவர் பெரியாழ்வார். அதனால் அவர் ஸ்ரீவிஷ்ணுசித்தர். விஷ்ணு வாசம் செய்யும் இடமே கோயில் அதனால் அவர் சித்தமே ஒரு கோயில்!
கோயிலை ஒட்டிய தோட்டத்துக்குப் பெயர் நந்தவனம். எந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ் படிகால் தொடங்கி வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் என்று பெரியாழ்வார் குலமே ஒரு நந்தவனக் குலம்!
‘சிந்து பூமகிழும்’ அந்த நந்தவனத்தில் திருத்துழாய்க்கு அடியில் ‘அஞ்சுக்குடிக்கு ஒரு சந்ததியாய்’ ஒரு பெண் குழந்தை தோன்ற, ‘பூமி(பிராட்டி) ஈன்ற’(கோதை) அப்பெண் குழந்தைக்கு ‘கோதை’ என்று பெயர் சூட்டினார். கோதைக்கு கண்ணனையே ஊட்டி ‘ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல’ வளர்க்க, ‘கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடி’ அக் கற்பகக் கொடி நந்தவனத்தில் இருக்கும் ஹரி சந்தன மரத்தை மாலை போல அணைத்துக்கொண்டாள்.
கோதை கோதையாக (செழுமையான தன் கூந்தலில் அணிந்த மாலையால்) ஸ்ரீரங்கராஜனின் மார்பை அணைத்துக்கொண்டு ‘கோதை மார்பனாக*’ அழகுபடுத்தி வேதம் அனைத்துக்கும் வித்தான சங்கத் தமிழ் மாலை முப்பதும் ‘ஆழ்வார்கள் தன் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் பிஞ்சாய்ப் பழுத்து, அருளிய கோதையின் தூய நல் பாதமே துணை !
(சங்க கால அரசர்களுக்கு ‘கோதை மார்பன்’ என்று பெயர் உண்டு. கோதை என்றால் அழகிய மாலை; அழகிய மாலை அணிந்த மார்பன் என்று பொருள்)
ஹரி சந்தன மரம் - சில குறிப்புகள்.
பழைய தமிழ் மேடை நாடகங்கள், திரைப்படங்களில் செட் பார்த்திருப்பீர்கள். நந்தவனத்தில் பெரிய தூண்கள், அதைச் சுற்றி எப்போதும் ஒரு கொடி ஓடிக்கொண்டு இருப்பது போல சித்திரம் வரைந்திருப்பார்கள்.
ஒரு கொடி இயற்கையாக ஒரு கொம்பை பிடித்துக்கொள்ளும். பெண்களைக் கொடி என்று அழைக்கிறோம்(கொடியிடையாள்). இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்களும் ஒரு பெண் தான்.
இதைப் புரிந்துகொள்ள குலகேகர ஆழ்வாரின் இந்தப் பாசுரத்தை பாருங்கள்.
அரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
மாயோனை மணத்தூணே பற்றி நின்று என்
வாயார என்றுகொலோ வாழ்த்தும் நாளே!
இந்த ஆழ்வார் மட்டும் தான் மணத்துண் பற்றிப் பாடியுள்ளார். மனம் உருகி பாடியுள்ளார். இங்கே குலசேகர ஆழ்வார் குலசேகர நாயகியாக(நாயிகா பாவம்) ஒரு கொடி போல அந்தத் தூணை பற்றிக்கொண்டு உருகுகிறார்.
கொடி தூணை சுற்றி எப்படி இருக்கமாக பற்றிக்கொள்கிறதோ அதே போல் நாம் பெருமாளை அணைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்த முறை ஸ்ரீரங்கம் க்யூவில் செல்லும் போது உள்ளே இருப்பவர் அழகிய மணவாளன் என்ற மாப்பிள்ளை வரிசையில் செல்பவர்கள் எல்லாம் ஜீவன் என்ற பத்தினிகள்! நம் உள்ளத்தை அவனிடம் கொடுத்தால் அவன் வந்து நம்மைக் கைபிடித்து திருமணம் செய்துகொள்கிறான். நமக்கும் அவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது அதனால் அதற்குப் பெயர் திருமணத்தூண்கள்!
ஸ்ரீரங்கத்தில் இரண்டு மணத்தூண்களுக்கு பெயர் ‘ஹரி’. (ஒன்றிருக்கு பெயர் ‘ஹ’ இன்னொன்றிருக்கு பெயர் ‘ரி’). இந்த மணத்தூண்களில் தான் கோதை என்ற கொடி அணைத்து அழகுபடுத்துகிறது.
படம்: மார்கழி -1க்கு செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம். யசோதை இளம் சிங்கமாக காட்சி கொடுக்க ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் ‘நாராயணனே நமக்கே’ என்று வணங்குகிறார்கள்.
- சுஜாதா தேசிகன்
17.12.2023 மார்கழி திங்கள்
Comments
Post a Comment