திரு பாவை துதி - 4
கோதா ஸ்துதி - 4 - கோதையின் அருளால் கவிகள் கவிபாடும் திறம் பெறுதல்
க்ருஷ்ணாந்வயேந ததீம் யமுகாநுபாவம்
தீர்த்தைர் யதாவதகாஹ்ய ஸரஸ்வதீம் தே |
கோதே விகஸ்வரதியாம் பவதீகடாக்ஷாத்
வாசஸ் ஸ்புரந்தி மகரந்தமுச: கவீயாம் || (4)
எளிய தமிழ் விளக்கம் - 1 (கோதாவரியைக் குறித்து)
கோதாவரி நதியே! உன் அருளாலே,
கண்ணனின் சம்பந்தத்தால் ‘தூய பெருநீர்’ என யமுனை போன்று
ஏற்றம் பெற்ற சரஸ்வதி முதலான நதிகளின்
படித்துறைகளில் சாஸ்த்ரமுறைப்படி நன்கு மூழ்கி நீராடினால்
கவிகளின் புத்தி மலர்ந்து,
வாக்குகள் தேன் பெருக்கெடுத்தது போல் விளங்கும்!
எளிய தமிழ் விளக்கம் - 2 (கோதை/ஆண்டாளைக் குறித்து)
வாக்தேவியான கோதையே !
*கண்ணனின் சம்பந்தத்தால் ‘தூய பெருநீர்’ என யமுனை போன்று
ஏற்றம் பெற்ற நீ, நேயமுடன் உரைத்த **பாசுரங்களை
ஆசாரியர்கள் மூலமாக நன்கு மூழ்கி கற்றால்
கவிகளின் புத்தி மலர்ந்து,
வாக்குகள் தேன் பெருக்கெடுத்தது போல் விளங்கும்!
*பாவை நோன்பு மூலம் ** திருப்பாவை, நாச்சியார் திருமொழி
சற்றே பெரிய விளக்கம்
‘கவிதார்க்கிக’ சிம்மம் என்று ஸ்ரீ வேதாந்த தேசிகனுக்கு மற்றொரு திருநாமம். ஒரே இரவில் நம்பெருமாளுடைய பாதுகைகளைப் பற்றி 1008 ஸ்லோகங்கள் அருளியுள்ளார். அதில் 929, 930 ஸ்லோகங்கள் ‘knights problem’ என்று இன்றைய கணினி உலகிற்கே ‘டஃப் கொடுக்கும்’ ’டேட்டா பேஸில் சுலபமாக, சீக்கிரமாக எப்படித் தேடுவது, DNA ஆராய்ச்சி போன்ற சிக்கல்களுக்கு அடிப்படை என்று சொல்லலாம். இந்த அற்புதங்களை 750 ஆண்டுகளுக்கு முன்பே எந்த கணினி உதவியும் இல்லாமல் ஏன் மின்சாரம் கூட இல்லாத காலத்தில் கவிதையில் நிகழ்த்தியுள்ளார்! அதற்கு ஒரே காரணம் கோதா!
இன்றைய ஸ்லோகம் ஸ்லோடையில் அமைந்தது. ஒரே ஸ்லோகத்தில் இரண்டு ஸ்லோகங்கள் இருக்கிறது. ஒன்று கோதாவரி நதியைப் பார்த்துச் சொல்லுவது, மற்றொன்று கோதையைக் குறித்துத் துதிப்பது. ( இரண்டும் மேலே கொடுத்திருக்கிறேன்).
’கோதா ஸ்துதியில்’ ஸ்வாமி தேசிகன் ஆண்டாளைத் தானே துதிக்க வேண்டும் சிலேடையாக இருந்தாலும் ஏன் கோதாவரி நதியைப் புகழ்கிறார் என்று தோன்றும்.
’கோதா’ என்று கோதையின் பெயரை வைத்துக்கொண்டவளுக்கே
இந்த ஏற்றம் என்றால் அந்தக் கோதைக்கு எவ்வளவு ஏற்றம் இருக்கும் ?
மேலும் சில குறிப்புகள்:
கோதாவரியில் நீராடினால், யமுனை, சரஸ்வதி ஆறுகளில் நீராடும் வாய்ப்பு கிடைக்கும் என்பது மரபு. தெற்கிலிருந்து வடதேசத்துக்கு யாத்திரையாகச் சொல்லும் போது முதலில் கோதாவரியில் நீராடிய பின் தான் சரஸ்வதியில் நீராடச் செல்வர். சரஸ்வதி நதியில் நீராடியவர் மதுரகவியாவர் என்று பழைய உரைகள் கூறும்.
படம்: ஆழி மழைக்கு செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய படம்.
- சுஜாதா தேசிகன் 20.12.2023 ஆழி
Comments
Post a Comment