Skip to main content

திரு பாவை துதி - 9

 திரு பாவை துதி - 9


கோதா ஸ்துதி - 9 - கோதைக்குப் பெரிய பிரட்டியோடு உள்ள ஒற்றுமை


மாதஸ் ஸமுத்திதவதீமதி விஷ்ணுசித்தம் விச்வோபஜீவ்ய மம்ருதம் வசஸா துஹாநாம் | தாபச்சிதம் ஹிமருசேரிவ மூர்த்திமந்யாம் ஸந்த: பயோதிதுஹிதுஸ் ஸஹஜாம் விதுஸ்த்வாம் ||              (9)


எளிய தமிழ் விளக்கம்


தாயே !

விஷ்ணுவின் சித்தத்திலிருந்து(மனசு) தோன்றியவளே 

வையம் உஜ்ஜீவனம் பெற அமுதத்தை

உன் திருவாக்கினால் சுரந்து தாபத்தை போக்குபவளும்

சந்திரன் போன்று உருவமுடைய 

உன்னைப் பெரியோர்கள் பாற்கடலின் மகளான திருமகளின் 

உடன்பிறந்தவளாக அறிந்துகொண்டார்கள்


சற்றே பெரிய விளக்கம் 


ஒரே ஸ்லோகத்தைச் சிலேடையாகக் கோதை, சந்திரன் இருவருக்கும் பொருந்தும்படி அமைத்திருக்கிறார் ஸ்வாமி தேசிகன். கீழே இருவருக்கும் எப்படிப் பொருந்துகிறது என்று சொல்லியிருக்கிறேன். (சந்திரனுக்கும் கோதைக்கும் உள்ள சிறு சிறு சொற்களின் வேறுபாடுகளைக் கண்டுகொள்ளுங்கள்.  முக்கியமாக ஜீவனம் - உஜ்ஜீவனம்)


விஷ்ணுவின் சித்தத்திலிருந்து(மனசு) தோன்றியவளே !

பாற்கடலில் சயனித்துக்கொண்டு இருக்கும் விஷ்ணு, பெரியாழ்வார் மனதிலும் சயனித்துக்கொண்டு இருக்கிறான். விஷ்ணுவை தன் சித்தத்தில் வைத்திருக்கும் பெரியாழ்வாருடைய ‘மானசீக’ புத்திரி கோதை.

சந்திரன் விஷ்ணுவின் மனசிலிருந்து தோன்றியவள் என்று வேதம் கூறுகிறது


வையம் உஜ்ஜீவனம் பெற அமுதத்தை உன் திருவாக்கினால் சுரந்து தாபத்தை போக்குபவளும்

கோதை வையம் உஜ்ஜீவனம்(உய்ய) பெறத் திருப்பாவை, நாச்சியார் திருமொழியான அமுதத்தைச் சுரந்து சம்சாரத் தாபத்தை போக்குபவள்

சந்திரன் வையம் ஜீவனம்(பிழைக்க) அடைய அமுதக் கிரணங்களை வழங்கி தாபத்தை போக்குகிறான். 


சந்திரன் போன்று உருவமுடைய 

வேறுபாடு இன்றி இருவரும் உலக மக்களின் தாபத்தைப் போக்கினாலும், இருவரும் இருவேறு உருவங்கள்! 

சந்திரன் வளரும் தேயும், ஆனால் கோதை ஞானத்தில் கதிரவன்  போலவும் மதி நிறைந்தும்,   கருணையில் மதி போலவும், கதிர் மதியம் போல முகத்தாள்!


உன்னைப் பெரியோர்கள் பாற்கடலின் மகளான திருமகளின் உடன்பிறந்தவளாக அறிந்துகொண்டார்கள்

சந்திரன் லக்ஷ்மிக்கு சகோதரன் என்பது போலக் கோதையும் திருமகளின் சகோதரியே !


மேலும் சில குறிப்புகள் : 


மஹாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் அகலகில்லேன் என்று எப்போதும் குடிகொண்டிருக்கிறாள். திருமால் பெரியாழ்வார் சித்தத்தில் குடிகொண்டிருக்கிறார். அந்த விஷ்ணு(விஷ்ணுவின்) சித்தத்தில் உண்டானவள் கோதை. 


பாற்கடலைக் கடைந்த போது அமுதத்தை அளித்தாள் மஹாலட்சுமி. ஆனால் அது தேவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதனால் உலகத்திற்கு எந்தப் பயனும் இல்லை. ஆண்டாளோ தன் பிரபந்தங்களால் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று உலகம் வாழ அமுதத்தை அளித்தாள். 


திருமங்கை ஆழ்வார் “திருவுக்கும் திருவாகிய செல்வா!” என்கிறார். அதாவது “ஸ்ரீ மஹாலக்ஷிமிக்கும் லக்ஷ்மீகரனான செல்வனே!” ; திருவுக்கு ‘அதிசயத்தை விளைவிப்பவன்’ என்றும் ஒரு பொருள் உண்டு. அதாவது பெருமாளுக்கு திருமகளுடைய சம்பந்தத்தால் அதிசயம்; திருமகளுக்கு பெருமாளின் சம்பந்தத்தால் அதிசயம்.


இதைவிட அதிசயம் பட்டர்பிரான் கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதையும் சொல்வோருக்கு  ‘நீங்காத செல்வம் என்ற திருவருள் நிறைந்து, எங்கும் எப்பொழுதும் இன்புற்று பேரின்பப் பெருவாழ்வு வாழ்வர்’ என்பது தான்!  AI-படம்: தூமணி மாடத்தில் சுற்றும் விளக்குகள் எறிய..


- சுஜாதா தேசிகன் 25.12.2023 தூமணி


Comments