Skip to main content

பதம் பிரித்த பிரபந்த புத்தகம் !

 பதம் பிரித்த பிரபந்த புத்தகம் !


2007ல் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதாவைச் சந்தித்தபோது, செல்போனுக்கும் டைரிக்கும் நடுவில் ஒரு புத்தகம் இருப்பதைக் கவனித்தேன். என்ன என்று வாங்கிப் பார்த்தபோது  "நாலாயிர திவ்யப் பிரபந்தம்"  இந்தப் புத்தகத்தின் சிறப்பு - எளிதில் படிக்க உதவும் வகையில் பாசுரங்கள் பதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது என்றார். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் முன் வெளியிடப்பட்ட புத்தகத்தைத் திரும்பவும் வெளியிட்டுள்ளார்கள். ( உபயம்: கடுகு அல்லது அகஸ்தியன் என்ற பி.எஸ்.ரங்கநாதன்).  பிரபந்தம் மீது பிரேமை கொண்டவர்கள் வைத்திருக்க வேண்டிய பதிப்பு. சுஜாதாவிடம் இருந்த இந்தப் புத்தகத்தின் முகவரியைத் தெரிந்துகொண்டு திருவல்லிக்கேணியில் அலைந்து திரிந்து வாங்கினேன். எனக்கு அப்போது எழுத்தாளர் கடுகு பரிட்சியம் கிடையாது.  

என் அப்பா நான் படிக்கும் புத்தகங்களைப் பார்த்துவிட்டு ஒரு முறை எவ்வளவு புத்தகம்  படித்தாலும், கடைசிக் காலத்தில் இந்த பிரபந்தம் புத்தகம் தான் நமக்குத் துணை என்று அவர் வைத்திருக்கும் பிரபந்த புத்தகத்தை என்னிடம் காண்பித்தார்.  ஒரு முறை சுஜாதாவிடம் இதைப் பற்றிச் சொன்னபோது அவர் தந்தையும் அதையே தான் அவருக்கு சொன்னார் என்று என்னிடம் கூறினார். அவருடைய தலைமாட்டுப் பக்கம் பிரபந்த புத்தகம் தான் இருக்கும் அதை நானே பார்த்திருக்கிறேன். ( ஆங்காங்கே பல குறிப்புகளுடன் ! ) வாரம் ஒரு பாசுரம் என்ற தொடரை அவர் விரும்பி எழுதினார் என்பதும் எனக்குத் தெரியும். 

இந்தப் புத்தகம்பற்றிச் சுஜாதா கல்கியில் எழுதியது இது : 

ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள்.

இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே
லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக
டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய
மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே.

தலைகால் புரியவில்லையல்லவா? இதில் ஒளிந்து கொண்டிருக்கும் பாடல் என்ன பார்க்கலாம். முதலில் பதம் பிரித்தால் கொஞ்சம் வெளிச்சம் கிடைக்கும்.

இசைமின்கள் தூது என்று இசைத்தால் இசையிலம் என் தலைமேல்
அசைமின்கள் என்றால் அசையும்கொலோ அம்பொன் மாமணிகள்
திசைமின்மிளிரும் திருவேங்கடத்து வன்தாள் சிமயம்
மிசை மின் மிளிரிய போவான்வழிகொண்ட மேகங்களே
(வன்தாள் சிமயம் - வலிமையான அடிவாரமுள்ள சிகரம்)

இப்படிப் பிரித்தால் இன்னும் கொஞ்சம் தெளிவாகிறது. இந்தப் பாடலில், தலைவி திருவேங்கட மலைக்குச் செல்லும் மேகங்களை தூது போகச் சொல்கிறாள். அவை 'போ போ அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை' என்று மறுத்துவிட, 'என் தலையையாவது மிதித்துவிட்டுச் செல்லுங்கள்' என்கிறாள்.

இப்படி ஒரு அழகான ரத்தினத்தை பதம் பிரித்துத் தோண்டியெடுக்க வேண்டும்.

தமிழை ஒரு agglutinative language என்பார்கள். வார்த்தைகளை ஒட்ட வைத்துக்கொண்டே போகலாம். 'இசைமின்கடூது' என்பதை 'இசைமின்கள்தூது' என்றும், 'மணிகடிசைமின்மிளிரு'-மணிகள் திசை மின் மிளிரும் என்றும் வெளியே கொண்டு வந்தால் கிடைப்பது ஓர் அற்புதமான அகத்துறைப் பாடல். எப்பொழுதும் கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுதலையே இயல்பாக உடைய மேகங்கள் நம் காரியம் செய்யத்தக்கன என்று தலைவி நினைத்து வேங்கட மலைச்சிகரத்தில் மின்னலடிக்கச் செல்லும் மேகங்களிடம் என்னைப்பற்றி பெருமாளிடம் சொல்லுங்கள் என்று கேட்டதில் தூது சொல்ல அவை இசைய(சம்மதிக்க)வில்லை. அதனால் 'என் தலைமேல் உங்கள் பாதத்தை வைத்துவிட்டாவது செல்லுங்கள்' என்று கேட்கிறாள்.

இந்த நாட்களில் திருப்பதிக்கு செல்லும் மேகங்களை லட்டு வாங்கிவர மட்டுமே சொல்வோம்!

அடியேன் இந்த புத்தகத்தை அலைந்து திரிந்து, திருவல்லிக்கேணியில் வாங்கி திறந்தவுடன் ஒரு அதிசயம் காத்துக்கொண்டு இருந்தது. தென்கலை, வடகலை இரண்டு திருமண், மணவாள மாமுனிகள், வேதாந்த தேசிகன் தனியன்கள் இரண்டும் ஒன்றாக அடங்கி பார்த்த முதல் பிரபந்த புத்தகம் இது ! 

பிறகு, பல வருடங்கள் கழித்து ஒரு நாள் கடுகு அவர்கள் நான் சுஜாதா கையில் இருந்த பிரபந்தம்பற்றி எழுதியிருந்ததை படித்துவிட்டு எனக்கு ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அவரை சந்திக்கும் போது அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து 4000 முழுக்க தட்டச்சு செய்து, பிழைகள் திருத்திப் புத்தகத்தைக் குறைவான விலைக்குக் கொண்டு வந்தார்கள் என்றார். . ( அவர்களை சேவித்துவிட்டு அவர்கள் கையால் ஒரு புத்தகம் வாங்கிக்கொண்டேன்)

இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கூறினார். பிறகு அவரே அதை எழுதியும் உள்ளார் அது கீழே 

2006 ஏப்ரல் மாதம்தான் புத்தகம் (2 பாகங்கள்; 848 பக்கங்கள்) தயார் ஆயிற்று. ஒரு வருட கால முயற்சி.

     ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகள் நாரத கான சபாவில் புத்தகம் வெளியீடு சிறப்பாக நடந்தது. முதல் பிரதிகளை சங்கர நேத்ராலயா டாக்டர் பத்ரிநாத் அவர்களும், நகைச்சுவை ஜீனியஸ் கிரேசி மோகனும் வேறு சிலரும் பெற்றுக் கொண்டார்கள்.  கமலஹாசன் கேட்டார் என்று கிரேசி சொன்னார். ஒரு செட் கொடுத்து அனுப்பினேன்.

     எந்த விளம்பரமும் செய்யாமலும், எந்த புத்தக விற்பனை ஏஜென்சியின் உதவியும் இல்லாமலும் புத்தகங்களை விற்பனை செய்ய ஆரம்பித்தோம். மூன்றே மாதங்களில் மொத்த புத்தகங்களும் விற்று விட்டன. எங்களாலேயே நம்ப முடியவில்லை. பலர் பத்து, இருபது காபிகள் வாங்கிக் கொண்டார்கள். சிலர் எங்களை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து  -  வேண்டாம் என்று உண்மையாகத் தடுத்த போதிலும் -   நமஸ்கரித்து விட்டு வாங்கிக் கொண்டார்கள். ``நூறு ரூபாய் ரொம்ப குறைவு'' என்று சொல்லி 500 ரூபாயைத் திணித்து விட்டுப் போனவர்களும் உண்டு. (அப்படி பணம் அனுப்பியவர்களில் ஒருவர்  ஓவியமேதை கோபுலு!)

     இரண்டாவது பதிப்பு போட்டோம். ஒருத்தரே நூறு காபி வாங்கிக் கொண்டார். மற்றொருத்தர் தன் மகன் திருமணத்தை ஒட்டி நூறு காபிகள் வாங்கித் தாம்பூலப் பையில் போட்டுக் கொடுத்தார். ஒரு தொழிலதிபர் 100 + 200 காபிகள் வாங்கிக் கொண்டார்.

     இந்தப் புத்தகத்தைத்தான் ”புத்தக சந்தையில் நான் வாங்கிய ஒரே ரத்தினம்” என்று சுஜாதா எழுதியிருந்தார்.”  “ தன் மேஜையின் மேல் இந்த இரண்டு பாகங்களையும் சுஜாதா எப்போதும் வைத்திருப்பார்” என்று எழுத்தாளர் “சுஜாதா தேசிகன்’ என்னிடம்  ஒரு சமயம் சொன்னார்.

எல்லாவற்றிற்கும் சிகரம் போன்ற ஒரு நிகழ்ச்சி நடந்தது.

கத்திரி வெய்யில். உச்சி வேளை. மூன்று பேர் என் வீட்டிற்கு வந்தனர். வெள்ளை  வேட்டி, சட்டை. நெற்றியில் சற்று அகலமான திருமண்.  திண்டிவனம் போன்ற ஒரு சிறிய ஊரிலிருந்து வருவதாகவும்அங்கு வைஷ்ணவ சங்கம் வைத்திருப்பதாகவும்  சொன்னார்கள். எளிமையான விவசாயிகள் போல் இருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தைச்  சங்கத்தில் எல்லாரும் சேர்ந்து படிப்பதாகச் சொன்னார்கள். வாராந்திர பாராயணம் பற்றி மேலும் சில விவரங்களைக் கூறினார்கள்.

பாராயணம் செய்ய வருபவர்கள் காலை  எட்டுமணிக்கு வரவேண்டும். அனைவருக்கும் காலை உணவு வழங்கப்படும். பிறகு நாலு மணி நேரம் பாராயணம். அதன்  பின்மதிய உணவு, ஓய்வு, 1 மணி நேரம் பாராயணம். தொடர்ந்து மாலை சிற்றுண்டி, காபியுடன் நிறைவு பெறும்.

உணவுக்காகும் மொத்த செலவையும் ஒரு தனவந்தர் ஏற்றுக் கொண்டுள்ளராம். எல்லாரும் பாராயணம் செய்ய ஒரே பதிப்பு புத்தகத்தை வாங்கிப்போக வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

“ எத்தனை காபி?” என்று கேட்டேன்.

“ நூறு காபி.”என்றார்கள். (லேசாக எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.}

 ” நூறு செட்கள் என்றால் 200 புத்தகங்கள். இதன் எடை 100 கிலோ இருக்குமே. எப்படி எடுத்துக் கொண்டு போவீர்கள்?..வேண்டுமென்றால் லாரி மூலம் அனுப்பி விடுகிறேன்.” என்றேன்

“ அதில்லாம் தேவை இல்லை... நாங்கள் தலையில் தூக்கிக் கொண்டு போய்விடுவோம்.” என்றார்கள். மடியிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார்கள்.

மூன்று மூட்டைகளாகக் கட்டினார்கள். 30 கிலோ, 30 கிலோ, 40 கிலோ மூட்டைகள்.

சற்று வயதானவர்களாக  இருக்கும் இவர்கள் எப்படி இவ்வளவு கனத்தைத் தூக்கிக் கொண்டு பஸ்ஸைப் பிடித்து, ரயிலைப் பிடித்து ஊருக்குக் கொண்டு போகப்போகிறார்கள் என்று  எண்ணினேன்.

என் மனதில் ஓடும் எண்ணத்தை அறிந்தவர்போல் ஒருத்தர் சொன்னார்: ” புத்தகங்களையா தலையில் தூக்கிகொண்டு போகிறோம்? ஆழ்வார்களின் திருவடிகளைத்தானே தலை மேல் வைத்துக் கொண்டு போகிறோம்?” என்றார். மூவரும் மூட்டைகளைத் தூக்கி தலை மீது வைத்துக் கொண்டு போனார்கள். எவர் பணம் கொடுத்தாரோ அவர் 40 கிலோ மூட்டையைத் தூக்கிக் கொண்டார்!

இவர்களின் எளிமையையும், பக்தியையும், ஈடுபாட்டையும் பார்த்து என் மனம் நெகிழ்ந்தது. கண்களில் நீர் திரையிட்டது!

இன்று உலக புத்தக தினம் என்றார்கள்.
எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது !

- சுஜாதா தேசிகன்
23-04-2020
உலக புத்தக தினம் 

----------------------------------------------------------------------------------------------------------

மேலே எழுதிய கட்டுரை ‘வைரலாக’ எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவியது. பலர் என்னை விசாரிக்க ஆரம்பித்தார்கள். அதற்கு வந்த ரெஸ்பான்ஸ் மலைக்க வைத்தது. 

எழுத்தாளர் ஸ்ரீ பி.எஸ்.ரங்கநாதனும் அவர் மனைவியும் சேர்த்துச் செய்த  கைங்கரியத்தால் உருவான புத்தகம் அது. எந்தப் பிரதிபலனையும் எதிர்ப்பாக்காமல் செய்த கைங்கரியத்துக்குக் கிடைத்த வெற்றி அது. 

அந்தப் பிரபந்தம் புத்தகம் பலரைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேன். நான் நினைத்த சமயம்.  எழுத்தாளர் பி.எஸ்.ஆர்  அவர்களும் அவர் மனைவியும்  ( தற்போது அமெரிக்காவில் இருக்கிறார்கள் ) அடியேனுக்கு இரண்டு வரி மெயில் அனுப்பிவிட்டு 

Dear Sir, 

Your face book post was sent several readers and friends.
You are free to print copies under any name you prefer and sell.
More over phone.

PSR

மெயில் படித்து முடிக்கும் முன் தொலைப்பேசியில் கூப்பிட்டிருந்தார்கள். சார் இனிமே அந்தப் புத்தகம் உங்களுடையது. என் பேரைக் கூட நீங்கள் எடுத்துவிடலாம். நீங்க என்ன வேண்டும் என்றாலும் செய்துகொள்ளுங்கள். இனிமே இந்தப் புத்தகத்தின் முழு பொறுப்பு உங்களுடையது என்றார். 

I was humbled is an understatement. 

லாக்டவுன் முடிந்த பிறகு புத்தகத்தைக் எந்த லாப நோக்கும் இல்லாமல் குறைந்த  விலைக்குக் கொண்டு வரலாம் என்ற எண்ணம் இருக்கிறது. புத்தகம் தயாராகும் தருவாயில் மீண்டும் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன். 

பிகு: தற்போது ஸ்ரீ பி.எஸ்.ஆருக்கு 88 வயது ! 

அன்புடன்
சுஜாதா தேசிகன்
28-04-2020
உடையவர் திருநட்சத்திரம் 

----------------------------------------------------------------------------------------------------------


இது நடந்து சில வாரங்களில் இந்த செய்தி கிடைத்தது. என் ஆத்ம நண்பர், ஸ்ரீ பி எஸ் ரங்கநாதன் அவர்கள் ஆசாரியன் திருவடியை சில மணி நேரத்துக்கு முன் அடைந்தர். 

எழுத்தாளர் கடுகு என்றும் அகஸ்தியன் என்றும் அறியப்பட்டவர் ‘நீங்க இனிமேல் சுஜாதா தேசிகன்’ என்று எழுதுங்கள் என்று எனக்குத் தந்தை போலப் பெயர் வைத்தார். 

சில நாள் முன்பு வரை எனக்குப் போன் செய்து ’பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகத்துக்கு எல்லாம் அனுப்பிவிட்டேன் என்று உடம்பு முடியாமல் பேசினார். 

நம்பெருமாள் அவர் குடும்பத்துக்கு எல்லாம் நல்க வேண்டும். 

3-6-2020
- சுஜாதா தேசிகன்

முக்கிய குறிப்பு: புத்தகம் வருட கடைசியில் வரும் என்று நம்புகிறேன். தயாரானதும் அறிவிப்பு வரும். 

Comments

  1. Namaskaram! Yes. I got 3 copies through my relative in Triplicane few years ago.
    Need more copies. Eagerly waiting.

    ReplyDelete
  2. 1அன்பின் தேசிகன்,
    பதிவு மனம் நெகிழச்செய்கிறது.புத்தக அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
    ஒரு உதவி. சுஜாதாவின் - ஹாஸ்டல்தினங்கள்-நீண்டநாட்களாகத் தேடிவருகிறேன்
    எங்கு கிடைக்கும் என்று தெரிவிக்க இயலுமா?
    நன்றி
    ராதாகிருஷ்ணன்
    மதுரை-1

    ReplyDelete
    Replies
    1. நன்றி. ‘ஹாஸ்டல்தினங்கள்’ இப்போது கிடைகிறதா என்று தெரியவில்லை. dialforbooks கேட்டு பாருங்கள்.

      Delete
  3. நமஸ்காரம். மேற்படி கட்டுரையில் சிகரம் போன்ற நிகழ்ச்சி படித்தபோது என் கண்கள் கண்ணீரினால் திரையிடப்பட்டன. தயவுகூர்ந்து அடியேனுக்கு 5 செட் பிரதிகள் ஒதுக்கவும். அடியேன்,
    பார்த்தஸாரதி ராமானுஜதாஸன்

    ReplyDelete
  4. Thanks a lot sir for taking effort for publishing again. Interested in purchasing one copy. Pl inform as to how to do advance booking for the book. May God Bless You.

    ReplyDelete
  5. அன்புள்ள தேசிகன்.... நான் இதுபற்றி கடுகு சாருக்கு கடிதம் எழுதியிருந்தேன். புத்தகத்தில் உள்ள சில பிழைகள் பற்றி. நீங்கள் பிழைதிருத்தம் செய்திருந்தீர்களானால் ஓகே. இல்லையென்றால் எழுத்துப்பிழைகளைச் சரி செய்யலாம் என்று தோன்றியது.

    ReplyDelete
    Replies
    1. பிழைகளை எனக்கு அனுப்புங்கள் உதவியாக இருக்கும். நன்றி

      Delete
  6. தற்போது புத்தகம் எங்கு கிடைக்கும்

    ReplyDelete
  7. மு.வீராசாமிMarch 24, 2024 at 4:55 PM

    அன்புள்ள நண்பருக்கு வணக்கம். திவ்ய பிரபந்தம் உரையுடன் உள்ள புத்தகத்தை பரிந்துரைக்க வேண்டுகிறேன்.
    மு.வீராசாமி
    மதுரை.
    veera.opt@gmail.com

    ReplyDelete

Post a Comment