Skip to main content

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!


மீண்டும் ராமாயண கதை. என்று அந்தச் சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள்.

ராமருக்கு முடிசூட்டு விழா, ஆனால் கைகேயி, கூனியின் சூழ்ச்சியால் ராமர் காட்டுக்குச் சென்றுவிட்டார். ராமர் சித்திரகூடத்திலிருந்தபோது, பரதன் ராமரைத் தேடிக்கொண்டு வந்து “ராமா !மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்” என்று கேட்க, அதற்கு ராமர் தந்தை சொல்லைத் தட்ட மாட்டேன், பதினான்கு வருடம் காட்டிலிருந்துவிட்டுத் தான் வருவேன் என்றார். பரதன் எவ்வளவு சொல்லியும் ராமர் மறுத்துவிட, பரதன் உங்கள் பாதுகையாவது கொடுங்கள்.  உங்கள் சார்பாக அந்தப் பாதுகை நாட்டைக் காத்து ஆளட்டும் என்று தலைமேல் சுமந்து அயோத்திக்கு திரும்பினார்.

பரதன் சென்றபிறகு ராமருக்குப் பரதன் நினைவு அடிக்கடி வந்தது. வேறு இடத்துக்குச் செல்லலாம் என்று புறப்பட்டார். போகும் வழியில் ஒரு ஆசிரமம் இருந்தது. அது அத்திரி முனிவரும் அவருடைய மனைவி  அனசூயை வசித்த ஆசிரமம்.

ராமர், சீதையைப் பார்த்தவுடன் முனிவரும், அனசூயையும் மிகவும் மகிழ்ந்தார்கள். முனிவர் அனசூயையைச் சீதைக்கு அறிமுகம் செய்து வைத்து “அனசூயை தர்மத்தில் மிகச் சிறந்தவள். முன்பு ஒரு முறை பஞ்சம் வந்தபோது அவளுடைய மகிமையால் மழை வந்தது” என்று அவளின் பெருமையைக் கூறி, அவளை உன் தாயென நினைத்து வணங்கு என்றார். ராமரும் “சீதை,  முனிவர் சொல்லுவது முற்றிலும் உண்மை” என்றார். சீதை அனசூயையை வணங்கினாள்.

அனசூயை சீதையை ஆசிரமத்துக்குள் அழைத்துச் சென்று பல அறிவுரைகளைக் கூறினாள். அப்போது அவள் உன் திருமணம் எப்படி நடந்தது கேட்டாள். சீதையும் ராமர் வில்லை உடைத்து திருமணம் முதல் காட்டுக்கு வந்த முழுக் கதையையும் சொன்னாள்.  ஆர்வமாகக் கேட்ட அனசூயை சீதையை தன் மகளாகவே மனதில் நினைத்துப் பல அழகிய ஆடைகள், ஆபரணங்கள், மாலைகள், வாசனை பொருட்களை ஆசையுடன் கொடுத்தாள். ஆடை, அணிகலங்களைச் சூட்டி அழகு பார்த்தாள். சீதையும் அவளைத் தன் தாயாக நினைத்து வணங்கினாள். அனசூயை சீதையை அணைத்துக்கொண்டாள்.

அலங்கரிக்கப்பட்ட சீதையைப் பார்த்த ராமர் மகிழ்ந்து அன்று இரவு அவர்கள் ஆசிரமத்தில் தங்கினார்.


“சாமி, நீங்களே சொல்லுங்கள் அனசூயை தாயைப் போலப் பிராட்டியிடம் அன்பு செலுத்தினார். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே ! அதனால் நான் திருக்கோளூரை விட்டுப் போகிறேன்”

“செல்லப் பெண்ணே, நீ சொல்லுவதைக் கேட்டால் எனக்குப் பெரியாழ்வார் நினைவு தான் வருகிறது” என்றார் ராமானுஜர்

”பெரியாழ்வார் பற்றி சொல்லுங்கள் சாமி” என்று அந்த பெண் ஆர்வமாகக் கேட்க அதற்கு ராமானுஜர்

“ கண்ணனுக்குத் தாயாக இருப்பது  பெரியாழ்வாருக்குக் கைவந்த கலை.  குழந்தைக்குத் தாலாட்டு என்ன, சோறு ஊட்டுவது என்ன, சப்பாணி கொட்டச் செய்தல், முதுகில் அமர்த்தி விளையாடுவது, அப்பூச்சி, காது குத்தல், நீராட்டுதல் என்று எதையும் அவர் விட்டு வைக்கவில்லையே அவர் பாசுரங்களில்!”

“அருமை அருமை... நீங்கள் சொன்னால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது ஆனால் நான் கிளம்ப வேண்டும்”

“பெண்ணே அனசூயை என்றால் என்ன பொருள் தெரியுமா ?”

“அசூயை என்றால் பொறாமை. அனசூயை என்றால் பொறாமை அற்றவள்”

“அற்புதம்! பொறாமை மிகத் தீய குணம். ஆனால் உனக்கும் இருக்கிறது, எனக்கும் இருக்கிறதே!” என்றார் ராமானுஜர்

அந்தப் பெண் புரியாமல் விழிக்க ராமானுஜர் சிரித்துக்கொண்டு தொடர்ந்தார் “உனக்கு அனசூயை மாதிரி இருக்க முடியவில்லையே என்று அவளிடம் பொறாமை. எனக்கு உன்னை மாதிரி இருக்க முடியவில்லையே என்று உன்மீது எனக்குப் பொறாமை!”

அந்தப் பெண் சிரித்துக்கொண்டு மீண்டும்  “பக்தி பொறாமை நல்லதே ! நீங்கள் என்னைப் பார்த்து பொறாமையா ? நான் தான் உங்களைப் பார்த்துப் பொறாமைப் பட வேண்டும்... சரி சாமி நான் கிளம்புகிறேன் ” என்றாள் .

”உன் தந்தை போலச் சொல்லுகிறேன்.....” என்று ராமானுஜர் ஏதோ சொல்ல ஆரம்பிக்க அதற்கு அந்தப் பெண்

“தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!” என்றாள்

ராமானுஜர் அடுத்த கதை கேட்கத் தயாரானார். 

- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும்..

Comments