Skip to main content

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!



”பிள்ளாய்!, இந்தக் கதையில் கண்ணனா ? ராமரா  ?” என்றார் ராமானுஜர் 

“சாமி, இது தொண்டைமான் சக்கரவர்த்தியின் கதை” 

”அப்படி என்றால் அது திருமலை சம்பந்தப்பட்ட கதை!” என்று ராமானுஜர் சிஷ்யர்களைப் பார்த்தார். சிஷ்யர்கள் புன்னகையுடன் கதையைக் கேட்க ஆரம்பித்தார்கள். 

குட்டிப் பெண் கதையைத் தொடர்ந்தாள்.

தொண்டைமான் சக்கரவர்த்தி  திருமலை ஏழுமலையானின் தீவிர பக்தன். கோபுரம், மதில், மண்டபங்கள் எல்லாம் கட்டினான். அவற்றைத் தங்கமும், ரத்தினங்களும் கொண்டு அழகு படுத்தினான்.  பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்ட தொண்டைமானுக்குப் பெருமாள் நண்பனாகிவிட்டார்.  தினமும் பெருமாள் அவருடன் நேரில் பேசுவார்.

அடிக்கடி பெருமாளைப் பார்ப்பதற்கு அரண்மனையிலிருந்து கோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்தான்.  அதன் வழியே தினமும் பெருமாளுடன்  பேசிவிட்டு வருவான். .அப்படிப் பேசும் போது பெருமாள் இவருக்குப் பல நல்ல உபதேசங்கள் செய்வார்.

ஒரு முறை இந்த தொண்டைமானின் ராஜ்யத்தின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்தான்.  அப்போது தொண்டைமானுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சுரங்கப் பாதை வழியாகப் பெருமாளிடம் சென்று உதவி கேட்டார். மலையப்ப பெருமாள் உடனே தன் சங்கு சக்கரம் கொடுத்து இது உன்னைக் காப்பாற்றும் என்று சொல்லி அனுப்பினார். சங்கு சக்கரம் எதிரி நாட்டுப் படையை விரட்டியடித்தது. 


மன்னனுக்கு இன்னொரு பிரச்சனை வந்தது.  அவருடைய தேசத்தில் கூர்மன் என்ற வயதான அந்தணர் இருந்தார். அவருக்குக் கடைசிக் காலத்தைக் காசியில் கழிக்க விரும்பினார். ஆனால் அவர் காசிக்குச் செல்லும் முன் இறந்துவிட்டார். அவருக்குக் கிருஷ்ண சர்மா என்ற மகன்.. தன் தந்தை கடைசியாகக் காசிக்குப் போக முடியவில்லை, அதனால் அவருடைய அஸ்தியைக் காசிக்குச் சென்று கங்கையில் கரைக்க முடிவு விரும்பினார். ஆனால் அவருடைய மனைவி, குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டுச் செல்ல முடியாது. என்ன செய்வது என்று யோசித்தான்.

நம் அரசன் ரொம்ப நல்லவர், பக்திமான் நாட்டு மக்களை நன்கு பார்த்துக்கொள்பவர் அவரிடம் சென்று கேட்கலாம் என்று அரசனிடம் சென்று. நான் காசிக்குப் போகிறேன், என் மனைவி, குழந்தைகளை நான் திரும்ப வரும் வரையில் நீங்கள் தான் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

அரசன்  உடனே இரண்டு காவலாளிகளைக் கூப்பிட்டு “இவர் காசிக்குச் சென்று திரும்பும் வரை அவர் மனைவி, குழந்தைகளை ஜாக்கிரதையாக நம் அரண்மனையிலேயே பார்த்துக்கொள்ளுங்கள்” என்று கட்டளையிட்டான். 

கிருஷ்ண சர்மா நிம்மதியாகக் காசிக்குப் புறப்பட்டார்.

அரசர் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லியிருக்கிறார் என்று அந்த காவலாளிகள் அவர்களை அரண்மனையில் ஒரு அறையில் போட்டு வெளியே பூட்டு போட்டு மூடிவிட்டார்கள்.  ஆனால் காவலாளிகள் அவர்களுக்கு உணவு, உடை என்று எதுவும் தரவில்லை. உள்ளே கிருஷ்ண சர்மாவின் மனைவி, குழந்தைகள் பட்டினியால் வாடி, இறந்துவிட்டார்கள்.


காசியிலிருந்து கிருஷ்ண சர்மா பல மாதங்கள் கழித்துத் திரும்ப வந்து “அரசரே என் மனைவி, குழந்தைகளைப் பார்த்துக்கொண்டதற்கு மிக்க சந்தோஷம். அவர்களை நான் அழைத்துக்கொண்டு என் இல்லத்துக்குப் போகிறேன்” என்று சொன்ன போது தான் அரசனுக்கு ஞாபகமே வந்தது. உடனே அந்த அவர்கள் இருக்கும் அறைக்குச்  சென்று பார்த்தான். அங்கே அவன் கண்ட காட்சி திடுக்கிடச் செய்தது. அங்கே வெறும் எலும்புக் கூடாக இருந்தது. அரசனுக்கு ஒரே வருத்தமாய் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தான் என்று பெண் பிள்ளை கதையை நிறுத்தினாள்.

”ஏன் நிறுத்திவிட்டாய் பிள்ளாய்!.. என்ன ஆனது ?” என்று ராமானுஜர் ஆவலுடன் கேட்டார்.

அந்தணர் குடும்பத்தை அநியாயமாகக் கொன்று விட்டோமே என்று தவித்தான். அரசனாக இருந்துகொண்டு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டோமே என்று புலம்பினான். கிருஷ்ண சர்மாவிடம் வந்து “உன் மனைவி, குழந்தைகள் எல்லாம் நலமுடன் இருக்கிறார்கள்”

“எங்கே ?”  என்று கிருஷ்ண சர்மா கேட்க

“அவர்கள் திருவேங்கடம் சென்றிருக்கிறார்கள். இன்றோ, நாளையோ வந்துவிடுவார்கள். அதுவரையில் நீங்கள் இங்கேயே இருங்கள்” என்று சொல்லிவிட்டு அரசன் சுரங்கப் பாதை வழியாக ஓடித் திருவேங்கடவனிடம் சென்று

“நண்பா, ஒரு பெரிய தவறு செய்துவிட்டேன். ஒரு குடும்பம் இறப்பதற்கு நான் காரணமாகிவிட்டேன் என்று நடந்ததைக் கூறி, நீ தான் எனக்கு உதவி செய்ய வேண்டும்” என்று பெருமாள் காலில் விழுந்தார்

பெருமாள் ”கவலைப் படாதே! இதோ இங்கே இருக்கும் தீர்த்ததை எடுத்துச் சென்று அந்தப் பிணங்களின் மீது தெளி” என்றார் 



அரசனும் அந்தத் தீர்த்ததை எடுத்துக்கொண்டு ஓடி வந்து, இறந்தவர்களின் எலும்புக்கூடு மீது தெளித்தான். அவர்கள் எல்லோரும் உயிர் பிழைத்து எழுந்தார்கள் என்று பெண்பிள்ளை சொல்லி முடித்தாள்.

“ஆகா உன் வாக்கில் இந்தக் கதையைக் கேட்க ஆனந்தமாக இருக்கிறது.. நன்று சொன்னாய் பிள்ளாய்!” என்று ராமானுஜர் அவளுக்கு ஆசீர்வாதம் செய்தார்.

“தொண்டைமானுக்குக் கொடுத்த சங்கு சக்கரம் போர் முடிந்த பின் அரசன் திரும்பக் கொடுக்கவில்லை. அதனால் இப்போது ஒரு பிரச்சனை வந்திருக்கு சாமி”  என்றாள்.

“அப்படியா என்ன பிரச்சனை ?” என்றார் உடையவர் புன்னகையுடன்

“சங்கு சக்கரம் இல்லாத பெருமாள் திருமால் இல்லை என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள்”

 சிஷ்யர்களில் ஒருவர் ”நாங்கள் திருமலையிலிருந்து இங்கே வருகிறோம். இனி அந்தப் பிரச்சனை இருக்காது.”

“அப்படியா ? எப்படித் தீர்ந்தது ?”



“அங்கே ஸ்வாமி ராமானுஜர் பெருமாளுக்குச் சங்கு சக்கரத்தை மீண்டும் கொடுத்து, அதை மலையப்பன் ஏற்றுக்கொண்டு விட்டான்.  பிரச்சனையும் முடிவுக்கு வந்தது.!”  என்ற போது அந்தச் சின்னப் பெண்

 “அப்பனுக்கு சங்காழி அளித்த பெருமான் வாழி வாழி. அவரை ஒரு முறை சேவிக்க வேண்டும்!” என்று கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு

“சாமி நீங்களே சொல்லுங்கள், பெருமாளிடம் நேரடியாகப் பேசி தன் பத்தியால் பிணங்கள் கூட பிழைத்து எழுந்த தொண்டைமான் சக்கரவர்த்தி எங்கே ? நான் எங்கே ?  அதனால் நான் ஊரைவிட்டுக் கிளம்புகிறேன்.

“பிள்ளாய்! பெருமாளிடம் உள்ள பக்தியால் பிணம் கூட பிழைக்கும் என்று அழகாக  கூறினாய்!” என்றார் ராமானுஜர் 

“பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போலே!”

”நிறையக் கதை வைத்துள்ளாய் போல இருக்கு!”

குட்டிப் பெண் புன்சிரிப்புடன் அடுத்த கதையை சொல்ல ஆரம்பித்தாள்.

- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும்...

Comments

Post a Comment