தினமும் கொஞ்சம் தேசிகன் - 13
’என்னங்கடா இப்படியெல்லாம் பீதியை கிளப்புறீங்க’ என்ற சொல்லைக் கேட்டிருக்கிறோம். பீதி என்றால் பயம், ’அ பீதி’ என்றால் பயம் அற்ற என்று பொருள்.
ஸ்வாமி தேசிகன் ’அ பீதி ஸ்தவம்’ என்று அருளியிருக்கிறார். எப்போது ஏன் எழுதினார் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும் இருந்தாலும் சில வரிகளில் அதைக் கூறிவிட்டு மேலும் தொடர்கிறேன்.
திருவரங்கத்தில் நம் தேசிகன் நெடுங்காலம் எழுந்தருளியிருந்த சமயத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்து கோயிலுக்கு நாசம் விளைவித்தார்கள். நம்பெருமாளைப் பிள்ளை லோகாச்சாரியார் காப்பாற்ற, ஸ்வாமி தேசிகன் பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, சுதர்சன பட்டர் இரண்டு புதல்வர்களையும் ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் தேசிகன் காத்துக் கொடுத்தார்.
திருவரங்கத்திலிருந்து புறப்பட்ட ஸ்வாமி தேசிகன், திருநாராயணபுரத்தில் இருந்த போது அங்கே சத்யா காலத்தில் வாசம் செய்த போது, நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு அவர் அபீதிஸ்தவம் என்ற உயர்ந்த 29 ஸ்லோகங்களை அருளினார்.
திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்து நீங்கி, அச்சம் நீங்கி, நம்பெருமாளுக்கு மீண்டும் உற்சவங்கள் நடக்க வேண்டிப் பிராத்தித்த அபயமளிக்குமாறு செய்த ஸ்லோகங்கள். இன்றும் இந்த ஸ்லோகத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்களுக்கு எத்தகைய அச்சமும் நீங்கும் என்று ’பலஸ்ருதி’ ( பலன் ) கூறுவதுண்டு.
கட்டுரை இதைப் பற்றியதில்லை, அபீதிஸ்தவம் அருளிய போது ’தேசிகனின் ஹிருதயம்’ எப்படி இருந்திருக்கும் என்று தெரிந்துகொண்டு இந்த ஸ்லோகங்களைப் படித்தால் தான் அதன் முழுமையான பொருளை அனுபவிக்க முடியும்.
பக்கத்துவீட்டுப் பையன் லண்டனில் இருந்தால் அந்தப் பையன் எப்போது வர போகிறானோ அவனை எப்போது பார்க்கப் போகிறோமோ என்று மனம் ஏங்குவதில்லை. ஆனால் ’நம்’ பையன் லண்டனுக்குச் சென்றால் அவனை எப்போது பார்ப்போமோ என்று மனம் ஏங்கித் தவிக்கிறது.
இந்த ஏக்கத்துக்கும், தவிப்புக்கும் ‘நம்’ என்ற சம்பந்தம் தான் காரணம். அந்த ‘நம்’ சம்பந்தம் பெற்றால் அன்பும் தானாக ஒட்டிக்கொண்டு விடுகிறது. அந்த அன்பு சம்பந்தப்பட்ட பொருளின் மீது ஆர்வத்தையும் உருக்கத்தையும் உண்டு செய்கிறது.
பெருமாளை ’நம்’ பெருமாள் என்றும், பெருமான் என்பதை ’எம்’ பெருமான் என்று சம்பந்தத்துடன் கூப்பிடுவதால் அதில் அன்பு வந்துவிடுகிறது. இந்தச் சம்பந்தத்தால் ஆர்வம் மிகுந்து எப்படிப் பிள்ளையைப் பார்க்க அம்மா ஏங்குவாளோ அது போல ஆழ்வார்கள் ஏங்கினார்கள். பூதத்தாழ்வார் ’அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக’ என்று பக்தியுடன் இதைத் தான் பாடுகிறார். குலசேகர ஆழ்வார் ”திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளி கொள்ளும்
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டுஎன் கண்ணிணைக ளென்றுகொலோ களிக்கும் நாளே” என்று உருகுகிறார்
நம் என்ற சம்பந்தம், அதனால் ஏற்படும் அன்பு, அதனால் ஏற்படும் ஏக்கம், தவிப்பு தான் பக்தி. ( பரம ப்ரேம ரூபா என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்).
கீதையைப் படித்து பக்தி யோகம் முழுவதும் தெரிந்துகொள்வதற்குப் பதில் பக்தி = அன்பு என்று தெரிந்துகொண்டால் போதும்!. ஆழ்வார்கள் என்றால் ஆழ்ந்த பக்தி உடையவர்கள் என்று காலம் காலமாகச் சொல்லும் defintion. பக்திக்குப் பதில் அன்பு என்ற வார்த்தையை மாற்றினால் பெருமாளிடம் ஆழ்ந்த ‘அன்பு’ உடையவர்கள் ஆழ்வார்கள் என்று சுலபமாகப் புரிந்துகொள்ளலாம்.
நம்மாழ்வார் ”பத்துடை அடியவர்க்கு எளியவன்; பிறர்களுக்கு அரிய
வித்தகன்” என்கிறார். ( பத்துடை = பக்தியுடைய = அன்புடைய ) அன்பு இருந்தால் அவன் உங்களுக்குக் கட்டுப்பட்டு இருப்பான். .
பிள்ளைக்கு அம்மாவிடம் உள்ள பற்று அதிகமா அல்லது அம்மாவிற்கு பிள்ளையிடம் உள்ள பற்று அதிகமா என்றால் ‘அம்மாவிற்கு’ தான் என்று சொல்லிவிடலாம். ஆனால் பிள்ளைக்கு அம்மாவுக்கும் யாருக்கு அதிக அன்பு என்ற போட்டி வந்தால் அந்தப் பிள்ளைகள் ஆழ்வார்களும் தேசிகன் போன்ற ஆசாரியர்களாகவும் ஆகிறார்கள்.
பழைய புத்தகங்களில் ஆழ்வார்களைப் பற்றிக் குறிப்பிடும் போது ’மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள்’ என்று சொல்லைப் பார்க்கலாம்.
மதிநலம் என்றால் நல்ல அறிவை பெருமாள் கொடுத்தான் என்று சாதாரணக் கோனார் நோட்ஸ் கொண்டு இதைப் படிக்கக் கூடாது. (ஆழ்வார்களுக்கு நல்ல அறிவு முன்பு இல்லையா ? என்ற கேள்வி எழும்.). மதி என்றால் ஞானம், நலம் என்றால் பக்தி என்று இதைப் படித்தால் ஞானத்துடன் கூடிய பக்தியைப் பெற்ற ஆழ்வார்கள் என்று இதற்குப் பொருள். நலம்(பக்தி) இல்லாத ஞானத்துக்கு அவன் கிடைக்க மாட்டான். ஆனால் ஞானம் இல்லாத நலத்துக்கு(பக்திக்கு) அவன் கிடைப்பான் ததிபாண்டன், மாலாகாரன் குகன், சபரி என்று யாரை எடுத்தாலும் அவர்கள் அதிகம் படிக்கவில்லை என்றாலும் அவர்கள் மதிநலம் பெற்றவர்கள்.
யசோதைக்குச் சாஸ்திரங்கள் எல்லாம் தெரியாது, தயிர் கடையத்தான் தெரியும் கூடவே கண்ணன் மீது அன்பு, ஆதனால் தான் கண்ணன் அவள் அன்புக்குத் தானே கட்டுப்பட்டு இருந்தான்.
யசோதை கண்ணனை சிறு கயிற்றை வைத்து உரலுடன் கட்டினாள். பக்தியால் கட்டுப்பட்டு கட்டுண்டான் கண்ணன். இதைத் தான் மதுரகவிகள் கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று பாடினார். இந்தப் பத்துடைய அடியவருக்கு எளிய காட்சியைக் கண்ட நம்மாழ்வார் மோகித்து ஆறு மாதம் மயக்கத்தில் இருந்தார்.
மத்துறு கடை வெண்ணெய் கலவினில் உறவிடை அப்புண்டு
எத்திறம் உரலினோடு இனைந்து இருந்து ஏங்கிய எளிவே
இந்தப் பாசுரத்தை நம்மாழ்வார் எப்படி அனுபவித்தார் என்று கொஞ்சம் கற்பனை செய்து பார்க்கலாம்.
ஓர் அருமையான காலைப் பொழுது, அழகான கொண்டையுடன் அதில் பூக்கள் சூடிக்கொண்டு யசோதை பாடிக்கொண்டு ( அல்ல மூடில் ) கைவளை ஓசைப்படுத்த தயிர்கடைந்து கொண்டு இருக்கிறாள். கண்ணன் மெதுவாக அவள் பின்வந்து முதுகில் சாய்ந்து செல்லப் பிடிவாதத்துடன் கட்டிக்கொள்கிறான் . ‘ அம்மா ! பால் வேண்டும்’ என்று வீம்புக்கு அடம்பிடிக்க ஆரம்பிக்கிறான், யசோதை கண்ணனைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து, மடியில் போட்டு பால் கொடுத்துக்கொண்டே தயிரையும் கடைந்துகொண்டு இருக்கிறாள். அந்தச் சமயம் உள்ளே அடுப்பில் இருக்கும் பால் பொங்க தீஞ்சுபோன வாசனை வருகிறது. நம்மைப் போலவே அடுப்பில் பால் பொங்குகிறது’ பதறிக்கொண்டு ஓடுவதைப் போல் யசோதை கண்ணனைக் கீழே விட்டுவிட்டு அடுப்படிக்கு ஓடுகிறாள். தன்னை யசோதை திடுதிப்பென்றுகீழே இறக்கிவிட்ட கோபத்தில் கண்ணன் தயிர் குடத்தை உடைக்க அதிலிருந்து தயிர் கொட்டுகிறது, கூடவே நெய்குடத்தை உடைத்தால் என்ன என்று தோன்றுகிறது. அதுவும் உடைய தயிரும் நெய்யும் கலந்து பெருமாள் திருமஞ்சனக் கலவையாக அங்கே ஓடுகிறது. அதில் உருண்டு பிரண்டு அமர்க்களம் செய்துவிட்டு தயிர் காலுடன் கையில் கொஞ்சம் வெண்ணெய்யுடன் ஓட, பால் பொங்கியதை எல்லாம் சுத்தமாக துடைத்துவிட்டு, திரும்பி வந்த யசோதை பார்த்த போது அவளுக்கு எப்படி இருந்திருக்கும் ? அப்படியே திகைத்துப் போய் ‘படவா உன்னை விட்டானா பார்’ என்று அந்தத் தயிர் காற்சுவடுகளைப் பற்றியே கண்ணனைப் பிடிக்க அவன் பின்னால் ஓட, கண்ணனை அவளிடம் அகப்படாமல் வேகமாக இன்னும் இரண்டு தயிர் குடத்தை உருட்டிவிட்டு ஓட, கட்டிய கொண்ட கழன்று அதிலிருந்து பூக்கள் எல்லாம் கீழே விழ, வேர்த்து மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி ஒன்றும் செய்ய முடியாமல் யசோதை திகைத்து நிற்க, கண்ணனே அவளிடம் வந்து தானாக அகப்பட, அவனை இழுத்து உரலுடன் கட்டி முடிச்சு போட முடியாமல் அந்தக் கயிற்றின் நீளம் இரண்டு அங்குலம் குறைவாக இருக்கிறது. இன்னொரு கயிற்றை அதனுடன் சேர்த்துக் கட்டுகிறாள் அப்பவும் இரண்டு அங்குலம் குறைவாக இருக்கிறது! (அந்த இரண்டு அங்குலம் ஒன்று கர்மா, இன்னொரு ஞானம்). பிறகு யசோதைக்கு எப்படி கண்ணனைக் கட்டினால் ? சுத்தமான அன்புக்கு ( பக்திக்கு ) அகப்பட்டு ‘உரலினோடு இனைந்து இருந்து ஏங்கிய எளிவே’ அங்கே இருந்தான். கட்டப்பட்ட கண்ணன் முகத்தில் ஏக்கம் குடிகொண்டது. எதற்கு ஏங்கினான் ? யசோதை ஓடி வந்த போது, மூச்சுவாங்க, முகத்தில் வேர்வை சிந்த, முடிந்த கூந்தல் கழன்று, அதில் இருந்த பூக்கள் கீழே விழ என்னால் என் அம்மாவிற்கு இவ்வளவு கஷ்டம் வந்துவிட்டதே என்று கண்ணன் ஏங்கினான்.
என் பக்தனை ஓட வைத்துவிட்டேனே என்ற ஏக்கம் கண்ணன் முகத்தில். இந்தக் காட்சியை நேரில் கண்ட நம்மாழ்வார் மோகித்து ஆறு மாதம் கீழே கடந்ததில் ஆச்சரியம் இல்லையே!. யசோதை கட்டிய அதே தழும்புடன் இந்தக் காலத்திலும் இருப்பவர் திருவரங்கம் நம்பெருமாள்.
அந்த நம்பெருமாள் என்ற குழந்தைக்கு ஆபத்து வரும் போது, அதை ஒரு தாய் எப்படிப் பொறுத்துக்கொள்வாள் ? ஏங்கி ஏங்கி அழுது புலம்ப மாட்டாளா ? யாரிடம் புலம்புவாள் ? அந்த கண்ணனிடமே புலம்ப முடியும். ஸ்வாமி தேசிகன் தாய் போலப் புலம்பிப் பிராத்தித்த பாசுரங்கள் தான் அபீதிஸ்தவம்.
புரந்தரதாஸர் ”நிம்ம பாக்ய தொட்டதோ ( உன் பாக்கியம் பெரியதா ? ) நம்ம பாக்ய தொட்டதோ ( என் பாக்கியம் பெரியதா ? )” என்கிறார். அதாவது
எனக்குக் கவலை இருந்தால் உன்னிடம் சொல்லிக்கொள்ள முடியும். ஆனால் உனக்குக் கவலை என்றால் நீ யாரிடம் சொல்லிக்கொள்வாய் ? என்று ஏங்குகிறார்.
நம்மாழ்வார் ’கங்குலும் பகலும் கண் துயி லறியாள் கண்ணநீர் கைகளால் இறைக்கும்,‘ என்று அரங்கனை பார்த்துக் கண்ணீர்விடுவது போல் ஸ்வாமி தேசிகனும் ஏங்குகிறார்.
அபீதிஸ்டவத்தில் ஒரு ஸ்லோகத்தில் ஸ்வாமி தேசிகன் இப்படிக் கூறுகிறார் “ரங்கா ! எனது இளமைக் காலத்தை ஸ்ரீபாஷ்ய ரசத்தை ஆழ்ந்து அனுபவித்துக் கழித்தேன். இப்போது முதுமை வந்து தலை முழுவதும் நரைத்துவிட்டது. இனி இவ்வுலகில் அடியேன் வாழுமளவும் அடியேனுக்கு ஏற்ற ஒன்றை அருள வேண்டுகிறேன். திருவரங்கத்திலோ அல்லது வேறு திவ்ய தேசத்திலோ உன்னை அனுபவிக்காது செய்யும் எதிரிகள் இல்லாத இடத்திலே, ஒருவருக்கொருவர் அசூயை கொள்ளாது நன்மையைக் கோரும் ஸ்ரீ வைஷ்ணவ அடியார்கள் நடுவே வாழும்படி செய்தருள வேண்டும்” என்கிறார்.
750 வருடத்துக்கு முன் செய்த இந்தப் புலம்பல் இன்றைய ’குவாரண்டைன்’ காலத்திலும் அப்படியே பொருந்துவது வியப்பே!
- சுஜாதா தேசிகன்
15-10-2020
படம் நன்றி : ஸ்ரீ வினோத் ரங்கநாதன்.
அக்ரூரர், குசேலன், விதுரர், குகன், சபரி என்று யாரை எடுத்தாலும் அவர்கள் அதிகம் படிக்கவில்லை என்றாலும் அவர்கள் மதிநலம் பெற்றவர்கள்.
ReplyDeleteஅடியேன் மேலே உள்ளதில் ஒரு சந்தேகம்.
குசேலன் - கண்ணன் கூட 64 கலைகளைப் பயின்றவர்.
அக்ரூரர், விதுரர் - இவ்விருவர்கள் மஹா மந்த்ரிகள்.
இவர்கள் மூவரும் அதிக படித்தவர்கள் தான். இவர்களின் பக்தி, ஞானத்தைவிட அதிகம். அதனால் இவர்கள் கட்டுண்டார்கள், கண்ணனையும் கட்டினார்கள்.
இதற்கு விளக்கம் அளிக்க பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் கூறுவது சரி, மாற்றிவிட்டேன். நன்றி சுட்டிக் காட்டியதற்கு.
DeleteKannanai ennum idangalil ellam Kannai endru irukkiradhu. Bug or Feature?
ReplyDelete