Skip to main content

13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை

 13. இராமானுசன் அடிப் பூமன்னவே - துதிக்கப்பெறுகை

சடகோபன் திருவடிகளை விட்டுப் பிரியாமல் திருக்குருகூரில் நிரந்தர நித்திய வாசம் செய்துகொண்டு இருந்தார் நாதமுனிகள் என்று நேயர்களுக்குச் சிறிது நினைவுபடுத்திவிட்டு கதையில் மேலும் பயணிக்கலாம். 

சூரியன் மறைந்து எல்லாத் திக்கிலும் இருள் சூழ்ந்த ஓர் இரவு நாதமுனிகளுக்குக் கனவு ஒன்று வந்தது. முன் அத்தியாயங்களில் சந்தித்து பிறகு நாம் மறந்தே போன நமக்கும் மிகவும் பரிச்சயமான வீராணாராயண பெருமாள் தான் அவர்!

“நாதமுனிகளே! இவ்வளவு காலம் எம்மை பிரிந்து வாழ்வது உமக்குத் தகுமோ ? இந்தத் தமிழ் பிரபந்தங்கள் அனைத்தும் உம் இசையில் கேட்க விருப்பம் விரைவில் வீரநாராயணபுரம்  வந்து சேரும்!” என்றார். 

“அடியேனை ஆட்கொண்ட ஒப்பற்ற வீரநாராயணபுரத்து எம்பெருமானே!”  என்று நாதமுனிகள் கண்விழித்துப் பார்த்த போது எங்கும் நிசப்தமாக மெல்லிய காற்று வீசிக்கொண்டு இருந்த அந்த வேளையில் சந்திரன் மேகக் கடலில் மறைந்து, சூரியன் மெதுவே தலைகாட்ட,  அந்தக் காலை நாதமுனிகள் ஆழ்வாரையும், பொலிந்து நின்ற பிரானையும் வணங்கி நின்றார். 

கோயில் அர்ச்சகர் “நாதமுனிகளே நீர் மன்னார் சொல்படி வீரநாராயணபுரத்துக்கு செல்லும் ! அங்கே வைணவர்களுக்குத் தமிழ் பிரபந்தங்களைப்  பொருள் தெரியும்படி ஓதி ஆழ்ந்த கடல் சூழ்ந்த இந்நிலத்துள் கொண்டாடப்படும் சிறந்த வைணவர்களாக்கவும். உம்மிடம் இருக்கும் கலியின் லோக குரு என்று எல்லோரும் போற்றப்பட இருப்பவரான பவிஷ்தாசாரியரே தஞ்சம் என்று இரும்!” என்று தீர்த்த,  பிரசாதங்கள், மாலைகளை  அருளி விடைகொடுத்தார். 

நாதமுனிகள் நம்மாழ்வார் திருவடிகளையும், ஆதிப்பிரானையும் வணங்கி விடைபெற்றுக்கொண்டு அவ்வூரில் வசிக்கும் அடியார்களைத் திருவடி தொழுது பவிஷ்யதாசாரியார் விக்ரகத்தைத் தலை மீது தாங்கிக்கொண்டு வழித்துணைக்கு ஆழ்வார்களின் பாசுரங்களை அழைத்துக்கொண்டு திருக்கோளூர் நோக்கிப் புறப்பட்டார். 

மதுரகவிகள் அவதார ஸ்தலமான திருக்கோளூரில்பரங்குசதாசப் பிள்ளையிடம் நடந்த விஷயங்களைக் கூறி கண்ணி நுண் சிறுத்தாம்பு என்ற சாவியினால் பெற்ற பயனைக் கூறி அவரின் திருவடி தொழுது  வைத்தமாநிதி பெருமாளைப் பார்த்த மெய்மறந்து 

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம்
கண்ணன், எம்பெருமான் என்று என்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர், வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே

என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை இனிய இசையில் பாடி வைத்தமாநிதியை நோக்கிய போது, பராங்குச நாயகி தன் மகள் ஏன் தான் உண்ணும் சோறு, பருகும் நீர் தின்னும் வெற்றிலை அனைத்தும் கண்ணனே என்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. எம்பெருமான் பேரைச் சொல்லி அந்த மகள் போல நாதமுனிகளின் கண்களில் நீர் மல்க நின்றார். அச்சகர் நாதமுனிகளுக்குத் 

தீர்த்த பிரசாதங்களைக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்டு சுற்றியுள்ள(3) திவ்ய தேசங்களுக்குச் சென்று அவற்றின் பிரபாவத்தை வெளியிடுகிற ஆழ்வார் பாசுரங்களை நாதமுனிகள் இசையுடன் பாட ஒவ்வொரு திவ்யதேச எம்பெருமான்களும் பல ஆயிரம் வருடங்கள் கழித்து ஆழ்வார் பாசுரங்களால் துதிக்கப்பெற்றனர்.(1)

நாதமுனிகள் மெல்ல நடக்கும் அன்னங்கள் பரந்து விளையாடும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு வந்தார். அங்கே உயர்ந்த கோபுரத்தைத் தரிசித்த போது அவருக்கு பெரியாழ்வார் பரத்துவ நிர்ணயம் செய்த போது பாண்டியன் மன்னன் இவரைக் கொண்டாடி பரிசாகக் கொடுத்த பொற்கிழியைக் கொண்டு கட்டப்பட்ட கோபுரத்தை வணங்கினார். கோபுரத்தைச் சுற்றி கிளிகளும், குயில்களும் நட்பாகப் பறந்து செல்ல ஆண்டாளின் நாச்சியார் திருமொழி பாசுரம் அவர் நினைவுக்கு வந்தது. 

மென்னடை அன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பது ஓர் ஆசையினால் என்
பொரு கயற் கண்ணினை துஞ்சா
இன் அடிசிலொடு பால்–அமுது ஊட்டி
எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமைக் கொள்ளுவன் குயிலே
உலகு அளந்தான் வரக் கூவாய்

மெல்ல மென்மையாக நடக்கும் அன்னம் பரவலாக விளையாடும் வில்லிபுத்தூரில் உறைந்துள்ளவனைக் காணும் ஆசையினால் என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை. அக்கார அடிசல் ஊட்டி வளர்த்த என் கோலக் கிளியே உன்னோடு தோழமை ஆக்குகிறேன் குயிலே! உலகளந்தான் வரக் கூவுவாயாக என்று அங்கே பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்து, தன்னுடைய பேரனுக்கு ஆண்டாள் பாசுரத்தில் கூறிய ‘யமுனைத் துறைவன் என்ற திருநாமம் சூட்ட வேண்டும் என்று மனதில் நினைத்து ஆண்டாளைப் பிராத்தித்து, அருகில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்து, பிரசாதங்களைப் பெற்று,  திருமாலிருஞ்சோலைக்கு வந்த போது அவருக்கு பெரியாழ்வார் திருமொழி பாசுரமான 

பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்கம் எல்லாம்
ஆண்டு அங்கு நூற்றுவர்தம் பெண்டிர் மேல் வைத்த அப்பன் மலை
பாண் தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருகத்
தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ் சோலையதே  

பாண்டவர்களின் தேவியான பாஞ்சாலியின் துன்பத்தை எல்லாம் கௌரவர்களின் மனைவிமார்கள் அடையுமாறு செய்த எம்பெருமான் இருக்கும் மலை இதுவோ என்று மனம் குளிர்ந்து இசையுடன் சேவித்த போது அதை இரவல் வாங்கிக்கொண்டு வண்டுக்கூட்டங்கள் இசைபாடிக்கொண்டு மகிழ்ச்சியுடன் தேன் பருக சோலைகள் நிறைந்த நீர் வளம் பெரிய திருமாலிருஞ்சோலை முழுக்க ஓசைப்படுத்துக்கொண்டு சென்றன. அவற்றின் ஓசைகள் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுவது போல இருந்தது. 

நாதமுனிகள் அங்கிருந்து புறப்பட்டு திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டு உறையூர் வந்து சேர்ந்து அங்கே கமலவல்லி நாச்சியாரைச் சேவித்து திருமகள் நிரந்தரமாக உறையும் ஊர்! திருப்பாணாழ்வார் அவதரித்த புண்ணிய பூமி அன்றோ! பிராட்டியுடன் இருக்கும் அழகிய மணவாளனைப் பார்த்த போது 

கோழியும் கூடலும் கோயில் கொண்ட கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியும் தோளும் ஓர் நான்குடையர் பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமென்னில் மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒருவர் அழகியவா!

என்று திருமங்கை ஆழ்வார் பாசுரத்தைப் பாடினார். மலைக்கு ஒப்பான வலிமையும் அழகும் மிக்க தோள்கள் உடைய இவருடைய மேனியோ கரிய பெருங்கடல் போன்று இருக்கிறது, கையில் சக்கரமும் சங்கும் ஏந்தி அச்சோ இவர் ஒருவரை போல பேரழகன் உண்டோ! என்று வியந்து சேவித்து,  தீர்த்தம் பிரசாதங்களுடன் காவிரியை அரங்கமாகக் கொண்டு,  நல்லார்கள் வாழும் மதிள் சூழ்ந்த திருவரங்கம் உள்ளே 

குடதிசை முடியை வைத்துக்  குணதிசை பாதம் நீட்டி, 
வடதிசை பின்பு காட்டித்  தென்திசை இலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு,
உடல்எனக்கு உருகுமாலோ  என்செய்கேன் உலகத்தீரே!

என்ற தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாசுரத்தைச் சேவித்துக்கொண்டே உள்ளே சென்றார்.  கடல்போன்று நிறம் வாய்ந்த என் தலைவன் மேலைத்திக்கில் திருமுடியை வைத்து, கீழைத்திக்கிலே திருவடிகளை நீட்டி, வடதிசையில் உள்ளவர்களுக்கு தன் பின் அழகைக்காட்டி தென் திசையில் உள்ள இலங்கையை நோக்கிக் கொண்டு அரவணையில் கண் வளர்ந்து அருளுவதைப் பார்த்து என் உடல் உருகுகிறது ! உலக மக்களே இந்த வெண்ணெய்யை உண்ட இவன் என் உள்ளம் கவர்ந்தவனாய் என் அமுதம் போன்ற அரங்கனைக் கண்டு மகிழ்ந்த கண்கள் வேறு ஒன்றைக் காணுமோ ? என்று உள்ளம் உருகி பாண் பெருமாள் போலச் சேவித்த போது இசையில் மயங்கும் நம்பெருமாள் அவருக்கு பரிவட்டம் முதலிய பிரசாதங்களைக் கொடுத்து வழியனுப்பிவைத்தார்.

நாதமுனிகள் தஞ்சை மாமணிக்கோயிலில்  பூதத்தாழ்வார் பாடிய பாசுரத்தை மங்களாசாசனம் செய்தார். 

தமருள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்
தமருள்ளுந் தண்பொருப்பு வேலை - தமருள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை யென்பரே
ஏவல்ல எந்தைக்கு இடம்.

மனமே! தஞ்சை மாமணிக்கோயில், சிறந்த திருவரங்கம், திருத்தண்கால், அன்பர்கள் தம் கதியாய் நினைக்கின்ற திருவேங்கடம், திருப்பாற்கடல், திருக்கடல்மல்லை, மதிள்களால் சிறப்புற்ற திருக்குடந்தை ஆகிய திருப்பதிகளில் எம்பெருமான் இருப்பிடங்கள் என்று ஆழ்வார் கூறுவது எவ்வளவு உண்மை!. ஆழ்வார் பாடிய எல்லா திவ்ய தேசத்து எம்பிரான்களையும் பெருமை மிக்க இத் தஞ்சை மாமணிக்கோயில் எம்பெருமானாக எனக்குக் காட்சி அளிக்கிறார் என்று கைகூப்பி நன்கு வணங்கி அப்பெருமானின் மார்பில் தாங்கிய திருமகளையும், கௌஸ்துப மணியையும் போற்றி மங்களாசாசனம் செய்துவிட்டு திருக்குடந்தைக்குப் புறப்பட்டார். 

உள்ளே நுழைந்த போது  ‘ஆராவமுதே!’ என்ற பாசுரத்தால் அடியேனுக்கும் பெரும் புதையலான நாலாயிரமும் கிடைத்தது என்று பெருமாள் கண்ணீருடன் ’ஆராவமுதே!’ என்று பாடியபோது  திருமழிசைபிரான் பெருமாளைப் பார்த்து ’எழுந்திருந்து பேசு’ என்று நம்மாழ்வார் இவருக்குக் கூறிய வைபவம் நினைவுக்கு வர பெருமாளைப் பார்த்து 

நடந்த கால்கள் நொந்தவோ நடுங்க ஞாலம் ஏனமாய்
இடந்த மெய் குலுங்கவோ விலங்கு மால்வரைச்சுரம்
கடந்த கால் பரந்த காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே

இராமாவதாரத்தில் சீதையைத் தேடி அலைந்து, திருவிக்கிரமனாய் உலகளந்த உன் திருவடிகள் வலிக்கிறதா ? பூமியை மீட்கப் பன்றி அவதாரமெடுத்த உன் திருமேனி சிரமப்பட்டதா ? மலைகளையும் நிலங்களையும் தாண்டிப் பாய்ந்து பொங்கி வருகிற காவிரியாற்றின் கரையில் நீ கிடந்த திருக்கோலத்திலிருந்து தலையைச் சற்றே உயர்த்தி என்னுடன் பேசுவாயாக என்று திருமழிசைப்பிரான் கேட்டுக்கொண்ட போது  நீ எழுந்துகொண்டாய் ! என்று நினைத்த போது அக்காட்சி அவர் மனதில் தோன்ற, நாதமுனிகள் ஆராவமுதாழ்வானை  நன்கு தரிசித்துவிட்டு, வளமான பயிர்கள் விளையும் வயல்கள் சூழ்ந்த திருவரங்கனைத் துயிலெழுப்பும் பாடல்களைப் பாடிய பெருமை மிக்க தொண்டரடிப்பொடியாழ்வார் அவதரித்த திருமண்டங்குடியை சேவித்துவிட்டு,  திருமங்கை ஆழ்வார் அவதரித்த இடமான திருக்குரையலூர், சுற்றியுள்ள  திருவாலிதிருநகரிக்கு சென்று அரசமரத்து அடியில் பெருமாளிடம் எட்டெழுத்து மந்திரத்தைத் திருவடியைக் கடித்துப் பெற்ற கலியனை நினைத்து உருகி,  குலசேகர ஆழ்வார் பாசுரமான 

ஆலின் இலைப் பாலகனாய் அன்று உலகம் உண்டவனே
வாலியைக் கொன்று அரசு  இளைய வானரத்துக்கு அளித்தவனே
காலின் மணி கரை அலைக்கும்  கணபுரத்து என் கருமணியே
ஆலி நகர்க்கு அதிபதியே  அயோத்திமனே தாலேலோ 

என்று எம்பெருமானைத் தாலாட்டிவிட்டு அருகில் உள்ள திவ்ய தேசங்களுக்குச் சென்று ஆழ்வார் பாடல் கொண்டு மங்களாசாசனம் செய்து, தீர்த்த பிரசாதங்களைப் பெற்றுக்கொண்டு  நீண்ட நாள் கழித்து வரும் தலைவனுக்குக் காத்துக்கொண்டு இருக்கும் தலைவி போலக்  காத்துக்கொண்டு இருக்கும் மன்னாரை நோக்கி வேகமாகச் சென்றார் நாதமுனிகள். 

நீண்ட காலம் கழித்து நாதமுனிகளைப் பார்த்த வீர நாராயணச் சதுர்வேத மங்கல ஊர் மக்கள் அவரை வரவேற்று மகிழ்ந்தார்கள். நாதமுனிகள் அகலமாக விரிந்து இருக்கும் வீரநாராயண புரத்து ஏரியை வணங்கினார். இங்கே  சில  யாத்திரிகர்களைக் கண்டு அவர்கள் செப்பிய அமுதமான பாசுரங்களைத் தேடிச் சென்று கிடைத்த அனுபவங்கள் அவர் மனதில் ஓடியது. ஏரியை வணங்கி அவ்வூரில் வசிக்கும் அடியார்களின் திருவடி தொழுது பக்தியுடன் மன்னனாரது பாதங்களை வணங்கி நின்றார். 

”நாதமுனிகளே எல்லோருடைய பாபக் கட்டுகளையெல்லாம் அறுத்து,  உயர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய பாசுரங்களை கற்று வந்த கதையை எதையும் விட்டுவிடாமல் கூறும்!” என்று மன்னார் ஆவலாக நாதமுனிகளைக் கேட்டார். 

“மன்னாரே உம் சந்நிதியில் ஒலித்த ஆராவமுதே என்ற பாசுரங்களைத் தேடிச் சென்ற போது, நம்மாழ்வாரே எமக்கு உம் அருளால் கொடுத்தார். நம்மாழ்வாரையும், கலியைப் போக்க வல்ல ஆசாரியரையும், உயர்ந்த ஆழ்வார் பாசுரங்களையும் எமக்குக்  காட்டிக்கொடுத்த ’காட்டும் மன்னராவாய்! அன்பாவாய் ! ஆரமுதமாவாய்! அடியேனுக்கின்பாவாய் எல்லாமும் நீயாவாய்” என்று நாதமுனிகள் கீழே விழுந்து சேவித்து தம் சென்று வந்த விபரங்களையும், தாம் கொண்டு வந்த ஆழ்வார்கள் அருளிச் செயல்கள், யோக சாஸ்திரங்கள், மற்றும் பவிஷ்யதாசாரியார் என்ற மூன்று சொத்துக்களையும் பற்றி விரிவாகக் கூறி “மன்னாரே ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் மீண்டும் மறைந்து போகாமல் இருக்க அருள் புரிய வேண்டும் அதற்கு ஏதாவது ஓர் உபாயம் கூறும்” என்று வேண்டி நின்றார். 

“முனிகளே! இனி நீர் இயலும் இசையுமாக்கி(2) உலகில் இந்தத் தமிழ் அமுதத்தை எல்லோருக்கும் பிரசாதிப்பீர், இது எமது நியமனம்” என்று கூற நாதமுனிகள் “உமது திருவுள்ளப்படியே ஆகட்டும்!” என்று தீர்த்த பிரசதங்களை பெற்றுக்கொண்டு சிறந்த தமிழ் ஞானமும், இசை ஞானமும் படைத்த தம்முடைய சகோதரி குமாரர்களான  மேலையகத்து ஆழ்வானையும்,  கீழையகத்து ஆழ்வானையும்  அன்போடு அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு திருவழுதி வளநாட்டில் உள்ள மாறனாகிய திருக்குருகூர் சடகோபன் தமக்கு ஆழ்வார்கள் அருளிய தமிழ் பிரபந்தங்களையும், திராவிட வேதம் என்று போற்றப்படுகின்ற திருவாய்மொழியையும் அருளிச் செய்த வைபவத்தை கூறி “இவை தெய்வத் தமிழ் மாலைகள். இவற்றை இனிய இசையில் சேர்த்து தேவகானமாகக் கலியின் கொடுமையாலே துன்புற்று வருந்தும் உலகில் பரவச் செய்திட வேண்டும்” என்றார். 

நாதமுனிகளின் சொல் கேட்ட இருவரும் நாதமுனிகளை வணங்கி அவருடைய திருவருளை எண்ணி “உத்தமோத்தமரே! வேறு யாருக்கு கிடைக்காத பாக்கியம் எங்களுக்கு கிடைத்திருக்கிறது!” என்று வணங்கி முறைப்படி கற்கத் தயாரானார்கள். 

அவர்கள் கற்றுக்கொள்ளும் போது “பொலிக பொலிக!” என்ற பாசுரம் வந்த போது நாதமுனிகள் நம்மாழ்வாரிடம் கேட்ட அதே கேள்வியை அவருடைய மருமக்கள் நாதமுனிகளிடம் “இதன் அர்த்தம் யாது ?” என்று கேட்டார்கள். 

பயணம் தொடரும்... 
- சுஜாதா தேசிகன்
18-10-2020 

-----------------------------------------------------------------------------

(1) துதிக்கப்பெறுகை - மங்களாசாசனம் 

(2) நாதமுனிகள் வைபவ ப்ரகாசிகை நூலிலிருந்து சில குறிப்புகள். 
இயற்பா - சொல்ல வேண்டிய செய்தியை இயல்பாகவும் கேட்போர் புரிதலில் எளிமையும் வேண்டி சொற்றொடரை இயல்பாக இயம்பிச் சொல்லும் செய்யுளை இயற்பா அல்லது இயற்றமிழ் என்றும் கூறுவர். 

திருக்கண்டேன்; பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்; புரிசங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று

என்ற பேயாழ்வார் பாசுரம் அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சொல்வன்மையை அமைத்துப் பாடியுள்ளார். 

இசைத்தமிழ் - இசையின் அடிப்படையில் அமைந்த பாடல்கள். பொதுவாக மக்கள் பேசும் மொழிகளில் இசையும்(சுரம்) ஒலியும்(தாளம்) பெற்று அமைந்தவை. அவை ஒன்றோடொன்று இணையும் போது ஆசையாகி(ஓசை) அமைகின்றன. மதுரகவிகள் பாவின் இன்னிசை பாடித்திரிவனே என்று கூறுகிறார். மாமுனிகள் மாறன் சொல் பண்ணில் இனிதான தமிழ்ப்பா என்கிறார். நம்மாழ்வார் தன்னை ’தமிழர் இசைகாரர்’ என்றும் ’இசை கூட்டிவண் சடகோபன்’ என்று பாசுரங்கள் திருவாய்மொழி இசைத்தமிழ் என்பதைக் காட்டுகிறது. 

பெரியாழ்வார் யானையின் மணிகளைத் தாளமாகக் கொண்டு நட்டபாடை ( நாட்டை ) பண்ணில் பாடிய முறையிலே இதனை இசைக்க வேண்டும் என்பது நாதமுனிகளின் திருவுள்ளம். 

உதாரணமாக ஸ்ரீ ஸ்ரீராமபாரதி பல்லாண்டு பாடியதை நேயர்கள் கேட்க சிபாரிசு செய்கிறேன். 



நாடகத்தமிழ் - அரையர் சேவையில் செய்யப்படுகின்ற செயல்கள் யாவும் நாடக உணர்வுகளை வெளிப்படுத்துபவையாக அமைத்துள்ளது. முத்திரை காட்டுவது கால்களால் ஜதி செய்வது, முக பாவம் அங்க அசைவு ஆகியவற்றால் நாட்டிய சாஸ்திரம் கூறும் நுட்பமான அபிநய வகைகள் அரையர் சேவையில் காணமுடிகிறது. திருமங்கை ஆழ்வார் ‘செஞ்சொலால் மொழிந்த மாலை 

கொண்டு இவை பாடி ஆடக் கூடுவர்” என்று கூறுவதன் பொருட்டு இது நாடகத் தமிழாகவும் இருக்கிறது என்பதை அறியலாம். 

இவை அனைத்தும் வகுத்து, தானே செயல்படுத்திய பெருமை ஸ்ரீமந் நாதமுனிகளையே சாரும். நாதமுனிகளின் இச்செயலுக்கு ஆதாரமாக அமைந்தவை திவ்ய பிரபந்த பாசுரங்களே ஆகும். 

(3) பொதுவாக ஒரு திவ்ய தேசத்தில் மூன்று இரவுகள் இருக்க வேண்டும் என்று கூறுவர். நாதமுனிகளும் இவ்வொரு திவ்ய தேசங்களிலும் அப்படி இருந்திருப்பார் என்றே கூற வேண்டும். அவர் சென்ற திவ்ய தேசங்கள் இவை இருக்கலாம் என்று அதன் பட்டியலை இங்கே கொடுத்திருக்கிறேன். 

பாண்டிய நாட்டு திவ்ய தேசங்கள்: 

அழகிய நம்பிராயர் திருக்கோயில் திருக்குறுங்குடி திருநெல்வேலி 

தோத்தாத்ரிநாதன் திருக்கோயில் நாங்குனேரி திருநெல்வேலி 

வைகுண்டநாதர் திருக்கோயில் ஸ்ரீ வைகுண்டம் தூத்துக்குடி 

விஜயாஸனர் திருக்கோயில் நத்தம் தூத்துக்குடி 

பூமிபாலகர் திருக்கோயில் திருப்புளியங்குடி தூத்துக்குடி 

ஸ்ரீ நிவாசன் திருக்கோயில் தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி 

அரவிந்தலோசனர் திருக்கோயில் தொலைவிலிமங்கலம் தூத்துக்குடி 

வேங்கட வாணன் திருக்கோயில் பெருங்குளம் தூத்துக்குடி 

வைத்தமாநிதி பெருமாள் திருக்கோயில் திருக்கோளூர் தூத்துக்குடி 

மகரநெடுங் குழைக்காதர் திருக்கோயில் தென்திருப்பேரை தூத்துக்குடி 

ஆதிநாதன் திருக்கோயில் ஆழ்வார் திருநகரி தூத்துக்குடி 

ஆண்டாள் திருக்கோயில் ஸ்ரீ வில்லிபுத்தூர் விருதுநகர் 

நின்ற நாராயணப்பெருமாள் திருக்கோயில் திருத்தங்கல்விருதுநகர் 

கூடலழகர் திருக்கோயில் மதுரை மதுரை 

கள்ளழகர் திருக்கோயில் அழகர்கோவில் மதுரை 

காளமேகப்பெருமாள் திருக்கோயில் திருமோகூர் மதுரை 

சவுமியநாராயணர் திருக்கோயில் திருக்கோஷ்டியூர் சிவகங்கை 

ஆதிஜெகநாதர் திருக்கோயில் திருப்புல்லாணி ராமநாதபுரம் 

சத்திய மூர்த்தி பெருமாள் திருக்கோயில் திருமயம் புதுக்கோட்டை 

சோழ நாட்டு திவ்ய தேசங்கள்

ரங்கநாத பெருமாள் திருக்கோயில் ஸ்ரீரங்கம் திருச்சி 

அழகிய மணவாளர் திருக்கோயில் உறையூர் திருச்சி 

உத்தமர் திருக்கோயில் உத்தமர் கோவில் திருச்சி 

புண்டரீகாட்சன் திருக்கோயில் திருவெள்ளறை திருச்சி 

சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில் அன்பில் திருச்சி 

அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி தஞ்சாவூர் 

ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில் கண்டியூர் தஞ்சாவூர் 

வையம்காத்த பெருமாள் திருக்கோயில் திருக்கூடலூர் தஞ்சாவூர் 

கஜேந்திர வரதன் திருக்கோயில் கபிஸ்தலம் தஞ்சாவூர் 

வல்வில்ராமன் திருக்கோயில் திருப்புள்ளம்பூதங்குடி தஞ்சாவூர் 

ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில் ஆதனூர் தஞ்சாவூர் 

சாரங்கபாணி திருக்கோயில் கும்பகோணம் தஞ்சாவூர் 

ஒப்பிலியப்பன் திருக்கோயில் திருநாகேஸ்வரம் தஞ்சாவூர் 

திருநறையூர் நம்பி திருக்கோயில் நாச்சியார்கோயில் தஞ்சாவூர் 

சாரநாதப்பெருமாள் திருக்கோயில் திருச்சேறை தஞ்சாவூர் 

பக்தவத்சல பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணமங்கை திருவாரூர் 

சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணபுரம் நாகப்பட்டினம் 

லோகநாதப்பெருமாள் திருக்கோயில் திருக்கண்ணங்குடி நாகப்பட்டினம் 

சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில் நாகப்பட்டினம் நாகப்பட்டினம் 

நீலமேகப்பெருமாள் (மாமணி) திருக்கோயில் தஞ்சாவூர் தஞ்சாவூர் 

ஜெகநாதன் திருக்கோயில் நாதன்கோயில் தஞ்சாவூர் 

கோலவில்லி ராமர் திருக்கோயில் திருவெள்ளியங்குடி தஞ்சாவூர் 

தேவாதிராஜன் திருக்கோயில் தேரழுந்தூர் நாகப்பட்டினம் 

கிருபாசமுத்திரப்பெருமாள் திருக்கோயில் திருச்சிறுபுலியூர் திருவாரூர் 

நாண்மதியப்பெருமாள் திருக்கோயில் தலச்சங்காடு நாகப்பட்டினம் 

பரிமள ரங்கநாதர் திருக்கோயில் திருஇந்தளூர் நாகப்பட்டினம் 

கோபாலகிருஷ்ணன் திருக்கோயில் காவளம்பாடி நாகப்பட்டினம் 

திரிவிக்கிரமன் திருக்கோயில் சீர்காழி நாகப்பட்டினம் 

குடமாடு கூத்தன் திருக்கோயில் திருநாங்கூர் நாகப்பட்டினம் 

புருஷோத்தமர் திருக்கோயில் திருவண்புருசோத்தமம் நாகப்பட்டினம் 

பேரருளாளன் திருக்கோயில் செம்பொன்செய்கோயில் நாகப்பட்டினம் 

பத்ரிநாராயணர் திருக்கோயில் திருமணிமாடக்கோயில் நாகப்பட்டினம் 

வைகுண்டநாதர் திருக்கோயில் வைகுண்ட விண்ணகரம் நாகப்பட்டினம் 

அழகியசிங்கர் திருக்கோயில் திருவாலி நாகப்பட்டினம் 

வேதராஜன் திருக்கோயில் திருநகரி நாகப்பட்டினம் 

தெய்வநாயகர் திருக்கோயில் திருத்தேவனார்த்தொகை நாகப்பட்டினம் 

செங்கண்மால் திருக்கோயில் திருத்தெற்றியம்பலம் நாகப்பட்டினம் 

வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருமணிக்கூடம் நாகப்பட்டினம் 

அண்ணன் பெருமாள் திருக்கோயில் திருவெள்ளக்குளம் நாகப்பட்டினம் 

தாமரையாள் கேள்வன் திருக்கோயில் பார்த்தன் பள்ளி நாகப்பட்டினம் 

கோவிந்தராஜப்பெருமாள் திருக்கோயில் சிதம்பரம் கடலூர் 


Comments

  1. Neat narration Swamy. Bhavishyathaachcharyar's Avataram at Sri Perumboodur is eagerly awaited. Our Sri Vaishnava Guru Paramparai is a class of its own, nowhere found in other religions. That's because Visishtaadvaidam philosophy and Sri Vaishnavism theology are inherently robust thanks to His unlimited Grace. Daasan Adiyen Venkat Desikan

    ReplyDelete
  2. இன்றுதான் தடங்கலின்றி படிக்க முடிந்தது. உங்கள் பதிவை 4 வரிக்கு ஒருமுறை மேலேபோய் திரும்பவும் வாசிக்கும் பழக்கம் எனக்கு. அற்புதத்தை இழக்க விரும்பவில்லை.

    என் சிறுவயது (பள்ளிப்பருவம்) ஸ்ரீரங்கத்தில் கழித்தும் இதெல்லாம் பாடம் செய்யும் அனுபவம் கிட்டவில்லை.
    பிறகு 3 மாமாங்க காலம் தமிழ்நாட்டுக்கு வெளியே, வயிற்றுப்பிழைப்புக்குப் போனதில் எல்லாம் மறந்தேன். குழந்தைகளையும் நம் வைணவத்தின் சிறப்பை சரியாக சொல்லி வளர்க்கவில்லை. ஏதோ புண்ணியம் இந்த வயதில் உங்கள் பதிவுகளை படிக்கும் வாய்ப்பும் அதிர்ஷ்டமும் கிடைத்தது பாக்கியம்.

    நாதமுனிகள் திருவடிகளே சரணம். அரையர் பல்லாண்டு அற்புதம். கோயில்களின் லிஸ்ட் படித்ததே பேரின்பம். குடும்பத்தினர் எல்லோரும் அனுபவிக்கிறோம். நன்றி! தாசன்.

    ReplyDelete
  3. "The greatest service to TAMIZH >
    மன்னாரே ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் மீண்டும் மறைந்து போகாமல் இருக்க அருள் புரிய வேண்டும் அதற்கு ஏதாவது ஓர் உபாயம் கூறும்” என்று வேண்டி நின்றார்." >>முனிகளே! இனி நீர் இயலும் இசையுமாக்கி(2) உலகில் இந்தத் தமிழ் அமுதத்தை எல்லோருக்கும் பிரசாதிப்பீர், இது எமது நியமனம்” என்று கூற நாதமுனிகள் “உமது திருவுள்ளப்படியே ஆகட்டும்!” ,;
    To humanity, in particular to Sree Vaishnavism. the medium of conveyance to reach the masses got energized and promoted. AND, till date all are on though in a restricted/ modified manner keeping with time.
    The opening up of Tamizh learning in a big way by Embperumanar ,later, caused a new wave in the spread of Taimzh1 But , the seed was sown here by Swami Natha Muni. the finder and perpetuator. of ' lost and found' treasure of Dravida Veda!
    { A comparative study of this medium spread as against those prevailed, if be it so , should be interesting from the angle of novelty as of then}

    ReplyDelete

Post a Comment