ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்போர் யார் ?
’நரசிம்ம மேத்தா’ என்றால் உடனே யார் என்று நமக்கு சொல்லத் தெரியாது.
ஒவ்வொரு காந்தி ஜெயந்தி அன்றும் ‘வைஷ்ணவ ஜனதோ’ என்று நாம் கேட்கும் பாடலை இவர் தான் இயற்றினார்.
தமிழ் நாட்டு மக்களுக்கு இவரைப் பற்றி அதிகம் தெரியாது. எனக்குத் தெரிந்து ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் மட்டும் தான் இவரைப் பற்றி உபன்யாசம் செய்துள்ளார். அதை முழுவதும் கேட்டிருக்கிறேன். பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்.
ஸ்ரீவைஷ்ணவன் என்பதற்கு அடையாளங்கள் இருக்கிறது. திருமண், துளசி மாலை... இது எல்லாம் புறச் சின்னம். வேஷ பூஷணத்தால் மட்டுமே ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிவிட முடியாது. சில இலட்சணங்கள் இருக்கிறது. அதை நடைமுறையில் கடைப் பிடிக்க வேண்டும்.
கூரத்தாழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல வெயில், பசி. ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்று தேடும்போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்பட , அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாத கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவத் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.
இன்னொரு சம்பவம்:
சைதன்யர் ஒரு யாத்திரை சென்றபோது வழியில் ஒருவன் கீதை படித்துக்கொண்டு இருந்தான். சற்று தூரத்தில் மற்றொருவன் கீதையை கேட்டுக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதுகொண்டு இருந்தான். சைதன்யர் அழுதுகொண்டு இருந்தவனிடம் சென்று, “கீதை உனக்குப் புரிகிறதா? ஏன் இப்படி அழுகிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், ”எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை. அவன் படிப்பது என்ன என்று கூடத் தெரியாது,” என்றான். “பின் ஏன் அழுகிறாய்?” என்று சைதன்யர் கேட்டார். அதற்கு அவன் ”அர்ஜுனனின் தேர் தெரிகிறது, அதன் முன்னால் கிருஷ்ணர் தெரிகிறார். அவர்கள் ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்கள்; அவர்களைக் கண்ட சந்தோஷத்தில் அழுகிறேன்,” என்று கூறினான். உண்மையான பக்தி வார்த்தை ஜாலங்களிலும் புறச் சின்னங்களிலும் வருவதில்லை. உணர்வுகளில் வரும்போதே பலவற்றை உணரலாம்.
ஸ்ரீவைஷ்ணவ ஜனதோ என்ற பாடல் ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் குணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுகிறது - தருமர், குசேலர், பரதன், ஸ்ரீராமானுஜர், கூரத்தழ்வான், ஸ்வாமி தேசிகன், மணவாள மாமுனிகள், கபீர்தாசர், ஜெயதேவர், நாமதேவர், தியாகராஜர் ... இப்படி நமக்குத் தெரிந்த ஆசாரியர்களும், கன்னட, மஹாராஷ்டர பக்தர்கள் எல்லோரையும் இந்தப் பாடலுக்குள் அடக்கிவிடலாம் !
நாமக்கல் கவிஞர் தமிழில் அருமையாக மொழிபெயர்த்துள்ளார்
பல்லவி
வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின்
வகுப்பேன் அதனை கேட்பீரே ( வைஷ்ணவன் )
சரணங்கள்:
பிறருடையத் துன்பம் தனதென எண்ணும்
பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;
உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான்
உண்மை வைஷ்ணவன் அவனாகும்;
உறவென மனிதர்கள் உலகுள யாரையும்
வணங்குபவன் உடல்மனம் சொல்இவற்றில்
அறமெனத் தூய்மை காப்பவன் வைஷ்ணவன்;
அவனை பெற்றவள் அருந்தவத்தாள்
விருப்பும் வெறுப்பும் விலக்கிய நடுநிலை
விளங்கி ஆசைகள் விட்டவனாய்
ஒருப்புடன் அன்னிய மாதரைத் தாயென
உணர்வான் வைஷ்ணவன்; தன் நாவால்
உரைப்பதிற் பொய்யிலன்; ஒருபோ தும்அவன்
ஊரார் உடைமையைத் தொடமாட்டான்;
வரைப்புள குணமிவை வகிப்பவன் எவனோ
அவனே உண்மை வைஷ்ணவனாம்.
மாயையும் மோகமும் அணுகா தவனாய்
மனத்தினில் திடமுள வைராக்கியன்;
நாயக னாகிய ஸ்ரீரா மன்திரு
நாமம் கேட்டதும் மெய்ம்மறந்து
போய், அதில் பரவசம் அடைகின்ற அவனுடைப்
பொன்னுடல், புண்ணிய தீர்த்தங்கள்
ஆயன யாவையும் அடங்கிய க்ஷேத்திரம்
ஆகும்; அவனே வைஷ்ணவனாம்.
கபடமும் லோபமும் இல்லா தவனாய்க்
காம க்ரோதம் களைந்தவனாய்,
தபசுடை அவனே வைஷ்ணவன்; அவனைத்
தரிசிப் பவரின் சந்ததிகள்
சுபமடைவார்கள்; எழுபத் தோராம்
தலைமுறைவரையில் சுகமுறுவர்;
அபமறப் புனிதம் அடைகுவர்; பிறப்பெனும்
அலைகடல் நீந்திக் கரைசேர்வார்.
சுலபமாகப் புரிய கீழே :
எவன் ஒருவன் பிறர் துயரங்களை உணர்வானோ,
பிறர் கஷ்டங்களைக் களைந்து உதவுவானோ,
அகத்தில் அகந்தைக்கு இடம் கொடுக்கமாட்டானோ
அவனே உண்மையான ஸ்ரீ வைஷ்ணவன்.
எவன் உலகத்தின் உயிரினம் அனைத்தையும்
வணங்குகிறவன்,
எவன் பிறரை நிந்திக்க மாட்டானா,
எவன் மனம், வாக்கு, காயம் ஆகியவற்றைச்
சலனமின்றி வைத்துக் கொள்பவனோ,
அவளைப் பெற்ற அன்னை மிகவும் கொடுத்து
வைத்தவன்
எவன் சமநோக்கு உடையவனே,
வேட்கையை விட்டொழித்தவனோ,
பிறர் மாதர்களைத் தாயாக வணங்குபவன்,
எவன் பொய்யே பேசமாட்டான்
பிறர் பொருளைக் கையில் தீண்டவும் மாட்டானோ
அவனே உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்
எவனை மோகமும், மாயையும் அணுகாவோ,
எவன் மனதிலே திட வைராக்யம் குடி
கொண்டிருக்கும்,
இவன் வாயில் ராம நாமத்தையே ஓயாது ஓதிக்
கொண்டிருக்கும்,
அவனுடைய உடல் எல்லா புனிதத் தீர்த்தங்களுக்கும்
உறைவிடம் ஆகும்
எவன் பேராசையும், கபடமும் இல்லாதவனோ
எவன் காமத்தையும், கோபத்தையும்
விட்டொழித்தவனோ
அவன் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன்
அவனைத் தரிசிப்பவர்கள் தலைமுறை
தலைமுறைக்கும் கடைத்தேறியவர்கள் ஆவார்கள்,
நராிசிம்ம மேத்தாவின் ஸ்ரீவைஷ்ணவ
ஜனதோ பாடலின் பொருள்
( ஸ்ரீவைஷ்ணவன் என்ற புத்தகத்திலிருந்து )
- சுஜாதா தேசிகன்
2-10-2019
காந்தி ஜெயந்தி
நிச்சயம் இந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்துவிடுங்கள்.
பாடல் இனிமை ஸ்வாமி. பகிர்ந்தமைககு நன்றி.
ReplyDeleteஆனால், இந்த அடிப்படையில்
ReplyDeleteஇன்றைய நிலையில் வைஷ்ணவன் யாரும் இல்லை என்றே சொல்லலாம்.
நம்மால் வைணவணாக வாழ முயற்ச்சிக்கவே முடியும் ஸ்வாமி. அருமையான பதிவு.
ReplyDeleteArumai.
ReplyDeleteVery beautiful post.
ReplyDeleteவைணவம் என்றால் என்ன? உதாரணத்திற்கு சைவம் என்றால் நிலையானது என்று பொருள் அதுபோல வைணவம் என்றால் என்ன?
ReplyDelete