Skip to main content

கவிஞர் வாலி கற்றதும் பெற்றது

கவிஞர் வாலி கற்றதும் பெற்றது

கவிஞர் வாலி, எழுத்தாளர் சுஜாதா இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருக்கிறது. ‘ரங்கராஜன்; என்ற பெயர்;

ஸ்ரீரங்கத்தில் பிறக்கவில்லை என்றாலும், வளந்தது ஸ்ரீரங்கம்; ஆழ்வார் பாசுரங்களின் மீது காதல். ஸ்ரீரங்கத்தில் கையெழுத்து பத்திரிக்கையில் எழுதித் தமிழ் பத்திரிக்கையில் தொடர்ந்தார்கள்…

இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னொரு ஒற்றுமை இருவரும் ஆசாரியன் திருவடியை அடைவதற்கு முன் ஆசாரியனை சேவித்தார்கள்.

சுஜாதாவின் எழுத்தின் மீது இன்றும் தீராத ஈர்ப்பு இருப்பதற்குக் காரணம் முடிவில் ஒரு சொடக்கு அல்லது துடிப்பு இருப்பது தான் காரணம். சுஜாதா போல வாலி தன் வசன கவிதைகளில் அடுத்த வரி ஆச்சரிய சொடக்கைக் கொடுத்தார்.

சுஜாதா பற்றி வாலி இப்படி எழுதியிருந்தார்.

அவன்
‘கணையாழி’யில் தோன்றிய
கதையாழி; அவனோர்
இணையாழி இல்லாத இசையாழி !

பெற்ற தாய், தமிழ்த் தாய் இருவருக்கும் என் வணக்கம் என்பதை வாலி

எனக்கு

இரண்டு தாய்; இந்த
இரண்டு தாய் இல்லையேல்
இருந்திருக்கும் என் வாழ்வு
இருண்டதாய்


என்றார்.

சுஜாதா, வாலி இருவரும் கதை, கவிதை, சினிமா என்று கடைசிவரை பிஸியாக இருந்தார்கள். அடியேன் சுஜாதாவுடன் ஸ்ரீரங்கம் சென்று திரும்பியபின் 'கற்றதும் பெற்றது'ல் இப்படி எழுதியிருந்தார்.

”பிறந்த தினத்-தன்றே போக நினைத்து, டிக்கெட் கிடைக்காமல், சென்ற வாரம்தான் ஸ்ரீரங்கம் சென்றேன். லல்லு வந்ததில், ரயில் நிலையச் சுத்தத்தை கான்ட்ராக்ட் விட்டு எழும்பூர், திருச்சி ஜங்ஷன்கள் எல்லாம் பளபளவென்று இருக்-கின்றன. பெட்டிகளும் சுத்தமாக இருந்த ராக்ஃபோர்ட் எக்ஸ்பிர-ஸில் வந்து சேர்ந்தேன்…..வெயில் வருவதற்குள் கோயிலுக்குப் புறப்பட்டேன். கோபுரங்களை ஓவராக வெள்ளையடித்ததில் அல்பைனோ தோற்றமளிக்க, வாட்டர் ஸ்ப்ரே வைத்துக் காலலம்பிக்கொண்டு கோயிலுக்குள் நுழைந்தேன். ….. வடக்கு உத்தர வீதியில் எங்கள் ஆசார்யன் சிறுபலியூர் அண்ணன் சுவாமிகளுக்குத் தண்டம் சமர்ப் பித்துவிட்டு, தாத்தாச்சாரியார் தோட்டத்து ‘இமாம் பசந்த்’தைப் பாதிக் கதுப்பு ருசித்துவிட்டு..”

அன்று சுஜாதா அவர் தம்பியுடன் ஆசாரியன் திருமாளிகைக்குச் சென்று அவர்களுடைய ஆசாரியனைச் சேவித்து சில மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தார்கள். இது எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. இதற்குப் பிறகு சில மாதங்களில் சுஜாதா ஆசாரியன் திருவடியை அடைந்தார்.

ஸ்ரீரங்கத்தில் சுஜாதாவும் அவர் தம்பியும்

அவருடன் ஸ்ரீரங்கம் சென்றபோது “எனக்குக் கொஞ்சம் இட்டுவிடு” என்று ஸ்ரீசுர்ணத்தை தரித்துக்கொண்டார். சுஜாதா எப்பேர்ப்பட்ட அவதார புருஷர், அவருக்குத் தேசிகன் நாமம் போட்டுக் குடுமி வைத்து அவர் ’இமேஜை ஸ்பாயில்’ செய்கிறான் என்று ஒரு கூட்டம் அலைந்தது.

கடைசியாக அவர் என்னிடம் “இப்ப எல்லாம் பிரபந்தம் மட்டும் போதும்.. வேற எந்தப் புத்தகத்தின் மீதும் நாட்டம் இல்லை” என்றார். அவருடைய படுக்கைக்குப் பக்கத்தில் பிரபந்தம் மட்டுமே இருந்தது.

சுஜாதாவின் தகப்பனார் ”எவ்வளவு படித்தாலும், வயதான பிறகு பிரபந்தம் தான் நமக்குத் துணை” என்று சொன்னதை நினைவு கூர்ந்தார். அப்போது அடியேனின் தகப்பனாரும் இதையே தான் சொன்னார் என்று அவரிடம் சொன்னபோது ஆச்சரியப்பட்டார்.

ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வாசலில், சுஜாதவும், அடியேனும்


கடைசியாக அவர் அதிகம் ’வாரம் ஒரு பாசுரம்’ ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம், பிரம்ம சூத்திரம் போன்ற ஸ்ரீ வைஷ்ணவ விஷயங்களையே அதிகம் எழுதினார். சுஜாதா ஒரு தீவிர ஸ்ரீ வைஷ்ணவர். திருமண் ஸ்ரீ வைஷ்ணவத்தின் அடையாளம். இதை எழுதுவதற்குக் கூட இன்று யோசிக்கும் காலம் !


குலசேகர ஆழ்வார்

”ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோயில் திருமுற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே” என்று காவிரி போல வருகிற கண்ணீரினால் திருவரங்கத் திருமுற்றத்தை சேறாக்குகிற தொண்டர்களின் திருவடிகளால் மிதிக்கப்பட்ட சேற்றை என் நெற்றியிலே தரித்துக் கொள்வேன் என்கிறார்.

வாலி இப்படி எழுதுகிறார்

பெரும்புதூர் எங்கள்
பெருமான் விளைந்த
அரும்புதூர்; ஏரார்ந்த
அவ்வூர்த் தெருமண்
வெறுமண் என நான்
விடாது தரிப்பேன்
திருமண் எனவே
தினம் !

இது கவிஞர் வாலி எழுதிய ஸ்ரீமத் அழகிய சிங்கர் புத்தகத்தில் வரும் கவிதை. வாலி தான் ஆசாரியன் திருவடியை அடைவதற்கு முன் இந்தப் புத்தகத்தைத் தான் எழுதினார். இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது தான் வாலி கடைசியாகப் பேசிய மேடைப் பேச்சு.

அந்தப் புத்தகத்தின் முன்னுரையில் வரும் சில பகுதிகளை :

“என் தந்தைக்கு பிரியமான காரியம் எதையும் இதுகாறும் நான் செய்த வனல்ல. என்னுடைய அகவை இப்போது எண்பத்திரண்டு, குருவருளும,  திருவருளும் கூடிவர, எந்தை உகக்கும் ஓர் சத்காரியத்தை நான் செய்ய நேர்ந்தது. தலைமுறை தலைமுறையாக எங்கள் குடும்பம் அகோபில மடத்து அடியார்களாகவே விளங்கி நின்று ஆசாரியனாகிய ஸ்ரீமத் அழகிய சிங்கரின் பாதகமலங்களைப் பற்றி நிற்கிறது.

எங்கள் குலகுருவாகிய 45-ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் - நாராயணயதிகளின் வரலாற்றுச் சுருக்கத்தை வையம் அறியுமாறு எளிய தமிழில் எழுதப் பணித்தான் என்னை - என்னுள் இருக்கும் எட்டெழுத்து ஏந்தல்!

நானொரு தட்டெழுத்து யந்திரம்;

என்னைத் தட்டித் தட்டித் தமிழ் வளர்த்தது -

அந்த எட்டெழுத்து மந்திரம் !

என்று எழுதியிருந்தார்.

ஸ்ரீமத் அழகிய சிங்கர் ( 45 ஆம் பட்டம் ), கவிஞர் வாலி

எல்லா மேடைகளிலும் ‘நான் இப்படி எழுதினேன், அப்படி எழுதினேன்’ என்று சொன்ன வாலி புத்தகத்தில்

ஆசார்யன் அவர்களே
ஆசார்யன் வரலாற்றை
எழுதிக் கொண்டார்
என்பதே
நூறுவிழுக்காடு மெய்; நகலெடுத்தது என்கை
ஆசாரியன் திருவடிகளே சரணம்.

முதிர்ந்த ஸ்ரீவைஷ்ணவனின் வார்த்தைகள் இவை என்று படிக்கும் போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

நம்மாழ்வார்

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவு இலன்,வேண்டிற்று எல்லாம்தரும் கோதுஇல் என் வள்ளல்,
மணி வண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.

புத்தக வெளியீட்டு விழாவில் 46ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கருடன் வாலி


அதாவது, குப்பையைக் கிளறினார் போன்ற இழிக்கத் தக்கதான செல்வத்தை மிக அதிகமாகப் புகழ்ந்து உங்களுடைய வாக்கின் வன்மையை இழக்கின்ற புலவர்களே! கவி பாடுதற்குப் பொருளாகக் கொள்ளுவதற்கு வேண்டிய குணங்கள் எல்லாம் குறைவு இல்லாதவன்; நீங்கள் விரும்பின அனைத்தையும் தருவான்; குற்றம் இல்லாத வள்ளல்; மணி வண்ணனை கவி சொல்ல வாருங்கள் என்று அழைக்கிறார்.

பாண்டிய அரசன் வல்லப தேவன்னுக்கு 'மழைக்காலத்துக்கு வேண்டியதை வெயில் காலத்திலும், இரவுக்கு வேண்டியதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்ற வாக்கியம் சிந்தனையைக் கிளறி, ‘மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக’ என்ற கருத்துக்கு இதுவரையிலும் நாம் என்ன முயற்சி செய்தோம்? என்ற யோசித்தது போல வாலியும் யோசித்திருக்கிறார்.


புத்தகம்...


வயிற்றுப் பிழைப்புக்கு ஆழ்வார் சொல்லுவது போல ‘உண்டியே உடையே என உகந்தோடுவது’ என்று அலைந்து தேவை இல்லாமல் பலரைப் புகழ்ந்து செய்துகொண்ட சமரசம் எல்லாம் போதும் என்று உணர்ந்ததன் பயனாக அவர் தன் ஆசாரியன் ஸ்ரீமத் அழகியசிங்கரின் காலடியில் சரணாகதி அடைந்து இதுவரை விரையம் செய்த வார்த்தைகள் போதும் என்று உதிர்த்த வரிகள் இவை

ஆசார்யன் இடம்தான் உச்சம் ஆண்டவன் இரண்டாம் பட்சம்!

இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய வாலி “‘எத்தனையோ பாடல்களை, நிதிக்காக எழுதியிருக்கிறேன். இந்நூலை என் கதிக்காக எழுதியிருக்கிறேன்!” என்றார்

ஸ்ரீராமாயணத்தில் வாலி தன் முன் வலுவுள்ள யார் வந்தாலும் அவர்களுடைய பலத்தில் பாதியை அவன் பெற்றுகொள்ளும் ஆற்றல் பெற்றவன். அதனால் அவனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

கம்பர் “அன்னவர் பட்ட நல் வலம் பாகம் எய்துவான்” என்கிறார் அதாவது வந்தவனிடமிருந்த ‘நல்ல பலத்தில் பாதியை’ என்கிறார். (பலவீனமும் வந்துவிட்டால் ? )

கவிஞர் வாலி தன் ஆசாரியன் ஸ்ரீமத் அழகிய சிங்கரின் முன் சென்று நல்ல பலம் பாதி இல்லை, முழுவதையும் பெற்றுவிட்டார் விட்டார். அது தான் சரணாகதி !

வாலி மொழியில் சொல்ல வேண்டும் என்றால்

ஆழ்வார்கள் ஆசாரியர்கள்
இருமொழி கலந்து
ஒரு மொழியில்
சொன்னது
சரணாகதி !

வாலி கடைசியாக பேசியது :

- சுஜாதா தேசிகன்

Comments

 1. ஆச்சார்யன் திருவடிகளே சரணம்

  ReplyDelete
 2. .ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நமக்களித்த நன்முத்துக்கள்... இந்த இரண்டு ரெங்கராஜனும்!!! 
  அடியேன் தாசன்

  ReplyDelete
 3. Acharyane uchham andavan rendam pecham

  ReplyDelete
 4. Acharyane Ucham Andavan Rendam Pacham

  ReplyDelete
 5. ஆசார்யன் திருவடிகளே சரணம்

  ReplyDelete
 6. "This is for the body and this is for the soul" Vaali might have meant late kannadasan here.When will we say 'every thing is for the soul'?

  ReplyDelete

Post a Comment