இன்று எதையோ தேடும்போது ஸ்ரீராமபாரதி ஸ்வாமி பற்றிய வீடியோ இரண்டு கிடைத்தது. ( அதை கடைசியில் கொடுத்திருக்கிறேன்).
அடியேன் அவரைப் பற்றி சில விஷயங்கள் முன்பு எழுதியிந்தேன் அதை தொகுத்து இந்த பதிவில் தந்திருக்கிறேன்.
ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது.
பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென்.
நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் எந்தெந்த காலத்தில் எந்தெந்த திவ்யபிரபந்தம் சேவிக்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீராமானுஜருடைய வாழித் திருநாமத்தில் “தென்னாங்கர் செல்வமுற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது. பெரிய பெருமாளுடைய செல்வம் என்னவென்றால் “வான் திகழும் சோலை, மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரம்” என்கிறார் பட்டர். அதாவது ஆழ்வார்கள் பாடப்பட்ட பாசுரங்கள் எல்லாம் ரங்கநாதனுடைய ‘செல்வம்’ என்கிறார். ஆழ்வார் பாசுரங்களின் தத்துவங்களையும், பொருள்களையும் எல்லோருமறியும் பொருட்டு நடித்துக்காட்ட ‘இராமானுசனுடையார்’ என்று சிலரை ஏற்படுத்தி அவர்களை நடிக பாத்திரங்களாக உத்ஸவாதிகளில் நடிக்கும்படி செய்தார்.
இன்றும் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவம் பத்து நாள் நடக்கிறது அதில் ‘அரையர் சேவை’ முக்கிய நிகழ்வாகும். அந்த நாளைய முழு தியேட்டர் அனுபவம். ( ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை - சில குறிப்புகள் என்ற கட்டுரை ஒரு பொக்கிஷம் ).
இந்த அரையர் சேவைக்கு இந்த நூற்றாண்டில் மீண்டும் உயிர் கொடுத்தவர் நம் ஸ்ரீராம பாரதி.
சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்கு சென்றவர், அங்கே ஒரு சிற்ப கடையில் பழங்காலத்து ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்
விக்ரகம் ஒன்று வாங்கி தன் வீட்டுக்குக் கொண்டுவந்த பின் அவருக்கு சில தெய்வீக அனுவம் கிடைக்க, திடீர் என்று ஒரு நாள் தன் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு இந்தியா திரும்பினார். தில்லியில் வி.வி.எஸ் என்று அழைக்கப்படும் திரு வி.வி. சடகோபனிடம் சேர்ந்தார். அவருடன் இந்திய இசை மற்றும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு இசை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல திய்வதேசங்களுக்கு சென்று ஆழ்வார்களின் பக்தி உள்ளத்தின் உணர்ச்சி பாவனைகளுடன் ஆடியும் குழித் தாளத்துடன் இசைக் கூட்டி பாடியும் “அரையர் சேவை”யாக பெருமாளுக்கு அர்ப்பணம் செய்தார்.
1980ல் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வி.வி.எஸ் ரயிலிலிருந்து கூடூர் ஸ்டேஷனில் இறங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தன் குரு திரு வி.வி.சடகோபனின் மறைவுக்கு பின் சீடர் ஸ்ரீராம பாரதி தன் துணைவியார் திருமதி சௌபாக்யலக்ஷ்மி ( இவரும் திவ்ய பிரபந்தங்களில் தேர்ச்சி பெற்றவர் ) தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஆழ்வார் திருநகரி, மேல்கோட்டையில் சில காலம் தங்கி அரிதாகி வரும் அரையர் இசையை ஆராய்ந்து கற்றார் திவ்ய பிரபர்ந்த பாடல்களுக்கு ராகம் அமைத்து இசைக் குறியீடுகளுடன் ’தேவ கானம்’ என்று நாதமுனிகள் சூட்டிய பெயரையே சூட்டி புத்தகம் ஒன்றை 1995ல் வெளியிட்டார். 1997ல் நாலாயிர திவ்ய பிரம்பந்தம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மிக அழகான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். ’அரையர் சேவை’ என்ற புத்தகம் ஒன்றையும் ஆங்கிலத்தில் எழுதினார் ( பாரதிய வித்யா பவன் வெளியீடு )
தூர்தர்ஷனில் இயக்குநர் வேலையில் இருந்தவர் அதை விட்டுவிட்டு சென்னை பள்ளிக்கரணை அருகில் செல்வமுடையான்பேட்டை (தற்போது ஜல்லடம்பேட்டை என்று வழங்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் திருக்கடல்மல்லை செல்லும் போது, பெருமாள் செல்வமுடையான் அவரை ஆசீர்வதித்தார் என்றும், அங்கே உள்ள சுண்ணாம்பு குளத்தில் தான் திருமங்கை ஆழ்வார் குதிரை ஆலிநாடன் தண்ணீர் குடித்தது என்று கூறுவர். 1857 சர்வேயில் அந்தக் குளம் இருக்கிறது !) என்ற இடத்தில் மேல்கோட்டை திருநாராயணன் - செல்லப்பிள்ளைக்குக் கோயில் கட்டினார், கோசாலையுடன், தன் குருவின் பெயரால் ”ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை” ஒன்று அமைத்து அக்கம் பக்கம் கிராமத்துக் குழந்தைகளுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுக்கொடுத்தார்.
1997-8 என்று நினைக்கிறேன் ஸ்ரீராம பாரதி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று பைக்கில் பள்ளிக்கரணை
ஜல்லடம்பேட்டைக்கு சென்றேன். பிரபந்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை என்றவுடன் அவரிடம் இருந்த
திருப்பாவை, நித்யாநுஸந்தாநம் சந்தைமுறை ஒலிநாடாவை எனக்குக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் இன்று நானே ஆரம்பிக்கிறேன் என்று எனக்குச் சந்தை முறையில் இரண்டு பாசுரங்களை அவரே சொல்லியும் தந்தார். அப்போது அவர் மனைவி எனக்குப் பெருங்காயம், கறிவேப்பிலை கலந்த மோர் கொடுத்தது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.
திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒளி- ஒலி வடிவில்) திருமங்கை ஆழ்வாரை சேவித்தால் அதன் அனுபவமே தனி சேவிக்கும் போது கீழே உள்ளதை நீங்களும் சேவிக்கலாம்.
பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ!
ஏது பெருமை இன்றைக்கென்னென்னில் - ஓதுகிறேன்.
வாய்த்தபுகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்
மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த-வீறுடைய
கார்த்திகையில் காத்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.
அணைத்தவேலும் தொழுதகையும்
அழுந்திய திருநாமமும்
ஓமென்றவாயும் உயர்ந்தமூக்கும்
குளிர்ந்தமுகமும் பரந்த விழியும்
பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்டகுழலும் வடிந்தகாதும்
அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்
சரிந்த கழுத்தும் அகன்றமார்பும்
திரண்ட தோளும் நெளித்த முதுகும்
குவித்தயிடையும் அல்லிக்கயிறும்
அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனிமாலையும்
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும்
சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும்
குந்தியிட்ட கணைக்கால்களும் குளிரவைத்த திருவடியும் மலரும்
வாய்த்த திருமணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும்
வாடினேன் வாடி வாழ்வித்தருளிய
நீலக்கலிகன்றி மருவலர்தமுடல்துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே
உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
உருகவைத்த மனமொழித்திவ் வுலகளந்த நம்பிமேல்
குறையைவைத்த மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்கவன்முனே
மடியொதுக்கி மனமடக்கி வாய்புதைத்து வொன்னலார்
குறைகுளித்த வேலணைத்து நின்றவிந்த நிலைமையென்
கண்ணை விட்டகன்றிடாது கலியனாணை யாணையே
காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும் - நீதிபுனை
தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை யொப்பா ரில்லையே
வேலணைத்தமார்பும் விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாளினிணைத்
தண்டையும் வீரக்கழலும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கு மென் கண்
இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர் - இதுவோதான்
வெட்டுங்கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்
ஸ்ரீராம பாரதி ஸ்வாமிகள் பற்றி இந்த இரண்டு வீடியோவையும் பார்த்துவிடுங்கள்.
வீடியோ- 1
வீடியோ - 2
இந்த வீடியோவில் ஸ்வாமிகளின் குரலில் வரும் தனியன் தான் எனக்கு பல வருடங்களாக என்னை காலையில் எழுப்பும் எழுப்பொலி! (அலாரம்). மற்ற அலாரம் ஓசை எல்லாம் சத்தம் போட்டவுடன் அனைத்துவிடுவோம். ஆனால் அடியேன் இவர் குரலை தினமும் முழுவதாக கேட்டுவிட்டு தான் எழுந்துகொள்கிறேன்!
- சுஜாதா தேசிகன்
5-10-2020
அத்புதம்.
ReplyDeleteBlissful🙏
ReplyDelete🙏🙏 அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள். முந்தைய பதிவையும் படித்திருக்கிறேன்.
ReplyDeleteExcellent
ReplyDeleteSwami Namaskaram, Can you please let me know if it is still in the same location if so Can you please share me the address I tried google i am not getting it
ReplyDeleteAdiyen. Could not understand the question.
Delete