வெண்ணெய் தோசை vs பென்னே தோசை
திருச்சி ஆண்டார் தெருவில் 'ராமா கபே' பலருக்குத் தெரிந்திருக்கும். ‘வெண்ணெய் மாவு’ ( தோசை) என்று ஆடர் செய்துவிட்டு பெண் பார்க்கும் வீட்டில் பெண் வரும் வரை அங்கே இருக்கும் பாட்டிகளை பார்ப்பது போல இலையில் இருக்கும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு பெண் மன்னிக்கவும், தோசை வருகிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது... ‘அடுத்தது ஒரு வெண்ணெய் மாவு’ என்ற அந்த சத்தம் செவிக்கு சென்று செவிக்கு உணவாகி, சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் ஈயப் படும் என்று அறிவிப்பாக இருக்கும்.
சத்தம் போட்ட ஒரு நிமிஷத்துக்குள் ஒருவர் வெளியே ஓடி பக்கத்து ‘பழநி விலாஸ் நெய் கடையில்’ பட்டர் பேப்பரில் வெண்ணெய் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வார்.
சரியாக இட்லியை முடித்துவிட்டு இலையில் மீதம் இருக்கும் சட்னி, சாம்பாரை நக்கி ருசிக்கும் போது வெண்ணெய் தோசை உங்கள் முன் வந்து மடிக்கப்பட்டு இலையில் விழும். கூடவே ‘கெட்டி’ சட்னி, தனியா (கொத்தமல்லி) தூக்கலான சாம்பார் என்று ’சேர்த்தி சேவை’ திருப்தி ஏற்படும்.
அப்பறம் சொல்ல மறந்துவிட்டேனே,,, தோசை சாப்பிடும் போது வெளியே வங்கிய வெண்ணெய் உள்ளே இருப்பதற்குச் சாட்சியாக பட்டர் பேப்பர் தோசையின் உள்ளேயே இருக்கும்!.
’வெண்ணெய் ரவா’ இருக்கா என்று சர்வரிடம் கேட்டால் ‘அடுத்தது ஒரு வெண்ணெய் ரவா’ என்று சத்தம் போடுவார். மாவு தோசையா, ரவா தோசையா ? எது பெஸ்ட் என்றால் நடிகை ரேகாவா அல்லது நடிகை ஸ்ரீதேவியா என்பது போல...
’நெய் ரோஸ்ட் பார்த்தசாரதி விலாஸ்’ திருவானைக்காவல் கோயில் பக்கம் இருக்கிறது. நாம இங்கே பார்த்துக்கொண்டு இருப்பது வெண்ணெய் தோசை அது நெய் ரோஸ்ட் ஆட்டத்தில் வராது. இரண்டும் வேறு. பார்த்தசாரதி விலாஸ் பட்டர் தோசையை சாப்பிட்டுவிட்டு எழுந்துகொள்ளும் போது ஜாக்கிரதையாக எழுந்துகொள்ள வேண்டும் கூரை முழுவதும் ஒட்டடை. சாப்பிட்டுவிட்டு வரும் போது சுஜாதா என்றோ விகடனில் இந்த தோசை பற்றி எழுதியதை பிரேம் போட்டு மாட்டியிருப்பார்கள். ஏப்பத்துடன் படித்திவிட்டு வரலாம்.
மசால் தோசைக்கு பூர்வீகம் மைசூர். அதனால் தான் காஞ்சிபுரம் பட்டு புடைவை போல ‘மைசூர் மசால் தோசை’ என்று சில கடைகளில் கிடைக்கிறது. ‘தாவண்கரே பென்ன தோசை’ வேறு ரகம். சென்னை தோசை மெல்லிசான வாயில் புடவை மாதிரி என்றால், தாவண்கரே தோசை கனமான கூரப்புடவை மாதிரி.
‘தாவண்கரே பென்ன தோசை’ பற்றி சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். பெங்களூரு ‘புல் டெம்பிள்’ ரோட்டிலும், பனசங்கரியில் ஏதோ ஒரு சந்திலும், ராஜாஜி நகர் நேஷனல் ஸ்கூல் பக்கமும் இந்தக் கடை இருக்கிறது.
இந்த தோசைக்கு பூர்வீகம் ‘தாவண்கரே’. ஒரு முறை காரை எடுத்துக்கொண்டு தாவண்கரேவுக்கு புறப்பட்டேன். . “இங்கே எந்த திவ்ய தேசமும் இல்லையே எதுக்கு தாவண்கரே ?” என்று கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தேசை கடையை பல நூறு கிலோமீட்டர் தேடி சென்று கண்டுபிடித்தேன்.
கடை உள்ளே ‘ஹாட்டாக’ இருந்தது. பாதி கடை அடுப்பு. தோசை செய்வதை பார்த்தேன். ஸ்ரீரங்கம் மடப்பள்ளிக்கு அடுத்து இங்கே தான் விறகு அடுப்பு. பெண்கள் முகத்துக்கு கிரீம் பூசிக்கொள்ளும் போது பார்த்திருக்கலாம்- நெற்றியில் கொஞ்சம், இரண்டு கன்னத்திலும் கொஞ்சம், கொஞ்சம் , மோவாக்கட்டையில் கொஞ்சம் கடைசியாக மூக்கு நுனியில் தடவிய பின் முகம் முழுக்க பூசிக்கொள்ளுவார்கள்.
இந்த தோசை செய்யும் போது எடுத்த வீடியோ.
தாவங்கரே தோசையில் கிரீமுக்கு பதில் வெண்ணெய் மற்றபடி எல்லாம் அதே மாதிரிதான். ’கிளே மேக்கப்’ செய்துகொண்ட ரிசப்ஷன் பெண் போல தோசை வரும். சாம்பார் கிடையாது. அவர்கள் தரும் ‘வைட்’ சட்னியுடன் சாப்பிட்டு பாருங்கள்.
இதை எல்லாம் சுவைத்த பின் மற்ற தோசைகளை சாப்பிடும் போது “இதை இட்லி என்று சொன்னால் சட்னி கூட நம்பாது” என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது !
- சுஜாதா தேசிகன்
பார்த்தால் சாதாரணமாகத்தான் தெரிகிறது. ஆனால் ஹோட்டல் தோசையின் டேஸ்ட் ஆத்தில் வருவதில்லை என்பதே நிஜம்!
ReplyDeleteBesh!Besh!Romba nala irukka.Tastavum irukkum pola.Davana giri ponadillaiAndha Chennai thinnum kanna Kiribati irundal paalam
ReplyDeletePakkati divyadesam edhuvum illai
Ippadi yellam vagaya sappittuttu colestrol sugar nnu doctor kitta poradhukku Namma athuleye bath kozhambu chutta. Applam sappottu nimmadhiya irukkallam.
ReplyDeleteவெண்ணெய் கொஞ்சம் அதிகமாக சேர்க்கப்படுகிறதோ?
ReplyDeleteதோசை & தமிழ் இரண்டையும் சுவைத்தோம் ரசித்தோம்.👌👌👌👌
ReplyDeleteசுஜாதா தேசிகன்..... செம lines..... தோசை மாதிரியே...
ReplyDeleteRomba loukikama poiduthu :)
ReplyDeleteகலா ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். பெண்ணே தோசைக்கு ஷேத்ராடனம் செல்வதற்கு உண்மையிலேயே பெரிய ரசனை வேண்டும். வேலை நிமித்தமாக தாவண்கரே செல்லும் போதெல்லாம் ரவி பெண்ணெ தோசை சாப்பிட்டு வருவேன். கர்நாடகா டிபன் ரசிகர்களுக்கு சொர்க்கம். அப்படியே பிடதி தட்டே இட்லி பற்றியும் ஒரு ப்ளாக் போடுங்களேன் திரு தேசிகன்!
ReplyDeleteகலா ரசிக பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம். பெண்ணே தோசைக்கு ஷேத்ராடனம் செல்வதற்கு உண்மையிலேயே பெரிய ரசனை வேண்டும். வேலை நிமித்தமாக தாவண்கரே செல்லும் போதெல்லாம் ரவி பெண்ணெ தோசை சாப்பிட்டு வருவேன். கர்நாடகா டிபன் ரசிகர்களுக்கு சொர்க்கம். அப்படியே பிடதி தட்டே இட்லி பற்றியும் ஒரு ப்ளாக் போடுங்களேன் திரு தேசிகன்!
ReplyDeleteதாவனகரே ஊரில் குரு கோட்டூரேஸ்வர என்ற வெண்ணை தோசை கடை உண்டு.
ReplyDeleteஒரு தோசை சாப்பிட்டால் நாள் முழுதும் பசிக்காது.
ஜெயநகர் 4ம் பிளாக் காம்ளெக்ஸுக்கு சற்று தூரத்தில் ஒரு தாவண்கெரே பெண்ணே தோசை கடை இருக்கிறது. விறகு அடுப்புதான். இந்தக் கடைக்கு கூல் ஜாயிண்டிலிருந்து நடந்தே போயிடலாம். அருமையா இருக்கும். இதுக்காக தாவெண்கெரே போக வேண்டாம்.
ReplyDelete