Skip to main content

11. இராமானுசன் அடிப் பூமன்னவே - பக்தாம்ருதம்

11. இராமானுசன் அடிப் பூமன்னவே - பக்தாம்ருதம்

பசிக்கு உணவைத் தேடிக்கொண்டு அலைந்தவனுக்கு விருந்தே கிடைத்தாற் போல,  திருவாய்மொழியைத் தேடிக்கொண்டு அலைந்த நாதமுனிகளுக்குப்

பொய்கை, பூதன், பேயார், பொன்மழிசைக் கோன் மாறன்
செய்ய மதுரகவி,  சேரர்பிரான் - வையகமெண்
பட்டர் பிரான், கோதை, தொண்டர் பாதப்பொடி
பாணன், கட்டவிழ்தார் வாட்கலியன் காப்பு(1)

என்று எல்லா ஆழ்வார்களின் பாசுரங்களும் பக்தாம்ருதமாக(2) கிடைத்து, இன்பத்தில் திளைத்துக் குருகூர் சடகோபனை மார்வெழுத்தாக்கி கொண்டார்(3). 

சடகோபன் உகப்புடன் தன் திருவாக்கினால்  திருவாய்மொழியை நாதமுனிகளுக்கு உபதேசிக்க ஆயத்தமானார்.

கடும் தாகத்தில் சிறிது தண்ணீர் அருந்தியவன் தண்ணீரின் இனிமையை உணர்ந்து தாகம் அடங்காது, “தண்ணீர் தண்ணீர்’ என்று தவிப்பது போல நாதமுனிகள் தவிப்பு இருந்தது. நாதமுனிகள்போல,  நம்மாழ்வாரின் தேனினும் இனிய பாசுரங்களை மீண்டும் அருந்த எல்லாத் தேசத்து எம்பெருமான்களும் நாதமுனிகளின் நெஞ்சில் உவந்து குடிகொண்டிருந்தனர். 

நாதமுனிகள்  அரிய  அமிர்தம் கிடைக்கப் போகும் ஆசையில் அதை முழுவதையும் பருக வேண்டும் என்ற பேருவகையால் உடம்பு பூரித்தது.  நம்மாழ்வாரை வணங்கி “அடியவர்களுக்கு அமுதமாகவும், அனைத்து மக்களுக்கும் இன்பத்தை நல்கி, நல் அர்த்தங்களைக் காட்டக்கூடிய நம் சடகோபனின் திராவிட வேதக் கடலான திருவாய்மொழியை வணங்குகிறேன்” என்று நம்மாழ்வாரைச் சேவித்தார்(4). 

’வேதம் தமிழ் செய்த மாறன்’ திராவிட வேதமான  திருவாய் மொழி முதல் பாசுரத்தை இசையுடன் பாடினார். 

யர்வற உயர்நலம் உடையவன் யவன் அவன்
யர்வற மதிநலம் அருளினன் யவன் அவன்
யர்வறும் அமரர்கள் அதிபதி யவன் அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே

”வேதத்துக்கு எல்லாம் மூலமந்திரமாகப் பிரணவம் இருக்கிறது. பிரணவம் என்பது அ, உ, ம என்று மூன்று எழுத்தாக விரியும்.  ’அ’ என்ற எழுத்து எம்பெருமானைக் குறிக்கும், ‘உ’ என்ற எழுத்து குருநாதனான ஆசாரியனைக் குறிக்கும். ‘ம’ என்ற எழுத்து ஜீவன்களைக் குறிக்கும்” என்றார் சடகோபன். 

நாதமுனிகள் மெய்மறந்து, “அற்புதம் ! ‘அ’ என்ற ஆதிபகவனை ‘ம’ என்ற ஜீவாத்மா அடைய ‘உ’ என்ற ஆசாரிய சம்பந்தமே முக்கியம் என்பதை  உணர்த்தி சரணாகதி தத்துவத்தை முன் நிறுத்தி வெளியிட்டு எமக்கு நல்வழியைக் காட்டினீர்! 

உயர்வர என்று ஆரம்பித்து ஆசாரிய சம்பந்தத்தைக் கூறி, அடுத்து மயர்வற என்று சிஷ்யனின் சம்பந்தத்தைக் கூறி, ஆசாரியன் சம்பந்தம் பெற்ற அடியார்களைக் கண்டால் அமரர்களுக்கு அதிபதியானவனுக்கு உள்ள துயர் நீங்கி அவன் உள்ளம் உகப்பாகிறது” என்று இந்த ஆச்சரியமான அர்த்தத்தைக் கண்டு வியந்து நின்றார். 

நம்மாழ்வார் ஆசாரியனின் மேன்மையை விரித்து உரைத்து, திருவாய்மொழி பத்துப் பதிகங்களிலும் எம்பெருமானின் பத்து முக்கியமான குணங்களான ’அவன் மிக உயர்ந்தவன், அவனே எல்லாவற்றுக்கும் காரணம், நீக்கமற எங்கும் நிறைந்து உள்ளான், அவனே எல்லாவற்றையும் நடத்திக் கொடுக்கிறான், மிகவும் கருணை உடையவன், நம் எல்லோருக்கும் சரணாகதி அளிக்க வல்லவன், சக்தி உடையவன், நாம் விரும்பியவற்றை அடையச் செய்பவன், நம் இடர்களிலிருந்து காப்பாற்றுபவன், நம் கவலைகளைத் தீர்க்க வல்லவன் என்று உபதேசித்தார்.(5)

நாதமுனிகள் நம்மாழ்வாரை வணங்கி இப்பேர்ப்பட்ட குணங்களை உடையவன் என்று அறியாமல், யசோதை  அன்பு என்னும் சிறுதாம்பினால் கட்டிய போது அவன் கட்டுண்டு பத்து உடை அடியவர்க்கு எளியவன், பிறர்களுக்கு அரிய வித்தகனாக இருந்த அந்த எளிமையை என்ன என்று கூறுவது ?” என்று வியப்பில் ஆழ்ந்தார் நாதமுனிகள். 

அருகில் இருந்த மதுரகவிகள் “நாதமுனியே! யசோதைப் பிராட்டியால் உரலில் கட்டப்பட்டதைக் கண்டு, சிந்தை மருண்டு, ''எத்திரம் உரலினோடு இணைந்திருந்து ஏங்கிய எளிவே' என்ற கண்ணனின் இந்தக் குணத்தால் குருகூர் சடகோபன் ஆறு திங்கள் கிருஷ்ண மோகத்திலேயே மயங்கிக் கிடந்தார்! தெரியுமா ?” என்றார். 

நாதமுனிகள் “கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் பண்ணிய பெருமாயனன் என்று தாங்கள் அருளிய  பாசுரத்தை அடியேன் உருசொன்னவுடன்  குருகூர் சடகோபன் அந்த மோகம் காரணமாகவே நேரில் வந்தார் போலும்! ராமருக்கும் சீதைக்கும் சேது பந்தம்போலே  நம்மாழ்வாருக்கும் எமக்கும் இந்த சிறுத்தாம்பே பாலமாக விளங்கியது” என்றார். 

நம்மாழ்வார் இந்த உபதேசங்களை அருளிய போது ஐந்தாம் பத்து, இரண்டாம் திருமொழி பாசுரத்தில் ஒரு சுவாரசியமான நிகழ்வு ஏற்பட்டதை நேயர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.  நம் கதை இதிலிருந்து தான் ஆரம்பிக்கிறது! 

சடகோபன் ஐந்தாம் பத்து, இரண்டாம் திருமொழி பாசுரமான 

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்(6)

என்று செப்பிய போது, நாதமுனிகள் கேள்வி ஒன்றைக் கேட்க ஆயத்தமானார்.   கடந்த கால வருங்கால நடப்புக் காலங்களான முக்காலங்களையும் அறிந்தவரான சடகோப முனி, ’கலியும் கெடும் கண்டு கொள்மின்’ என்று கூறுவதன் மூலம், ஒரு மாஹாநுபாவர் அவதரிக்கப் போகிறார். அவரால் இவ்வுலகம் வாழப் போகிறது என்று சூசகமாகக் கோடிட்டுக் காட்டுவது யாராக இருக்கும்? என்ற கேள்வி அவர் நெஞ்சத்தில் உதயமானது. 

நாதமுனிகள் சடகோபரை வணங்கி அருகில் இருக்கும் மதுரகவிகளையும் வணங்கி. கைத்தாளத்தை கணீரென்று இசைத்து  இனிமையான குரலில் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரத்தில்  ”பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்” என்ற வரிகளை 

திருத்திப் பணி கொள்வான்”
செயல் திருத்திப் பணி கொள்வான்”
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்”

என்று மூன்று விதமாகப் பாடி நம்மாழ்வாரை உகப்பித்தார். 

சடகோபன் நாதமுனிகளைப் பார்த்துப் புன்னகைத்த போது,  பரஸ்பரம் இருவரும் எண்ணங்களை மனதால் பரிமாறிக்கொண்டார்கள். 

சடகோபரும் நாதமுனிகளும் என்ன பேசிக்கொண்டார்கள் ? எப்படி மனதால் பேசிக்கொள்ள முடியும் என்றும் சந்தேகம் நேயர்களுக்கு வந்திருக்கலாம்.

உலக வாழ்கையில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்ட ஒத்த கருத்துடைய தம்பதிகளே கண்ஜாடையில் பேசிக்கொள்ளும்போது,  யோகத்தில் சிறந்த சடகோப முனி, நாதமுனி இருவரும் மனதால் பேசிக்கொண்டதில் ஆச்சரியப்பட  ஏதும் இல்லை. 

மேலும் இருவரின் குறிக்கோள்களும் ஒன்றே.  நாதமுனிகளுக்குப் பாசுரங்களைப் பெற வேண்டும் என்ற குறிக்கோள். சடகோப முனிக்கு நாதமுனிகளிடம் பாசுரங்களைக் கொடுக்க வேண்டும் என்ற குறிக்கோள்.

நாதமுனிகள் சடகோபமுனியிடம்  ’பயன் அன்று ஆகிலும்’  என்ற பாசுரத்தை மூன்று விதமாகப் பாடி என்ன கேட்டார் என்று அறிந்துகொள்ள வாசகர்களைப் போல நாமும் ஆவலாக இருக்கிறோம். அதற்கு முன் நம்மாழ்வார் அவதரித்து தன் முப்பத்திரண்டாம் அகவையில் பரமபதம் புறப்படுவதற்கு முன் என்ன நடந்தது என்று தெரிந்துகொள்வது மேலும் கதைக்கு அவசியமாகிறது. 

நம்மாழ்வார் இவ்வுலகை விட்டு வைகுந்தம் புகத் தயாரானதைக் கண்ட மதுரகவிகள் கண்ணீருடன் ”தேவரீருக்கு உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்பது போல அடியேனுக்கு நீங்கள் தான் எல்லாம். உங்களைப் பிரிந்து எப்படி ஜீவிப்பது ?” என்று ஏக்கத்துடன் வினவினார். 

”மதுரகவிகளே! பெருமான் எமக்குப் பணித்த பணி முடிந்துவிட்டது. ஞானசாரமாய் வேதத்தைத் தமிழில் கொடுத்தாகிவிட்டது. இனி நீர் இதை இவ்வுலக மக்கள் எல்லோரிடமும் சேர்த்துவிட்டு எம்மோடு வந்து சேருவீர்” என்றார். 

மதுரகவிகள் சடகோபருடைய திருவடி தொழுது,  பாசுரங்களைப் பட்டோலை கொண்டார். தாம் பாடிய கண்ணிநுண் சிறுத் தாம்பு என்ற பாசுரத்துடன், சடகோபருடைய திவ்யபிரபந்தம் என்ற தமிழ் வேதத்தை தன் நெஞ்சுள் நிறுத்தி, கைத்தாளப் பண் இசையோடு நாவினால் நவிற்று இன்பம் எய்தி, ’பாவின் இன்னிசை பாடித் திரிவனே’ என்று எப்போதும் பாடிக்கொண்டு  அவற்றின் பெருமைகளை அருள் கொண்டாடும் அடியவர் இன்புற எண் திசையும் அறிய இயம்பி, உலகுக்கு உபதேசித்துக் கொண்டு வாழ்ந்து வந்த போதிலும், அவருக்கு தன் ஆசாரியனின் பிரிவை ஆற்ற மாட்டாமல் வருந்தினார். அன்னையாய் அத்தனாய் தன்னை ஆண்ட’ ஆசாரியனை தினமும் தொழமுடியாமல் தவித்தார்.  

கண்ணிநுண் சிறுத்தாம்பு கொண்டு  நம்மாழ்வாரை தியானித்தார். நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். 

மதுரகவிகள் சடகோபரை வணங்கி ”கரிய கோலத் திருவுருவைக் காட்டிக்கொடுத்த தங்களைக் காணாது  என் மனம் தவிக்கிறது! சடகோபன் என் நம்பிக்கு அடிமை தொண்டு செய்ய மனம் தவிக்கிறது ! நித்தம் தேவரீரை ஆராதிக்கும் வழியை அருள வேண்டும்” என்று வேண்டி நின்றார். 

நம்மாழ்வார் “மதுரகவிகளே! எல்லா வளமும் சீர்மையும் பெற்ற இந்தத் தாமிரபரணி நீரைக் காய்ச்சும்” என்றார். உடனே மதுரகவிகள் வேகமாக ஓடிச் சென்று தாமிரபரணி ஆற்று நீரைத் தலையில் சுமந்து வந்து காய்ச்சினார். அப்போது அவருக்கு ஒரு திருவுருவ விக்ரகம் கிடைத்தது. ஆனால் அது நம்மாழ்வார் போல இல்லை! 

“பெரிய வண் குருகூர் நகர் நம்பியே!  இம்மூர்த்தி தங்களை ஒக்கும்படி இல்லை,  முழுமையாகவும் இல்லை, செதுக்கியும், செதுக்காமலும் இருக்கிறாரே!” என்று மதுரகவி வினவினார். 


சடகோபன் புன்னைகைத்து “வருங்காலத்தில் இவரை பற்றி தான் எல்லோரும் மோட்சம் போகப் போகிறார்கள். இவர் தான் வருங்காலத்தில் அவதரிக்கப் போகும் மாஹாநுபாவர், வருங்கால ஆசாரியன். ஆசாரிய சம்பிரதாயத்தைத் தழைக்கச் செய்யவிருக்கும் பின்னாள் ஆசாரியன்!” என்றார்.

மதுரகவிகள் ஆச்சரியப்பட்டு “ஆஹா ! பொலிக பொலிக என்ற பாசுரத்தை அடியேனுக்கு உரைத்த போது, வருங்கால ஆசாரியன் குறித்து அன்று அறிவித்தது இவரோ ?” என்று புளகாங்கிதத்துடன் கேட்டார். 

நம்மாழ்வார் “ஆம்! கண்ணன் பரமபதம் புறப்படும் முன் அர்ஜுனனிடம் எங்குத் தேடிப் பார்த்தாலும், வாசுதேவனே எல்லாம் என்று சொல்லிக்கொள்பவன் எனக்குக் கிடைக்கவில்லை என்று துவபார யுகத்தின் கடைசியில் ஏக்கத்துடன் வைகுண்டம் புறப்பட்டார்.  

இந்த வருங்கால ஆசாரியன்  அரங்கனுக்கு உடையவராக,  அரங்கனின் அடியவர்களுக்கும் உடையவராக, கண்ணன் சாதிக்க முடியாததைச் சாதிக்கப் அவதரிக்க போகிறார்! வருங்கால ஆசாரியரான அவர் வேறு இல்லை நாம் வேறு இல்லை! இவரை நம் அடியாகப் பாவித்துப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்!” என்றார். 

மதுரகவிகள் அம்மூர்த்தியை உறங்காப்புளி அடிவாரத்தில் மறைத்து வைத்து,  “ தேவரீரே அடியேனுக்குத் தெய்வம். தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி!ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய தயை கூர்ந்து உங்கள் ஆர்ச்சா மூர்த்தியை அடியேனுக்கு தந்தருள வேண்டும்!” என்று வேண்டி நின்றார். “மீண்டும் காய்ச்சும்!” என்றார் சடகோபன். 


மதுரகவிகள் மீண்டும் தாமிரபரணி புனித நீரை காய்ச்சினார். அப்போது மதுரகவிகள் விரும்பியபடியே நம்மாழ்வார்  தாமரைப் பூ போன்ற திருக் கண்களும், கல்ப லதா கல்பமான திருமூக்கும், ப்ரணத தீஷிதமான திருத் தோள்களும், திருமேனியில் அழகு வெள்ளம், முழு மதகாகத் திறந்து கரைபுரண்டு ஓடும் தாமிரபரணி அற்றின் வெள்ளம் போல, அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பனான நம்மாழ்வார் ஞானப்ரதன் என்பதைக் குறிக்கும் சின்முத்திரையோடு ஞான உபதேச திருக்கோலத்தில் உற்சவ மூர்த்தியாக வெளிப்பட்டார்.

மதுரகவி உவகையுடன் சடகோபருடைய அர்ச்சா விக்கிரகத்தை ஏறியருளச் செய்து, அவருக்கு உற்சவங்களை ஏற்படுத்திச் சிறப்பாக நடத்தினார். 

வேதம் தமிழ்செய்த பெருமாள் வந்தார் !
திருநகரிப் பெருமாள் வந்தார்!
திருவழுதிவளநாடர் வந்தார்!
திருக்குருகூர் நம்பி வந்தார்!
காரிமாறர் வந்தார்!
சடகோபர் வந்தார்!
பராங்குசர் வந்தார் ! 

என்று பல விருதுகளை முழங்கிக்கொண்டு நாடெங்கும் ஆழ்வாரின் திவ்ய பிரபந்தங்களை மக்களிடம் பரப்பி வந்தார். பிறகு மதுரகவிகளும் ஆசாரியன் திருவடியை அடைந்தார். இதை நினைவில் வைத்துக்கொண்டு நாம் மீண்டும் நாதமுனிகளிடம் சென்று அவர் கேள்விகளுக்கு விடை யாது என்று அறிந்துகொள்ளாம். 

நம்மாழ்வார் “நாதமுனிகளே! மூன்று விதமாகப் பாடி அழுத்தமாக இசைப்பதன் நோக்கம் என்னவோ ?” என்றார் புன்னகையுடன். 

நாதமுனிகள் தலை வணங்கி கைகூப்பி “ ‘திருத்திப் பணி கொண்டது அடியேனுக்கு ஆயிரத்தை உபதேசித்தது! 

’செயல் திருத்திப் பணி கொண்டது வருங்கால ஆசாரியன் அவதரிக்கப் போகிறார் என்று ரகசியத்தை அருளியது, 

அந்த வருங்கால ஆசாரியனின் உருவத்தை  சர்வ அவய பூர்ணமாகக் அடியேனுக்கு காட்டி அருள வேண்டும், அதற்காகவே ’செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்ளவேண்டும்’ என்று அடியேன் விண்ணப்பித்தேன்! ” என்று நெஞ்சு நிறைய கைகூப்பி நின்றார். (7)

நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார். 

பயணம் தொடரும்... 
- சுஜாதா தேசிகன்

4-10-2020

-----------------------------------------------------------------------------------

(1)நூற்றெட்டு திருப்பதி அந்தாதியில் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரின் வெண்பா

(2) பக்தாம்ருதம் - நாதமுனிகளின் திருவாய்மொழிக்கு அருளிய தனியனின் முதல் வார்த்தை. 

(3) அடிமைப்பட்டவர்கள் தம்மை அடிமையாகக் கொண்டவன் பெயரை மார்பில் எழுதிக் கொள்வர். பெருமாளும், இளையபெருமாளும் தம் குணத்தாலே நாட்டையெல்லாம் ஒரு மார்வெழுக்தாக்கிக் கொண்டிருந்தார்கள். 

(4) நாதமுனிகள் திருவாய்மொழி தனியன் 

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்fரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.

(5) திருவாய்மொழியில் எம்பெருமானின் குணநலன்களும் அதை காட்டும் பாசுரங்களும். 

பரத்துவம் - உயர்வற உயர்நலம் உடையவன் (1.1.1)
காரணத்துவம்  - சோராத எப்பொருட்கும் ஆதியாம் சோதி (2.1.11)
வியாபகத்துவம் - வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுது இயன்றாய் (3.1.5)
நியந்த்ருத்துவம்   - வீற்றிருந்து ஏழுலகும்  தனிக்கோல் செல்ல, வீவில்சீர், ஆற்றல்மிக்கு ஆளும் (4.5.1)
காருணிகத்துவம் - பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி, மெய்யே பெற்றொழிந்தேன்” (5.1.1)
சரண்யத்துவம் - உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (6.10.10)
சக்தத்துவம் - ஆழியெழ, சங்கும் வில்லும் எழ (7.4)
சத்யகாமத்துவம் - நல்ல அருள்கள் நமக்கே தந்து அருள் செய்வான் (8.6.1)
ஆபத்சகத்துவம் - காய்சின வேந்தே கதிர்முடியானே,  கலிவயல் திருப்புளிங்குடியாய் காய்சின ஆழி, சங்கு, வாள், வில், தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே  (9.2.6)
ஆர்த்திஹரத்துவம்  - சூழ்ந்ததனில் பெரிய  என் அவா  அறச் சூழ்ந்தாயே (10.10.10)

(6) கடல் வண்ணன் அடியார்கள் இவ்வுலகில் கூட்டம் கூட்டமாக நிறைந்து இசைபாடி ஆடிக்கொண்டு உலாவுவதைக் கண்டோம். ஆதலால் தீவினைகள் போயின. முன் வினையால் வரும் துன்பங்கள் போயின. யமனுக்கு இனி எவ்வேலையும் இல்லை. கலிபுருஷனும் விரைவில் தொலையக்கூடும். இதனை கண்முன்னே காண்பீர்கள். நீங்கள் வாழ்க வாழ்க வாழ்க 

(7) நாயனாராச்சான் பிள்ளை அருளிச்செய்த சரமோபாய நிர்ணயத்தை தழுவி எழுதியது. Comments

  1. அருமை ஸ்வாமி.
    - உப்பிலிஸ்ரீனிவாசன்

    ReplyDelete

Post a Comment