Skip to main content

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர்

14. இராமானுசன் அடிப் பூமன்னவே - இசைகாரர் 

நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வானையும், கீழையகத்தாவானையும் அன்புடன் நோக்கி “மருமக்களே! அடியேன் திருக்குருகூரில் நடந்த விசேஷ நிகழ்வுகளை இப்போது உங்களுக்குக் கூறுகிறேன்” என்று தான் ஆழ்வார் பாசுரங்களைத் தேடிப் புறப்பட்டதிலிருந்து, பராங்குச தாசரை கண்டு கண்ணிநுண் சிறுத்தாம்பு பன்னிரண்டாயிரம் தடவை உருச்சொன்னதை அடுத்து, சடகோபர் திருவாக்கில் ஆழ்வார்  வைபவங்களுடன் அவர்கள் அருளிய பாசுரங்கள், திருவாய்மொழி முதலியவை கிடைத்த விபரங்கள், ’பொலிக பொலிக’ என்ற பாசுரத்தின் அர்த்த விசேஷங்களைக் கூறி,  கலியின் கொட்டத்தை அடக்க ஓர் ஆசாரியர் அவதரிக்கப் போகிறார் என்று ஆழ்வார் கனவில் காட்சி கொடுத்தது கூறிய விருத்தாந்தங்களை கூறினார். 

எல்லாவற்றையும் கூறிய நாதமுனிகள் தமக்கு ஆழ்வார் பிரசாதித்த பவிஷ்யதாசாரியர் விக்கிரகம் பற்றியும் அது தன்னிடம் இருப்பதையும்  அவர்களிடம் கூறாமல் ரகசியமாக வைத்துக்கொண்டார்.   

மிகுந்த ஆச்சரியத்துடன் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டிருந்த மருமக்கள் கண்ணீருடன் “உத்தமோத்தமரே! மகானுபாவனுடைய உங்களின் சம்பந்தம் கிடைக்கச் செய்தற்கரிய பெரும் புண்ணியம் என்ன செய்தோம் என்று அறியவில்லை! உங்கள் திருவடிகளைப் பற்றிய எங்களுக்கு நம்மாழ்வார் திருவடி சம்பந்தமே கிடைத்ததே!” என்று பரவசத்துடன்  நாதமுனிகளை வணங்கினர். 

நாதமுனிகள் மகிழ்ச்சியுடன் அவர்களைத் தழுவிக்கொண்டு, ”வாருங்கள் ஆழ்வார் பாசுரங்களுக்குப் பண்கள் அமைக்கலாம்” என்று தன் மருமக்களுடன் சேர்ந்து இசைக் கூட்டி சங்க காலத்தின் தமிழிசை மரபு அடிப்படையில் பண் அமைக்க ஆரம்பித்தார்கள்.  

நாம் அவர்களுக்கு எந்த இடையூறும் செய்யாமல் சற்று நேரம் அவர்கள் எப்படிப் பண் அமைக்கிறார்கள் என்று சிறிது நேரம் கவனித்துவிட்டு செல்லலாம். 

நாதமுனிகள் ஆழ்ந்த சிந்தனையில் இருக்க மேலயகத்தாழ்வான் “திருமங்கை ஆழ்வார் திருக்கோவலூரில் ‘வந்தனை செய்து இசை ஏழ் ஆறு அங்கம் ஐந்து வளர் வேள்வி நால் மறைகள் மூன்று தீயும்’ என்று கூறியிருக்கிறார். அப்படி என்றால் ஆழ்வார்கள் இசை ஏழும் நன்கறிந்தவர்கள் அன்றோ!” என்று கூற உடனே கீழையகத்தாவான் “காழிச்சீராம விண்ணகரில் ‘அருமறைகள் திறன் நான்கும் வேள்வி ஐந்தும் அங்கங்கள் அவையாறும் இசை ஏழும்” என்று அங்கேயும் கூறியிருக்கிறார்” என்று கூற நாதமுனிகள் “ஆம்! நீங்கள் கூறுவது மிகவும் சரி, இதைத் தவிர திருநாங்கூர் மணிமாடக் கோயில் பாசுரத்தில் “முக்தீயர், நால்வேதர், ஐவேள்வி ஆறங்கம், ஏழினிசையோர் என்றும் வைகுந்த விண்ணகர் பாசுரத்திலும் ஏழிசை பற்றிக் கூறியுள்ளார். இதைத் தவிர எம்பெருமானையே ‘ஏழிசையின் சுவைதன்னை!” என்றும் திருமங்கை மன்னன் பாடியுள்ளார் என்றார். 

மேலயகத்தாவான் “நம்மாழ்வாரும் ‘ஏழிசையின் சுவை தானே ஏழிசையின் சுவைதன்னை’ இன்னிசையானவனே’ என்றும் பாடியுள்ளாரே!” என்றார் 

 கீழகத்தாழ்வான் “ஆழ்வார் பாசுரங்களில் இசைக் கருவிகள் பற்றியும் பாடியுள்ளார்கள் குலசேகராழ்வார் இணை இல்லா இன்னிசை யாழ் கெழுமி’ என்றும் பெரியாழ்வார் கண்ணனின் குழலோசையை வர்ணிக்கும்போது புல்லாங்குழல் தும்புரு, வீணை, கின்னரம் ஆகிய பண்ணிசைக் கருவிகளைக் கூறுகிறார். இதைத் தவிர தண்ணுமை, எக்கம், மத்தளி, முழவம், பறை, மத்தளம், சங்கு, துடி, முரசு என்று நீண்ட  இசைக் கருவி பட்டியலே இருக்கிறது!” என்றார்

நாதமுனிகள் மகிழ்ந்து “உங்களை போன்றவர்களை என் மருமக்களாகப் பெற்றது என் பாக்கியம்!” என்று அவர்களை வாழ்த்தினார். 

ஒப்பற்ற அவ்விருவரோடும் சேர்ந்து  செப்புதற்கரிய ஆழ்வார் அருளிய தமிழ்ப் பாடல்கள் அனைத்தையும் முறைப்படி தேவகானத்தில் அமைத்து பாகவதர்கள் அனைவருக்கும் ஓதுவித்தனர். 

கணக்கல்லாத பாகவதர்கள் கற்றுக்கொள்ள ஆழ்வார் பாசுரங்கள் இசையுடன் தேவகானமாகப் பல இடங்களுக்குப் பரவிச் சென்றது. சில காலம் கழித்தபின் அந்நாட்டு சோழ அரசவையில் விசித்திரமான வாழக்கு ஒன்று வந்தது. 

சிவந்த வாயையும், மெல்லிய இடையையும் உடைய இருபெண்களுக்குச் சிறு வாக்குவாதம் ஆரம்பித்து, அது பெரும் சச்சரவாக உருவெடுத்து, அரசன் முன் சென்றது. 

அரசன் “என்ன வழக்கு ?” என்று கேட்க இந்த வாக்குவாதம் எப்படி ஆரம்பித்தது என்று அவையில் இருந்தவர்கள் கூறினார்கள். 

“அரசே! அவையில் பெண்கள் இருவர் பாடினர் இதோ சிவந்த வாயை உடைய இந்தப் பெண்மணி மனித கானம் பாடினாள். மெல்லிய இடையை உடைய இந்தப் பெண் தேவகானம் பாடினாள். இவை இரண்டில் எதற்குப் பெருமை என்று இருவருக்குள் போட்டி ஏற்பட்டது. நீங்கள் தான் அதை நன்கு ஆராய்ந்து எது சிறந்தது என்று கூறவேண்டும்!” என்றார் 

அரசன் அப்பெண்களிடம் “மீண்டும் பாடுங்கள்!” என்றான். அவ்விருவரும் மீண்டும் பாடினார்கள். அரசன் தன் பக்கத்தில் இருந்த அமைச்சர்கள், வியாபாரிகள், அந்தணர் அனைவரோடும் கலந்து ஆலோசித்து “இருவரும் பாடிய பாட்டை கேட்டோம். மனித கானத்துக்கு இணையாகுமோ தேவகானம் ? பெண்ணே! உன் இசை எங்களுக்குப் புரியவில்லை, அதனால் அதை  எங்களால் போற்றவும் முடியவில்லை” என்று கூறினான். 

மனித கானம் பாடியவள் போற்றப்பெற்று ம அவளுக்கு உயர்ந்த ஆடைகளையும், ஆபரணங்களையும் பரிசாகக் கொடுத்தான். புறக்கணிக்கப்பட்ட தேவகானம் இசைத்த பெண்மணி “மண்ணுலகத்தவர் அறியாத என் பாட்டின் பெருமையை விண்ணுலகத்தவர் அறிவர்! இனி மானிடருக்கு நான் பாட போவதில்லை. திருமால் கோயில்கொண்டிருக்கும் திருக்கோவில்களுக்கெல்லாம் சென்று பாடி திருமாலையும் அடியார்களையுமே மகிழ்விக்கப்போகிறேன். என்றாவது ஒருநாள் என்னுடைய கானத்திற்கு அங்கீகார கிட்டும்” என்று வருத்தம் கலந்த கோபத்துடன் சபையைவிட்டு வெளியேறினாள். 

திருமால் கோயில்கொண்டிருக்கும் திவ்யதேசங்களுக்கெல்லாம் சென்று தேவகானத்தைப் பாடிக்கொண்டு வந்தாள். ஒருநாள் வீரநாராயண புரம்  மன்னனார் முன் நின்று தேவகானத்தை உள்ளம் உருக பாடினாள். 

இதைக் கேட்ட நாதமுனிகள் “குழந்தாய்! நீ யார் ? உன் இசையில் மயங்கினேன். இந்த உலகத்திலேயே உன் தேவகான இசைக்கு சமானமானவர்கள் யாரும் கிடையாது போலிருக்கிறதே!  உனக்கு என்னுடைய ஆசிகள்” என்று அவளுக்கு திருத்துழாய், தீர்த்த பிரசாதங்கள் கொடுத்துப் பாராட்டி ஆசீர்வதித்தார். 

அந்தப் பெண் நாதமுனிகளின் திருவடிகளை வணங்கி உள்ளம் கனிந்து மின்னல் போல அரசவையை நோக்கி ஓடினாள். 

அரசவையில் அப்பெண் “அரசே! அன்று இதே அவையில் என் இசையை நீங்களும் மற்றவர்களும் சேர்ந்து புறக்கணித்தீர். அற்ப மனித கானத்திற்குப் பொன்னும், பொருளும் மணியும் மாலையும் கொடுத்துக் கௌரவித்தீர். தேவகானத்தை அறிந்து போற்றும் பெரியவர் ஒருவர் காட்டுமன்னார் கோயில் சந்நிதியில் இருக்கிறார்! அவரை அழைத்து மீண்டும் இருவரையும் பாடச் செய்வாயாக! நான் தோற்றேனாகில் இனி ஒலிமிக்க வீணையைத் தொட மாட்டேன்” என்று பெருமிதத்தோடு தனக்குக் கிடைத்த பெருமாள் மாலையைக் காண்பித்துக் கூறினாள்.  

சோழ மன்னன் மீண்டும் அவையினை கூட்டினான். நாதமுனிகளை அழைத்துவருமாறு தூதர்களிடம் ஓலை அனுப்பினான். நாதமுனிகள் இவ்வுலகத்தில் தேவகானத்தின் அழகையும் பெருமையும் விளக்கி காட்ட வேண்டும் என்று எண்ணி ஓலை கொண்டு வந்தவர்களோடு சென்று அரசன் முன் நின்றார்.  

பாட்டினால் மாறுபட்டு நிற்கும் இருபெண்களும் சபையில் இருந்தார்கள்.  மன்னர் கையசைக்கப் பெண்கள் இருவரும் இனிய ராகத்தில் பாடினர். அவர்களின் பாடலை கேட்ட நாதமுனிகள் அரசனை வணங்கி “அரசே! மனித கான இசையினை சாதாரணம் மனிதர்களே உணரமுடியும். தேவகானத்தின் சிறப்பை தேவர்களே உணர முடியும்” என்று உரைத்தார். 

அவையில் எல்லோரும் என்ன நடக்கப் போகிறதோ என்று அரசனின் முகத்தையும், நாதமுனிகளையும் நோக்க பிரதான மந்திரி “நாதமுனிகளே! சாதாரணம் மனிதரால் உணர முடியாது என்று... நீர் கூறுவதைப் பார்த்தால் மன்னரையும் சாதாரண மனிதர் என்று கூறுகிறீர்கள் போலிருக்கிறதே!  நீரும் சாதாரண மனிதர் அல்லவா ? உமக்கு மட்டும் எப்படி தேவகானத்தை உணர முடிந்தது ?” என்று சற்று கோபத்துடன் கேட்டார். 

அரசன் மந்திரியை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டி  நாதமுனிகளைப் பார்த்து “இயல் இசை நாடகம் என்ற மூன்று வகைப்படும் தமிழ்கள் முழுவதும் கற்று அறிவில் மிகுந்தவரே! இந்தத் தேவகானத்தை நீ எவ்வாறு அறிந்தீர் ? இயற்கையான இவற்றின் வேறுபாட்டை எமக்கு கூறுவீராக” என்று அமைதியாகக் கேட்டான். 

நாதமுனிகளுக்கு தன் இசைப்புலமையை நிறுவ வேண்டிய நிலை நேர்ந்தது.  காட்டுமன்னாரைத் தியானித்து,  மன்னனையும், அந்த அழகு பெண்களையும் நோக்கி ”அரசே! நாற்பது நூறு தாளங்களை ஒரு சேர ஒற்றுங்கள்(2) அவற்றின் ஓசை வேறுபாடுகளைக் கொண்டு ஒவ்வொன்றின் எடையினை அடியேன் கூறுகிறேன்!” என்றார் 

சபையில் ”எது எப்படிச் சாத்தியம்!” என்று எல்ல்லோரும் ஆர்வமாக இருக்க சபையில் நான்காயிரம் தாளம் இசைக்கப்பட்டது. நாதமுனிகள் ஒவ்வொன்றின் எடையினையும் கூறினார். தனித்தனியே நிறுத்துப் பார்த்து நாதமுனிகள் கூறியதற்கு ஒரு மாகாணி கூட ஏற்றத்தாழ்வில்லாமல் இருப்பதைப் கண்ட மன்னன் நாதமுனிகளின் திருவடிகளில் விழுந்து வணங்கிப் போற்றினான். கணக்கற்ற செல்வங்களைப் பரிசாக அளித்தான். 

நாதமுனிகள் “அரசே!  இச்செல்வங்களெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. பெருமையுடைய வீரநாராயணபுரத்து மன்னருக்கே இவற்றையெல்லாம் அனுப்புங்கள்” என்றார் நாதமுனிகள். 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு நாதமுனிகளின் புகழ் சோழ தேசம் மட்டுமல்லாது அவற்றைத் தாண்டியும் பரவியது. அவருடைய இசையைக் கேட்க வீரநாராயணப் புரம் சுற்றி தேவர்கள் புடைசூழ, நம்மாழ்வாரின் திருமேனி வடிவத்தை மனதில் நிறுத்தி, மன்னாரது திருவடியின் கீழ் தேவகானத்தை இசைத்துக்கொண்டு இருந்தார் நாதமுனிகள். 

நாதமுனிகளைப் பற்றிக் கேள்விப்பட்டு திருக்குருகூர், திருவெள்ளறை, திருக்கண்ணமங்கை ஆகிய திவ்ய தேசத்திலிருந்து நாதமுனிகள் இருக்கும் வீரநாராயணபுரம் நோக்கி மூவர் புறப்பட்டார்கள். 

பயணம் தொடரும்... 
 - சுஜாதா தேசிகன்
25-10-2020
இன்றைய ( சரஸ்வதி பூஜை )  நன்னாளில் இசை பற்றி வந்த இந்த பதிவு தற்செயலாக அமைத்தது. 

-------------------------------------------------------------

(1) இசைகாரர்  - நாதமுனிகள் பண்ணிசையிலும் தமிழிசையிலும் வல்லவராக விளங்கினார். ‘பாலேய் தமிழர் இசைகாரர்’ என்ற திருவாய்மொழி பாசுர ஈட்டு உரையில் இசைக்காரர்  - இயலுக்கு இசையிட வல்லவர்கள். ஸ்ரீமதுரகவிகளையும், நாதமுனிகளையும் போல இருக்குமவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

(2) ஒற்றுங்கள் - போடுங்கள் 


Comments

 1. அற்புதம் ஸ்வாமி

  ReplyDelete
 2. இந்தப் பதிவு நேற்று சரஸ்வதி பூஜை அன்று வந்தது தற்செயல் அல்ல! ஆழ்வாரும், நாதமுனிகளும், நம்பெருமாளும் உங்களுக்கு அருளிய வரம்.

  பண்ணாக இசைக்கும்போதுதான் பலவும் மனதில் பதிந்து நிற்கின்றன.

  அடியேன்.

  ReplyDelete
 3. புதியன கற்றோம்.

  ReplyDelete
 4. நாதமுனிகள் அமைத்து கொடுத்த பண் முறைப்படி தற்பொழுது ஆழ்வார் பாசுரங்களை யாரேனும் படுகின்றார்களா? தகவல்கள் தர முடியுமா? நன்றி

  சுப்ரமணியம்

  ReplyDelete
 5. Ji ,well written ! This approach helped to recall what i had read some years ago! Ji , nanri!

  ReplyDelete

Post a Comment