Skip to main content

மெய் கறுத்த கருத்து

மெய் கறுத்த கருத்து 



ஆண்டாள் வருண தேவனைப் பார்த்து மழை வேண்டும் என்று கேட்கும் பாசுரம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 'ஆழி மழைக் கண்ணா’ என்று ஆரம்பித்து, ’ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து’ என்று கூறுகிறாள்.  

ஊழி முதல்வன் போல் கறுத்து என்று சொன்னாலே போதுமே எதற்கு ’மெய்’ என்ற extra fitting ? ஆழ்வார் பாடல்களில் எங்கு எல்லாம் கருமை நிறம் வருகிறதோ அங்கே எல்லாம் அவனுடைய கருணையை ஆழ்வார்கள் கூற தவறுவதில்லை. எம்பெருமானுடைய நிறத்தை மேகங்கள் கொள்ளலாமே தவிர அவனுடைய கருணையைக் கொள்ள முடியாது. அதனால் ஆண்டாள் ’மெய்’ கறுத்து என்று கூறுகிறாள். ( மெய்யாலும் கறுக்க வேண்டும் என்கிறாள்)

கருமேகங்கள் மழைக்குப் பிறகு வெளுத்துவிடும், ஆனால் கண்ணனின் திருவுள்ளம் நமக்கு அநுக்ரஹம் செய்ய வேண்டும் என்று எப்போதும் கறுத்து இருக்குமாம். அந்த வாத்ஸல்யம் வேண்டும் என்று உணர்த்தத் தான் ஆண்டாள் ‘மெய்’ கறுத்து என்று அழுத்தி தன் கருத்தைக் கூறுகிறாள். 

நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தைப் பார்க்கலாம். 

பொருத்தம் உடைய நம்பியைப்
புறம் போல் உள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற
அக் கரு மா முகிலைக் கண்டீரே?
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்

கவனிக்க வேண்டிய வரி “புறம் போல் உள்ளும் கரியானை” 

பொருத்தமுடைய தலைவன் கண்ணனின் உடல் போல உள்ளமும் கறுத்தவன் என்கிறாள் ஆண்டாள்.  அதாவது உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேச மாட்டான் - கண்ணுக்கு இரண்டும் ஒன்றாம். மெய் கறுத்து ! ஆனால் இந்த கண்ணனின் கருணை ஒருவரிடம் தோற்றுப் போகும்!

திருவரங்கத்தில் மார்கழி மாதம். பகல் பத்து உற்சவத்தின் கடைசி நாள். நம்பெருமாள் ஸ்ரீரங்க நாச்சியார் போலத் திருக்கோலம் பூண்டு கம்பீரமாக அங்கே வருகிறார். கருட மண்டபத்தில் எல்லோரும் பிரமித்து பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். அந்தச் சமயம் பராசரபட்டர் அங்கே வந்து, பெருமாளைச் சேவித்தார். 

பெருமாள் பட்டரை பார்த்து “எப்படி ?” என்று கேட்க அதற்குப் பட்டர் “நாச்சியார் திருக்கோலம் தேவரீருக்குப் பொருத்தமாக இருக்கிறது இருந்தாலும்.. “ என்று நிறுத்துகிறார் 

“பட்டரே ! இருந்தாலும் என்ன ? சொல்லும்!” என்று கேட்க அதற்குப் பட்டர் ”நாச்சியாருடைய வேடத்தைப் போட்டுக்கொள்ளலாமே தவிர அவருடைய கருணை விழியை ஏறிட்டுக்கொள்ள உம்மாலும் முடியாது!” என்றார்

அதுபோல எம்பெருமானுடைய நிறத்தை மேகங்கள் ஏறிட்டுக்கொள்ளலாமே தவிர அவனுடைய கருணையை ஏறிட்டுக் கொள்ள முடியாது என்பது தான் ‘ஊழி முதல்வன் உருவம்போல மெய் கறுத்து’ என்பது. 

இன்று திரு கேஷவ் ஓவியத்தைப் பார்த்தபோது இது தான் அடியேனுக்கு தோன்றியது. 

நம்பெருமாள், தாயார் படங்கள் கொடுத்துள்ளேன் பட்டர் சொன்னது சரியா என்று நீங்களே பார்த்துக்கொள்ளலாம். 

- சுஜாதா தேசிகன்
22-10-2020

ஓவியம் : நன்றி திரு கேஷவ் 

Comments