பரம காருணிகரான பின்பழகிய பெருமாள் ஜீயர்
இந்தப் படம் ஸ்ரீரங்கத்தில் இருக்கும் நம்பிள்ளை. அவருடைய திருவடிக்குக் கீழே ஒரு ஜீயர் இருக்கிறார் அவர் யார் என்று தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படிக்கலாம்.
’வடதிசை பின்பு காட்டி தென்திசை இலங்கை நோக்கி' என்ற திருவரங்க பாசுரம் மிகப் பிரபலம். ஏன் தன் பின் பகுதியை பெருமாள் வடதிசையை நோக்கிக் காண்பிக்கிறார் என்ற கேள்விக்கு நம் பூர்வர்கள் பதில் கூறியிருக்கிறார்கள்.
அழகிய மணவாளன் என்ற திருநாமம் ஆண்டாள் காலத்திலிருந்து நம்பெருமாளுக்கு உண்டு. ஆனால் அவருடைய ’ முன் அழகை’க் காட்டிலும் பின் அழகு இன்னும் அழகாக இருக்குமாம். அதனால் ‘முன்னிலும் பின்னழகிய பெருமாள’ என்று நம்பெருமாளுக்கு இன்னொரு ஸ்பெஷல் திருநாமமும் உண்டு.
வடக்கே இருக்கும் கூட்டத்தை தெற்குப் பக்கம் ஈர்க்க அவர் பின்னழகைக் காட்டினார் என்பார்கள். இந்த ‘பின் அழகு’ என்ற பெயர் கொண்ட ஜீயர் தான் 'பின்பழகிய பெருமாள் ஜீயர்’. திருபுட்குழியில் அவதரித்த இவர் நம்பிள்ளையின் அர்மார்த்தமான சிஷ்யராக இருந்தார்.
பின்பழகிய பெருமாள் ஜீயர் ஒரு முறை நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் இருந்தார். கூட இருந்தவர்களை அழைத்து ‘நம்பெருமாளிடம் ஆழ்வார் பாசுரங்கள் சேவித்து என் நோய் தீர்க்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்’ என்று விண்ணப்பம் செய்தார். அவர்களும் அவ்வாறே செய்ய, நோயும் குணமாகியது.
ஸ்ரீவைஷ்ணவர்கள் இப்படி தேகத்துக்காக பெருமாளிடம் வேண்டிக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ லக்ஷ்ணத்துக்கு விரோதம். இவரோ ஜீயர் ( சன்னியாசி ) இவரே இப்படி வேண்டிக்கொள்வது தகுமா ? என்று சிலர் அவருடைய ஆசாரியனான நம்பிள்ளையிடம் ”பெருமாளிடம் உடல் நலத்தை வேண்டிப் பெற்றது முறையா ?” என்று கேட்டார்கள். அதற்கு நம்பிள்ளை ”இதற்கு விடையை எங்களாழ்வானிடமும், திருநாராயணபுரத்து அரையரிடமும், அம்மங்கி அம்மாள், பெரிய முதலியாரிடம் சென்று கேட்டுப்பாருங்கள்” என்றார்.
சிஷ்யர்கள் முதலில் எங்களாழ்வானை கேட்க அவர் ’அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகர் உளானே’ அன்று ஜீயருக்குத் திருவரங்கத்தின் மீது உள்ள பற்றாக இருக்கலாம் என்று பதில் கூறினார்.
அடுத்து திருநாராயணபுரத்து அரையரிடம் கேட்டார்கள் அதற்கு அவர் “இன்னும் முடிக்காத சில கைங்கரியங்கள் சில ஜீயருக்கு இருக்கலாம். அதை முடிக்க வேண்டும் என்பதற்காக இன்னும் சிறிது காலம் வாழ விரும்பியிருக்கலாம்” என்றார்.
அம்மங்கி அம்மாள் “ஜீயருக்கு நம்பிள்ளை காலட்சேபம் என்றால் மிகவும் பிடிக்கும், அந்த அனுபவத்தைப் பிரிய மனமில்லாது மேலும் அனுபவிக்க வேண்டும் என்று இவ்வாறு பிரார்த்தனை செய்திருக்கலாம்” என்றார்.
பெரியமுதலியாராரோ “இவருக்கு நம்பெருமாளிடம் மிகுந்த பற்று காதல். அவரை விட்டுப் பிரிய மனமில்லாமல் இங்கேயே இருக்க ஆசைப்பட்டிருப்பார்” என்றார்.
சிஷ்யர்கள் நம்பிள்ளையிடம் வந்து இந்தப் பதில்களைச் சொன்னார்கள். நம்பிள்ளை சரி ஜீயரையே அழைத்து இதில் எது சரி என்று கேட்டுவிடலாம் என்று அவரிடமே காரணத்தைக் கேட்க அதற்கு பின்பழகிய பெருமாள் ஜீயர் ”உங்களுக்கு தெரியாதது இல்லை, இருந்தாலும் சொல்லுகிறேன். தேவரீர் தினமும் ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன் தேவரீரின் திருமேனியைக் கண்குளிரக் கண்டு தேவரீருக்கு ஆலவட்டம் வீசுதல் என்ற கைங்கரியத்தை விட்டு அடியேன் பரமபதம் போக விரும்பவில்லை” என்றார்.
இந்த மாதிரியான பிரேமையை எப்படி அளக்கலாம் ? நம்மாழ்வாரை காட்டிலும் ‘தேவுமற்று அறியாத’ மதுரகவிகள் போலவும், எம்பெருமானாரைக் காட்டிலும் வேறு அறியாத வடுகநம்பியைப் போலவும் இவர் இருந்தார்.
பின்பழகிய பெருமாள் ஜீயர் சேர்த்தருளிய வார்த்தாமாலை என்ற புத்தகத்தில் இப்படியொரு குறிப்பு இருக்கிறது
“ஆண்டாள் வார்த்தை : ஆசாரியன் விஷயத்தில் அபசாரம் பண்ணின நாலூரானும் ஈடேறினான். பகவத்விஷயத்தில் அபசாரம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான். பாகவத விஷயத்தில் அபசாரம் பண்ணினார் இன்னார் ஈடேறினாரென்று இதற்கு முன்பு கேட்டறிவதில்லை”
இரண்டு முறை மெதுவாகப் படித்தால் இதற்கு அர்த்தம் புரிந்துவிடும்.
கூரத்தாழ்வான் பேரனான நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர் பெரிய வித்துவான். ஆனால் நம்பிள்ளையிடம் புலமைக்காய்ச்சலால் பொறாமையுற்று அவரிடம் விரோதம் பாராட்டினார்.
ஒரு முறை சோழ அரசவைக்கு அழைக்கப்பட்டார். கூடப் பின் பழகிய பெருமாள் ஜீயரை அழைத்துச்சென்றார். அரசன் ஏதோ வேலைப்பார்த்துக்கொண்டே ஸ்ரீராமாயணத்தில் ஒரு சந்தேகம் கேட்டுவிட்டு தன் பணியில் மீண்டு ஈடுபடத் தொடங்கினான். பட்டருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஜீயரிடம் “இதற்கு நம்பிள்ளை எப்படிப் பொருள் கூறுவார்?” என்று கேட்டார். ஜீயரும் அதற்கு நம்பிள்ளை எப்படி விளக்கம் சொல்லுவார் என்று எடுத்துக்கொடுக்க அதையே பட்டரும் அரசனிடம் சொல்ல, அரசன் மகிழ்ச்சியடைந்து பரிசுப் பொருள்களை வழங்கினான்.
பட்டர் நேராக ஸ்ரீரங்கம் விரைந்தார். பரிசுப்பொருள்களை நம்பிள்ளையின் திருவடிகளில் சம்பர்பித்து “தேவரீருடைய பொருளுரையில் பதினாயிரங் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற செல்வம் இது” என்று காலில் விழுந்தார்.
பின்பழகிய பெருமாள் ஜீயர் தொகுத்தருளிய வார்த்தா மாலையில் சுவாரசியமான இந்தக் கதையும்
ஒரு குருகுலத்தில் ஆசாரியன் ஸ்ரீராமாயணத்தில் என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற மூன்று சிஷ்யர்களை பார்த்துக் கேட்டார்.
முதல் சிஷ்யன், ஸ்ரீராமர் மனிதப் பிறவி எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டப்பட்டார் சரீர சம்பந்தமே இருக்கக் கூடாது என்றான். குருவும் ”சரி அப்படியானால் இந்தச் சரீர சம்பந்தத்தை அறுக்க நீ தபஸ் முதலிய உபாயங்களைச் செய்ய புறப்படு” என்று அனுப்பிவிட்டார்.
இரண்டாவது சிஷ்யன் ”தாய் தந்தையரை போற்ற வேண்டும்.அவர் சொல்பேச்சு கேட்டு. அவர்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும்”. . குருவும் ” நீ திருமணம் செய்துகொண்டு உன் மாதா பிதாவிற்குத் தொண்டு செய்ய புறப்படு” என்று அனுப்பிய பிறகு கடைசி சிஷ்யனைக் கேட்டார். ”ஸ்ரீராமரின் வில்லே எனக்கு உபாயம்” என்றான். ஆசாரியன் சிஷ்யனைத் தழுவிக்கொண்டார்.
இன்று ஐப்பசி சதயம் பேயாழ்வார் திருநட்சத்திரம், திருக்கண்டேன் என்று திருமாலை கண்டார். பின்பழகிய பெருமாள் ஜீயரும் இதே நட்சத்திரம். இவர் ஆசாரியனின் ‘பொன்மேனியைக் கண்டார்’
இவர் நமக்கு அருளிய ஆறாயிரப்படி குருபரம்பரை, மற்றும் வார்த்தா மாலை கொண்டு தான் நாம் நம் ஆசாரியர்களைப் பற்றி தெரிந்துகொள்ள முடிகிறது.
பழைய குருபரம்பரை புத்தகத்தில் ’பரமகாருணிகரான பின்பழகியபெருமாள்ஜீயர் அருளிச்செய்தருளின ஆறாயிரப்படி குருபரம்பராப்ரபாவம்’ என்று தலைப்பு இருக்கும். தற்போது அந்த ’பரமகாருணிகரான’ என்ற வார்த்தை இருப்பதில்லை. ஆனால் நாம் அதை மறக்க கூடாது.
- சுஜாதா தேசிகன்
26-10-2020
ஐப்பசி சதயம்
ஸ்ரீ பேயாழ்வார் திருநட்சத்திரம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் திருநட்சத்திரம்
🙏🙏 தாசன். பின்பழகியஜீயர் பற்றி இதுவரை யார்வாயினும் கேள்விப்பட்டதில்லை. படிக்க தெவிட்டாத அருமருந்து உங்கள் பதிவுகள்.
ReplyDeleteஒரு நல்ல ஆசிரியர் என்னதான் நன்றாகபோதித்தாலும், புரியாத சிலர் இருப்பார்கள். அவர்கள் அளவுக்கு தாழ்ந்து புரியவைக்கும் நல்லாசிரியர் நீங்கள்.
அடியேன்.
அருமை 👌.
ReplyDelete“ஆண்டாள் வார்த்தை : ஆசாரியன் விஷயத்தில் அபசாரம் பண்ணின நாலூரானும் ஈடேறினான். பகவத்விஷயத்தில் அபசாரம் பண்ணின சிசுபாலனும் ஈடேறினான். பாகவத விஷயத்தில் அபசாரம் பண்ணினார் இன்னார் ஈடேறினாரென்று இதற்கு முன்பு கேட்டறிவதில்லை”
ReplyDeleteஇதற்க்கும் அர்த்த விசேஷத்தை தேவரீர் உரைக்க வேண்டுகிறேன்.