Skip to main content

காந்திஜிக்குப் பிடித்த பஜன் !

காந்திஜிக்குப் பிடித்த பஜன் 



காந்திஜி நிலக்கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றை உண்டார் என்று விஷயம் பலருக்குத் தெரிந்திருக்கிறது ஆனால்  அவருக்குப் பிடித்த மீரா பஜன் பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  

எம்.எஸ். எப்போதும் காந்திஜி அவர்களுக்குப் பிடித்த ‘வைஷ்ணவ ஜனதோ’ என்ற பாடலைக் கடைசியில் பாடுவது வழக்கம். ( அதைப் பற்றி நேற்று எழுதினேன்).  

1947ல் காந்திஜி பிறந்த நாளுக்கு ஒரு வாரம் முன் காந்திஜிக்குத் தெரிந்தவரிடமிருந்து எம்.எஸ், சதாசிவம் தம்பதியினருக்குத் தொலைப்பேசி அழைப்பு 

“அக்டோபர் 2 காந்திஜி பிறந்த நாள் இசை நிகழ்ச்சிகள் பல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது எம்.எஸ் அவர்கள் கலந்துகொண்டு ‘ஹரி தும் ஹரோ’ என்ற காந்திஜிக்குப் பிடித்த மீரா பஜனை பாட வேண்டும்” என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. 

“இந்தப் பாடல் தெரியாதே. அதோடு இல்லாமல் எங்களுக்கு அங்கே வர முடியாத குடும்ப சூழ்நிலை. அதனால் வேறு யாரையாவது பாடச் சொல்லுங்கள்” என்று அந்தக் கோரிக்கையைப் பணிவுடன் மறுத்தார்கள். 

காந்திஜியின் பிறந்த தினத்திற்கு இரண்டு நாட்கள் முன் மீண்டும் தொலைப்பேசி அழைப்பு 

”இன்னொருவர் பாடி கேட்பதை விட எம்.எஸ் அந்தப் பாடலைப் பாட வேண்டாம், படித்தாலே போதும்.. டெல்லிக்கு வர முடியாவிட்டால் பரவாயில்லை  அதை ஒரு டேப்பில் பதிவு செய்து அனுப்பிவிடுங்கள் இது காந்திஜியின் விருப்பம்” என்றபோது மறுபேச்சு பேச முடியாமல் அன்றிரவே ஒன்பது மணிக்கே அவர்களது நெருங்கிய நண்பர் மற்றும் சிறந்த இசைக் கலைஞரான வைத்தியநாதனை அழைத்துக் கொண்டு சென்னை அகில இந்திய வானொலி நிலையத்திற்குச் சென்று, இரவோடு இரவாகப் பாடல் வரிகளை உள்வாங்கி, இசையுடன் பாடி பதிவு செய்து மறு நாள் டாக்கா போகும் விமானத்தில் அதை டெல்லிக்கு அனுப்பினார்கள். 

அக்டோபர் 2 மாலை அந்தப் பாடலைக் கேட்ட காந்திஜி  "எம்.எஸ். குரல் அபாரமான இனிமை வாய்ந்தது..ஒரு பஜனையைப் பாடுவதென்பது வேறு. தன்னையே கடவுளிடம் இழந்து பாடுவதென்பது வேறு'' என்று வியந்து கூறினார்.

அந்தப் பஜன் என்ன என்று பார்க்கலாம் 

hari tum haro jana ki pīr
draupadī kī lāj rākhī
tum badhāyo cīr
bhakta kārana rūpa narahari
dharyo āp śarīr
hiranyakaśyapa mār līnho
dharyo nāhina dhīr
būdate gaja rāja rākhyo
kiyo bāhar nīr
dāsi mīrā lāl giradhar
dukha jahāń tahāń pīr

இது ஏதோ ஹிந்தி சமாசாரம் என்று கடந்தவர்கள் மீண்டும் மேலே இருப்பவற்றை ஒரு முறை படிக்க வேண்டுகிறேன். பஜன் என்பது ஹிந்தி வார்த்தை. அது புரிகிறது அல்லவா அதுபோல மற்ற வார்த்தைகளும் புரியும். என்ன என்ன வார்த்தைகள் புரிகிறது என்று பாருங்கள். நிச்சயம் ஐந்து வார்த்தைகள் புரியும். கண்டுபிடித்தவர்கள் தொடரலாம். 

hari, draupadī - ஹரி , திரௌபதி,
narahari hiranyakaśyapa - நர ஹரி இரணியகசிபு
gaja rāja - கஜேந்திரன்
dāsi mīrā  - தாஸ மீரா 

இப்போது இதன் பொருளைக் கண்டுபிடிப்பது சுலபம்: 

திரௌபதிக்குப் புடைவை கொடுத்துக் காத்தாய்
பிரகலாதனுக்கு நரசிம்மனாக இரணியகசிபுவை முடித்தாய்
முதலையின் பிடியிலிருந்து கஜேந்திரனை மீட்டாய்
அதே போல எங்களின் துன்பங்களை நீக்க வேண்டும், ஹரி தாஸையான மீரா கேட்கிறேன்...  ஓ. கிரிதரா என்று உருகுகிறாள்.

இரண்டு ஆழ்வார் பாசுரங்களைப் பார்க்கலாம். முதல் பாசுரம் திருமங்கை ஆழ்வார்: 

தாங்காதது ஓர் ஆள் அரி ஆய்  அவுணன் தனை வீட முனிந்து அவனால் அமரும்
பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும்*  வென்றி கொள் வாள் அமரில்
பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி*  பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட
நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம்*  மா மலை ஆவது நீர்மலையே.    

ஆங்கில விளக்கம்: The Lord came as a terrible man-lion with Uncontrollable rage and killed the angry Hiranya, dispatching his flower-decked queens into the fire. Then in the victorious war, he befriended the five Pandavas, killed the mighty hundred and protected Draupadi’s fair name. Tirunirmalai is His great hill abode.

அடுத்து நம்மாழ்வார் :

எம் மா வீட்டு திறமும் செப்பம் நின்
செம் மா பாட பற்பு தலை சேர்த்து ஒல்லை
கைம்மா துன்பம் கடிந்த பிரானே
அம்மா அடியேன் வேண்டுவது ஈதே

ஆங்கில விளக்கம்:My Lord, you ended Gajendra's woes! I seek no heaven for myself.  Grant me your lotus-red feet to wear on my head, Quick!

தெற்கோ, வடக்கோ பக்தி ஒன்றே ! மொழி முக்கியமில்லை. 

30 ஜனவரி 1948, காந்திஜி பிரார்த்தனை கூட்டத்தில் சுடப்பட்டு இறந்தார் என்ற செய்தியை அறிவித்த அகில இந்திய வானொலி  எம்.எஸ். பாடிய இந்த மீரா பஜனை ஒலிபரப்பினார்கள்.

- சுஜாதா தேசிகன்



Comments

  1. தெற்கோ, வடக்கோ பக்தி ஒன்றே ! மொழி முக்கியமில்லை.

    அருமை. எப்பவும் போல உங்கள் இணைப்பு (மீரா பஜன் ஆழ்வார் பாசுரம்) அருமை.

    ReplyDelete
  2. Very nice. Interesting information

    ReplyDelete

Post a Comment