Skip to main content

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல ! 


பெண் பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தாள்.  

கண்டாகர்ணன் ஒரு பிசாசு. அந்தப் பிசாசு பிணத்தைத் தான் சாப்பிடும்.  சிறந்த சிவபக்தியுடையது ஆனால் அதற்கு நாராயணனைப் பிடிக்காது. அதனால் போகும் இடம் எல்லாம் காதில் மணியைக் கட்டிக்கொண்டு போகும்.

”மணிக்கும் நாராயணனுக்கு என்ன சம்பந்தம் குழந்தாய் ?” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தச் சுட்டிப் பெண் 

”சொல்கிறேன் சாமி” என்று தொடர்ந்தாள்.

கண்டா என்றால் மணி என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். மணிகட்டிய காதை உடைய பிசாசு.

அதனால் அதற்குப் பெயர் கண்டாகர்ணன். நடக்கும்போது காதில் தொங்கவிட்ட மணி ‘டங் டங்’ என்று சத்தம் போடும். அப்போது யாராவது நாராயணா என்று சொன்னால் அதன் காதில் அது விழாது அல்லவா ?.

பல காலம் பிசாசாக இருந்து அதற்கு அலுத்துவிட்டது. ஒரு நாள் சிவபெருமானிடம் “ஐயனே எனக்கு இந்தப் பிசாசு வாழ்க்கை போதும், எனக்கு வைகுண்டம் போக வேண்டும்”  என்று கேட்டது. அதற்குச்  சிவன் “பிசாசே, உன்னை வைகுண்டம் அனுப்பும் சக்தி என்னிடம் இல்லை. நாராயணன் ஒருவனுக்குத் தான் அந்தச் சக்தி உண்டு, அவரே அதைக் கொடுக்க முடியும்” என்று சொல்ல அதற்கு அந்தப் பிசாசு “அப்படி என்றால் நீங்கள் தான் அதற்கு ஒரு வழி கூற வேண்டும்” என்றது. சிவபெருமான் ” நீ ஒரு காரியம் செய். நாராயணன் இப்போது பூமியில் கிருஷ்ணராக அவதாரம் செய்துள்ளார். என்னைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று முன்பு அவரிடம் வேண்டியிருந்தேன். அதனால் கிருஷ்ணர் என்னிடம் பிள்ளை வரம் வேண்டி இங்கே வருவார். வரும் சமயம், நீ அவரை வணங்கி ”வைகுண்டம் போக வேண்டும்” என்று கேள் என்றார்.

 கண்டாகர்ணனுக்கு ஒரே ஆனந்தம்.  காதில் இருக்கும் மணியைக் கழட்டி விட்டு, கண்ணனையே நினைத்து வழியில் காத்துக்கொண்டு இருந்தது. 

சிவபெருமான் சொல்லியது போல அவ்வழியே கண்ணன் வரும் போது, ஆனந்தப்பட்டுச் சேவித்தது. வந்திருக்கும் கண்ணன் என் விருந்தாளி முதலில் விருந்து உபசாரம் செய்ய வேண்டும் என்று நினைத்துச் சுற்று முற்றும் பார்த்தது. அங்கே ஒரு முனிவர் தவத்திலிருந்தார். உடனே தான் வைத்திருந்த சூலத்தால் குத்திக் கொன்று, அந்தப் பிணத்தை ”கண்ணா இதை உணவாக ஏற்றுக்கொள்” என்று அன்புடன் கொடுத்துவிட்டு, “எனக்கு வைகுண்டம் போக வேண்டும்” என்று கேட்டது.

அந்தப் பிசாசின் அன்பைப் பார்த்துச் சந்தோசப்பட்ட கண்ணன் “சரி தருகிறேன்” என்றார்.  கண்டாகர்ணன் விடவில்லை “எனக்கு ஒரு தம்பி இருக்கிறான் அவனுக்கும் வைகுண்டம் வேண்டும்” என்றது. அதற்கும் கண்ணன் “சரி” என்றார்.

ராமானுஜர் “பிள்ளாய்! கண்ணனுக்கு விருந்து படைக்க வேண்டும் என்பது சரி, அதற்காக ஒரு அப்பாவியான முனிவரைப் பிசாசு கொன்றது. இது எப்படித் தகும் ?” என்றார்.

அந்தக் குட்டிப் பெண் “நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதையே பெருமாளுக்கு நைவேத்யம் செய்யலாம்.  ஆனால் அன்புடன் கொடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம். பிசாசின் உணவு மனிதர்களை அடித்துச் சாப்பிடுவது தானே ?”

ராமானுஜர் சிரித்துக்கொண்டு “என்ன ஒரு அபார ஞானம் உன்னிடம் இருக்கிறது, திருமங்கை ஆழ்வார்போலே!” என்றார் 

அந்தப் பெண் “சாமி, திருமங்கை ஆழ்வார் என்ன சொல்லியிருக்கிறார் என்று கூற முடியுமா ?”

உனக்குச் சொல்லாமல் நான் யாருக்குச் சொல்லப் போகிறேன் என்று ராமானுஜர் சிங்கவேள்குன்றம் என்ற இடத்துச் சிங்கங்கள் அங்கே இருக்கும் யானையை அடித்து அவற்றின் தந்தங்களையும், மாமிசத்தையும் படையல் இடுகின்றன” என்று பாடுகிறார். சிங்கத்தின் குணம் யானையை அடித்து உண்பது. அதுபோலப்  பிசாசின் குணம் மனிதர்களை அடித்து உண்பது.

“சாமி ஆசையுடன் படையலிட்ட கண்டாகர்ணுடைய பக்தி போல் என்னுடைய பக்தி இல்லையே அதனால் நான் கிளம்புகிறேன்” என்று அந்தச் சின்னப் பெண் கூற

”தாயே! திரும்பவும் ஆரம்பித்துவிட்டாயா ? என்னுடன் வா திருக்கோளூர் போகலாம்”

“தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!”

உடையவர் சிரித்துக்கொண்டு “அடுத்த கதையா ?” என்றார்.

- சுஜாதா தேசிகன்
பெண் பிள்ளை கதை தொடரும்..

Comments