Skip to main content

12. இராமானுசன் அடிப் பூமன்னவே - விளைநிலம்

 12. இராமானுசன் அடிப்  பூமன்னவே -  விளைநிலம் 

சென்ற அத்தியாயத்தில் நம்மாழ்வார் முன் நாதமுனிகள் ’பயன் அன்று ஆகிலும் பாங்கு அல்லர் ஆகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்’  என்ற வரிகளை அழுத்திப் பாடி, வருங்கால ஆசாரியனின் உருவத்தை  சர்வ அவய பூர்ணமாக அடியேனுக்குக் காட்டி அருள வேண்டும் என்று விண்ணப்பித்த சம்பவம் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்குப் பிறகு குருகூர் சடகோபன் சிந்தனையில் ஆழ்ந்தார். 

நம்மாழ்வார் ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்,  நாதமுனிகளைப் பார்த்து “ உமக்கு இன்று இரவு சொப்பனத்தில் நாமே அதைப் பாவனையாக காட்டியருளுகிறேன்” என்றார். 

அன்று இரவு நாதமுனிகளின் கனவில் ஆழ்வாரே தோன்றி “நாதமுனிகளே!  நம் குலத்தில்(1) அவதரித்து,   இப்பூவுலகம் முழுக்க வாழ்ச்சி அடையப் போகும் அவதாரத்தைக் காணுங்கள்! நாமே வருங்கால அசாரியனை உமக்குக் காட்டியருளுகிறேன்!” என்று நம்மாழ்வாரே வருங்கால ஆசாரியனாக நாதமுனிகளுக்குக் காட்சியளித்தார். 

பட்டை தீட்டப்பட்ட வைரத்தின் மீது, பால சூரியனின் ஒளிபட்டவுடன் எப்படி பிரகாசிக்குமோ அது போல அந்த ஒப்பற்ற திருமேனி ஒளிர்ந்தது. அந்த வடிவழகு காட்சியைக் கண்ட நாதமுனிகள் உடல் ஆனந்தத்தில் பூரித்தது.  சக்கரவர்த்தி திருமகனின் அழகைப் பார்த்த விஸ்வாமித்திரர் பேச முடியாமல் தவித்தது போல நாதமுனிகள் உடல் உருகி வாய் திறந்து மடுத்து  நிறைத்துக்கொண்டு, 

நன்றாகக் கட்டப்பட்ட காவி ஆடை என்ன !
சிகை அழகு என்ன !
மகரம் சேர் குழை இருபாடு இலங்கி ஆடும் அதன் நடனம் என்ன ! 
திரிதண்டம் ஏந்தும் திருக்கரம் என்ன !
மேனியில் அணிந்துகொண்டு இருக்கும் யக்ஞோபவீதம் என்ன !
எழிலான பன்னிரண்டு திருநாமங்கள் என்ன ! 
அள்ள அள்ளக் குறையாத ஒளிபடைத்த திருக்கண்கள் அரவிந்தமோ ! திருவடி தாமரையோ ! 
உதிக்கும் சூரியன் போன்ற பிரகாசம் ! என்ன அழகு ! என்ன அழகு ! (2)

என்று தீர்க்கமான காட்சியைக் கண்ட நாதமுனிகள் சிலிர்த்து, மலைத்து  திருமாலைக் கண்ட பெரியாழ்வார் ’பல்லாண்டு பல்லாண்டு’ என்று பாடியதைப் போல நாதமுனிகள் ”பஞ்சாயுத அவதாரமான  (3 ) மூவுலகின் புண்ணியத்தின் பலனாய் காட்சி கொடுக்கும் பவிஷ்யதாசாரியரை கைகூப்பி,  பொலிக பொலிக பொலிக ” என்று தன்னை அறியாமல் வாழ்த்தி பவிஷ்யதாசாரியராகக் காட்சி கொடுக்கும் நம்மாழ்வார் திருவடிகளில் விழுந்தெழுந்து மீண்டும் அத்திருமேனியைத் தரிசித்தார். 


வியந்து, உவந்து  “அதிகாரம் உண்டு என்றால் அரங்கர் இரங்குவார், இவரோ அதிகாரம் இல்லாதவர்களுக்கும் இரங்கி நல்வாழ்வளிக்கும் கருணை பொழியும் அபயப்பிரதான ராஜராக, ஜகத்குருவாக இருக்கிறார் என்று முகமும் முறுவலையும் கண்டால் தெரிகிறதே!”  என்று மீண்டும் திருவடிகளில் விழுந்து எழுந்து  (4 )  “உகப்பு உருவனாய், ஒளி உருவனாய், மகப்பு உருவனாய் தேவரீர்களுடைய  திருமேனியைக் காட்டிலும் தேவரீர் பாவித்துக் காட்டியருளிய திருமேனி மிகவும் ஈர்ப்பாகவும்,  அலை கடல் கடைந்த ஆர் அமுதம் போன்று இருக்கிறதே! ” என்று விண்ணப்பம் செய்து நின்றார்.


நம்மாழ்வார் புன்முறுவலுடன் “இதில் என்ன மாயம் ! இந்த லோகம் முழுவதும் இத் திருமேனியைக் கண்டு மோகித்து இவரே தஞ்சம் என இவர் மீது விழப் போகிறார்கள்! திருமகள் கிருபையும், உய்யுமாறு எண்ணி உகக்கும் திருமால் திருவடியையும் சேர்ந்து மருவிய இத் திருமேனி ஆகர்ஷணமாக இருப்பதில் வியப்பேதும் இல்லை!

சேஷனும், சேஷியும் உடைய திருமேனி.  ஆசாரியனும் சிஷ்யனும் உடைய திருமேனி.  வேதத்தின் சாரமான கீதையை உபதேசித்த கீதாசாரியன், தமிழ் வேதத்தை உமக்கு அருளிய சடகோபனைக் காட்டிலும் குரு என்ற சொல் இத்திருமேனியிலே கட்டுப்பட்டு ஒளி பொருந்தி விஞ்சி நிற்கும்!(17)

கருணைக் கடலே திருமேனியாக உருப்பெற்று, பார் எல்லாம் உய்ய இவரே உத்தாரகம் என்று உடைய இத்திருமேனியே நம் தரிசனத்தின் விளைநிலம்.  

மரம் வேர் இரண்டுக்கும் மத்தியில் அவற்றுக்கு ஆதாரமாக விளை நிலம் விளங்குவது போல, ஆரோகணம் அவரோகணமாக இரு ஆசாரிய பரம்பரைக்கும் விளைநிலம் இவ் உடையவரே.  இவ்விளைநிலத்தில் வேரும், விழுதுமாக  பிரபன்ன ஜன கூடஸ்தர்கள் கொழுந்துவிட்டு வளர்ந்து பரவப் போகிறார்கள்.  துவயத்தில் இடையில் வரும் ’உபாயம்’ போல ஆசாரிய மணி மாலையில் இவர் நடுநாயக ரத்தினமாக விளங்கி, இடைகழியில் நடுவில் ஒளி விளக்கு இரண்டு பக்கமும் ஒளிவீசுவது போல முற்பட்ட, பிற்பட்ட ஆசாரியர்களுக்கு ஒளி ஊட்டி சரணாகதியே உபாயம் என்று காட்டி, உபய விபூதி நாயகனாக உத்தாரகத்துவத்துக்கு(7) இவர் ஒருவரே என்று வீற்றிருக்கப் போகிறார்!  இவருக்கு முன் உள்ள ஆசாரியர்கள் பக்தியால் பிரபத்திக்குச் செல்லும் அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்களாகவும்(8) இவர் அவதாரத்துக்குப் பிறகு கலியின் கொட்டத்தை அடக்க  பிரபத்தியால் பக்திக்குச் செல்லும்  க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்களாகவும்(9) விளங்கப் போகிறார்கள்(10)

திருமந்திரத்தின் நடுவில் வரும் ‘நம’ பதம்(6) முன் பின் சேருமாப் போலே இவர் எல்லோருடனும் சேர்ந்து சம்பந்த த்வயமாக விளங்குவார்! ” என்றார். 

நாதமுனிகள் மீண்டும் ஆழ்வாரை வணங்கி “ஆழ்வார்கள் எல்லோரும் தேவரீரின் திருமேனியாக, தேவரீரோ எம்பெருமானின் திருமேனியாக, அந்த மாறன் அடிபணிந்து உய்ந்தவனாக இந்த பவிஷ்தாசாரியன் பிரகாசிக்கிறார். வியக்கத்தக்கச் சொப்பனத்தில் இந்த ரூபத்தைப் பாவித்து எமக்குக் காட்டினீர்.  கருணையே வடிவான அமுத வெள்ளத்தில் நனைக்கப்பட்டு அடியேன் துளிர்த்துத் தளிர்த்த நிற்கிறேன். இவரே இறுதியான உபாயமாக, அனுதினமும் அனுபவித்துக்கொண்டு உத்தாகரத்துக்கு உடையவராக இருக்கும் இவருக்கு உடமையாக இருப்பதற்கு வழி யாது ?” என்று விண்ணப்பம் செய்தார். 

சொப்பனத்தில் பாவித்துக் காட்டிய ரூபத்தை நிஜமாக்கிக் கொடுப்பதா என்று சிந்தனையில்  ஆழ்ந்த ஆழ்வார் “விரைவில் வெளியிடுவோம்!’ என்று திருவாய் மலர்ந்து அருளி,  சொப்பனத்திலிருந்து மறைந்தார். தாமிரபரணி கரையோரம் மரங்கள் நிறைந்த தோட்டத்தின் மத்தியில் சிறு குடிசை ஒன்றும், நிலவொளியில் குடிசையைச் சுற்றி கருங் கற்களும், கல்லுளிகளும், பாதி வடித்த சிலைகளும் சிதறியிருக்க அது இது சிற்பி குடிசை என்று நமக்குத் தெரிகிறது. அந்த ரம்மியமான இரவில் இளந்தென்றல் உலாவிய அந்தப் பொழுதில் குடிசையின் வாசலில் நட்சத்திரங்கள் மினுமினுக்க அதை அனுபவித்தவாறு கட்டிலில் படுத்துக்கொண்டு இருந்தான் பெருநல்துறைவன்(5). மேகங்கள் மெதுவாகச் செல்ல, ஒவ்வொரு மேகத்தையும் தன் கற்பனை உளியால் யானையாகவும், குதிரையாகவும் செதுக்கிக்கொண்டு அப்படியே நித்திரையில் ஆழ்ந்தான். 

பெருநல்துறைவன் திருக்குருகூர் ஆதிபிரான் கோயிலின் ஆஸ்தானச் சிற்பியின் பரம்பரையில் பிறந்தவன்.  இவர்கள் முன்னோர்கள் தான் மதுரகவிகள் தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சும் போது குருகூர் சடகோபன் திருமேனியைக் கைப்படாமல் சமைக்க உதவியவர்கள். 

பெயர் பெற்ற சிற்பிகளிடம் பெருநல்துறைவன்  பாடம் கற்று இளம் வயதிலேயே சிற்ப கலையில் தேர்ந்து, பாறைகளையும், குன்றுகளையும் பார்த்த மாத்திரத்தில் அது என்ன உருவம் என்று அறிந்து,  குடைந்து சில அற்புதச் சிற்பங்களை வடிவமைத்து மன்னர்களிடம் பரிசுகள் வாங்கியிருக்கிறான்.  அன்று இரவு அவனுக்குக் கனவிலும் நினைக்க முடியாத பெரும் பரிசு அவனுக்குக் கனவில் கிடைத்தது! 

சற்று நேரத்துக்கு முன் உறங்க ஆரம்பித்த  பெருநல்துறைவனுக்கு கனவு ஒன்று வந்தது. அதில்  வியக்கத்தக்க பவிஷ்யதாசாரியரின் திருமேனியை ஆழ்வாரே நாதமுனிகளுக்குப் பாவித்துக் காண்பித்தது போல  உருவகுப்பை வெளிப்படுத்தினார். “பெருநல்துறைவனே! அங்ஙனம் கண்டபடியே  நாளை நம் புளியமரத்துக்குக் கீழே வந்து இப்படியே சர்வ அவயவப் பூர்ணமாகச் சமையுங்கள். அங்கே எமது சிஷ்யரான  நாதமுனிகளிடம் அதை ஒப்படையுங்கள்!” என்று ஆழ்வார் நியமித்தார். 

சிற்பி திடுக்கிட்டு எழுந்து கண் விழித்த போது மேலே பூர்ண சந்திரன் பிரகாசிக்க,  தாமிரபரணியின் சலசலப்புடன்  மகிழம் பூ வாசனை எங்கும் பரவியிருந்தது. 

காலை சூரியோதயமாகி அந்த மனோகரமான காலை நேரம் பட்சிகள் அமுத கீதங்களைப் பெருக்கிக்கொண்டு இருக்க,  சிற்பி  தாமிரபரணியில் நீராடிவிட்டு ஆழ்வார் சந்நிதிக்கு விரைந்த புளியமரத்துக்கு அருகில் அமர்ந்து இருந்த  நாதமுனிகள் வணங்கி “ஆழ்வார் கட்டளையை நிறைவேற்ற வந்திருக்கிறேன்!” என்னை ஆசிர்வதியுங்கள் என்று அவர் திருவடியில் விழுந்தான். 

நாதமுனிகள் சிற்பிக்கு ”அப்படியே ஆகட்டும்” என்று ஆசிகளை வழங்கி கண்ணி நுண் சிறுத்தாம்பை சேவிக்க ஆரம்பித்து தியானத்தில் மூழ்கினார். 

சிற்பி புளியமரத்தை  சுற்றி வலம் வந்து அதன் அடிப்பாகத்தில் தன் கையால் மெதுவே வருடி மண்ணை தோண்ட ஆரம்பித்தார்.  பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மதுரகவிகள் செதுக்கியும், செதுக்காமலும் மறைத்து வைத்த  அவ்விக்ரகம் பெருநல்துறைவனுக்கு  கிடைத்தது. 

தாமிரபரணி ஆற்று நீரைக் கொண்டு அதன் மீது படிந்த மண்ணை விளக்கி ஆழ்வார் சந்நிதியில் அல்லும் பகலாக ஆகாரம், நித்திரை எதுவும் இல்லாமல் நியமத்துடன் அவ்விக்ரகத்தை நிர்மாணம் செய்து முடித்த போது, ஆழ்வார் ஒரு சக்தி விசேஷத்தை அத்திருமேனியின் உள்புகுத்தி ”நாதமுனிகளே!” என்று  அழைத்தார். 


தியானம் கலைந்து நாதமுனிகள் கண்களைத் திறந்த போது “இதோ உம்முடைய விருப்பத்தை தலைக்கட்டினோம்! உம்முடைய நித்திய ஆராதனைக்கு வைத்துக்கொள்ளும்!” என்று கூற சிற்பி அந்த விக்ரகத்தை நாதமுனிகளிடம் பிரசாதமாக சமர்ப்பித்தார். 

நாதமுனிகள் ‘நிறைகொண்டது என் நெஞ்சினையே!’  என்று வியந்து உவந்து அதைத் தரிசித்தபோது ஆழ்வார் 

“இராமனுக்கு வலக்கையான இலக்குவன் இவரே ! நம்முடைய அவயவமாக இவரையே நினைத்திரும். யசோதை கண்ணனைச் சீராட்டிப் பாராட்டி வளர்த்தது போல, உமக்கு அளித்த தமிழ் மறைகளான திருவாய் மொழியை வளர்க்கப் போகும் தாயாக இவர் விளங்குவார்! இவரே நமக்கு அடி, நம் காரியத்துக்கும் இவரே அடி! இனிமேல் நம் தரிசனத்தை வளர்ப்பதற்காக இவரை அடியிட்டு வைத்தோம்! நாதமுனிகளே! உம்முடைய குலத்திலே ஒருவர் இந்தத் திருமேனிக்கு உரியவரைக் கண்களாரக் கண்டு நேரே தரிசிக்கப் போகிறார். பெருமாள் அபிஷேகத்துக்கு  நாள் குறித்த மாசத்திலே(13 ) , பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையில் பிரதமோபாயம்(12 ) பிறந்தாற்போல, நம் பிறவி நாளுக்கு(14 )  பிறகு பதினெட்டாம் நாளில் சரம உபாயம்(16)  பிறக்கப் போகிறது!” என்றார் 

நாதமுனிகள் நாவில் பேச முடியாமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருக்க, ஆழ்வார் “நாதமுனிகளே! இப்போது வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டு இருப்பது போல் இந்தப் பவிஷ்தாசரியரை கண்டுகொண்டிரும். நாலாயிரம் பாசுரங்களுக்கும் சுருதி கூட்டி எல்லோரிடமும் அதைக் கொண்டு சேரும். இதை மேலும் பெருக்குவதற்கு நீர்க் கையில் வைத்திருக்கும் பவிஷ்யதாசாரியர் அவதரிப்பார்! ”(11) என்று நாதமுனிகளுக்கு விடை கொடுத்தார். 


”கருணைமிக்கவராய் அடியேன் தூங்கும்போது பவிஷ்யதாசார்யரின் சிறந்த விக்கிரகத்தை அடியேனுக்குக் காட்டியருளின,  காரியாரின் பிள்ளையான குருகூர் சடகோபனைச் சரணம் அடைகிறேன்”  (15 ) என்று நாதமுனிகள் நம்மாழ்வாரை வணங்கி திருநகரில் ஆழ்வார் திருவடிகளில் கைங்கரியம் செய்துகொண்டு ஆழ்வாரை விட்டுப் பிரியாமல் அங்கேயே நித்தியவாசம் செய்துகொண்டு இருக்கையில் அவருக்கு மீண்டு ஒரு கனவு வந்தது! 

பயணம் தொடரும்.. 
- சுஜாதா தேசிகன்
11-10-2020

படங்கள் உதவி : Kedaram Viswanathan 

--------------------------------------------------------------------------

(1) சரணாகதியே சிறந்த மார்க்கம் என்ற பிரபன்ன குலத்தில்.

(2) காஷாய சோபி என்று தொடங்கும் கூரத்தாழ்வான் அருளிச் செய்த ஸ்லோகம்

(3) ஸ்ரீ வேதாந்த தேசிகன் அருளிய யதிராஜ சப்ததியின் மேற்கோள். 

(4) ஆர்த்திப் பிரபந்தம் ( 14ஆம் பாசுரம் )

(5) பெருநல்துறைவன்-  கற்பனை பெயர். நம்மாழ்வாரின் திருநாமங்களின் ஒன்று. 

(6) நம என்ற பதம் ஓம் நம: என்றும், நமோ நம:  நாராயண நம: 

(7) உத்தாரகத்துவம் - சம்சாரத்திலிருந்து மோட்சம் என்ற பேற்றை பெற்று கொடுக்க கூடியவர் 

(8) அனுவிருத்தி பிரசன்னாச்சார்யர்கள் - அடிப்படை ஞானம் அனுஷ்டானத்துடன், ஆசாரியனுடைய நம்பிக்கைக்கு பாத்திரமாகி, தொண்டு செய்பவர்களுக்கு மட்டும் உபதேசம் செய்வது. ஓரண்வழி என்பர். 

(9) க்ருபா மாத்ர ப்ரசன்னாச்சார்யர்கள் - ஆசை ஒன்று இருந்தால் அவர்களுக்கு கருணை அடிப்படையில் உபதேசம் செய்வது.  அனுவிருத்தியை மாற்றியவர் இராமானுசர். 

(10) ஓராண் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
ஆசையுடை யோர்க்கெல்லாம் ஆரியர்காள்: கூறும்என்று
பேசி வரம்பறுத்தார் பின் (உபதேசரத்தினமாலை)

(11) உறுபெருஞ் செல்வமும் தந்தையும் தாயும் உயர்குருவும்
வெறிதரு பூமகள் நாதனும் மாறன் விளங் கியசீர்
நெறிதரும் செந்தமிழ் ஆரண மெயென்றிந் நீணிலத்தோர்
அறிதர நின்ற,இராமா னுசனெனக் காரமுதே.

(12 ) பிரதமோபாயம் - சர்வ தர்மான் பரித்யஜ்ய, மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்ற கீதையின் சரணாகதி வாக்கியம்

(13 ) திரு அபிஷேகத்துக்கு -  பட்டாபிஷேகத்திற்கு  நாள் குறித்த மாசத்திலே - சித்திரை 

(14 ) நம் பிறவி நாளுக்கு - விசாகம், விசாகத்திலிருந்து பதினெட்டாம் நாள் திருவாதிரை

(15 ) நாதமுனிகள் சாதித்த தனியன் சரமோபாய நிர்ணயம்
யஸ் ஸ்வாபகாலே கருணாகரஸ்ஸந் 
பவிஷ்யதாசார்ய பரஸ்வரூபம்
ஸந்தர்சயா மாஸ மஹாநுபாவம் 
தம் காரிஸூநும் சரணம் ப்ரபத்யே

(16) சரம உபாயம் - சரணாகதியே உபாயம் 

(17) சரமோபாய நிர்ணயத்தில் வரும் ஸ்லோகம்
விஷ்ணு: சேஷீ ததீய: சுபகுணநிலயோ விக்ரஹ: ஸ்ரீசடாரி:
ஸ்ரீமாந் ராமாநுஜார்ய: பதகமலயுகம் பாதி ரமயம் ததீயம்
தஸ்மிந் ராமாநுஜார்யே குருரிதி ச பதம் பாதி நாந்யத்ர
தஸ்மாத் சிஷ்டம் ஸ்ரீமத்குரூணாம் குலமிதமகிலம் தஸ்ய நாதஸ்ய சேஷ:

Comments

 1. அருமை ஸ்வாமி. மிக அற்புதம்.

  ReplyDelete
 2. அழகு அழகு
  உம் எண்ணம் அழகு... எழுத்து அழகு
  கேஷவ் சித்திரங்கள் அழகோ அழகு
  🙏👌👌

  ReplyDelete
 3. 🙏🙏 தன்யோஸ்மி ஸ்வாமின். எங்களுக்கு நீங்களே நாதமுனிகள், பவியதாச்சார்யார். சொல்வதில் அபசாரம் இருப்பின் க்ஷமிக்கவும். இது என் எண்ணம்.

  ஓராணுக்கு மட்டும் இல்லாது சகலருக்கும் சொல்லிய ராமானுஜர் போல நீங்கள் பெரும் தொண்டு செய்கிறீர்கள்.
  உண்மையை சொன்னால் எனக்கு பாதிதான் மூளைக்கு போகிறது. இதுவே பெரும் பாக்கியம்.

  எத்தனை இடங்களிலிருந்து வார்த்தைகளை எடுத்துக் கோத்திருக்கிறீர்கள்.

  நம்பெருமாள் தாயார் என்றும் உங்களைக் காத்தருளட்டும்.

  தேவரீர் தகப்பனார் சொர்கத்திலிருந்து உங்களை ஆசீர்வதிப்பது திண்ணம்.

  அடியேன்.

  ReplyDelete
 4. மிகவும் அருமையான பதிவு.

  ReplyDelete

Post a Comment