வெண்ணெய் தோசை vs பென்னே தோசை திருச்சி ஆண்டார் தெருவில் 'ராமா கபே' பலருக்குத் தெரிந்திருக்கும். ‘வெண்ணெய் மாவு’ ( தோசை) என்று ஆடர் செய்துவிட்டு பெண் பார்க்கும் வீட்டில் பெண் வரும் வரை அங்கே இருக்கும் பாட்டிகளை பார்ப்பது போல இலையில் இருக்கும் இட்லி சாப்பிட்டுக்கொண்டு பெண் மன்னிக்கவும், தோசை வருகிறதா என்று பார்த்துக்கொண்டு இருக்கும் போது... ‘அடுத்தது ஒரு வெண்ணெய் மாவு’ என்ற அந்த சத்தம் செவிக்கு சென்று செவிக்கு உணவாகி, சிறிது நேரத்தில் வயிற்றுக்கும் ஈயப் படும் என்று அறிவிப்பாக இருக்கும். சத்தம் போட்ட ஒரு நிமிஷத்துக்குள் ஒருவர் வெளியே ஓடி பக்கத்து ‘பழநி விலாஸ் நெய் கடையில்’ பட்டர் பேப்பரில் வெண்ணெய் வாங்கிக்கொண்டு உள்ளே செல்வார். சரியாக இட்லியை முடித்துவிட்டு இலையில் மீதம் இருக்கும் சட்னி, சாம்பாரை நக்கி ருசிக்கும் போது வெண்ணெய் தோசை உங்கள் முன் வந்து மடிக்கப்பட்டு இலையில் விழும். கூடவே ‘கெட்டி’ சட்னி, தனியா (கொத்தமல்லி) தூக்கலான சாம்பார் என்று ’சேர்த்தி சேவை’ திருப்தி ஏற்படும். அப்பறம் சொல்ல மறந்துவிட்டேனே,,, தோசை சாப்ப...