Skip to main content

இஞ்சிமேடு என்ற படித்துறை !

இஞ்சி மேடு என்ற படித்துறை ! 


ஒரு நாள் ’அவர்’ கையில் உபகாரத்துடன் (பெருமாளுக்குச் சமர்ப்பிக்கும் பூமாலை. பழங்கள்) மதுராங்கத்தில் சக்கரவர்த்தி திருமகனை மங்களாசாசனம் செய்வதற்காகச் சென்றார். பெருமாள் புறப்பாடு, அதனால் கையில் உபகாரத்துடன் காத்துக்கொண்டு இருக்க வேண்டியிருந்தது. 

“சமர்பிக்க தாமதம் ஆகிறதே! உபகாரத்தைச் சுத்தமான இடத்தில் வைத்துவிடலாமே” என்றார் கூட இருந்தவர். 

அதற்கு அவர் “சுமப்பதும் சம்பர்ப்பிப்பது இரண்டும் கைங்கரியமே! சுமந்து மாமலர் நீர் சுடர்தூபங்கொண்டு’ என்றும் ‘புனைந்த கண்ணி நீர் சாந்தம்  புகையோடு ஏந்தி வணங்கினால்’ என்று ஆழ்வார் ‘சுமப்பது, ஏந்தி’ இருப்பதைக் கைங்கரியமாகவே சொல்லுகிறார்” என்றார்

அன்று ’பயிலுஞ்சுடரொளி’  ‘நெடுமாற்கடிமை’ என்ற திருவாய்மொழி  சொல்லுகின்ற அர்த்தத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ‘அவர்’ 42ஆம் பட்டம் இஞ்சிமேடு அழகிய சிங்கர்(1) 

அர்ச்சையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட இஞ்சிமேட்டு அழகிய சிங்கர் ஸ்ரீ மாலோலனுக்கு உபகாரமாகப் பழம் முதலியவற்றைக் குறைந்தது பத்து நிமிடங்களாவது தட்டை ஏந்திக்கொண்டு  தட்டைக் கீழே வைக்காமல் நிற்பார். உள்ளன்போடு அவன் திருவடிகளில் இடும்போது தம்மையே மறந்து காணப்படுவார்(2) 

இந்த அழகிய சிங்கரைப் பற்றி இன்று சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம் 

மணக்கால் என்ற ஊர் மணக்கால் நம்பியை நினைவுபடுத்துவது போல,  இஞ்சிமேடு என்ற ஊர் இஞ்சி மேட்டு அழகிய சிங்கரை நினைவுபடுத்தும். 

இஞ்சிமேடு என்ற அக்கிரஹாரத்தில் தைமாதம் உத்திராட நட்சத்திரத்தில் ( 21.1.1879) அவதரித்தார். ஸ்ரீ ரங்கநாதாசார்யர் என்ற திருநாமம் ( பூர்வாசிரமத்துத் திருநாமம்) . திருக்குடந்தை, மைசூர், காசி, திருப்பதி ஆகிய இடங்களில் சாஸ்திரங்களைக் கற்று, தர்க்கச் சாஸ்திரத்தில் வாதம் செய்வதில் வல்லுனராகத் திகழ்ந்தார். 

ஸ்ரீ அழகிய சிங்கரை ஆச்ரயித்தவராய் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி என்று பிரசித்திப்பெற்ற  மஹானாக எழுந்தருளியிருந்த ஸ்வர்ணம் ஸ்ரீ கிருஷ்ணமாசார்ய மஹாதேசிகன் சந்நிதியில்  வேதாந்தக் காலக்ஷேபங்கள் பண்ணி அவர் உபதேசங்களைப் பெற்றார். இவருக்கு வேதாந்தச் சாஸ்திரத்தில் உள்ள பாண்டித்தியத்தை திருகுடந்தை ஸ்ரீமதழகிய சிங்கர் மிகவும் கொண்டாடினார். 41ஆம் பட்டம் அழகியசிங்கர் இவரை ஆஸ்தான வித்துவானாக நியமித்தார். அப்போது அவர் பல சம்பிரதாயக் கிரந்தங்களும், வியாக்கியானக் கிரந்தங்களும் அருளினார். 

1929ல் சித்திரை மாதம் ஸ்ரீலக்ஷ்மிநரசிம்ம சடகோப யதீந்திர மஹாதேசிகன் நியமனப்படி துறவறத்தை(துரீயாச்ரமத்தை) மேற்கொண்டார். பெரிய அழகிய சிங்கருடன் சேர்ந்து 13 ஆண்டுகள் மாலோலனை ஆராதித்து வந்தார். 24.10.1941ல் அழகிய சிங்கராகப் பட்டாபிஷேகம் நடைபெற்றுப் பீடத்தை ஏற்றுக்கொண்டார். 

இவர் ஞான அனுஷ்டான வைராக்கியத்தோடு பலரும் கொண்டாடும்படி பொறுமைக்கு இருப்பிடமாக விளங்கினார். 

தம்முடைய கடைசிக் காலத்தில் சில வருடங்கள் திருவள்ளூரில் எழுந்தருளியிருந்து ஸ்ரீ ராகவனை மங்களாசாசனம் பண்ணிக் கொண்டிருந்தார். தம்முடைய திருமேனியில் அசக்தி ஏற்படவே தமக்குப் பின் இந்த ஆஸ்தானத்தை நிர்வகிக்கும்படி பருத்திப்பட்டு வங்கிபுரம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாசாரியாரை நியமித்தார். 

தம் திருமேனி தளர்ச்சி அடைந்த அந்திம காலத்தில் நாட்டு நடப்பைப் பற்றியோ, தம் திருமேனியின் குறித்த வார்த்தைகளையோ பேசாமல் எம்பெருமானுடைய குணங்களையே பிதற்றிக் கொண்டு இருந்தார் (பிணங்கி அமரர் பிதற்றும் குணங்கெழு கொள்கையினானே- திருவாய்மொழி ). 

அவரைச் சுற்றி இருந்த ஸ்ரீபாத முதலிகளிடம் “எம்பெருமானார் அந்திம காலத்தில் கத்யங்களே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பார். அப்படி இல்லை என்றால் நீங்கள் சமபர்ப்பியுங்கள்” என்று கத்யங்கள் நடுவில் கொஞ்சம் விட்டுவிட்டு நினைவுக்கு வந்ததை உச்சரித்த வண்ணம் இருந்தார். 

சுற்றி இருந்த முதலிகள் இதைக் கேட்டு உணர்ச்சிகளால் உந்தப்பட்டு, கண்ணீருடன் இருந்தனர். அடிக்கடி ‘அகில ஜகத் ஸ்வாமி! ஆஸ்மத் ஸ்வாமி ஆர்த்தி கல்பக ஆபத்ஸக’ என்று அழைத்துக்கொண்டு இருந்தது ஆழ்வார் வைகுந்தம் புகுவதை நினைவு படுத்தியது. திருநாட்டுக்கு எழுந்தருளும் சிற்றம் சிறுகாலே புலரும் தறுவாயில் பிரணவத்தைத் திருமந்திரமாக உச்சரித்து ஆளவந்தாரின் ஸ்தோதிர ரத்தனம், திருவாய்மொழி முதலியவற்றை கேட்ட வண்ணம்  (1.3.1951 அன்று ) இரவு பரமபதத்திற்கு எழுந்தருளினார்(3) 

இவருடைய பிருந்தாவனம் திருவள்ளூரில் இருக்கிறது. 

1943ல் ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியா என்ற பத்திரிக்கையை நிறுவி, இன்று வரை அது தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது. 

இவருடைய மேன்மையைப் புரிந்துகொள்ள ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்(4)

அன்று திருப்பாவை இரண்டாம் நாள். ஸ்ரீமத் இஞ்சிமேடு அழகியசிங்கர் அவர்கள் ‘வையத்து வாழ்வீர்காள்!’ பாசுரத்துக்கு விசேஷ அர்த்தங்களை அருளிவிட்டுப் புறப்பட்டார். அப்போது அவரைக் கந்தல் வேட்டியுடன்  மனநலம் குன்றிய ஒருவர் அழகியசிங்கரை வணங்கி தன் கந்தலான அழுக்கு வேட்டியைக் காண்பித்து ”எனக்கு ஒரு புது வேட்டி வேண்டும்” என்று கேட்க, அழகிய சிங்கர் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ காரியக் கர்த்தாவை அழைத்து ‘ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி’ என்று இன்றைய பாசுரத்தில் ஆண்டாள் தனத்தைப் பற்றிக் கூறியிருக்கிறாள். இவர் வேட்டி கேட்கிறார், ஒரு புது வேட்டி வாங்கி கொடுத்துவிடுங்கள் என்று கூறிவிட்டுக் கிளம்பினார். 

அடுத்து அடுத்த நாளில் திருப்பாவை உபன்யாசம் செய்தார் அழகியசிங்கர்.  அன்று பதினேழாம் பாசுரமான ‘அம்பரமே! தண்ணீரே சோறே” என்ற பாசுர அர்த்தங்களைக் கூற ஆரம்பித்தபோது இரண்டாம் பாசுரத்தில் ஒரு மனநலம் குன்றியவர் வேட்டி கேட்டாரே என்று நினைவுக்கு வந்தது. ஸ்ரீ காரியத்தைக் கூப்பிட்டு இரண்டாம் நாள் ஒருவர் வேட்டி கேட்டாரே அவருக்கு வேட்டி கொத்தாகிவிட்டதா ? அதற்குப் பிறகு அவர் கண்ணிலேயே படவில்லையே” என்று கேட்டார். 

ஸ்ரீகாரியதரிசி “அடியேன்… “ என்று இழுத்து ”அவரோ பைத்தியம். புது வேட்டி கொடுத்தால் அதை உபயோகிக்க மாட்டார் கிழித்துவிடுவார். அதனால் அவரை விரட்டிவிட்டோம்” என்றார். 

அழகியசிங்கர் “நான் சந்நியாசி, இது என் பணம் இல்லை. உம்முடைய பணமும் இல்லை. இது நரசிம்மருடைய பணம். அன்று அவருடைய சந்நிதியில் வேட்டி கேட்டார். நரசிம்மர் சொன்னதை நான் சொன்னேன். பிறகு அவன் என்ன செய்வான் என்று எல்லாம் யோசிக்க நாம் யார் ?  அவனைத் தேடி வேட்டி கொடுத்தபிறகு திருப்பாவை உபன்யாசம் தொடரும்!” என்று கூறிவிட்டு எழுந்துவிட்டார். 

பிறகு மடத்துக்காரர்கள் அலைந்து தேடி அவரைக் கண்டு பிடித்து வேட்டி கொடுத்தபின் மறுநாள் திருப்பாவை உபன்யாசத்தைத் தொடர்ந்தார் அழகியசிங்கர். 

’தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே’ என்கிறார் நம்மாழ்வார். பெருமாள் என்ற பெரிய தடாகம். அந்தத் தடாகத்தில் நீராடுவதற்குத் தகுந்த துறைகளைத் தேர்ந்தெடுத்து நீராட வேண்டும். துறை அறிந்து முறை தவறாமல் போக வேண்டும். அப்படிப் பட்ட படித்துறைகள் தான் மேலே குறிப்பிட்ட இஞ்சிமேடு ஸ்ரீமத் அழகியசிங்கர் போன்ற ஆசாரியர்கள். 

பெருமாளுடன் குள்ளக் குளிரக் குடைந்து நீராட நாம் முதலில் செய்ய வேண்டியது தகுந்த ஆசாரியர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்! 

- சுஜாதா தேசிகன்

31.1.2022

தை உத்திராடம் - ஸ்ரீ இஞ்சிமெடு ஸ்ரீமதழகியசிங்கர் திருநட்சத்திரம்
(1) ஸ்ரீ.உ.வே வித்வான் மதுராந்தகம் தி.ஈ. வீரராகவாசாரியார் ஸ்வாமி, ஸ்ரீரங்கம் எழுதிய கட்டுரையிலிருந்து 

(2)ஸ்ரீ.உ.வே பவுண்டரீகபுரம் நரஸிம்மாசாரியார் ஸ்வாமி, காஞ்சிபுரம் எழுதிய கட்டுரையிலிருந்து 

(3)ஸ்ரீ உ.வே வித்வான் வில்லிவலம் நாராயணாசார்ய ஸ்வாமி கட்டுரையிலிருந்து 

(4)ஸ்ரீ உ.வே கருணாகரசாரியார் ஸ்வாமி உபன்யாசத்தில் கேட்டது.

Comments

  1. Swami athyathbhuthamaana varnanai... sirithu thavarugalum ullana
    "ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி என்று அன்புடன் அழைக்கப்பட்ட ஸ்ரீஅழகிய சிங்கரிடம் வேதாந்தக் காலக்ஷேபங்கள், உபதேசங்களைப் பெற்றார்."
    இது
    "ஸ்ரீமுஷ்ணம் ஸ்வாமி என்று அன்புடன் அழைக்கப்பட்ட 'மஹாவித்வான்' வேதாந்தக் காலக்ஷேபங்கள், உபதேசங்களைப் பெற்றார்."
    என்கிற ரீதியில் இருக்க வேண்டும்
    Adiyen
    Srikrishnan

    ReplyDelete
    Replies
    1. நன்றி. மீண்டும் படித்து சரியாக திருத்தியிருக்கிறேன். தாஸன்

      Delete
  2. அவர் திருநாட்டிற்கு எழுந்தருளிய வருஷம் 1951 என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். அது தவறு. 1953-ம் வருடம். தவறைத்திருத்தவம்.

    ReplyDelete
  3. ஸ்ரீ முஷ்ணம் ஸ்வாமி 'ஸ்வர்ணம் ஸ்வாமி' என்றே குறிப்பிடப்படுவார்.

    ReplyDelete

Post a Comment