Skip to main content

பாகவத திருப்பாவை - 16 ( ஆயர் சிறுமியரோமுக்கு)

 பாகவத திருப்பாவை - 16 ( ஆயர் சிறுமியரோமுக்கு)


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!* கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே!* மணிக்கதவம் தாள் திறவாய்*
ஆயர் சிறுமியரோமுக்கு** அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்*
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!* நீ
நேய நிலைக் கதவம் நீக்கு ஏலோர் எம்பாவாய் 489/16

எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு !
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான்
நேற்றே விரும்பியதைத் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்
எனவே, அவனைத் துயிலெழுப்ப (திருப்பள்ளியெழுச்சி) தூய்மையாக வந்துள்ளோம்
முதன் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள
கதவைத் திறந்து எங்களை உள்ளேவிடு!

பாகவதத்திலிருந்து ஜயவிஜயர்களின்  கதையைப் பார்க்கலாம் ( 7.2.35-40)

பிரம்மாவின் மானசீகப் புத்திரர்களான சநகாதி  முனிவர்கள் பார்க்க ஐந்து வயதுக் குழந்தைகள்போல  உடலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருப்பார்கள். 

ஒரு சமயம்  மூவுலகங்களையும் சுற்றி வந்து வைகுண்டம் அடைந்தார்கள். அவர்கள் ஸ்ரீமந் நாராயணனைப் தரிசிக்க விரும்பினார்கள். சிறுகுழந்தைகள்தானே என்று எண்ணிய துவாரபாலகர்கள் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். 

கோபங்கொண்ட முனிவர்கள் துவாரபாலகர்களை நோக்கி “மூடர்களே! பகவான் நாராயணனது திருவடிகளைச் சார்ந்துள்ள இந்த வைகுண்டத்தில் 

ரஜோகுணம், தமோகுணத்திற்கு இடமேது? அந்தக் குணங்கள் உள்ளவர்கள் இங்கு வசிப்பதும் உகந்ததல்ல. ஆகவே, விரைவில் நீங்கள் பாவம் நிறைந்த அசுரப் பிறவியை அடைவீர்களாக” என்று சபித்தனர். 

அப்போது ஸ்ரீமந் நாராயணன் “முனிவர்களே உங்களை அவமதித்த இவர்களுக்கு நீங்கள் விதித்த தண்டனை சரியே!. நீங்கள் எனது பரம பக்தர்கள். உங்களுக்கு இழைத்த அபசாரம் எனக்கு இழைக்கப்பட்டதே! என் பணியாளர்கள் செய்த அபசாரத்தை நானே செய்ததாக எண்ணி தங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். 



அனைத்து பாவங்களையும் நொடியில் அழிக்கக்கூடிய திறன் எனது திருவடிக்குக் கிடைத்தது எப்படித் தெரியுமா ? தங்களைப் போன்ற அடியார்கள் செய்யும் பணிவிடைகளினால் தான். (3.17.7) 

சாபத்தின் விளைவு, அவர்கள் வைகுண்டத்திலிருந்து கீழே விழுந்தார்கள்.  பிறகு முனிவர்கள் அவர்களைக் கண்டு பரிதாபப்பட்டு 'மூன்று பிறவிகளில் இந்தச் சாபத்தை அனுபவித்துவிட்டு, திரும்பவும் வைகுண்டம் வருவீர்களாக' என்று அருளினார்கள். 

இவர்களே இரண்யகசிபு, இரண்யாக்ஷன்; இராவணன், கும்பகர்ணன்; சிசுபாலனாகவும் தந்தவக்ரனாகவும் பிறவி எடுத்துச் சாபத்திலிருந்து விடுபட்டு மீண்டும் துவாரபாலகர்களானார்கள். 

இங்கே ஆண்டாள் “குழந்தைகளாக வந்த சநகாதி  முனிவர்களைத் தடுத்த ஜயவிஜயர்கள் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இடைச்சிறுமிகளாக நாங்கள் தூய எண்ணத்துடன் கண்ணனைக் காண வந்திருக்கிறோம், கோயில் காப்பானே! , வாசல் காப்பானே! ஜயவிஜயர்கள் போல எங்களைத் தடுக்காமல்,  நீங்களே எங்களுக்குக் கதவைத் திறந்துவிடவும்” என்று வேண்டுகிறாள். 

- சுஜாதா தேசிகன்
நாயகன் - 16
4.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments