Skip to main content

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி


எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது.

அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார்.

கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் அவர் திருமேனியில் பரிவுடைய ஒருவரை அறியவே காத்திருந்தோம். இன்று முதல் நீரே அவருக்கு அமுது செய்வித்து சமர்பிக்க வேண்டும்” என்று நியமித்தார். அன்று முதல் கிடாம்பி ஆச்சானே ஸ்வாமிக்கு மடப்பள்ளி கைங்கரியத்தை சிரத்தையுடன் செய்தார்.

2017ல் ஸ்ரீராமானுஜரின் 1000வது திருநட்சத்திரம் ஆரம்பத்தில் ஸ்ரீபெரும்புதூரில் ஒரு நாள் முழுக்க வேறு எந்த வேலையும் செய்யாமல் உடையவரையே பார்த்துக்கொண்டே இருந்தேன். எதோ கியூவில் உடையவரை கிட்டே தரிசிக்க வேண்டும் என்ற ஆசையால் போக திடீர் என்று கூட்டம் தள்ளியது. எப்போது என்னை அவதார மண்டபத்துக்கு உள்ளே தள்ளி வெளியே பூட்டிவிட்டார்கள்.

ஸ்ரீராமானுஜரின் அவதார மண்டபத்தில் அவரின் சீடர்களான 74 சிம்மாசன அதிபர்களுடன் 360 டிகிரியில் கையால் தொட்டு பார்க்கும் தூரத்தில் பெரும்புதூர் வள்ளலைச் எந்த அலங்காரமும் இல்லாமல் அந்த திருமேனியை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன். அந்த திருமேனி பற்றி சிறுகுறிப்பு...

“நடந்த கால்கள் நொந்தவோ” என்றபடி ஸ்ரீராமானுஜர் தன் கடைசி காலத்தில் படுத்துக்கொண்டு இருந்தார். எம்பார், வடுக நம்பி முதலான சிஷ்யர்கள் அவரை சுற்றி இருந்தார்கள். அப்போது அவருடைய மருமகனாரின் திருக்குமாரரர் கந்தாடையாண்டான் “தேவரீர் அவதரித்த ஸ்ரீபெருபுதூர் ஸ்தலத்தில் ஸர்வ காலத்திலும் வரும் சந்ததியினர் எல்லோரும் சேவிக்கும்படி தேவரீருடைய ஒர் அர்ச்சா திருமேனி விக்ரஹம் ஏறியருளப் பண்ண வேண்டும்” என்று விண்ணப்பம் செய்ய எம்பெருமானாரும் ”அப்படியே செய்யும்” என்று அனுமதி அளித்தார்.

கந்தாடையாண்டானும் உடனே சிற்பியை அழைத்து அப்போதைய திருமேனி வடிவத்தை எம்பெருமானார் முன்பு அந்த விக்ரஹத்தை கொண்டு வந்து வைக்க உடையவர் திருக்கண் சாத்தி, தன் திருக்கையை ஸ்பர்சமும் செய்வித்து, தம்முடைய திவ்யசக்தி நிலைபெறும்படியாக நன்கு அணைத்து பூஷ்ய மாஸத்தில் குரு பூஷ்யத்தில் ப்ரதிஷ்டை செய்யவும் என்று திருமுகம் எழுதி குறித்து அனுப்பினார்.

கந்தாடையானும் அப்படியே திருப்ரதிஷடையும் செய்வித்தார். ( திருப்ரதிஷ்டை வைகாசன ஆகம முறைப்படி நடந்தது ). அங்கே ப்ரதிஷ்டையான அதே தினத்தில் அங்கு கோயிலில் எம்பெருமானாரின் திருமேனியில் தளர்ச்சி ஏற்பட்டது.

“இது என்ன நாள் ?” என்று உடையவர் கேட்க கந்தாடையானுக்கு எழுதிக் கொடுத்த நாளாயிருக்க உடையவரும் வியப்புற்றவராய் அவரை விரைந்து வர செய்தி அனுப்பினார். கந்தாடையான் ஓடி வந்து உடையவரை சேவிக்க மற்ற அந்தரங்கமான முதலிகள் எல்லோரும் சேவித்துக்கொண்டு இருக்க... உடையவர் தம்முடைய ஆசாரியர்களையும், பேரருளாளனையும் நம்பெருமாளையும் நினைத்து பரமபதம் சென்றடைந்தார்.

எப்பேர்பட்ட திருமேனி !

நம் எல்லோரும் கிடாம்பி ஆச்சான் ஆகிவிட முடியாது, ஆனால் நாம் அந்த திருமேனியை நிச்சயம் போற்றி பாதுகாக்க வேண்டும்!

- சுஜாதா தேசிகன் 

18.01.2021

இன்று "ஸ்ரீ குருபுஷ்யம்'
ஸ்ரீராமானுஜரின் "தான் உகந்த திருமேனி ' என்னும் அர்ச்சா விக்ரகம் அவதாரத் தலமான ஸ்ரீபெரும்புதூரில் 1137 ஆம் ஆண்டு தைப்பூச நன்னாளில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Comments

  1. ஸ்ரீ ராமானுஜர் திருவடி சரணம்

    ReplyDelete

Post a Comment