Skip to main content

பாகவத திருப்பாவை - 23 ( ஆராய்ந்து )

 பாகவத திருப்பாவை - 23 ( ஆராய்ந்து )


மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும் * 
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து * 
வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி *
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப் ** 
போதருமா போலே நீ பூவைப்பூ வண்ணா! * உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளி * கோப்பு உடைய
சீரிய சிங்காசனத்து இருந்து* யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய் 

மழைக் காலத்தில் மலைக் குகையில் படுத்துத் தூங்கும் 
வீரமுள்ள சிங்கம் தூக்கம் தெளிந்து எழும்பொழுது 
நெருப்புப் போல சிவந்த கண்களைத் திறந்து, பிடரி மயிர் சிலிர்த்து 
உடம்பை நாலு பக்கமும் அசைத்து, சோம்பல் முறித்து,
கர்ஜனை செய்து வெளியில் வருவது போல 
காயாம்பூ போன்ற நீல நிறமுடையவனே,
நீ உன் கோயிலிலிருந்து புறப்பட்டு வந்து அழகிய சிம்மாசனத்தில் 
அமர்ந்து,
நாங்கள் வந்த காரியத்தைக் கேட்டறிந்து அருள வேண்டும்

இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் நரசிம்ம அவதாரத்தைக் குறிப்பால் உணர்த்துகிறாள். 

இரண்யகசிபு பிரகலாதனைப் பார்த்து “அசடே! விட்டால் புகழ்ந்துகொண்டே போகிறாய். உன் உயிரைவிடத் துணித்துவிட்டாயா ? இறக்க போகிறவர்கள் வாய் குழறிப் பேசுவார்கள். அதுபோல நீ பேசுகிறாய்!” என்றவன் பிரகலாதன் காண்பித்த தூணைத் தன் முஷ்டியினால் ஓங்கி அறைந்தான்.  

இந்த இடத்தில் ஸ்ரீமத் பாகவதத்தில் வரும் வர்ணனையும்(7.8.20- 23) , திருப்பாவையில் வரும் வர்ணனையும் அப்படியே ஒத்துப் போகிறது. இரண்டையும் சேர்த்து இங்கே தந்திருக்கிறேன். 

கதிகலங்கி நின்ற இரண்யகசிபு எதிரே மழைக்காலத்தில் மலைக்குகை ஒன்றில் பெண்சிங்கத்தோடு ஒன்றிக் கிடந்து உறங்கும் சீரிய சிங்கம் தூக்கம் தெளிந்து எழுந்தபோது - உருக்கி வார்த்த தங்கம் போன்று மஞ்சளான ’நெருப்புப் பொறி பறக்கும்படியான கண்கள், (தீ விழித்து), சோம்பல் முறித்து (மூரி நிமிர்ந்து) கொட்டாவி விடும்போது பரிமளம் நிரம்பிய (வேரி மயிர்) பிடரி மயிர்கள் பொங்க இங்குமங்கும் எல்லாப் பக்கங்களிலும் அசைந்து (பேர்ந்து), முழங்க,  அந்தக் கர்ஜனையைக் கேட்ட அனைவரும் உலகிற்கு அழிவு வந்துவிட்டதோ என்று எண்ணி மதிகலங்கினர். 

விட்டில் பூச்சியைப் போலே இரணியன் பகவானின் ஒளியில் மறைந்து போனான். அந்தச் சமயம் பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்கள் எல்லோரும் அழகிய ( கோபுடைய ) சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் காயாம்பூ போன்ற ஸ்ரீநரசிம்ம மூர்த்தியை இரு கைகளாலும் வணங்கினார்கள். 

பிரகலாதன் நரசிங்க மூர்த்தியை இப்படித் துதித்தான் “சிறந்தவை அனைத்திலும் மிகச்சிறந்த அழகிய சிங்கரே! 

செயல்கள் அனைத்தையும் இறையர்ப்பணமாகச் செய்தல், 

பணிவிடை செய்தல், 

திருவடி கமலங்களை எப்போதும் நினைத்திருத்தல், 

உன்னுடைய கல்யாணக் குணங்களைக் கூறும் கதைகளைச் செவியாரக் கேட்டல் என்கிற ஆறு அங்கங்களை முறைப்படி பின்பற்றாவிடில், தங்களது திருவடித் தாமரைகளில் பக்தி எவ்வாறு தோன்றும் ? அந்தப் பக்தியின்றித் தங்களைப் பெறுவது தான் எப்படி ? பக்தர்களுக்குத் தாங்கள் தானே அனைத்துச் செல்வமும் ஆகவே உன் பொற்றாமரை அடியே போற்றும் பாக்கியத்தை (ஆராய்ந்து) அருள வேண்டும் ! 

என்றவுடன் நரசிம்மன் தனது கோபத்தைத் துறந்து அமைதியடைந்து, திருவடிகளில் வணங்கி நிற்கும் பிரகலாதனை(ஆண்டாளை) கண்டு மகிழ்ந்து பூவைப்பூ வண்ணனாகக் காட்சி அளித்தார். 

ஆண்டாள் ஏன் ‘ஆராய்ந்து அருள வேண்டும்’ என்கிறாள் ? 

காட்டுக்குச் சென்ற ஸ்ரீராமரைத் திரும்ப அழைத்துக்கொண்டு பலரைத் திரட்டிக்கொண்டு சென்று அவன் திருவடியில் விழுந்தால் ராமர் இரக்கப்பட்டு வருவார் என்று நினைத்து ஸ்ரீபரதாழ்வான் சென்றபோதிலும், பரதனின் விருப்பத்தை நிறைவேற்ற இது தக்க சமயம் இல்லை என்று ஸ்ரீராமர் தன் திருவடி நிலைகளைத் தந்து அனுப்பினான். 

பரதாழ்வான் போல ஆண்டாள் தன் தோழிகளைத் திரட்டிச் சென்றாள். கண்ணன் ராமரைப் போல் தங்கள் ஆசையை நிறைவேற்ற வில்லை என்றால் ? அதனால்  நாங்கள் வந்த காரியத்தை விவரித்து விண்ணப்பிக்கப் போவதில்லை, நீயே யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருள வேண்டும் என்கிறாள். 

- சுஜாதா தேசிகன்
மாரி - 23
29.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments