Skip to main content

பாகவத திருப்பாவை - 19 ( ஆற்றகில்லாயால் )

பாகவத திருப்பாவை - 19 ( ஆற்றகில்லாயால் )


குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் கட்டில் மேல்*
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்*
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்*
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;**
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை*
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்*
எத்தனை யேலும் பிரிவு ஆற்றகில்லாயால்*
தத்துவம் அன்று தகவு ஏலோர் எம்பாவாய் 492/19

நிலை விளக்குகள் ஒளி வீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில் 
மெத்தென்ற பஞ்சுப் படுக்கை மீது 
கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைச் சூட்டிய கூந்தலுடைய 
நப்பின்னையின் மார்பில் தலையை வைத்துக் கொள்பவனே,
வாய் திறந்து பேசு!
மைக் கண்ணுடைய நப்பினையே! நீ உன் கணவனைச் சிறுபொழுதும் 
படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை.
கணமாகிலும், நீ அவன் பிரிவைச் சகிக்க மாட்டாய்.
ஆ! நீ இப்படி (எதிராக) இருப்பது நியாயமும் ஆகாது; குணமும் ஆகாது.

முதலில் ஒரு புதிருடன் ஆரம்பிக்கலாம். நீங்கள் பார்க்கும் இரண்டு சேர்த்தி படங்களில் என்ன வித்தியாசம் ?  விடை கடைசியில். 


ஆழ்வார் பாசுரங்களில் இந்த ‘கில்’ பல இடங்களில் வருகிறது. நம் எல்லோருக்கும் தெரிந்த நம்மாழ்வார் பாசுரம் இது 


“அகலகில்லேன் இறையும் என்று
 அலர் மேல் மங்கை உறை மார்பா”

’அகல கில்லேன்’  என்பதில் ‘கில்’ வருவதைக் கவனிக்கலாம். இந்தப் பாசுரத்துக்கு அர்த்தம் சொல்லும் போது மிக ஜாக்கிரதையாகச் சொல்ல வேண்டும். ”எந்நேரமும் உன் மார்பை விட்டு அகல மாட்டேன்” என்று பொருந்துவது போல வந்தாலும், அது  தவறு.  

அகல மாட்டேன் என்பது வேறு அகல கில்லேன் என்பது வேறு. 

மாட்டேன் - என்னால் முடியும் ஆனால் மாட்டேன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். 

அகல கில்லேன் - என்னால் நினைத்தாலும் முடியாது என்று அர்த்தம். 


அகலமாட்டேன் என்பது  unwillingness (not willing)
அகலமுடியவில்லை - willing but not able to (inability)
அகலகில்லேன் - it is not a matter of willingness or ability as it is a disability i.e. impossible 

இன்னொரு வார்த்தையை இன்றைய உலகில் மேலும்  ஜாக்கிரதையாக நாம் கையாள வேண்டும் அது மார்பகங்கள். 

திருப்பாவைக்குப் பட்டர் அருளிய தனியன் இது 


நீளாதுங்கஸ்தன கிரிதடீ ஸுப்தம் முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்தயம் ஸ்வம் ச்ருதிசக சிரஸ் ஸித்தம் அத்யாப யந்தீ
ஸ்வேர்ச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாவாத் க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நமஇதமிதம் பூய ஏவாஸ்து பூய:

இதன் அர்த்தம் : 

நப்பின்னையினுடைய உயர்ந்த மலைபோன்ற முலைகளின் தடத்திலே தலைசாய்த்து உறங்கினவனான கண்ணனை எழுப்பி அடிமை செய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத் தன்னால் சூடிக் களையப்பெற்ற பூமாலையிலே விலங்கிடப்பட்ட அவனை அனுபவித்த ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன்.

ஸ்ரீ கிருஷ்ணர் தோள் வலிமை பூமியைக் காத்தது, அதுவே ஆதிசேஷன் போல நீளாவிற்கு மெத்தையாகவும் விளங்குவதால், அவை மிகுந்த புண்ணியம் செய்திருக்கிறது ! (ஸ்வாமி தேசிகனின் யாதவாப்யுதயம்)

நன்றாக கவனித்தால் இன்றைய ( குத்து விளக்கு ) பாசுரம் இந்தத் தனியனுக்கு உரையாகவே இருக்கிறது. 

பாகவதத்தில் ராஸக்ரீடையில் கோபிகைகளின் புலம்பல்களைச் சற்று கேட்டுவிட்டு மீண்டும் ஆண்டாளுடன் குத்து விளக்கு ஒளிவீசும் அந்த அறைக்குச் செல்லலாம். 

இனி புலம்பல்கள்

“இனிய தோழா! உமது கனி வாய் அமுதத்தால் நனைத்து, அணைத்துக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்யாவிடில் உமது பிரிவாகிய நெருப்பிற்கு உடலை அளித்து இறுதியில் உமது நினைவுடன் உன் திருவடிகளில் கலந்துவிடுவோம்! (10.23.35)

( நாச்சியார் திருமொழியில் இதே போல ஆண்டாள் வாய் அமுதத்தைக் கேட்கிறாள்)

மூவுலகிலும் சிறந்த அழகுற்ற உமது திருமேனியைக் கண்ட பசுக்கள், பறவைகள், மரங்கள் புல்லரிப்புறுகின்றன. பெண்களான நாங்கள் மயங்கித் தன்னிலையை மறக்காமல் என்ன செய்வோம் ? (10.29.40)

பாவத்தையும் அதனால் விளைகிற துன்பத்தையும் போக்குபவரே! உன்னை வழிபட வீடு வாசலைவிட்டு உன் திருவடி வந்து சேர்ந்தோம். உன் அழகிய புன்சிரிப்பும், கடைக்கண் பார்வையும் எங்கள் இதயத்தில் காமத்தீயைத் தூண்டியுள்ளது. அதில் தவிக்கும் எங்களுக்கு, உமக்குப் பணிவிடை புரியும் பாக்கியத்தைத் தரவேண்டும்(10.29.38)

(மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன்வாசற்கண் வந்து நிற்கிறோம்)

ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு இன்பமளிக்கிற திருமார்பைக் கண்ட நாங்கள், உமக்குப் பணிவிடை புரிகிற அடையாகிவிட்டோம்(10.29.39) உன் அடிமைகளாகிய எங்களின் தாபம் மிகுந்த மார்பகங்களிலும் உமது தாமரை போன்ற திருக்கையை வைத்து, தாபத்தைப் போக்கிக் காத்தருள வேண்டும்.(10.29.41)

வஜ்ராயுதத்தைப் போன்ற உயரமும் கடினமானதுமான வலிமை மிக்க கைகளால்  காளைகளை அடக்கி, நீளா என்ற ராதையைக் கைபிடித்தார். அதே கைகளைக் கொண்டு பொல்லாத அரக்கர்களை வீழ்த்தினார். அதே கைகளைக் கொண்டு நிளாவின் மார்பங்களைத் தீண்டினார். (ஸ்வாமி தேசிகனின் யாதவாப்யுதயம்)

பூமிதேவியே நீ என்ன தவம் செய்தாய் ? ஸ்ரீகேசவனின் திருவடிகள் பட்டதால் மரம் செடி கொடிகள் என்று புல்லரித்து அழகு பெற்றது. ஸ்ரீகிருஷ்ணர் திருவடிகள் பட்டதால் இது நிகழ்ந்ததா ? முன்பு திருவிக்கிரமராக உன்னை அளந்தானே அதனாலா ? அல்லது வராகராக வந்தபோது அவரை அணைத்தாயே அதனாலா ? (10.30.10) ( திருப்பாவையில் அன்று இவ்வுலகம் அளந்தாய் ;  நாச்சியார் திருமொழியில் மானமிலாப் பன்றியாம்)

இப்படி பித்துப்பிடித்துப் புலம்புகிற கோபிகைகள் ஸ்ரீகிருஷ்ணனைத் தேடுவதில் பரபரப்புற்று, கண்ணனாகவே மாறி அவனுடைய லீலைகளை மறுபடியும் நாடகமாக நடித்துக் காட்டினார்கள். ஒருத்தி பூதனை வதத்தை நடித்துக் காண்பித்தாள், இன்னொருத்தி சகடாசுரனை தன் காலால் எட்டி உதைத்தாள் ( 10.30.14,15)

( திருப்பாவையில் ஆண்டாள் தோழியர்களை எழுப்பும் போது கோபியர்களைப் போல கண்ணன் கதைகளை நடித்துக் காண்பித்திருப்பாள் என்றே தோன்றுகிறது. பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி )

உன் திருவடிகளை எங்கள் மார்பகத்தின் மீது வைத்து எங்கள் உள்ளத்திலுள்ள காமத்தீயை அழிக்க வேண்டும்! (10.31.7). கண்ணா தாமரை போன்று மிருதுவான உமது திருவடி நோகுமே என்ற பயத்துடன்  எங்கள் கடினமான மார்பகங்களை மிகவும் மென்மையாக வைத்துக்கொள்வோம். அப்படி இருக்க அந்த திருவடிகள் காட்டில் நடக்கலாமோ ? இந்தத் திருவடிகளில் கூரான சிறு கற்கள் இடிபடுவதைக் கண்டால் எங்கள் உள்ளம் கலங்குமே ! 

( கோபியர்கள் தங்கள் மார்பங்களைப் படியாக்க,  குலசேகர ஆழ்வார் தன்னையே படியாய் கிடந்து என்கிறார்)

படியாக்கிய மார்பங்களில் பெருமாள் திருவடிபட 

ஆதரித்து எழுந்த என் தட முலைகள்*
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்*
தொழுது வைத்தேன் 

என்கிறாள் நாச்சியார் திருமொழியில். 

ஆண்டாளுடைய திருமார்பகங்கள் எம்பெருமானையே அணைக்க வேண்டும் என்று ஆசையுடன் இருந்தனவாம். அதனால் அவை கண்ணனின் உடைமையானது. கண்ணனின் உடைமையான பின் அவை வணங்கத்தக்கவை. அதனால் ஆண்டாள் தன் திருமுலைகளையே வணங்குகிறாள்!

கண்ணா புன்னகை பூத்து விளங்கும் உமது திருமுகம் அன்பு கனிந்த பார்வை, திருமகள் விளங்கும் உமது திருமார்பு, இவைகளைக் கண்ட எங்கள் மனம் ஆசையால் மேன்மேலும் மயங்குகிறது ( 10.32.17) இதை தான் ஆண்டாள் காண்கிறாள். 

ஆண்டாள் விவரிக்கும் காட்சியை பார்க்கலாம். குத்துவிளக்கு ஒளிவீசுகிறது. ஒரு கட்டில் அதன் மீது மெத்தென்ற பஞ்சு படுக்கை. கொத்தாக மலர்ந்திருக்கும் பூக்களைக் கூந்தலில் நப்பின்னை சூட்டியிருக்கிறாள். கண்ணன் இருக்கிறான். 

இவர்கள் எப்படி இருக்கிறார்கள் ? 

”நப்பின்னை கொங்கை மேல் 
வைத்துக் கிடந்த மலர் மார்பா!”

நப்பின்னை படுத்திருக்க, அவள் மார்பகத்தின் மீது தலையை வைத்துக் கண்ணன் கிடக்கிறான். 

ஆண்டாள் உற்று நோக்குகிறாள் அவளுக்கு இப்போது வேறு விதமாக தெரிகிறது. 

”நப்பின்னை கொங்கை 
மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா!”

கண்ணன் படுத்திருக்க அவன் மீது நப்பின்னை தன் மார்பகத்தை அழுத்திப் படுத்திருக்கிறாள். 

நப்பின்னை மீது கண்ணனா ? அல்லது கண்ணன் மீது நப்பின்னையா என்று குழம்பிப் போகிறாள் ஆண்டாள்.

இப்போது ஆண்டாள் கண்ட காட்சியை நாமும் பார்க்கலாம். இப்போது மீண்டும் சேர்த்திப் படத்தைப் பாருங்கள். 

முதல் படம் பெருமாள் தாயார் சேர்த்தி. 

இரண்டாம் படம் இராப்பத்து ஒன்பதாம் திருநாள்(திருப்பாவை-19 பாசுரம்) பெருமாளுக்குத் தாயார் திருக்கோலம், தாயாருக்கு பெருமாள் திருக்கோலம்! 

ஸ்ரீரங்கத்தில் பெருமாள் மார்பில் பிராட்டியின் பதக்கமும், தாயார் மார்பில் பெருமாளின் பதக்கமும் என்றும் இருக்கும். இது தான் ஆண்டாள் சொல்லும் ‘தத்துவம் அன்று’ என்ற தத்துவம் .  

தத்துவம் என்ற சொல்லுக்கு ‘அழியாத விஷயம்’ என்று பொருள். அதுவே உண்மை. நப்பின்னையைப் பார்த்து ஆண்டாள் “எம்பெருமானைப் பிரியாமல் எப்போதும் அவனுக்கு ஜீவர்களுக்காகப் பரிந்து பேசும் உன்னுடைய நீர்மையை விடலாமோ ? இது தத்துவம் அன்று என்கிறாள். 

நமக்கு இப்போது எந்தத் தாயாரை ( ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி ) சிபாரிசுக்குக் கூப்பிடுவது என்று குழப்பம் வரும். இதற்கு ஸ்வாமி தேசிகன் மட்டுமே விடை கொடுக்க முடியும். யாதவாப்யுதயத்தில் இப்படி கூறுகிறார். 

நீ பிறக்கும் இடமோ தேவகி அல்லது இரணியன் தூண்
நீ வசிக்கும் இடமோ பரமபதம் அல்லது இடையர் இல்லம். 
உன் மனைவிமாரோ அங்குப் பெரிய பிராட்டி, இங்கு நீளா என்ற ராதை
இந்தப் பேதங்களால் உனக்கு எந்த மாறுபாடும் இல்லை. 

இதைத் தான் நம்மாழ்வார் ’பலபலவே ஆபரணம்  பேரும் பலபலவே’ என்கிறார். 



இந்த சேர்த்தி சேவையை ஆண்டாளுடன் நாமும் சேவித்தால் என்ன கிடைக்கும் ? 

கண்ணன் தன் அன்புக்குரிய நீளாவுடன் மகிழ்ந்திருப்பதை தியானிப்பது காதல் நோய்களுக்கும் அதன் விளைவுகளுக்கும் மருந்தாக விளங்குகிறது. இந்த மருந்து எப்போது வேண்டும் என்றாலும் பயன்படுத்தக்கூடிய அமுதமாகவும் விளங்குகிறது.  இதை தான் முனிவர்களும் யோகிகளும் தியானம் செய்கிறார்கள். (ஸ்வாமி தேசிகனின் யாதவாப்யுதயம்)

பகவான் ஸ்ரீகிஷ்ணன் கோபிகைகளுடன் செய்த இந்த ராஸக் க்ரீடையை ஆர்வத்துடன் கேட்பவனும், சொல்பவனும் பகவானிடம் மேலான பக்தி பெற்றுத் தீரனாகி உள்ளத்து நோயான காமம் அனைத்தையும் நீங்கப் பெறுவான் ( 10.33.40)

ஆண்டாள் ‘மற்றைநம் காமங்கள் மாற்றேலோர்’ என்று திருப்பாவையை முடிக்கிறாள்! 

- சுஜாதா தேசிகன்
உந்து - 19
9.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்
சேர்த்தி படம் நன்றி: kumbakonam temple

Comments