Skip to main content

பாகவத திருப்பாவை - 21 ( வள்ளல் பெரும் பசுக்கள் )

பாகவத திருப்பாவை - 21 ( வள்ளல் பெரும் பசுக்கள் )



ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் *வள்ளல் பெரும் பசுக்கள்*
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்.

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய,
தங்கு தடையில்லாமல் பாலைக் கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை 
அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக் கொள் !
சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில் 
அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.
எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில் 
கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல 
நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!

நம் பாரத பூமி பசுக்களை மதிக்கும் பூமி. பசுவின் பால் மட்டும் அல்லாமல் சாணம், சிறுநீரும்(கோமியம்) மிகப் புனிதமாகக் கருதப்படுகிறது. பசுவிலிருந்து கிடைக்கும் எல்லாமே புனிதம் தான். 

பாகவதத்தில் பல இடங்களில் பசுக்களைப் பற்றிக் குறிப்புகள் வருகிறது. அதிலிருந்து சில பகுதிகளைத் தருகிறேன். 

இடையர்கள், பசுக்களுடன் கண்ணனும் பலராமனும் விளையாடச் சென்றனர். பசுக்கள் அதிகப் பால் சுரப்பால் தங்கள் கனத்த மடிகளுடன் மெதுவாக நடந்து வந்தன. பகவான் அவைகளின் பெயர் கூறி அன்புடன் அழைக்கவே, அன்பின் மிகுதியால் மடியிலிருந்து பாலைச் சொரிந்து கொண்டே வேகமாக அங்கு வந்தன(10.20.26-27) 

ஆசையாக வந்த பசுக்கள் கண்ணனின் திருவடியை அன்புடன் நக்கின. 

இந்த வாத்ஸல்ய குணத்தை இந்த பசுக்கள் கண்ணனிடமிருந்து கற்றுக் கொண்டது என்கிறார் ஸ்வாமி தேசிகன். 

பசுக்கள் கண்ணனின் திருவாயிலிருந்து வெளியான வேணுகான அமுதத்தை மேல் நோக்கி நிமிர்த்திய காதுகளால் பருகிக் கண்ணீர் மல்க ( கை இல்லையே என்று ஏக்கத்தில் )  கண்ணனைக் கண்களால் அணைத்தன. கன்றுகளும் தானே சுரக்கின்ற தாய்ப்பாலைப் பருகி, விழுங்காமல் உதட்டோரத்தில் வழியவிட்டுக் கண்ணீர் மல்கி நின்றன(10.21.13)

வேணு கானம் கேட்டு வளர்ந்த இந்தப் பசுக்கள் சதா சர்வகாலம் கண்ணனையே நினைத்துக்கொண்டு பால் சுரக்கிறது. பெரிய கலசத்தை வைத்தால் அருவி போல வேகமாகக் கொட்டி, அந்தப் பானையில் பொங்கி மீதளிக்கும். அப் பசுக்களுக்குப் பக்தி பெருகப் பெருக எவ்வளவு பானை வைத்தாலும் அவை நிரம்பும் அதனால் அவை வள்ளல் பெரும் பசுக்கள். 

கண்ணனின் வேணு கான அமுதத்தில் பசுக்கள் மயங்கிய மாதிரி, நம் ஆசாரியர்களும், ஆழ்வார்களும் கண்ணனிடம் மயங்கியுள்ளார்கள். 

யசோதை கண்ணணைச் சிறு கயிற்றை வைத்து உரலுடன் கட்டினாள். பக்தியால் கட்டுப்பட்டு கட்டுண்டான் கண்ணன். இதைத் தான் மதுரகவிகள் கண்ணி நுண் சிறுத்தாம்பு’ என்று பாடினார். இந்தப் ‘பத்துடைய அடியவருக்கு எளிய’ காட்சியைக் கண்ட நம்மாழ்வார் மோகித்து ஆறு மாதம் மயக்கத்தில் இருந்தார். 

’கொண்டல் வ‌ண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார் திருப்பாணாழ்வார். 

கண்ணனின் வேணுகான அமுதத்தைப் பருகி பசுக்கள் பாலை சுரந்தது போல நம்மாழ்வார் திருவாய்மொழி என்ற அமுதத்தை ‘ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப’ என்பது போல அருளினார். 

இதைப் பருகிய கூரத்தாழ்வான் மயங்கினார். கூரேசர் திருவாய்மொழியின் தொடக்கப் பாசுரமான "உயர்வற உயர்நலம் உடையவன்” என்று தொடங்கியதுமே நம்மாழ்வார் பெருமாளுடைய கல்யாண குணங்களைப் பேசுகிறாரே என்று ஆழ்ந்து அந்த அனுபவத்தில் அப்படியே மயங்கி மோகித்துவிட்டார். 

இப்படி இவர் மயங்கியதை மற்றவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் தெரிவிக்க அவரும் ஓடி வந்து இது போலத் தான் “எத்திரம் உரலினோடு , இணைதிருந்து ஏங்கிய எளிவே” என்று நினைத்தவாறே நம்மாழ்வார் பெருமாளுடைய குணத்தை வியந்து ஆறு மாதம் மயக்க நிலையிலேயே இருந்தார் என்று சொல்லி, நம் கூரத்தாழ்வானும் நம்மாழ்வார் போல் பகவத் அனுபவத்தில் மோகித்திருப்பதைக் கண்டு பரவசப்பட்டு “ஆழ்வான்! ஆழ்வான்! ஆழ்வான்! எழுந்திரும்!” என்றாராம்.

அதனால் தான் கூரேசரை ’ஆழ்வான்’ என்ற பெயருடன், அவரின் பிறந்த ஊரின் பெயரையும் சேர்த்து, கூர்த்தாழ்வான் என்ற திருநாமத்துடன் அழைக்கிறோம். 

பாற்கடலில் அமுதத்தைக் கடைந்த போது பெருமாள் மோகினி அவதாரம் எடுத்து  வந்தார்.  அவளது திருமேனியின் அழகு, வள்ளல் தன்மை, இளமை, நிறம் என்று எல்லோரும் அதில் மயங்கினார்கள் ( 8.8.9 ) 

தேவர்களின் அரசன் அவளுக்குச் சிறந்த ஒரு சிங்காதனத்தை அமைத்து, உயர்ந்த நதிகளிலிருந்து அபிஷேகத்திற்காகப் பொற்குடங்களில் தூய்மையான நீரையும் கொண்டு வந்தான் ( 8.8.10 ). பூமிப் பிராட்டி, அபிஷேகத்திற்கான சிறந்த மூலிகைகளைக் கொண்டு வந்தாள். பசுக்கள் தங்களிடமிருந்து தோன்றும் பஞ்சகவ்வியம் என்ற தூய்மையான கோமியம், சாணம், பால், தயிர், நெய், ஆகிய ஐந்தையும் கொடுத்தது. ( 10.8.11 )

கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்துக் காத்த கண்ணனுக்குக் காமதேனு தனது பாலால் அபிஷேகம் செய்தாள். நீரே ’கோக்களின் இந்திரன்’ அதாவது ‘கோவிந்தன்’ என்ற பட்டப்பெயரும் சூட்டினாள். (10.27.22,23) அந்தச் சமயம் தேவர்கள் பூமாரி துதித்தனர். மரங்கள் தேன் சிந்தின, விதைக்கப்படாத விதையிலிருந்து பயிர் முளைத்து தானியங்கள் வெளியிட்டன. பசுக்கள் பால் பெருக்கி பூமியைச் சேறாக்கின ( 10.27.25,26)

கம்சனால் அனுப்பப்பட்டப்  பூதனை கண்ணனைத் தீர்த்துக்கட்ட முயற்சிக்க அவளைத் துவம்சம் செய்த கண்ணணைக் கண்ட கோபிகைகள் பயந்துகொண்டு வேகமாக வந்து குட்டிக் கண்ணணைத் தூக்கிக்கொண்டார்கள். 

அப்போது அவர்கள் செய்தது -  பசுவின் வாலை குழந்தையின் நான்கு புறத்திலும் சுற்றி காப்புகட்டினர்( ரக்ஷை). 

குழந்தையைப் பசுவின் சிறுநீராலும், பசுவின் குளம்படி புழுதியாலும் பூசிக் குளிப்பாட்டினார்கள்.  

நெற்றி முதலிய பன்னிரண்டு அவயங்களில் பகவானின் திருநாமங்களைச் சொல்லி ( கேசவாய நாராயணாய மாதவாய கோவிந்தாய விஷ்ணுவே மதுசூதனாய திரிவிக்ரமாய வாமனாய ஸ்ரீதராய ஹ்ருஷீகேசாய பத்மநாபாய தாமோதராய ) பசுவின் கோமியத்தால் திலகம் இட்டார்கள். 

இப்பேர்ப்பட்ட பசுக்களை நாம் இன்று என்ன செய்கிறோம் ? 

பாகவதமே சொல்லுகிறது. 

கலியில் எஜமானர்கள் எவ்வளவு நல்ல மனம் படைத்தவர்களாக, சிறந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் செல்வம் குறைந்தது என்றால் அவர்களிடம் வேலை செய்பவர்கள் அவரை விட்டு வேறிடம் செல்வார்கள். அதே போலப் பணியாட்கள் எவ்வளவு தான் நன்றாக உழைத்தாலும் அவர்கள் நோய்வாய்ப்பட்டால் துன்பத்தில் இருக்கும் அவர்களை எஜமானர்கள் ஒதுக்கிவிடுவார்கள். பசுக்கள் கறவை நின்றுவிட்டால் அவற்றையும் விற்றுவிடுவார்கள் அல்லது கொன்றுவிடுவார்கள் ( 10.3.37 ) 

அக்னியில் ஆகுதி கொடுத்து, பிராமணனுக்கு உணவு கொடுத்து, பசுவிற்குப் பசுமையான புல்லைக் கொடுத்தும் என்னைப் பூஜிக்கலாம் என்று கண்ணன் உத்தவருக்கு தன்னை எப்படிப் பூஜிக்கலாம் என்று கூறுகிறார் ( 11.11.42-43).

நம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.3.4) 

“தொழுத்தனில் பசுக்களையே விரும்பித்
துறந்து எம்மை இட்டு, அவை மேய்க்கப் போதி” 

என்கிறார். 

தொழுவத்திலுள்ள உன்னுடைய பசுக்களையே விரும்புகிறாய், எங்களை விட்டுவிட்டு அவற்றை மேய்க்கச் செல்கிறாய் என்று நம்மாழ்வார் புலம்புகிறார். இந்தப் பாசுரத்தில் ’நாராயணனே நமக்கே’ என்பது போல இங்கே ’பசுக்களையே’ என்ற ஏகாரத்தைக் கவனியுங்கள். இதற்குப் பிள்ளை அமுதனார் என்ற ஆசாரியர் “பசுவின் காலில் முள் தைத்தாள், அந்தப் பசுவின் இடையன் தலையில் சீழ்பிடிக்கும்” என்று விளக்கம் கூறுவாராம். அதாவது பசு படும் வேதனையை விட இடையன் அதிகமான வருத்தத்தை அடைவான். அதே போலக் கண்ணனும் வள்ளல் பெரும் பசுக்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டான். 

அதனால் தான் ஆண்டாள் திருப்பாவையில்  ’வள்ளல் பெரும் பசுக்கள் என்று இரண்டு முறை சொல்லுகிறாள். பசுக்களைப் போற்றி பாதுகாக்க வேண்டும் என்பது ஆண்டாளின் விருப்பம்.

அனைவருக்கும் இனிய மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்! 

- சுஜாதா தேசிகன்
ஏற்ற - 22
15.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்


Comments