Skip to main content

பாகவத திருப்பாவை - 14 ( சங்கோடு சக்கரம் )

 பாகவத திருப்பாவை - 14 ( சங்கோடு சக்கரம் )உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்*
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்*
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்**
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்*
நங்காய்! எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பங்கயக் கண்ணானைப் பாட ஏலோர் எம்பாவாய் 487/14

உங்கள் புழக்கடைத் தோட்டத்தில் உள்ளக் குளத்தில் 
செந்தாமரைகள் மலர்ந்து விட்டன.
அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன.
காவி உடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள் 
தங்கள் கோயில்களுக்குச் சங்கு ஊதித் திறக்கப் போகிறார்கள்.
எங்களை முன்னதாக எழுப்புவதாக வீண் பெருமை பேசிய பெண்ணே!
வெட்கமில்லாதவளே! பேச்சை மட்டும் இனிமையாகப் பேசுபவளே!
சங்கு சக்கரம் தரித்த விசாலமான கைகளையுடைய 
கமலக்கண்ணனைப் பாட வேண்டும்; எழுந்திரு.

ஸ்ரீ கிஷ்ணா அவதாரத்தில் பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி கொடுக்கத் தயங்குவதே இல்லை. அவதரித்த உடனேயே தேவகி வசுதேவருக்குச் சங்கு சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். 

ஸ்ரீகிருஷ்ணர் திருவவதாரம் பாகவதத்தில் ( 10.3.1-16) விவரித்திருக்கிறார்கள். சுருக்கமாகப் பார்க்கலாம். 

ரோஹிணி நட்சத்திரம் உதயமாகியது. வானத்தில் நட்சத்திரங்கள் தூய்மையாக ஒளிர்ந்தன. பூமியே மங்களகரமாக விளங்கியது. நீரோடைகளில் தாமரைகள் பூத்திருந்தன. காற்றில் நறுமணம் வீசியது. நித்தியச் சூரிகள் ஆனந்தத்தில் பாடினர். இருள் நிறைந்த அந்த நள்ளிரவில் பகவான் அவதரிக்கும்போது முனிவர்களும் தேவர்களும் மகிழ்ச்சியுடன் பூமாரி பொழிந்தார்கள். 

தேவகியிடம் கிழக்கில் பூர்ணசந்திரன் உதிப்பது போல ( மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் ) கண்ணன் உதயமானார். (10.3.7,8)

புருஷோத்தமன் இவரே என்று வேதங்கள் கூறுவது போன்று வியக்கத் தக்க அழகான உருவுடன் விளங்கினார். கண்கள் செந்தாமரை போன்ற அழகாகக் காட்சி கொடுத்தது. நான்கு திருக்கரங்களில் சங்கம் - கதை - சக்கரம்-செந்தாமரை முதலான ஆயுதங்கள் ; கழுத்தில் அழகான கௌஸ்துப மணி; மஞ்சள் பட்டாடை ; உடல் நீருண்ட மேகம் போன்ற அழகு ; வைர வைடூரியக் கற்கள் பதித்த கிரீடம், குண்டலங்கள்; சுருள் சுருளான கேசங்கள் ; 

இதைக் கண்ட தேவகி ( 0.3.29,30 ) “என்னிடம் நீங்கள் பிறந்துள்ளதைப் பாவியான கம்சன் அறிய வேண்டாம். மனோதிடமற்ற நான் உங்களுக்காகக் கம்சனைக் கண்டு பயந்து நடுங்குகிறேன். அனைத்துமானவரே சங்கு, சக்கரம், கதை, பத்மம் - இவற்றின் ஒளியோடு கூடிய நான்கு திருக்கரங்கள் கொண்ட இந்தத் தெய்வ வடிவினை மறைத்துக் கொள்வீராக!” என்று வேண்டிக்கொள்ளத் தன் ஸ்வரூபத்தைக் கண்ணன் மறைத்துக்கொண்டார். 

பிரம்மா கன்றுகளையும், சிறுவர்களையும் மறைத்து வைத்த கதையை முன் பாசுரத்தில் பார்த்தோம். அப்போது கண்ணனின் மகிமையை நினைத்து  நினைத்துக் கண்ணன் திருவடிகளில் மேலும் மேலும் விழுந்தெழுந்தார். பின்பு மெல்ல எழுந்து கண்களைத் துடைத்துக் கொண்டு கண்ணனைப் பார்த்தபோது அவர் தேவகிக்குக் காட்சி கொடுத்தது போலக் காட்சி கொடுத்தார். 

ஒரு நாள் ஸ்ரீரங்கத்தில் ‘உய்ந்த பிள்ளை’ என்ற அரையர் ’அப்பூச்சி காட்டுதல்’ என்ற பெரியாழ்வார் பாசுரங்களை அபிநயத்துக்கு எடுத்துக்கொண்டார். 

(கண் இதழை மடித்துக் கூடவே நாக்கை நீட்டி கை இரண்டும் அசைத்துச் சிறுவர்கள் ‘அப்பூச்சி’ காட்டி விளையாடுவார்கள்)

உடையவரும் அவர் சிஷ்யர்களும் அமர்ந்து அதை அனுபவித்துக்கொண்டு இருக்க, அரையரும்  கண்ணன் செய்வது போலக் கண் இமைகளை மடக்கிக்கொண்டு அபிநயித்தார். 

அவருக்கு என்ன தோன்றியதோ மீண்டும் அதே பாசுரத்தை அபிநயம் செய்ய, இப்போது கண் இமைகளை மடக்காமல் எம்பெருமான் திருத்தோள்களில் சங்கு சக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதை அபிநயித்துக் காட்டினார். 

இதனைக் கண்ட உடையவர் மிகவும் மகிழ்ந்து, ‘கோவிந்த பெருமாள் இருக்கிறாரோ?” ( எம்பார் ) என்றார். உடையவருக்குப் பின்புறம் ‘அடியேன்’ என்று ஒரு குரல் கேட்டது. 

கண்ணன் தன் தோழர்களுடன் அப்பூச்சி காட்டி பயமுறுத்தி விளையாடும்போது, கண்ணன் கண் இமைகளை மடக்கிப் பயமுறுத்தமாட்டான். திடீரென்று தன் கையில் சங்கு, சக்கரங்களை வரவழைத்துப் பயமுறுத்து வானாம்.

ராமானுஜர் பின்புறம் இருந்த கோவிந்தன் இதை அரையரிடம் குறிப் பால் உணர்த்த அதைச் சட்டென்று அரையர் புரிந்துகொண்டு அபிநயத்தை மாற்றிக் காட்டினார். இந்த மாதிரி யோசனைகள் கோவிந்தனுக்குத்தான் தோன்றும் என்று உணர்ந்த ராமானுஜர் ‘பின்னால் கோவிந்தன் இருக்கிறாரோ?’ என்றாராம்.

நம்மாழ்வார் பராங்குச நாயகியாக திருக்குறுங்குடி பெருமாளை இப்படிப் பாடுகிறாள்.  

எங்ஙனேயோ அன்னைமீர்காள்!*  என்னை முனிவது நீர்?* 
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை*  நான் கண்டபின்* 
சங்கினோடும் நேமியோடும்*  தாமரைக் கண்களோடும்* 
செங்கனி வாய் ஒன்றினோடும்*  செல்கின்றது என்நெஞ்சமே*

பராங்குச நாயகி தன் அம்மாவைப் பார்த்து “அன்னையே! நீங்கள் என்மீது ஏன் கோபப்படுகிறீர்கள் ? நம் அழகிய திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின், அவன் கையிலிருக்கும் சங்கு, சக்கரம் அவனுடைய தாமரைக்கண்கள், செங்கனி போன்ற வாய்… இவற்றின் பின்னேதான் என் நெஞ்சம் செல்கிறது. நான் என்ன செய்வேன்? என்று புலம்புகிறாள். 

எங்கு எல்லாம் பெருமாள் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறானோ அங்கு எல்லாம் அவன் கண்கள் தாமரை போல மலர்ந்திருக்கிறது ( பாகவதம், ஆழ்வார் பாடல்களில் இதைக் காணலாம்). 

ஆண்டாள் காலைப் புழக்கடையில்  ‘செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து’ என்று தாமரை மலர்ந்திருப்பதைக் கண்டு உடனே செந்தாரைக் கண்ணன் சங்கு சக்கரத்துடன் நினைவுக்கு வர உடனே  ‘பங்கயக் கண்ணானைப்’ (கமலக்கண்ணனை) பாட வேண்டும் எழுந்திரு என்கிறாள். 

- சுஜாதா தேசிகன்
உங்கள்- 14
1.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments