Skip to main content

பாகவத திருப்பாவை - 18 ( நப்பின்னாய் )

பாகவத திருப்பாவை - 18 ( நப்பின்னாய் )


உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்*
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!*
கந்தம் கமழும் குழலி! கடைதிறவாய்*
வந்துஎங்கும் கோழி அழைத்தன காண்*மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்*
பந்தார் விரலி!உன் மைத்துனன் பேர்பாடச்*
செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய். 


மத யானையை வீழ்த்தும் வலிமையும், போரில் பின்வாங்காத 
தோளைப் படைத்த நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே! கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக் கேள்!
குருக்கத்தி கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன.
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரை கையால் வளையல்கள் ஒலிக்க 
மகிழ்ச்சியுடன் வந்து கதவைத் திறக்க வேண்டும்!

பிரணவத்தில் (ஓம்) அ, உ, ம அடங்கியிருப்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். இதில் ’அ’ என்ற பரமாத்மாவை,  ’உ’ என்ற பிராட்டியைப் புருஷாகாரமாக ‘ம’ என்ற ஜீவாத்மா பற்ற வேண்டும் என்பது இதன் உட்பொருள். 

’உ’ பிராட்டியை குறிக்கும். புருஷாகாரம் = சிபாரிசு என்று தெரிந்துகொண்டால் போதும். 

இப்பாசுரம் எப்படி ஆரம்பிக்கிறது ? ‘உந்து’; முதல் எழுத்து ‘உ’; 

 ’உ’ என்பது நாம் சிபாரிசாக பற்ற வேண்டிய பிராட்டி; பிராட்டி நப்பின்னை!

நப்பின்னை யார் என்ற கேள்வியைப் பலகாலமாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். நப்பின்னை குறித்துப் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெருமாளே படித்து வியந்திருக்கிறார். 

பொய்கை ஆழ்வார் ’திருமகளும், மண்மகளும், ஆய்மகளும் சேர்ந்தால்’ என்று முதல் திருவந்தாதியில் கூறியிருக்கிறார். ஆழ்வார் கூறிய இந்த மூன்று தேவிகளே ஸ்ரீதேவி, பூதேவி, நீளா தேவி. 

இதில் பின்னால் வரும் ’ஆய்மகள்’ தான் நப்பின்னை என்பது நம் ஆசாரியர்களின் கருத்து. அதாவது  ’ஆய்மகள்’  என்ற ’நீளா தேவியே’ நப்பின்னை. (நீளாதுங்கஸ்தன.. என்று தனியன் ஆரம்பிக்கிறது)

ஆய் மகளான நப்பின்னையை மணக்க ஏழு எருதுகளைக் கண்ணன் அடக்கி மணந்துகொண்டான் என்று ஆழ்வார்கள் பாசுரங்கள் பல இடத்தில் இருக்கிறது. பெரியாழ்வார் தன் மாப்பிள்ளையை  ‘பின்னை மணாளனை’ என்று குறிப்பிடுகிறார். நம்மூரில் நடந்த ஜல்லிக்கட்டு புரட்சியின்போது  ’ஏறு தழுவிக் கண்ணன் திருமணம் செய்துகொண்டான்’ என்று கேள்விப்பட்டு பலர் ஆழ்வார் பாடல்களில் இந்தக் கதையைத் தேடினார்கள். 

ஆண்டாள் தான் ஓர் இடைச்சியாக ஆயர் குலப்பெண்ணாகத் திருப்பாவையைப் பாடுகிறாள். நப்பின்னை ஆயர் குல மங்கை, கண்ணனுக்கு மிகவும் விருப்பமானவள். ஆயர் குல வழக்கப்படி ஏறு தழுவித் திருமணம் செய்துகொண்டான். அதனால் திருப்பாவையில்  நப்பின்னையை புருஷாகாரமாகப் பற்றுகிறாள் ஆண்டாள். 

‘நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!’ என்று ஆண்டாள் கூறிய பிறகு அதற்கு அப்பீல் கிடையாது. 

யசோதையின் சகோதரன் பெயர் கும்பன். கும்பன் கோசல நாட்டில் இருக்கும் ஆயர்களுக்கு அரசனாக, தலைவனாக இருந்தான். கும்பன் மகள் தான் நப்பின்னை. அவளையே ஏறு தழுவி மணந்தான் கண்ணன். 

கண்ணனுடைய திருமணங்கள் ( இதற்குப் பாகவதத்தில் தனி அத்தியாயமே இருக்கிறது! ) என்ற பகுதியில் ( 10.58.40 ) இந்தக் கதை விரிவாக இருக்கிறது.

நக்னஜித் என்ற மன்னனின் குமாரி சத்யா ( 3.3.4 ). சத்யாவைக் கண்ணன் திருமணம் செய்துகொண்டார். ( கும்பன் = நக்னஜித் ; சத்யா = நப்பின்னை என்று படிக்கவும் ) 

ஒரு நாள் கண்ணன் (10.58.40) சிரித்தவண்ணம் நக்னஜித் என்ற மன்னனிடம் ”க்ஷத்திரியன் பிறரிடம் எதையும் கேட்கக் கூடாது.  பெரியோர்கள் இகழ்வார்கள். இருந்தாலும் உன் பெண்ணைத் தர வேண்டுகிறேன். பெண்ணுக்கான கன்யாசுகம் ( வரதட்சனை ) ஏதும் தர முடியாது” என்று கூற  அதற்கு நக்னஜித் கூறிய பதில் இது 

“சர்வேசா! ஐஸ்வரியம் முதலிய எல்லாக் குணங்களுக்கும் புகலிடமான தங்கள் திருமார்பில் திருமகள் அகலாது வீற்றிருக்கிறார். என் மகளுக்குத் தங்களைவிடச் சிறந்த மணாளன் வேறு யாராக இருக்க முடியும் ? 

கன்னிகைக்கு நல்ல வரனைப் பெற விரும்பிய நாங்கள் பையனின் வீரத்தைச் சோதிப்பதற்காக முன்பே ஒரு பந்தயம் வைத்துள்ளோம் (அந்தக் காலத்து நீட் தேர்வு!).  வீரரே!  இந்த ஏழு காளைகளை எளிதில் அடக்கவோ பிடிக்கவோ முடியாது. பல அரச குமார்கள் வந்து அடிபட்டுச் சென்றுள்ளார்கள். 

யது நந்தனரே! ஸ்ரீலக்ஷ்மிபதியே! நீங்கள் இவைகளை அடக்கினால், என் பெண் உங்களுக்குத் தான்!

இதைக் கேட்டபிறகு கண்ணன் தன் வேட்டியை வரிந்துகட்டிக்கொண்டு(10.58.45,46) தன்னையும் எழுவராக்கிக் கொண்டு, மூக்கு குத்தப்படாத ஏழு எருதுகளையும்(3.3.4) அந்தக் காளைகளை எளிதில் அடக்கி, சிறுவன் மரப்பொம்மையைக் கயிற்றில் கட்டி இழுத்துவருவது போல விளையாட்டாக இழுத்து வந்தார். 

திருமணம் முடிந்து சீதனமாகப் பல பரிசுப் பொருட்களைத் தந்து, தம்பதிகளை அனுப்பி வைத்தார் நக்னஜித். வழியில் சில அரசர்கள் கலாட்டா செய்ய வழக்கம்போல அவர்களைக் கண்ணன் வீழ்த்தினான்

ஒரு நாள் சத்யை திரௌபதி முதலிய அரசிகளுடன் உரையாடும்போது கண்ணன் தன்னை எப்படித் திருமணம் செய்துகொண்டார் என்பதைக் கூறுகிறாள் ( 10.83.13)

“என் சுய வரத்துக்கு வந்த அரசர்களின் வீரத்தைச் சோதிக்க என் தந்தை மிகவும் வலிமை கொண்ட கூர்மையான கொம்புகளுடைய வீரர்களின் செருக்கை அடக்கும் ஏழு காளைகளை முன் நிறுத்தினார். சிறுவர்கள் ஆட்டுக்குட்டிகளைப் பிடித்துக் கட்டுவது போல, பகவான் அவற்றை விளையாட்டாகவே அடக்கிக் காட்டினார். இது மட்டும் அல்ல, வழியில் எதிர்த்த அரசர்களை வென்று, அழைத்துச் சென்ற பகவானுக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும்!” 

ஆண்டாள் இந்த நப்பின்னையைச் சிபாரிசுக்குப் பிடித்துக்கொண்டு, சத்யை (நப்பின்னை) ‘பகவானுக்கு நான் என்றென்றும் அடிமையாக இருக்க வேண்டும்!”  என்று மேலே சொன்ன அதே வரியை ’உன்தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்’ என்கிறாள். 

கும்பனின் மகளான நப்பின்னையே ராதை என்று வடநாட்டில் அழைக்கிறார்கள் என்று ஒரு கருத்தும் உண்டு. மதுரா, பிருந்தாவன் முழுக்க ‘ராதே கிருஷ்ணா’ என்று எல்லோரும் மூச்சுக்கு முந்நூறு தடவை சொன்னாலும், 

ராதை என்ற பெயர் ஸ்ரீமத் பாகவதம், மஹாபாரதம், விஷ்ணு புராணம், ஆழ்வார் பாடல்கள் என்று எதிலும் எந்தக் குறிப்பும் இல்லை. ஸ்ரீமத் பாகவதத்தில் ராஸக்ரீடையில் கண்ணனைக் காணாமல் கோபிகைகள் தவிக்கிறார்கள். ( 10.30.28 ). 

கோபிகைகள் மரம் செடி கொடிகளைப் பார்த்து ‘கண்ணனை கண்டீர்களா ?’ என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் கேட்பது போலக் கேட்டுக்கொண்டு வருகிறார்கள் ( 10.30.24). காட்டில் ஓர் இடத்தில் கண்ணனின் காலடிச் சுவடுகளைப் பார்த்து, ‘இவை நிச்சயம் நந்தகுமாரன் கண்ணனின் திருவடிகள் அதில் விஷ்ணு பாத ரேகைகள் தெரிகிறது!” என்று அந்தக் காலடி அடையாளங்களைக் கூர்ந்து கவனித்துத் தொடர்ந்து சென்ற கோபிகைகள், அவ்வடிகளின் முன்னே ஒரு பெண்ணின் காலடிகளைக் கண்டு ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்கிறார்கள். 

“நந்தகுமாரனுடன் சென்ற பெண்ணின் காலடிகள் யாருடையது ? பெண்யானை ஆண்யானை தொடர்ந்து செல்வது போன்று இவள் யார் ? கண்ணன் தோள்மீது இவள் கைபோட்டுக் கொண்டு சென்றிருப்பாள் போலும்.  பகவானை இவள் நிச்சயம் நன்கு பூஜிப்பாள். அதனால் தான் கண்ணன் நம்மைவிட்டு இவளை அன்புடன் ரகசியமாக அழைத்துச் சென்றிருக்கிறான்(10.31.27,28)

தோழிகளே ! கண்ணனின் காலடிப்பட்ட இந்தப் புழுதி மண் கொடுத்து வைத்தது. புண்ணியம் செய்தது. பிரம்மாவும், ஈசனும், லக்ஷ்மியும் தங்கள் பாவம் நீங்க இவற்றைத் தலையில் தாங்குகிறார்கள். நாமும் இந்தப் பாதத்துகள்களைத் தலையில் தரித்தால் கண்ணனைப் பெறலாம். ( 10.31.29 ) 

கண்ணனைப் பின் தொடர்ந்து கோபியர்கள் சென்றார்கள். அந்தக் கண்ணன் ஒரு கோபிகை பின் சென்றான் என்றால் அவள் எப்படிப் பட்டவளாக இருப்பாள். அவளுடைய காதல், பக்தி, அன்பு எப்படிப் பட்டதாக இருக்கும் ? கண்ணனைப் படம் வரையலாம்.  கண்ணணிடம் உள்ளக் காதலைப் படம் வரைய முடியுமா ? முடியும் அவள் தான் ராதை ! 

இதைப் புரிந்துகொள்ள நாம் நம்மாழ்வாரை உதவிக்குக் கூப்பிடலாம். நம்மாழ்வாரை 'கிருஷ்ண த்ருஷ்ணா தத்வமிவோதிரம்’’ என்பர். 

கிருஷ்ண = கண்ணன்
த்ருஷ்ணா = அளவு கடந்த காதல், அன்பு. 

கிருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணா என்றால் நம்மாழ்வாருக்குக் கண்ணனிடத்தில் அளவு கடந்த காதல், அன்பு 

கிருஷ்ண த்ருஷ்ணை - கிருஷ்ணனுக்கு நம்மாழ்வாரிடத்தில் அளவு கடந்த காதல், அன்பு என்று இரண்டு விதமாகப் பூர்வர்கள் நமக்குக் காட்டிக்கொடுத்த பொருள். 

தெற்கே ஆழ்வார் திருநகரியில் நம்மாழ்வாரின் காதல் வடிவத்துக்குப் பெயர் பராங்குச நாயகி. 

வடக்கே பிருந்தாவனம், மதுராவில் இதற்குப் பெயர் ராதை.  

யானை பெரியதாக இருந்தாலும், அதைச் சிறு அங்குசம் வைத்துக் கட்டிப் போடலாம். அதுபோல கண்ணனைத் தன் பக்தி என்ற அங்குசத்தால் ராதை கட்டிப் போட்டிருக்கிறாள். நம்மாழ்வாருக்கும் பராங்குசன் என்று ஒரு திருநாமம் உண்டு. 

வடநாட்டில் மதுரா பிருந்தாவனத்துக்கு அருகில் பர்ஸாநா என்ற இடத்தில் அவதரித்தவள் ராதை. அவதரித்த நட்சத்திரம் விசாகம் ! நம்மாழ்வாரும் விசாகம் ! 

ரா என்றால் கொடுப்பது; தா என்றால் முக்தி. அந்த முக்தி 

திருவாய்மொழியைச் சேவித்தால் கிடைக்கும் என்று நான் சொல்லவில்லை நம்மாழ்வாரே ‘வைகுந்தம் திண்ணெனவே’ என்கிறார். 

- சுஜாதா தேசிகன்
உந்து - 18
7.1.2022
படங்கள் உதவி: திரு.கேஷவ்

Comments